புகைப்படம் எடுக்க
மரத்தடியே நிற்கிறாய்
இலைகளெல்லாம் இதயங்களாகின

*
வான மின்னல் என்றதை
திரும்பப் பெறுகிறேன்
நீ வண்ண மின்னல்

*
எந்தக் கூட்டத்திலும் நீ தொலையலாம்
கூட்டமே கண்டு பிடித்து விடும்
தேரோட்டம் அல்லவா நீ

*
ரயில் கேட்டில் காத்திருக்கையில்
கவனித்திருக்கிறேன்
தோகை மடங்கியிருக்கும் உன் ஸ்கூட்டி

*
நீ தான் நட்சத்திரம் தூவுகிறவள்
என்றேன்
உடனே ஒப்புக்கொண்டது ஊர்

*
ஒற்றைக் கண் சிமிட்டுகிறாய்
சூட்டுக்காய் சுளீர்
இதயத்தில்

*
வாசலில் அமர்ந்து
வேடிக்கை பார்க்கிறாய்
ஓவியமாகி விட்டது வீடு

*
ஆடும் கம்மல் சிணுங்கும் வளையல்
கொலுசொலி கோரஸ்
நீ செல்லுமிடமெல்லாம் மெல்லிசை

*
நிலவுக்குச் செல்ல
குறுக்கு வழி
உன்னிடம் உண்டு தானே

*
கூந்தலை சரி செய்யாதே
காற்றின் கடைசி களைதலையும்
காண வேண்டும்

- கவிஜி