தனக்கெனத் தனித்ததோர் இடத்தை எழுத்துலகில் தக்கவைத்துக் கொண்டவர் சு.சமுத்திரம் அவர்கள். அவரது படைப்புகளில் பல இடங்களிலும் பொதுவுடைமைச் சிந்தனைகளை எடுத்தாண்டுள்ளமையைக் காணமுடிகிறது. அத்தகைய உயரிய சிந்தனைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்ந்திடும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

'வர்க்க பேதம்’ தவிர்த்தல் :             

su samuthiram‘வெளிச்சத்தை நோக்கி’ எனும் புதினத்தின் கதைத் தலைவன் மெய்யப்பன். இவன் அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறான். அந்த அலுவலகத்தின் மேலாளர், அங்குப் பணிபுரியும் வாணியிடம் நெறிபிறழ் நடத்தை கொண்டவராய் நடக்க முற்படுகிறார். இதனால் வாணி மிகுந்த மனவேதனையடைகிறாள். தன்னுடன் பணிபுரியும் மெய்யப்பனிடம் ஒரு சகோதரியாக தன்னுடைய நிலையை எடுத்துக் கூறுகிறாள்.

“மானேஜர், என் வீட்டுக்கு வந்திருந்தார். தங்கச்சி, தங்கச்சின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார். அப்படிப்பட்ட மனுஷன். நேற்று என் கையை வலுக்கட்டாயமா பிடிச்சுக்கிட்டு நாளைக்கு சினிமாவுக்குப் போகலாமுன்னு கேட்கிறார்.”1 என்று கூறி வருந்துகிறாள். இதனைக் கேள்வியுற்ற மெய்யப்பன் வெகுண்டெழுகிறான். தன் மேலாளரிடம் சென்று,

“எதுக்கு ஸார் கண்ணாமூச்சுப் பேச்சு? வாணியக்காவ எதுக்காக சினிமாவுக்குக் கூப்பிட்டீங்க? உங்க பெண்டாட்டியை இன்னொருத்தன் இப்படிக் கூப்பிட்டால் சம்மதிப்பிங்களா? ஒங்களை மாதிரி ஆட்கள், சம்மதித்தாலும் சம்மதிப்பிங்க”2 என்று கேட்டு கடிந்துரைக்கிறான்.

பணிபுரியும் இடங்களில் ஆடவர் மகளிர் எனும் வர்க்கபேத முரண்பாடுகள் இருப்பது முறையன்று. மேலதிகாரிகள் எனும் போர்வையில் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் மகளிரை இதுபோன்ற பாலியல் சீண்டல் செய்யும்போது அதனைக் கண்டிக்க / கடிந்துரைக்க வர்க்கபேதமின்றி ஆடவர் சகோதர உணர்வுடன் முன்வர வேண்டும் எனும் சிந்தனையை ஆசிரியர் வலியுறுத்துவதைக் காணமுடிகிறது.

மற்றவருக்காக வாழ்தல் :

‘இல்லம் தோறும் இதயங்கள்’ எனும் புதினத்தின், கதைத்தலைவி ‘மணிமேகலை’ இன்ஜினியராக பணிபுரியும் ஜெயராஜ் என்பவரை மணந்து வாழ்ந்து வருகிறாள். இந்நிலையில் அவளது முகத்தின் காதோரத்தில் சிறிய வெண் புள்ளி ஒன்று தோன்றுகிறது. அதனை மருத்துவரிடம் காண்பிக்கும்போது இது தொழுநோய்க்கான அறிகுறி என்கிறார். இதனையறிந்த ஜெயராஜ் அவளை அவளுடைய தாய்வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால், மணிமேகலையோ வீட்டைவிட்டு வெளியேறி தன்னைப் போன்றே நோயால் பாதிக்கப்பட்டும், ஆதரவற்றும் உள்ளவர்கள் உள்ள காப்பகத்தில் பணியில் சேர்கிறாள். பின்பு அந்தக் காப்பகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று,       

“பூந்தமல்லிக்கு அருகே மதுரவாயல் என்ற சாலையோர கிராமத்தில் திருமதி லில்லி பிரபாகர் என்ற நிஜமான சமூக சேவகி குழந்தைகள் காப்பகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். நாடெங்கிலுமுள்ள பெரு வியாதிக்காரர்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்து நாள்தோறும் மும்முறை உணவளித்து, கல்வியளித்து, நற்பணி செய்வதாகக் கேள்வி. நாமும் ஏன் இந்த தாய்மார்களின் வசதியற்ற பிள்ளைகளைக் கொண்டுவந்து இதர அனாதைக் குழந்தைகளையும் கூட்டி வந்து ஒரு காப்பகம் கட்டக்கூடாது? மணிமேகலை அந்த காம்பவுண்டுக்குள் வெற்றிடம் ஒன்றை நோக்குகிறாள். அவள் மனவெளிக்குள் ஒரு கட்டிடம் எழுகிறது. குழந்தைகள் குவிகிறார்கள். கட்டிடம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.”3 எனும் கூற்றிலிருந்து, மணிமேகலையின் தியாக உள்ளமும் தாயுள்ளமும் பொதுநல நோக்கும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. தன்னுடைய வாழ்க்கையை இழந்தபோதும் பிறரை, வாழ வேண்டும் என நினைப்பதும் வாழ வைக்க முற்படுவதும் மிக உயரிய பொதுவுடைமைச் சிந்தனை ஆகும். இதனை ஆசிரியர் மணிமேகலையின் செயல்பாட்டின்வழி அறிவுறுத்துவதைக் காணமுடிகிறது.

மூன்றாம் பாலினத்தவரின் பொதுவுடைமைச் சிந்தனை

‘வாடாமல்லி’ எனும் புதினத்தின் கதைத்தலைவன் சுயம்பு. இவன் சென்னையில் பொறியியல் படிப்பைப் படித்து வந்தான். பின்பு காலப்போக்கில் அவன் உடலில் தோன்றிய பாலின மாற்றத்தால் திருநங்கையாக மாறிவிடுகிறான். பிறகு வீட்டைவிட்டு பெற்றோரால் துரத்தப்படுகிறான். சிறிது காலம் சென்னையில் வாழும் திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்கிறான். இந்நிலையில், டெல்லி செல்கிறான். அங்கு திருநங்கைகளின் மாதாவிடம் மேகலை எனும் பெயரில் வளர்ப்பு மகளாக வளர்ந்து வருகிறான். அப்போது அவனது வளர்ப்புத்தாயிடம் ஒருவர்,

“நாங்க போபாலுல இருந்து வாரோம். முர்கே மாதாவுக்கு ஒரு கோயில் கட்டுற விஷயமா. ஆமா. உங்க லெட்டர் கிடைச்சது. கோவில் கட்ட எவ்வளவு செலவாகும்” எனக் கேட்க, மேகலை அவசர அவசரமாய்க் குறுக்கிட்டாள். “எம்மா. முர்கேமாதாவுக்கு கோவில் கட்டட்டும். வேண்டான்னு சொல்லல. ஆனால் அந்தக் கோவிலோட கோவிலா, நம்மள மாதரி பிறப்பெடுத்து சூடுபட்டவங்களுக்கும், தெருவுல தூக்கியெறியப்பட்டவங்களுக்கும் ஒரு சத்திரம் சேர்த்து கட்டனும்ணு சொல்லுங்கம்மா” என்கிறாள்.

“என் ராசாத்தி இந்தத்திட்டம் எனக்கு வரல பாரு. சரி. அப்புறமா இவங்ககிட்ட பேசி மொத்தம் எவ்வளவு ஆகுதுன்னு கணக்கு பாரு. பாதிச் செலவ நாம குடுத்திடலாம்.”4 என்கிறாள். திருநங்கைகளின் வாழ்விற்காக சுயம்பு கூறும் இக்கூற்று ஒவ்வொருவரிடமும் இருந்தால் யாரும் யாராலும் துன்புறும் நிலை உருவாகாது. எல்லாரும் எல்லாமும் பெறுகின்ற சூழல் உருவாகும்.

ஒற்றுமையுடன் போராடுதல் :

‘நெருப்புத்தடயங்கள்’ எனும் புதினத்தில் கலாவதி என்ற பெண் அவளது உறவினர்களாலேயே வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனை அறிந்த அவளது உறவினளான தமிழரசி அவ் அநீதியை எதிர்த்து காவல் நிலையம் நோக்கி போராட்டத்தை மேற்கொள்கிறாள். அதனைக் கண்ட “ஊர் மக்கள், மரம் வெட்டுபவர்கள், கிணறு தோண்டுபவர்கள், விவசாயக் கூலிகள் உட்பட ஏழை எளியவர்கள் நடந்த கூட்டத்தில், ஒதுங்கியிருந்த சேரிமக்களில் பலரும் சேர்ந்து கொண்டார்கள். வாலிபப்பையன்கள், வயதுப்பெண்கள், விடலைப்பயல்கள், முதியவர்கள் என்று சமூகத்தின் எல்லா வயதுகளுக்கும் பிரதிநிதித்துவம் காட்டும் கூட்டம் நிராயுத பாணியாய்த் தோன்றினாலும், போர்ப்பரணிப் பார்வையோடு போய்க் கொண்டிருந்தது.

போலீஸ்காரர்களையும்,பணக்காரர்களையும் எதிர்க்க முடியும் போலுக்கே என்று பலர் வியந்து கொண்டார்கள்.”5 எனும் இக்கூற்றின்மூலம் நீதிக்கு எதிராக செயல்படுவர்களை ஒற்றுமையுடன் கூடி எதிர்த்தால் நீதியை நிலைநாட்ட இயலும் என்பதை அறியமுடிகிறது. மேலும், சமுத்திரம் அவர்களின் ‘சத்திய ஆவேசம்’ புதினத்திலும் அநீதிக்கு எதிரான போராட்டங்களை பதிவு செய்துள்ளமையைக் காணமுடிகிறது.

மத நல்லிணக்கம் / சகோதரத்துவம் :

இந்து - முஸ்லீம் மக்களிடையே நிகழ்ந்த மதக்கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ‘மூட்டம்’ எனும் புதினமாகும்.

மேலப்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள மசூதியை யாரோ இடித்துவிடுகின்றனர். அதனால் அங்குள்ள இந்து மக்கள் மீது முஸ்லீம்களுக்கு கோபம் உண்டாகிறது. இதனால் அப்போது வெகுண்டெழுந்தவர்கள் அங்கு வந்த முத்துக்குமார் என்ற இளைஞனை வெட்டுவதற்கு செல்கின்றனர். அவர்களிடமிருந்து முத்துக்குமாரை,

“முத்துக்குமார் கண்ணடிப்பதா? இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும். பொல்லாத போக்கிரி. காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்தபடியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.

“யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும். முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்”6 என்பதிலிருந்து காதர்பாட்சாவின் சகோதரத்துவ / மதநல்லிணக்க சிந்தனையை அறியமுடிகிறது. இச்சிந்தனை அனைவரிடமும் மேலோங்க வேண்டும்.

உழைப்புச் சுரண்டலை எதிர்த்தல் :

‘தாழம்பூ’ எனும் புதினத்தில் சரோசா என்பவள் சாராயத் தொழில் செய்து வருகிறாள். அவளை இளங்கோ என்பவன் அத்தொழிலை விட்டு மாற்றி, அவன் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளர் பணியில் சேர்த்து அவளுக்கு உதவிபுரிகிறான். அவ்வலுவலகத்தில் பணியாற்றும் பலரும் அவளிடம் வேலை வாங்கி அவளது உழைப்பைச் சுரண்டுகின்றனர். அவளுக்கு சம்பள நாள் அன்று தற்காலிகத்துக்கு சம்பளம் இல்லை என்று கூறி அவமானப்படுத்துகின்றனர். உழைப்பைச் சுரண்டிக்கொண்டு ஊதியம் தராமல் இருப்பதை கேள்விப்பட்டு அங்கு வந்த இளங்கோ,

“இந்தப் பொண்ணு நியூசென்ஸ் காரின்னா, நாமெல்லாம் அரசாங்கக் கேடிங்க. ஒரு மாசமா நாய் படாத பாடா உழைச்சிட்டு அதுக்குப் பலன் கிடைக்கலன்னா அவள் குலைக்கத்தான் செய்வாள். நாமா இருந்தால் கடிச்சிருப்போம். நம்பவச்சு கழுத்தறுத்துட்டீங்களே! இந்தாம்மா சரோசா. ஏன் அழுவுறே? இந்தா, என் சம்பளம் முழுசும். ஒனக்கு வேலைக்குக் கூலியாயும், இவங்களோட அகம்பாவத்துக்கு அபராதமுமாவும் தாறேன். இளங்கோ, ஆவேசப்பட்டு தனது சட்டைப் பையைக் கிழித்தான். அந்த வேகத்தில் இடது கையிலிருந்த பை அவனது வலது கைக்குள் ஒரு சதுரத்துணியாக நூறு ரூபாய் நோட்டுக்களோடு வெளியிடப்பட்டது. அந்தத் துணியோடு அந்த நோட்டுக்களை சரோசாவின் கைக்குள் திணித்தான்.”7 எனும் இக்கூற்றின்வழி அறியமுடிகிறது. ஒருவருடைய உழைப்பினைச் சுரண்டும்போது அவர்களுக்குத் துணையாக நின்று நீதியைப் பெற்றுத்தருவது உயர்ந்த சிந்தனையாகும்.

பொருந்தா மணத்தைத் தடுத்தல் :

‘வளர்ப்பு மகள்’ எனும் புதினத்தில், சொக்கலிங்கம் – பேச்சியம்மா தம்பதியர்களுக்குக் குழந்தை இல்லாததால் அவன் தங்கை செல்லம்மாவின் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறான். அப்போது அவனுக்கு ஆண்வாரிசு இல்லை என்ற ஏக்கத்தால், ஓர் இளம் வயது பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை, கேள்விப்பட்ட மல்லிகா வெகுண்டெழுகிறாள்.

“மல்லிகா அழைப்பிதழை வாயில் கடித்துக் கொண்டே யோசித்தாள். பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்திலா இப்படி? ஒருத்தி, ஏழையாகப் போய்விட்டால், அவளை யாரும் வாங்கலாம் என்பது இன்னும் நடக்குதே. மாமா சொத்தைக் காப்பாற்ற நினைத்தால், இந்த பேச்சியம்மாவையே தத்து எடுத்து மகளாய் வளர்க்கலாமே! அப்பாவா இப்படிச் செய்கிறார்? அப்பா அல்ல, அப்பாவோட பணம். பணத்தை, வாலிபமாய் பெண்கள் நினைக்கிறார்கள் என்கிற அகங்காரம். இதை தடுத்தே ஆகணும்.”8 என்று அத்திருமணத்தை தடுக்க முயற்சி செய்கிறாள். அதற்கு அவளின் பெற்றோரும்,

“செல்லம்மா பதறினாள். மல்லிகா என்னம்மா இது? இது உங்களுக்குப் புரியாதும்மா. இது ஒரு இளம்பெண்ணோட விவகாரம். விற்பனைக்கு வந்திருக்கிற ஒருத்தியோட எதிர்காலப் பிரச்சினை. வாங்கப்பா போகலாம். பணம் இருக்கா? கோணி வாங்க ஐம்பது ரூபாய் இருக்கு. பரவாயில்ல. நாம பட்டினிகூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப்போவதை நாம் பார்த்துட்டு நிற்கப்படாது வாங்கப்பா”9 என்று மல்லிகா மற்றும் அவளது பெற்றோர் பொருந்தா மணத்தைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

பாலியல் சீண்டலைத் தடுத்தல் :

சாமியாடிகள் எனும் புதினத்தின் கதை மாந்தர்களில் ஒருத்தி ரஞ்சிதம்(தொழிலாளி). அவள் பீடி சுற்றி வருகிறாள். அவளிடம் பீடி ஏசெண்ட் ராமசாமி (முதலாளி)

“இப்பவே ஒன் சேலயப் பிடிச்சு இழுக்கேன். ஒன் கள்ளப்புருஷன்ல எந்தப் பய வந்து காப்பாத்துறான்னு பாக்கலாம்.”10 எனும் கூற்றின்மூலமும்;

“செம்பட்டையான் பெண்களைப் பயமுறுத்துவதற்காவது ரஞ்சிதத்தை ஏதாவது செய்ய வேண்டும். ஒப்புக்காவது, அவள் தோளில் கிடக்கும் முந்தானையைக் கீழே இழுத்துப் போட வேண்டும். செறுக்கி மவள்” எனவும், “ஏசெண்டு, ரஞ்சிதத்தை, அடிமேல் அடிவைத்து நெருங்கினான். என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமலே – அதேசமயம், ஏதாவது செய்ய வேண்டும் என்ற வீறாப்புடன் நெருங்கினான்.”11 எனும் கூற்றின்மூலமும் சில ஆடவர்களின் நெறிபிறழ் நடத்தைகளும், அத்துமீறல்களும், பாலியல் சீண்டல்களும் சமுதாயத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

இதனைக் கண்ட ரஞ்சிதம் மற்றும் உடன் பீடி சுற்றும் பெண்கள், வெகுண்டெழுகின்றனர்.

“ஏய் பால்பாண்டி நீ நெசமாவே மனுஷன்னா ரஞ்சிதத்த தொடு பார்க்கலாம். என்னடா நெனச்சே. பன்னிப்பயலே. ஒருத்தி இரண்டாவது கணையைத் தொடுத்தாள். இதையடுத்து எல்லாப் பெண்களும் முந்தியடித்துப் பேசினார்கள். ஒரு பொம்புளய, அதுவும் ஒத்த வீட்டு பொண்ண, அடிக்கவாறியே நீயுல்லாம் ஆம்புளையாடா. பீடிக் கம்பெனில நீ பெரிய வேலைக்காரன். நாங்க சின்ன வேலைக்காரிவ. எங்கள வராதன்னு நீ எப்படிடா சொல்லலாம்”12 என்று ஒன்று கூடி எதிர்க்கின்றனர். இதுபோன்ற நிலைகளில் மகளிர் பொதுவுடைமைச் சிந்தனை கொண்டவர்களாய் செயல்பட வேண்டும்; துணிவுடன் போராட முன்வர வேண்டும்.

பட்டினி :

‘ஒரு கோட்டுக்கு வெளியே’ புதினத்தில், குட்டாம்பட்டியில் வசித்து வருபவன் அருணாசலம். பி.ஏ. படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவன் வசித்து வந்த ஊரில் பயங்கரமான வெள்ளம் வருகிறது. இதனால் ஊரே அடித்துச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஊரைக் காப்பாற்ற குளம் உடைபடுவதிலிருந்து தடுக்க உபரி நீரைத் திறந்து விடும்படி அருணாசலம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறான்.

“பயங்கரமான வெள்ளத்தால், நெல்லை மாவட்டமும், இதர மாவட்டங்கள் போல பலமாகப் பாதிக்கப்பட்டது. குட்டாம்பட்டிக் குளத்திற்கு, ராம நதியின் உபரி நீர் விரைவில் வெள்ளமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், குளம் உடையாமல் இருக்க, மதகைத் திறக்கும்படி ஹரிஜனங்கள் சொன்னதை – அதனால் தங்கள் சேரி அழியும் என்று சொன்னதை – நிலபிரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை ஆட்சேபித்து, அருணாசலம், மதகருகே ஒரு கட்டிலைப்போட்டு படுத்துக்கொண்டு, சேரி மக்களின் பேச்சையும் கேட்காமல், சாகும்வரை அல்லது மதகுகள் திறக்கப்படும்வரை, இந்த இரண்டில் எது முன்னால் வருகிறதோ அதுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, படுத்துக்கொண்டே அறிவித்தான்.”13 என்பதால் அறியமுடிகிறது. அருணாசலம் ஊர் மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பதிலிருந்து அவனின் பொதுவுடைச் சிந்தனையை அறியமுடிகிறது. இவ்வுயரிய பண்பு அனைவரிடத்தும் மேலோங்க வேண்டும்.

பிறருக்கு ஏற்படும் துன்பத்தை தடுத்தல் :

‘பாலைப்புறா’ எனும் புதினத்தில், கலைவாணி மனோகர் என்பவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். இந்நிலையில் மனோகரால் அவளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது. இதனால் அவள் அவனை வெறுத்து, சுமதி என்பவளிடம் தற்காலிக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாள். அப்போது,

“மிஸ்டர் பத்மநாபன் இருக்காரா? நீங்கதானா. ஒங்களோட எதிர்கால மருமகன் ரகோத்தமன் எயட்ஸ் கிருமிகள் உள்ளவர் சார். கல்யாணம், கருமாந்திரத்தில முடியும் சார். நான் சொல்வதில் சந்தேகம் வந்தால், நம்பிக்கையான டாக்டர்கிட்டே அந்தப் பையனை டெஸ்ட் செய்து பாருங்க. என் பேரா? கோணசத்திரத்தில் இருக்கிற கலைவாணி. டாக்டர் சுமதியோட தற்காலிக உதவியாளர்”14 என்று கூறி எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவனுக்கு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து அப்பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறாள். பிறகு, 'எய்ட்ஸ் திருமண தடுப்பு இயக்கம்' என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்தி,

“ஐந்தாறு எய்ட்ஸ் கல்யாணத்தைத் தடுத்திருக்கோம். ஹெச்.ஐ.வி. பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கோம். பல நோயாளிகளுக்கு பயனுள்ள தொழில்களை நடத்தப்போறோம். நம்மகிட்ட யோசனை கேட்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க. நம்ம அமைப்போட பெயர், நாலு பக்கமும் இடிபடுது”15 எனும் கூற்றால் ஒருவரிடம் உண்டாகும் பொதுவுடைமைச் சிந்தனை பலரையும் காப்பாற்றி நல்வழிப்படுத்தி வாழ வைக்கும் என்பதை அறியமுடிகிறது.

தொகுப்புரை :

ஒரு மனிதனுக்கு கிடைக்கின்ற அனைத்து வசதிகளும் மற்றொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறுவது பொதுவுடைமைச் சிந்தனை ஆகும்.

எங்கெல்லாம் அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறதோ அதைத் தட்டிக் கேட்டல் வேண்டும். பிறர் துன்பம் போக்க போராடுதல் வேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டியது பொதுவுடைமை. மனிதர்களுக்கிடையே நிகழும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றுகூடி ஒற்றுமையுடன் போராடி நீதியை நிலைநாட்டுதல் வேண்டும். அனைவரிடமும் மதநல்லிணக்கமும் சகோதரத்துவமும் வளர வேண்டும். சமுதாயத்தில் நிகழும் பாலியல் சீண்டல், உழைப்புச் சுரண்டல் முதலியவற்றிற்கு பொதுநலத்துடன் போராட அனைவரும் முன் வருதல் வேண்டும்.

முதலாளி - தொழிலாளி இடையே உள்ள வர்க்கப்பிரிவினையை போக்கிட வேண்டும். ஒருவரின் நேர்மை சமுதாயத்தில் பொதுவுடைமைச் சிந்தனையை மேலும் வலுப்பெறச் செய்யும்.

அரசு / தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர் நேர்மையோடும், மனிதநேயத்தோடும் நடந்து கொள்ளுதல் வேண்டும் ஆகிய பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமது புதினங்களில் சு.சமுத்திரம் அவர்கள் பதிவு செய்துள்ளமையைக் காணமுடிகிறது.

சான்றெண் விளக்கம் :

வெளிச்சத்தை நோக்கி,ப.43

மேலது,பக்.43-44

இல்லம் தோறும் இதயங்கள்,ப.232

வாடாமல்லி,ப.251

நெருப்புத்தடயங்கள்,பக்.288-289

மூட்டம்,ப.79

தாழம்பூ,பக்.255-256

வளர்ப்புமகள்,ப.107

மேலது,ப.107

சாமியாடிகள்,ப.160

மேலது,ப.160

மேலது,பக்.160-161

ஒரு கோட்டுக்கு வெளியே,ப.152

பாலைப்புறா,பக்.271-272

மேலது,பக்.331-332

துணைநூற் பட்டியல் :

அரங்க சுப்பையா,இலக்கியத் திறனாய்வு கொள்கைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 600 014, பதிப்பு: 2007

சமுத்திரம் சு,ஒரு கோட்டுக்கு வெளியே, திருவரசு புத்தக நிலையம்,23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை–600017, பதிப்பு:1977

சமுத்திரம்.சு,வளர்ப்பு மகள்,திருவரசு புத்தக நிலையம்,23,தீன தயாளு தெரு, தியாகராயநகர்,சென்னை – 600017,பதிப்பு:1980

சமுத்திரம்.சு,இல்லம் தோறும் இதயங்கள்,கங்கை புத்தக நிலையம்,23, தீன தயாளு தெரு,தியாகராய நகர்,சென்னை – 600017,பதிப்பு:1982

சமுத்திரம்.சு,நெருப்புத் தடயங்கள்,கங்கை புத்தக நிலையம்,23,தீன தயாளு தெரு, தியாகராய நகர்,சென்னை – 600017,பதிப்பு:1983

சமுத்திரம். சு,வெளிச்சத்தை நோக்கி,திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600017, பதிப்பு:1989

சமுத்திரம். சு,நிழல் முகங்கள்,ஏகலைவன் பதிப்பகம், இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சென்னை– 600041, பதிப்பு:1991

சமுத்திரம்.சு,சாமியாடிகள்,திருவரசு புத்தக நிலையம்,13,தீன தயாளு தெரு, தியாகராய நகர்,சென்னை – 60001,பதிப்பு:1991

சமுத்திரம்.சு,தாழம்பூ,திருவரசு புத்தக நிலையம்,23,தீன தயாளு தெரு, தியாகராய நகர்,சென்னை – 600017,பதிப்பு:1992

சமுத்திரம். சு,மூட்டம்,ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சென்னை–600041, பதிப்பு:1994

சமுத்திரம். சு,வாடாமல்லி,பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை–600014, பதிப்பு: 1994

சமுத்திரம்.சு,பாலைப்புறா,ஏகலைவன் பதிப்பகம், 9,இரண்டாவது குறுக்குத் தெரு,டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சென்னை – 600041, பதிப்பு:1998


- ம. ஹரிகிருஷ்ணன்
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி.

நெறியாளர்: முனைவர் அ.திலகவதி, இணைப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி.