இந்தியத் துணைக்கண்டத்தைப் பற்றியிருக்கும் தீராப் பெருநோய்களில் ஒன்று சாதியம். இங்கு வாழும் மாந்த இனத்தையே மாளாத்துயரில் ஆழ்த்திவரும் ஆறாத புண். ஆரிய நச்சு விதையில் செழித்து வளரும் அடர்ந்த முட்காடு அது. புத்தர் காலம் தொடங்கி சோதிபா புலே, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் தளர்வின்றிப் போராடியும் சாதியத்தின் வலிமை இன்னும் சாகாமல் கெட்டிப்பட்டு நிற்கிறது.

தமிழ்நாட்டில் 1967க்குப் பிறகு, இங்குப் பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள்தாம் ஆளுகின்றன. பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், இறந்த நாள்களில் அத்தலைவர்களின் பொம்மைச் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்யும் சடங்குகள் தவறாமல் நடக்கின்றன. ஆனால் உண்மை நடப்பில் நாம் காணும் காட்சிகள் என்ன?

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் பெயரால் பார்ப்பன செயலலிதா அம் மையாரின் ஆட்சி நடந்து வருகிறது. நடுவண் அரசாய் ஆளுகின்ற பா.ச.க. மோடி ஆட்சிக்கும் அம்மையாரின் ஆட்சிக்கும் பண்பு நிலையில் எத்தகைய வேறுபாடும் இல்லை. மோடி குசராத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்ட போதெல்லாம் பாசத்தோடு அதில் பங்கேற்கப் போனவர் செயலலிதா. காவிகளின் மேவிய அன்புக் குப் பாத்திரமானவர். அயோத்தி ‘கரசேவைக்கு’ இங்கிருந்து ஆள்களை அனுப்பியவர். தம் முந்தைய ஆட்சிக்காலங் களில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தவர். கிடாவெட்டக் கூடாதெனக் கிடுக்கிப் பிடி போட்டுத் தடைசெய்தவர்.

கலைஞர் கருணாநிதி ஆட்சியொன்றும் சாதிக் கலவரங்கள் நடைபெறாத ஆட்சியல்ல. அப்போதும் தீண்டாமைக் கொடுமைகள் உண்டு. வன்கொடுமைச் சட்ட விதிமீறல்கள் உண்டு. ஒரே வேறுபாடு. ஆட்சி யாளர்களிடம் குறைகளை வெளிப்படையாய் எடுத்துச் சொல்ல முடியும். எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் நாட்டில் - அரசு செயல்பாட்டில் நடந்த அத்துமீறல்கள் பற்றி விரைந்தெடுக்க முடியும். ஆனால் இப்போது... அனைத் தும் ‘அம்மா’ மயம்!

கடந்த 9.7.2015 அன்று சென்னையில் செய்தி யாளர்களிடையே பேசிய, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் பி.எ°. புனியா அவர் கள்-தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் அதிகமான அளவில் நடைபெறும் அய்ந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயற்படுத்தலும் மனநிறைவு கொள்ளத் தக்கவண்ணம் இல்லை. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தலித் மக்கள் மீது 213 கொலை நிகழ்வுகளும் தலித் பெண்கள் மீது 119 பாலியல் வன்முறைகளும் நடந்தேறியுள்ளன. சென்ற அய்ந்தாண்டுகளில் 6,074 வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் அவற்றுக்கான போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி 70 விழுக்காடு வழக்குகள் கைவிடப் பட்டுள்ளன. இவ்வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலும் போதிய அக்கறை காட்டப்படுவ தில்லை. வெறும் 10 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர்க்கு எதிராக நிகழ்த்தப் பெறும் கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவே இல்லை. இனி இந்தக் கூட்டங்கள் ஒப்புக்கு மட்டுமே நடத்தப்படுபவையாக இல்லாமல் முறையான தன்மையில் நடத்தப்பெற வேண்டும்.

மேலும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கென்றே மாநில வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் 18 விழுக்காட்டுச் சிறப்பு நிதியில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டு மற்றவை பிற பணிகளுக்காகத் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அம்மையாரின் அரசு மீது சுமத்தியுள்ளார். தமிழக முதல்வர் அம்மா, இந்தியப் பிரதமர்களா லேயே கேள்வி கேட்கப்பட முடியாதவர். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளையே துச்சமாக மதித்து, அவர்களை விலைக்கு வாங்கக் கூடிய ஆற்றலாளராக ஆராதிக்கப்படுபவர். இக்குற்றச்சாட்டுகளெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்?

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா அண்மையில் நாமக்கல்லைச் சேர்ந்த பொறி யியல் படித்த தலித் பட்டதாரி இளைஞர் கோகுல்ராசு என்பவரின் கொலை தொடர்பாகவும் தன் அதிர்ச்சியை யும் கவலையையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2013இல் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன், திவ்யா என்னும் வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு அப்பகுதிகளில் மாபெரும் சாதிக்கலவரமாக வெடித்துத் தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இறுதியில் இளவரசன் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் பிண மாகக் கிடந்தார். அதே போன்றதோர் நிகழ்வுதான் கோகுல்ராசுவுக்கும் ஏற்பட்டுள்ளது.

அவர் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் முடித்த இளைஞர். உயர்சாதி என்று சொல்லிக் கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிப் பெண் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இளவரசனைப் போன்றே இவரும் கடந்த சூன் மாதம் 23ஆம் தேதியன்று கடத்தப்பட்டு, மறுநாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் அடுத்த தொட்டிப்பாளையம் அருகே இரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தார்.

இதுபோன்ற ஆணவக் கொலைகள் (ஆதிக்கவாதிகள் இவற்றைக் கவுரவக் கொலைகள் என்கின்றனர்) நாடு முழுவதும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

*     2005இல் சதீசுகுமார் என்ற தலித் இளைஞர், வன்னிய சாதியைச் சார்ந்த பவானியைத் திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் திருச்சியில் வாழ்ந்து வந்தார். சதீசு வெளிநாடு சென்றிருந்த போது பவானி யை இராமநாதபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வரச் சொல்லி, குழந்தைகள் கண்முன்னே உடன் பிறந்த அண்ணன் பவானியை அடித்துக் கொன்றார்.

*     2010இல் சிவகங்கை மாவட்டத்தில் 19 வயது மேகலாவை அவரது விருப்பத்திற்கு மாறாக மண முடிக்கப் பெற்றோர்கள் முடிவு செய்த போது, அவர் தனது காதலன் சிவக்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறினார். விமலாவின் தந்தை விசயன் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வந்து சிவக்குமாரை அடித்துக் கொன்றார்.

*     திண்டுக்கல் நாயக்கர் சாதியைச் சேர்ந்த சங்கீதா, தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனைக் காதலித்தாள். மகள் சங்கீதாவைப் பெற்றோர் அடித்துக் கொன்றனர்.

*     2014 ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருபாச்சி கரகுப்பட்டி கிராமத்தில் தலித் இளைஞர் முத்துக் குமார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் கொலை செய்யப்பட்டார்.

*     பிறன்மலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த விமலா தேவியும், பள்ளர் வகுப்பைச் சேர்ந்த திலீப்குமா ரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கேரளாவில் நண்பர் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். அவர்களை ஏமாற்றி ஊருக்கு அழைத்து வந்து விமலாவை அடித்துக் கொன்று, பின் எரித்தனர், அவரின் பெற்றோர்.

- பாசறை முரசு சூலை - ஆகஸ்டு 2015, பக்.46, 47

இவை நாளேடுகளில் வெளிவந்த செய்திகள். வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகள் ஏராளமானவை. மேற்சொன்ன எந்தக் கொலையின் பேரிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. காரணம் காவல் துறையினர், ஆட்சியா ளர்கள், பெரும்பாலோர் ஆதிக்கச் சாதியாராகவே நிரம்பி வழிகின்றனர். கடந்த சூலை 12ஆம் நாள் பாட் டாளி மக்கள் கட்சி தன் மிகப்பெரும் அரசியல் மாநாட் டைக் கோவையில் நடத்தி முடித்துள்ளது. வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இதுபோன்ற பல மாநாடுகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் முன் முயற்சியால்தான் கொங்குவேளாள கவுண்டர்கள் உள்ளிட்ட தலித் அல்லாத சாதிகளைக் கொண்ட ஒரு கூட்டணி இளவரசன் கொலையை ஒட்டி கட்டமைக்கப் பட்டுள்ளது. கோகுல்ராசு கொலை நிகழ்ந்துள்ள நாமக் கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில்தான் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான கடுமையான பரப்பு ரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலித் அல்லாதவர்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டணி சாதி கடந்த காதல் திருமணங்களை ‘நாடகக் காதல்’ என்று பகடி பேசி வருகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. கடந்த சூன் 13 அன்று மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத் தில் அடங்கிய கணேஷ்புரா என்ற கிராமத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்தச் சிறுமியின் நிழல் அவ்வழியே சென்ற ஆதிக்கச் சாதியான் ஒருவனின் உணவுத் தூக்கியின் மேல் பட்டது என்பதற்காக அவனும் அவனது குடும்பத்தினரும் அச்சிறுமியியைக் கடுமையாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டி அடித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட இரண்டு சிறுமியர் சிறுநீர் கழிக்க வெளியில் சென்ற போது, அவர்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகித் தூக்கில் தொங்கவிடப்பட்ட செய்தியை இதற்குமுன் அறிந்து நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் தன் கைப்பேசி ‘ரிங்டோனாக’ அம்பேத் கரை புகழும் பாடல் ஒன்றை ஒலிபரப்புச் செய்தார் என்ற குற்றத்திற்காக, சாதிவெறியர்களால் தாக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்பு கயர்லாஞ்சியில் பையலால் என்ற தாழ்த்தப்பட்டவரின் மனைவி, மகள் மற்றும் மகன்கள் அந்தக் கிராமத்தில் ஓரளவு படிப்பும், நிலமும் பெற்றார்கள் என்ற குற்றத்திற்காகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்ட கொடுமை நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்தது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத் தில் பிரதாப்கர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஏழை தலித் மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் கல்விபெற முயன்ற தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆதிக் கச் சாதியார் அவர்கள் வீட்டின்மேல் கல்லெ றிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் இத்துடன் நாம் பொருத்திக் காணலாம்.

இந்தியா விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்டு எழுபது ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ளது. இன்னமும் சாதியின் பேரால் நிகழ்த்தப் பெறும் இத்தகைய தாங்கொணாக் கொடுமைகளை நிறுத்த வழியில்லை. இந்திய மக்கள் அவையில் தற்போ துள்ள 543 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சார்பில் இடம்பெற்றிருப்போர் (79+41) = 120 பேர். இதுபோலவே நாடு முழுவதிலும் உள்ள சட்ட மன்றங்களிலும் தனித்தொகுதி வழியாக தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு. இவர்கள் எல்லோ ருமே அவரவர் சார்ந்த கட்சிக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் அடிமைகள். ஒருபோதும் தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இவர்க ளால் ஓங்கிக் குரல் உயர்த்த முடியாது.

உள்ளாட்சி மன்றங்கள் வழி தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சித் தலைவர் ஒரு தலித் ஆக இருந்தால், அவர் தனக்குரிய நாற்காலியில் அமரக்கூட முடியாத அவலம் நீடிக்கிறது. தமக்களிக்கப்பட்ட அற்ப அதிகாரங்களைக் கொண்டு செயற்பட முற்பட்டால் ஆதிக்கச் சாதியினரால் தாக்கப்படுகிறார்கள். கை, கால்கள் வெட்டப்படுகின் றன. பல ஊர்களில் விடுதலை நாள், குடியரசு நாள் போன்ற நாள்களில் அவர்களுக்குத் தேசியக் கொடி ஏற்றும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. இது ஒரு தேசமா? இந்த நாட்டுச் சட்டங்களை நாம் மதிக்க வேண்டுமா? இவற்றையெல்லாம் அடியோடு மாற்றும் ஓர் புதிய சனநாயகப் புரட்சிக்கு நாம் அணிதிரள வேண்டாமா? எண்ணுவோம்! செயல்படுவோம்!

Pin It