திண்ணையில் அமர்ந்தபடி ஆண்டாள் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தார்கள் கொங்கு குலச் சிங்கமும், சமூக சேவகனும். போதாக்குறைக்கு கலாச்சாரக் காவலனும் உடன் வந்தான். சேலத்துக்காரர் சப்ளை செஞ்ச தேனி மிக்சரோடு அரட்டை ஆரம்பித்தது. நான் ஆண்டாள் பாடலை நிறுத்திய போது பாப்பா வந்து வைரமுத்து பாடலை போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோதே கடுப்பாகி விட்டான் கலச்சாராக் காவலன்.…
ஒரண்டை இழுக்க ஓராயிரம் விசயங்கள் இருந்தாலும் பேச்சு காதலர் தினத்தை நோக்கித் திரும்பியது. பிப்ரவரி தொடங்கிடுச்சு... இவனுக ஆரம்பிச்சுக்குவானுங்க... என்றான் கலச்சாராக் காவலன்.… எதுக்கு நாய்க்குத் தாலி கட்டறதுக்கா என்றேன்.. நாய்கள் மாதிரித் திரியறதுகளைக் கட்டுப்படுத்த வேற என்ன செய்வது? அதனால் தானே அந்த மாதிரி செய்றோம்... அவிங்கெல்லாம் மனிதர்கள் மாதிரி தான் திரியிறாங்க... வடக்கே காசிப்பக்கம் போய்ப் பாரு அங்கதான் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நாய் மாதிரித் திரியிறாங்க முதல்ல அவனுகளுக்கு ஒரு மீட்டர் கோவணத்துணி வாங்கிக் கொடுங்க..
ஆயிரம் சொல்லுங்க...இந்தக் காதலர் நாள் எல்லாம் கலாச்சாரத்தைச் சீரழிக்கிற சமாச்சாரம் என்றான் கொ.கு.சி.… என்னடா உங்க கலாச்சாரம் சீரழியுது என்றேன். பின்ன இல்லியா? காதல்ங்கற பேரில் கண்ட ஜாதிப் பசங்க கூடச் சேர்ந்து திரியறாங்க..
அப்ப உங்க பிரச்சனை ஜாதி மாறி காதலிச்சு திருமணம் செய்வதுதான் இல்லியா? என்றபடி என் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தேன். போன வாரம் நாலு நாளா ஊரில் இல்லியே எங்க போன? வேறெங்க பழனிக்குப் பாதயாத்திரை தான் போனேன் என்றான் கொ.கு.சி.…முருகன் வள்ளியைக் காதலிச்சுத்தானே கலியாணம் செஞ்சாரு.. காதலிச்சுக் கலப்புத் திருமணம் செஞ்ச சாமியைக் கும்புடிறீங்க, ஆனால் உங்க வீட்டுப் பொண்ணுங்க காதலிச்சா மட்டும் தப்பு இதென்னடா நியாயம்.
அது சாமியெல்லாம் அப்படிச் செய்யலாம்... நாம செய்யக் கூடாது என்றபடி சமாளித்தான். ஆனா ஆயிரம் இருந்தாலும் இந்தப் பழனி பாதயாத்திரை சமாச்சாரம் வருட வருடம் தொடரணும். அட இதபாருடா நாத்திகனுக்கு ஆத்திகம் வளர்றதுல்ல இருக்கற ஆர்வத்த என்ற கொ.கு.சிங்கத்தைப் பார்த்துத் திருப்பிச் சொன்னேன்.. ஆத்திகம் வளருதோ இல்லையோ ஜம்பது பேரு போற கூட்டத்தில் முருகனையும் வள்ளியையும் உண்மையா வேண்டிட்டுத் தனியாப் போயிட்டு ஜோடியாத் திரும்பி வர்ற அந்த இரண்டு பேருக்குக் காகவே நாங்க ஆதரிக்கிறோம்.…
ஆனாப் பாருங்க, இந்தக் காதலர் நாள் மாதிரியான கொண்டாட்டங்கள் மேற்கத்திய நாடு களிலிருந்து இறக்குமதியானவை இதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம், நம்ம மண்ணுக்கேற்ற விழா இதுவல்ல என்று பொங்கினான் சமூக சேவகன்.…
அட நீ வேற இருக்கறீயா, அத மறந்துட்டேன்.. காதலர் நாள் இல்ல காதலே நுகர்வு தான் அது உன்னை மாதிரி ஆளுகளுக்குப் புரியாது தம்பி.. ஒரு டைம் மிசின் இருந்தா சங்க காலத்தில் உடன்போக்கு போன உன் முப்பாட்டன், பாட்டிக்கிட்ட போய்ச் சொல்லு... காதலர் நாள் பற்றி இதெல்லாம் நம்ம சமாச்சாரம்டா பேராண்டின்னு சொல்லுவாங்க.. உங்களுக்கெல்லம் பிரச்சனை காதலால் ஏற்படுகிற ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தான்...… அதை நேரடியாகத் தமிழ்நாட்டுச் சூழலில் சொல்ல முடியாததாலே இப்படி முற்போக்கு முகமூடி போட்டுக்கறீங்க அவ்வளவுதான் சமாச்சாரம்.…
சங்கத்தைக் கலைக்கிற நேரமாச்சு... அப்பப் பார்த்துக் கலைக்குழு நாராயணன் கிட்ட இருந்து போன். அப்பறங்க.... இந்தக் காதலர் நாளுக்கு என்னங்க ஸ்பெஷல்? என்றவரிடம்.. வேறன்ன.. இந்தக் காதலர் நாளை ஆண்டாள் பாடல்களோடுக் கொண்டாடுவோம்…
கோவிலும் பக்தியும்
திராவிடக் கட்சிகள் நாட்டைக் கெடுத்தது பத்தாதுன்னு இப்பக் கோவிலையும் கெடுக்கறாங்க.. தெய்வத்தை நிஞ்சித்தா கோவிலெல்லாம் பத்திட்டு எரியுது என்றபடி பழனி பஞ்சாமிருதமும் கையுமாக வந்தான் பச்ச வேட்டி பாலமுருகன்.. என்னடா.. நடைப் பயணமெல்லாம் எப்படி முடிஞ்சது என்றேன்.. ம்... அதெல்லாம் நல்லாத்தான் முடிஞ்சது..
சரி நம்ம பெருமாள் பொண்டாட்டியை அந்த முத்துப் பய எதோ சொல்லிட்டனாம் விசயம் தெரியுமா? உனக்கு விசயம் தெரியுமா என்றேன்.. இல்லயே எனக்குத் தெரியாதே, நான் பழனி போயிட்டேனே.. சரி அதுக்குப் பெருமாள் என்ன செஞ்சான்? என ஆர்வமாய்க் கேட்டான் ப.வே. பாலமுருகன்.. பெருமாளுக்குக் கோபம் வந்து வீட்டை எரிச்சுட்டான்.. யார் வீட்டை முத்து வீட்டையா? இல்ல முருகா…பெருமாள் அவன் வீட்டையே எரிச்சுட்டான் என்றேன்..
சரியான லூசுப்பயலா இருப்பான் போல..என்றான் ப.வே.பாலமுருகன்.. ஏன்னடா முருகா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தெய்வத்தை நிஞ்சித்தா கோவிலெல்லாம் பத்திட்டு எரியுது.. அப்படின்னு சொன்ன இப்ப அதேமாதிரி செஞ்ச நம்ம பெருமாளை லூசுப்பயன்னு சொல்ற.. என்னவோ போடா முருகா...…தெய்வத்தை நிஞ்சித்தா, தெய்வம் என்ன செய்யணும்? நிஞ்சித்தவனை ஏதாவது செய்யணும் அதை விட்டுட்டுக் கோவிலை எரிச்சா அது என்னடா தெயவம்..
அதெல்லாம் இல்லை...திராவிடக் கட்சிகளின் இந்து சமய அறநிலையத்துறை தான் இதுக்குக் காரணம்... தெய்வ பக்தி உள்ளவங்கக் கிட்ட கோவில் நிர்வாகத்தைக் கொடுத்தா.. அவா சரியா நிர்வாகம் செய்வா... இதுதான் சரி என்றான் ப.வே.பாலமுருகன்..
ம்ம்.. சரியா உங்களை நல்லாத்தான் பாப்பானுக மூளைச்சலவை செஞ்சிருக்காங்க....என்றவனிடம் இந்தக் கருப்புச் சட்டைக்காரனுகளுக்கு எப்பப் பார்த்தாலும் அய்யமாருகளைத் திட்டறதே வேலையாப் போச்சு.. நான் சொன்னது கடவுள் பக்தியுள்ள என்னை மாதிரி ஆளுககிட்டக் கொடுத்தா கோவில் நிர்வாகம் சீரா இருக்கும்...…
சரிடா.. முருகா பழனிக்கு நடந்து போறயே... எத்தன வருசமா போற.. என்றேன். உள்ளூர்க்காரன் உனக்குத் தெரியாதா 15 வருசமாப் போறேன் நம்ம கோவில் தர்மகர்த்தா தான் கூட்டிட்டுப் போயிப் பழக்குனாறே....சரி அவரு வீட்டில் பல பிரச்சனைகள் இருக்கே ஊருக்குள்ள என்ன பேசிக்கறாங்க தெரியுமா? என்றேன்.. தெரியலை என்று முருகன் சமாளித்த போது முருகன் அம்மா வந்துவிட்டார்.. அவரிடம் கேட்டேன்.. ஏம்மா.. இந்தத் தர்மகர்த்தா வீட்டில் ஏன் இவ்வளவு பிரச்சனை? உடனடியாகப் பதில் வந்தது. இது தெரியாதா கண்ணு.. “சிவன் சொத்து குல நாசம்”… திரும்பி முருகனைப் பார்த்தேன் ஆளைக் காணோம்…
இந்து மேட்ரிமோனி…
இந்த வருடம் இத்தனை கலப்புத் திருமணம் நடத்தி வச்சிருக்கோம் என முகநூலில் பதிவு போடுகிற தோழர்களுக்கு சரியான போட்டி... இனி தமிழகத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகமாகும், சுலபமாகும். காதலர்கள் தங்கள் காதலைத் திக்கித் திணறிப் பயந்து பயந்து வீட்டில் சொல்ல வேண்டியதில்லை..
நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு மட்டும்தான் காதலர் நாள் அன்னிக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி மட்டும் போனீங்கினாப் போதும். அவரே உங்களுக்கு ஜாதி பார்க்காம, ஜாதகப் பொருத்தம், நல்ல நேரம் பார்க்காம, பார்ப்பானைக் கூப்பிடாம உடனடியாத் திருமணம் செஞ்சு வைச்சுடுவாரு, அப்பறம் ஒரு பய உங்களை ஒண்ணும் செய்யமுடியாது… உடுமலையில் சங்கரை நடு ரோட்டில் வச்சு வெட்டிய மாதிரி யாரும் உங்களை வெட்ட முடியாது..
திடீரென்று போனில் வந்தார் பொள்ளாச்சியிலிருந்து ஓனர்.. ஆமா இந்த சர்வீசுக்கு என்ன பெயர் தம்பி என்றார்..
அவிங்க எதும் வைக்கலைங்கண்ணா.. நம்ம வேணா பெயர் வைக்கலாம் இந்து மேட்ரிமோனி… சரி விடுங்க தம்பி எங்க ஊர்ல கூட நாய்க்கு ஊசி போட்டுட்டு இருந்த வெட்னெரி டாக்டர் ஒருத்தரு இப்பத் திடீரென மனுசனுகளுக்கு ஊசி போட ஆரம்பிச்சுட்டாரு.. அதே மாதிரி நாய்க்குத் தாலி கட்டிட்டுத் திரிஞ்ச பசங்க இப்ப மனுசனுக்குத் தாலி கட்டச் சொல்றாங்க ஏதோ நல்லது நடந்தாச் சரி என்றார்.
அப்புறம் தம்பி, அந்த அர்ஜூன் சம்பத்துக் கிட்டச் சொல்லுங்க.. எனக்குத் தெரிஞ்ச பெண்ணொருத்தி ஒருத்தரைக் காதலிச்சு உருகி, உருகிப் பாட்டா பாடித் திரியறாங்க. அவிங்க இரண்டு பேருக்கும் முதல்ல கலியாணம் செஞ்சு வைக்க சொல்லுங்க என்றார்..
அண்ணன் செல்வேந்திரன் செட் என்பதை நினைவில் கொள்ளாமல், யாருண்ணே அந்தப் பெண் எனத் தெரியாமல் கேட்டு விட்டேன்.. அதிரடியாகப் பதில் வந்தது வேற யாரு ஆண்டாள் தான்...…