கொலுசின் வெற்று சிரிப்பு
உன் கால் ஏறியதும்
முத்துச் சிரிப்பாகி விட்டது
*
வெறும் பாதத்தில் படியேறு
சிதறிக் கிடக்கும் செங்காந்தளின்
செருக்கு குறையட்டும்
*
சுற்றுலா போனாலும் போனாய்
நீ நின்ற இடமென்று
ஆளாளுக்கு போட்டோ எடுக்கிறார்கள்
*
நடந்து செல்லும் உனக்கு
சாமரம் வீசத்தானே
சாலையோர மரங்கள்
*
தேவதையை ஒதுக்குகிறேன்
உன்னோடு பொருந்த
ஒரு தெய்வம் நேரில் வரட்டும்
*
உனக்கு ஒரு புனைப்பெயர் வேண்டும்
அதிலும் நானே கவிதைகள்
புனைய வேண்டும்
*
நீ
பூ கோர்ப்பதே
பூ பூப்பது போல தான்
*
சர்க்கரை அளவாகப் போட்டும்
சரியா இருக்கா என குடித்துப் பார்த்திருப்பாய்
பார்... சுகர் ஏறிக் கிடக்கு டீ
*
மூடியிருக்கும் உள்ளங்கைக்குள்
ஒன்றுமில்லை அறிவேன்
இருந்தும் நீ திறக்கும் வரை காத்திருப்பேன்
*
வாசல் வந்து பார்க்கலாம் தான்
ஆனாலும் நீ ஜன்னலெட்டி பார்ப்பதைத் தான்
நிலாவும் விரும்புகிறது
- கவிஜி