கவிஞர் எழுத்தாளர் ந.சிவநேசன் அவர்களின் 'தெற்கு ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.
சிறப்பான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு. எதிர் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
இது கவிஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
இரண்டு முறை, மூன்று வாரங்களாக படித்த ஒரு திருப்தியான சிறுகதைத் தொகுப்பு.
தெற்கு ஜன்னல் மனதை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு கதை. குழந்தை இல்லாத வயதான தம்பதிகளும், குடும்பத்தை விட்டு முதல் தேதிக்காக பிரிந்து வாழும் கதை சொல்லியும் மனசுக்குள் நிற்கிறார்கள்.
முதல் தேதியையும், வலது காலையும் ஒப்பிடும்போது, உள்ளிருக்கும் கவிஞர் வெளிப்படுகிறார். தனிமை பற்றிய வரிகள் அருமை.
குழந்தையின்மை என்பது இக்காலத்தில் ஒரு பிரச்சினையே எனினும், பிறருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், இச்சமூகத்தின் சாபம். அதுவுமின்றி இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையே.
வீட்டையும் ஒரு குழந்தையைப் போல எண்ணும் மூர்த்தி சாரின் முடிவை ஜீரணிக்க முடியவில்லை. மனதைத் தொட்ட கதை.
ஊற்றுக்கண் சற்றே வித்தியாசமான கதை. மகள் மருத்துவமனையில் இருக்கையில், காதலியின் கல்லறையில் அமர்ந்து அழும் ஒருவனைப் பற்றிய கதை.
படையல் கறி சிறுகதை விகடனில் வந்த போது, படித்து விட்டு வாசிப்பு அனுபவம் எழுதிய ஞாபகம். காலங்கள் மாறிப்போக, சிறு தெய்வங்கள் தனிமையில் உழல்கின்றன. மக்கள் பெருந்தெய்வங்களை நோக்கி நகர, அவ்வப்போது வருகின்ற படையல் கறியும் சிறிதாகிறது. கடைசியில் முனியனைத் துரத்தி ஓடும் கருப்பு சாமியை படித்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆசிரியருக்கு அவல நகைச்சுவை அழகாக கைகூடி வந்திருக்கிறது.
உடைப்பு சிறுகதை மனிதம் இன்னும் இருக்கிறது என்று காட்டுகிறது. தனது பேரப்பிள்ளையை வெட்டியவனின் மனைவியுடன் பயணிக்கும் பாட்டி, ஆறுதல் சொல்லி அவளுக்கு திருநீறு பூசி விடுவதில் மனம் நெகிழ்கிறது.
காக்காபொன் சிறுகதை, வஞ்சிரத்தான் சாமியாகவே மாறிப்போன கூத்துக் கலைஞர் மாரியண்ணனின் இறப்பும் அதன் விளைவுகளுமே கதை. ஏற்றத்தாழ்வுகள் என்று மறையுமோ? வளர்க்க வேண்டியவர்களே அடித்துக் கொள்ள, கலை எங்கு போகும்? மெல்ல இனிய சாகும். காக்கா பொன் – புதிய வார்த்தை. நெகிழ்வான கதை.
தி கிரேட் தில்ரூபா சிறுகதை, ரூபா என்னும் நடனக்கலைஞரைப் பற்றியது. தனது அம்மா மருத்துவமனையில் இருக்கையில், பிழைப்புக்காக நடனமாடுவது எவ்வளவு கொடுமை. நடனக்கலைஞர்கள் சந்திக்கும் தொல்லைகள் விரிவாக சொல்லப்படுகிறது. கடைசியாக, இயலாமையால், நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வது கலங்க வைக்கிறது. மற்றுமொரு நெகிழ்வான கதை.
இதன் தொடர்ச்சியாக, உவர் நிலத்துப்பூ கதை. நடன மாது ஒருவரின் நேர் காணல். மோகனாவின் கதை கண்ணீரை வரவழைக்கிறது.
கல்யாணி, ஒரு மாய யதார்த்த வகைக்கு அருகிலுள்ள கதை. ஆனால் இறுதியில் சொல்லப் படும் காரணம் நாடகத்தனமாக இருக்கிறது.
அவயக்கோழி சிறுகதை, எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை. வயசான நண்பர்களின் லொள்ளு பேச்சை, வட்டார வழக்கில் அசலாக கொண்டு வந்திருக்கிறார். கதையின் முடிவு அன்பே சிவம் என்கிறது.
அக்காலத்தின் கண்கள் கதை நெகிழ்வான ஒன்று. தெய்வமும் அன்றே கேட்கிறது. ஆனால், பாவம் செய்தவனின் மகனை. ஆனாலும் பிரபஞ்சம் சேர்க்க வேண்டிய ஒன்றை, சரியான கைகளில், சரியான நேரத்தில் சேர்த்து விடுகிறது. சரியாக கணவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வருவது சினிமாவில் தான் நடக்கும். ஆனாலும் அருமை.
தென்றல் கேசட் கடை கதை நகைச்சுவைக்காக. டபுள்ஸ் பாலு என்பதற்கான காரணம் இறுதியில் வெளிப்படுவதில், சிரிக்காமல் இருக்க முடியாது.
உளைந்தீ கதை நெகிழ்வான ஒன்று. தலைப்பின் பொருள் என்னவென்றால், மன வருத்தம், மன உளைச்சல். படிக்கும் போது, எனது அம்மா காணாமல் போன நிகழ்வு ஞாபகம் வந்தது. கடைசியாக காசு இருக்குது, ஆனால், சாப்டியான்னு கேட்கத்தான் யாருமில்லை என்று சொல்லும் வரிகளில், வாசிக்கும் நம்மை, அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. இன்றைய யதார்த்தம் என்பது எவ்வளவு கொடுமை.
பாதை சொற்களாலானது கதை, பாவக்கணக்கு. சொற்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு, வேங்கடத்தாரே சாட்சி. முருகனாருக்கும் சீரங்கனுக்கும் நடக்கும் உரையாடலில், எழுத்தாளர் தெரிகிறார். பிய்ந்து போன செருப்பை விட, வெறுங்கால் நடைக்குப் பழக, சீரங்கனால் முடிகிறது.
ஒரு துண்டு மீன் கதை நம்ப முடியாத, ஆனால் நடந்தது கொண்டிருக்கும் ஒரு கதை. சாம்பிராணி தூபம் போடுவது போல, சிலருக்கு கைராசி. வாஸ்து போல நம்ப முடியாத சங்கதி. சிலர் வாயில் விடக்கூடாது, சிலர் கண்ணடி படக்கூடாது, சிலரின் கால் இரும்பு, என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வது நம்ப முடியாத சங்கதிகளாக இருப்பினும், அனுபவசாலிகள் சரியென்று சொல்வதைத் கேட்டிருக்கிறேன். மீன் கேட்டவனின் கதை, மனசைக் கனமாக்கி விட்டது.
ஊற்று கதை மனித மனசின் இருண்ட பக்கங்களைக் காட்டும் ஒன்று. சிறுவனின் வழியாக சொல்லப் படும் பெரியவர்களின் கதை. குருவிக் குட்டானும், தோப்புக்காத்தானும் மனசில் நிற்கிறார்கள். கடைசியாக அன்பே சிவம் என்னும் மற்றொரு கதை.
தெற்கு ஜன்னலா அல்லது படையல் கறியா என்றால், எனக்கு மிகவும் பிடித்த கதை தெற்கு ஜன்னல்.
சில கதைகளைத் தொகுப்பில் சேர்க்காமல் தவிர்த்திருக்கலாம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
- கண்ணன் விஸ்வகாந்தி