இரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடனும் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். போலீஸார் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது. வெறித்தனமாய் தங்கையின் தலையை வெட்டிக் கொல்லும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டாள். நிலோபர் பீபி வாழத்துவங்குவதற்கு முன்பே 14 வயதில் மணமுடிக்கப்பட்டு 8 வருடம் தினமும் கணவனின் சித்ரவதையை தின்று ஜீரணிக்க இயலாமல் 22 வயதில் வாழ்க்கையை இழந்து பிறந்த வீடு திரும்பினாள், மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையின் மூலம் அவளுக்கு ஆதரவளிக்க கையாலாகத குடும்பத்தால் சிக்குண்டாள்.

சில காலம் கழித்து அவளுக்கு பெரோஷ் என்ற ஆட்டோ டிரைவருடன் காதல் ஏற்பட்டது. தனக்கான வாழ்க்கையை அவள் தேர்வு செய்தாள். இது தவறா ? இதனால் தன் குடும்ப கௌரவம் பறிபோனதாகச் சொல்லித்தான் அவள் அண்ணன் மேதாப் ஆலம் அவளை தெருவிற்கு இழுத்துவந்து தலையை வெட்டியெடுத்து வீதிகளில் ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்வலமாய் கொண்டுசென்றான்.

ஒலிம்பிக் சாதனைகள் முறியடிப்பு

honour killingஇப்படித்தான் உலகம் முழுவதும் குடும்ப, சமூக, சாதி கௌரவம் என்ற பெயரில் பெண்கள் தங்களது குடும்ப ஆண்களாலேயே துடிக்கத் துடிக்க கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். உலகளவில் ஆண்டிற்கு சுமார் 5000 கொலைகள் என்கிறது ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம். 20000ஐ தாண்டும் என்கிறது இங்கிலாந்து பிபிசி அட்வகசி குழு.

இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 1000 உயிர்களை பலிகொள்கிறது இந்தப் போலி கெளரவம். காஃப் பஞ்சாய்த்துகள் அரசாட்சி புரிகிற பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் மட்டும் ஆண்டு முழுவதும் சுமார் 900ம் இதர மாநிலங்களில் 100 முதல் 300 கொலைகள் திரிகின்றன. ஒவ்வொரு மாதமும் 70-80 ஆணவக் கொலைகளை எட்டிப்பிடிக்க வில்லையெனில் நம் இந்திய தேசத்திற்கு தூக்கம் வராது. இவையெல்லாம் பதிவான வழக்குகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள். உண்மை பல மடங்கு உயரத்தில் உள்ளது. எண்ணற்ற கொலைகள் வீட்டிற்குள்ளேயே புதைக்கப்படுகின்றன, விபத்துகளாகவும் தற்கொலைகளாகவும் உருமாற்றப்படுகின்றன. இந்தியாவில் ஆண்டிற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகளென பதறுகிறது பல ஆய்வுகள்.

கொலை மட்டுமல்ல ! காயப்படுத்துவது, கடத்துவது, அடைத்து வைப்பது, அமிலம் வீசுவது, ஊரைவிட்டு விலக்கி வைப்பது, அபராதம் விதிப்பது, மொட்டையடிப்பது, பாலியல் வன்கொடுமை எனப் பல பரிமாணங்களில் அலைகிறது. இதனையும் விழுங்கினால் இந்தியாவின் கெளரவம் பல இலட்சங்களைக் கடந்து காற்றில் பறக்கும்.

சாதிப்பஞ்சாயத்துகளின் மரணதண்டனை

வேற்று சாதி, மத திருமணங்கள் மட்டுமல்ல பெண்களின் உடை, நாகரீகம் கூட சமூக கெளரவத்தை இழிவு படுத்துவதாகச் சொல்லி சாதி பஞ்சாயத்துகள் பொது இடங்களில் பெண்கள் செல்போன் பேசுவது, பாடுவது, ஆடுவது, ஜீன்ஸ் அணிவது போன்றவைகளுக்கு தடை விதித்துள்ளன. இதை மீறுபவர்களுக்கும் அவள் குடும்பத்தாருக்கும் மரண தண்டனை விதிக்கிறது. கூட்டாக பாலியல் வல்லுறு செய்து கொல்வது, நிர்வாணமாக்கி துன்புறுத்துவது, ஊர்வலமாக அழைத்துச் செல்வது, ஆயுதங்களால், கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடூர முறையில் அம்மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.

உத்திரபிரதேசத்தில் பாங்பத், ராஜஸ்தானில் உதய்புர்வதி, பிகாரில் சுந்தர்பரி ஆகிய ஊர்களில் பெண்கள் செல்போன் உபயோகிக்க காஃப் பஞ்சாயத்துகளின் தடையுத்தரவை நாளிதழ்களில் படித்திருக்கலாம். கடந்த 2013 ஜூன் மாதத்தில் உத்திரப்பிரதேசம் அலிகாரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக கஞ்சன் என்ற 20 வயது யுவதி சாதிப் பஞ்சாயத்தால் அடித்துக் கொல்லப்பட்டாள். தடுத்த அவளது அம்மா கமலேஷ் துபேயும் அடித்துக் கொல்லப்பட்டார். அப்பா நேத்ரபால் கஞ்சன் படுகாயமடைந்தார். இப்படி மனதை பதறவைக்கும் பல கொலைகளை சொல்லிக்கொண்டே போகலாம். 2004 முதல் 2011 வரையிலான காலத்தில் உலகலவில் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் மீதான ஐ.நா வின் சிறப்புத் தூதரின் அறிக்கை துயரப்படுகிறது.

இதில் கொடூரத்தின் உச்சமென்னவென்றால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளுக்கு மருத்துவ சிகிச்சையும் மன சிகிச்சையும் அளித்து அவளை மீட்டெடுக்காமல் தற்கொலையிலிருந்து காப்பாற்றாமல், குடும்ப கெளரவம் சரிந்துவிட்டதென பிறந்த வீட்டாரால் அல்லது கணவரால் கொல்லப்படுகிறாள். பாலியல் காயங்களுக்கு மருத்துவமாய் கொலையைப் பெறுகிறாள் அவள்.

பெண் மட்டுமல்ல அவளைக் காதலித்த, திருமணம் புரிந்த ஆணும் அவன் குடும்பத்தாரும் கொலை செய்யப்படுகிறார்கள். பெண் உயர்ந்த சாதியாகவும் ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்தால் தாக்குதலின் வீச்சம் தறிகெட்டோடும். தருமபுரி இளவரசன் - திவ்யா திருமண அழித்தொழிப்புகள் போல் தாழ்ந்த சாதி ஆணின் கிராமமும் சமூகமும் தாக்குதலுக்கும் தீக்கிரைக்கும் அழித்தொழிப்புகளுக்கும் பலியாகிறது.

2007 ல் இந்தியாவில் நிகழ்ந்தேறிய 655 ஆணவக்கொலைகளில் 7.5% காதல், 35.9% சாதி, 56.6% திருமணம் ஆகிய காரணங்களுக்கானதென இந்திய மக்கள் புள்ளிவிபர ஆய்வகம் பகுத்தளித்துள்ளது. 2010 ல் தேசிய மகளிர் ஆணையம் 326 கொலைகளை ஆய்வு செய்ததில் 76% வேறு சாதி திருமணத்தால் நடத்தப்பட்டவையென கண்டறிந்துள்ளது.

நாகரீக வெறியர்கள்

இத்தகைய கொலைகள் படிப்பறிவு இல்லாதவர்களால் நாகரீக வளர்ச்சியற்ற பின்தங்கிய பகுதிகளில் கடைக்கோடி கிராமங்களில்தான் நடக்கிறது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முழுக்கத் தவறானது. டெல்லியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தினசரியின் பத்திரிகையாளர் நிருபமா. அப்பா வங்கி மேலாளர். அண்ணன் ஒருவன் வருமான வரித்துறை அதிகாரி, மற்றொருவர் முனைவர் ஆய்வு மாணவர். பார்ப்பன வகுப்பைச் சார்ந்த நிருபமா, கேஷ்த்தியா சாதி ரஞ்சனை காதலித்தாள். நிருபமா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் வருகிறது. சடலக்கூராய்வில் அவள் மூன்று மாத கர்ப்பிணி என்பதும் தலையணையால் மூச்சுத்திணற கொல்லப்பட்டதும் தெரிந்தது. காதலனின் கேஷ்த்தியா சாதியும் ஆதிக்கசாதி என்றாலும் பார்ப்பனர்களை விட கீழென்பதால் கீழ் சாதிக்காரனின் கரு தங்கள் வீட்டில் வளருவதை தடுக்க அவளை குடும்ப உறுப்பினர்களே கொலை செய்துள்ளார்கள்.

தலைநகர் டெல்லியிலேயே அதுவும் பத்திரிக்கை நிருபராக உள்ள பெண்ணிற்கே இக்கதி என்றால் அதுவும் உயர்படிப்பு படித்து உயர் பதவி வகிக்கின்ற நாகரிகத்தின் உச்சிக்கிளையில் இருப்பதாக சொல்லிக்கொள்கிற பிராமண குடும்பத்து ஆண்களே இத்தகைய காட்டுமிராண்டிக் கொலைகளை புரிகிறார்கள் என்றால் நிலைமை எவ்வளவு விபரீதமாக உள்ளது என்பது புரியும்.

மகவு தொழிற்சாலைகளும் சாதீய முதலாளிகளும்

தந்தை வழிச் சமூகங்களில் குடும்ப அதிகாரங்களை கறாராக அமைத்து, பெண்களை அடக்குவதே கௌரவக் கொலைகளின் உள் நோக்கம். குடும்பம், கூட்டம், சாதி முதலியவற்றில் ஆண்கள் சந்ததி உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகிறார்கள். இச்சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு மகவு பெற்றுத்தரும் தொழிற்சாலைகளே ! பெண்வழி சமூகத்தை தடுப்பது, பெண் மகவள சக்தியை, சந்ததி உற்பத்தியை கட்டடக்குவதே இக்கொலைகளுக்கு காரணமென்கிறார் மனிதவியலாளர் பேராசிரியர் ஷரீப் கான்.

அதோடு மேற்சொன்ன ஆய்வுகளைப் பாருங்கள். சாதி என்ற ஒரே காரணத்திற்காக 2007ல் 35.9 ம் 2010ல் 75 சதவீத ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. தனது சாதியில் வேற்று சாதி கலப்பை தடுக்கவே உடன் கட்டை ஏறவைத்தல், கைம்பெண் முறை, குழந்தை திருமனம் எனப் பெண்களை பலி கொடுக்கும் விதிகளை வரைந்துள்ள சாதிய கட்டமைப்புகள் என்கிறார் டாக்டர் அம்பேத்கார். இந்த சமூகக் கொடுமைகளெல்லாம் சட்டங்களால் பெருமளவு தடுக்கப்பட்டு விட்டதால் அதன் ஆவிகள் கெளரவக் கொலைகளில் கூடுபாய்ந்து ரத்தக்காட்டேரியாக பட்டப் பகலிலேயே ஊருக்குள் திரிகின்றன.

சாதிகளற்ற இருபால் சமூகம்

எனவே குடும்ப, சமூக கௌரவம் காக்க காக்க காக்கவேயென இக்கொலைகளெனச் சொல்லப்படுவதெல்லாம் சுத்த ஏமாற்றுவேலை, மோசடித்தனம். இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட கௌரவம் என்று எதுவும் இல்லை. அது ஆண் வழி சமூகத்தால் பொதுபுத்தியில் ஏற்றப்பட்ட போலி மாயை அன்றி வேறொன்றும் இல்லை. அப்படி கௌரவமென்று ஒன்று இருப்பதாக கருதினாலும் ஆண்களின் செயல்களால் அது பாதிக்கபடுவதில்லையா?. ஆண்கள் குடித்துவிட்டு அரை நிர்வாணமாய் ரோட்டில் வீழ்ந்து கிடப்பது, வேலைவெட்டி யில்லாமல் தண்டச்சோறாக, ரவுடியாய், திருடனாய், பொம்பளப் பொறுக்கியாய், சமூக விரோதியாய் திரிவதுதானே உண்மையில் குடும்ப கெளரவத்தை பாழாக்குகிற செயல்கள். இவர்கள்தானே தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மாறாக இச்செயல்கள் ஆம்பளத்தனத்தின் குறியீடுகளாக மேன்மை படுத்தப்படுகின்றன. ஏனெனில் தாலி, கற்பு, புனிதம், தீட்டு, கௌரவம், தர்மம், நீதி, நியாயம் என அனைத்து படிமங்களும் ஆண் வழிச்சமூகத்தால் பெண்களுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக கட்டமைக்கப்பட்டவை.

இந்தக் கட்டமைப்பின் அடிமைகள் அல்லது எதிரிகள் தன் வீட்டுப் பெண்களே. எனவேதான் அது தொடர்ந்து தனது கட்டமைப்பை நிலை நிறுத்திக்கொள்ள கௌரவத்தின் பெயரில் தன் வீட்டுப் பெண்களையே கொல்கிறது. எனவே ஆண்வழிச் சமூக கட்டமைப்பையும் சாதீய கட்டமைப்பயும் கழற்றி வைத்துவிட்டு சாதீகளற்ற இருபால் சமூகத்தை கட்டுவதே பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க உதவும்.

- மு.ஆனந்தன், வழக்கறிஞர், 205, ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ், கோபாலபுரம் முதல் வீதி, கோயமுத்தூர்

Pin It