இது போன்ற புத்தாண்டு ஒன்றில்தான்
அது நிகழ்ந்தது

இடது வலம் என்று நகர்ந்து
தோள் உரச நடக்கையில்
ஏசுவும் சேர்ந்து கொண்டதை
நீங்கள் நம்ப மாட்டீர்கள்

சைக்கிள் கடை முக்கு தாண்டுகையில்
கை கோர்த்துக் கொண்டதில்
பின்னால் வந்த யூதாசுக்கு
வருத்தம் மற்றும் கோபம்

இரவு பூத்த இடத்தில்
இதழ் முட்டி முத்தமிட்டதாக நம்பினோம்
நொடி கனவுக்குள் இஸ்ரேல் குடியுரிமை
திராட்சை ரச இனிமை

பிரசங்கம் என்பது அவ்விரவில்
அவள் எனைப் பார்ப்பது
நான் அவளைப் பார்ப்பது
ஊர் கூமுட்டைகள் எங்களைப் பார்ப்பது

அடிக்கடி ஊளையிட்ட பாஸ்டர்க்கு
யாருக்கும் தெரியாமல் தின்ற
அப்ப செரிமானக் கோளாறு
இன்று குளித்தது
ஜோடான் நதிக்கரையா உள்ளூர் குளக்கரையா
என்ற குளறுபடி வேறு

கண்கள் சிரிக்க இதழ்கள் நிறைக்க
நாங்கள் அப்போஸ்தலரின் ஜிப்பாவுக்குள்
ஒளிந்து கொண்டு விரல் நீவிக்
கொண்டிருந்தோம்

நள்ளிரவு தாண்டி இனி ஜெருசலேம்க்கு நடப்பது
ஆகாதென கர்த்தரின் மொட்டைமாடி
கரத்திலேயே
ஆங்காங்கே படுத்துக் கொள்ள ஆணையிட்டார்கள்
கர்த்தரின் பிள்ளைகள்

அந்நிய பாஷைகளோடு
விசுவாசத்தின் பிள்ளைகள் கர்த்தரை வேண்டினர்
அந்நியோன்ய பாஷையோடு
அன்பின் பிள்ளை நாங்கள் காதலை வேண்டினோம்

நட்சத்திரங்கள் பூச்சொரியும்
எங்கள் வானத்தை
காணான் தேசமும் எங்களோடு சேர்ந்து
அறிந்திருக்கும்

விடிகையில் சாத்தான் வெடி வைத்திருந்தான்
தேவாட்டுக் குட்டிகளைப் போல
குளிருக்கு இறுகிக் கிடந்தோம்

சிலுவை சுமப்பதை விட கொடியது
காதலை சுமப்பது
நஞ்சுண்டும் பிழைத்திருப்பது அது
நாசூக்காக பிரித்துப் போனார்கள்

பிறகு பைபிளை மூடி வைத்து விட்டு
வரிந்து கட்டிக் கொண்டு போட்ட சண்டையில்
சிலுவை மரத்துக்குப் பதில்
புளிய மரத்தில்
தூக்கில் தொங்க விடப் பட்டோம்

கை விடப்பட்ட ஏசுவுக்கு மட்டுமல்ல
கை விட்ட கர்த்தருக்கும்தான் ஷேம் ஷேம்
ஆதலாலும் ஆமென்
காதலாலும் ஆமென்

- கவிஜி

Pin It