பூனை போல பதுங்கி பதுங்கி நம் உரையாடல் வந்து போகிறது என்கிறாய். யானையின் காதசைவோடு கவனிக்கிறேன். உன் உரு மந்திரம்.

எதிர் அமர்ந்து அசைந்தபடி காடுகளின் இரும்பு ஒற்றையடியில்.... காற்றாய் வருகிறேன். கானல் என நம்பினாலும் சரி. தும்பி என நாணினாலும் சரி. எனக்கு நாணல் அசையும் நாள் இது. வானம் இசையும் தாளும் இது. நானாகவே சொன்னாலும்....நீயாவே தெரிஞ்சுகிட்டாலும்... உன்னருகே உயரம் கூடுதல் ரகசியமானது.

ரகசியங்களின் குகை நான். ஒருமுறை வந்துதான் பாரேன். பிறகு காலத்துக்கும் நீ ஆதி வாசி. பிறகு உன் கோலத்தில் எல்லாம் நான் பாதி மாசி.

விளையாட்டாய் கொட்டும் உன் மெட்டினில் துளிர்க்கும் மென் நினைவு. ஒத்தி எடுக்கும் கத்தை விரல்களில் சீட் மெத்தை முட்டும் சத்த குமிழ்கள். என் புத்தகத்தில் சமீபத்திய நடுப்பக்கம் நீ. வெகு நேரம் பார்க்கிறேன். நன்றாக என்னைப் படித்துக் கொள். படிப்பதெல்லாம் புரிய வேண்டும் என்றில்லை. சிரிச்ச பிறகும் சிரிக்காத மாதிரி முகத்தை வைத்துக் கொள்ள தோன்றிய போது முன்னைக்காட்டிலும் சிரிப்பு வந்ததை நான் உளறி விட்டதாக நினைத்துக் கொள். உள்ளொன்று வைத்து வெளியொன்று சொல்ல உளறலுக்கு தெரியாது. ரயில் சத்தத்தில் குயில் சத்தம் மயில் சத்தமென பாரேன் சொற்களில் தான் எத்தனை யுத்தங்கள் என்று.

பூதகிகள் பூச்செண்டுகள். பாவன் விரகம் அறிந்திட வேண்டுகிறேன். மோகினிகள் தாமரைகள். பட்டும் படாமல் உருள அனுமதிக்கலாம். வெல்லமென கடிக்கலாம்...உன் வெள்ளந்தி பற்களை. இடையே வேறெப்படி தான் வீணை வாசிக்கும் வெற்றுக்கைகள். எதிர் இருக்கை...இசை கிறுக்கல். இந்த இரவில் ஒரு தூரத்து ரயில் சத்தம் உன் குரல். வந்து வந்து போயி.. வராமலும் போகிறது. நிரவும் நிலா கூட வானம் விட்டு இறங்கத்தான் பார்க்கிறதோ. ரெஸ்ட் ரூம் போன பிறகும் வந்தியதேவி உன் சித்திரம் யோசிக்கிறேன் நான்.

மனதில் தண்டவாளம் அதிருதா?! என்று ஜாடையில் கேட்கிறாய். இம்மனதில் ரயிலே அதிருகிறது... ரயில் ஓடையே கேட்கிறதா. தூரமும் அற்று கிட்டயும் அற்ற பொழுது இது. மலரும் பொழுதை கவிதை செய்கிறேன். புலரும் பொழுதை மலரே கவிஜி செய்யேன். மூச்சு முட்ட மூக்கு முட்டுதல் சங்க இலக்கியம்...இல்லை இல்லை சங்கு கழுத்திலக்கியம். என்ன புரிந்தது... மௌனம் பேசுகிறதோ. என்னுள் மௌனியும் பேசுகிறார்.

பின்னிருந்து அணைத்துக் கொள்ள பிடிக்கும் தான். நீ முன்னிருந்தே அணைக்கலாம். பிடித்துக் கொள்கிறேன். முன்பைக் காட்டிலும் அலைகள் அதிகம் என் கடலில். முன்பைக் காட்டிலும் நானே அதிகம் என் உடலில்.

எனக்கு இந்த பேய் பிசாசு இரத்தக் காட்டேரி எல்லாம் அவ்ளோ இஷ்டம்.... ஒரே லவ்.... நானே பிசாசு தான்.... சொல்கையில் ஒருமுறை கண்ணை உருட்டினாய் தானே. இன்னொரு முறை ஆஹ் என்று சத்தமில்லாமல் குரலோங்கினாய் தானே.. மெல்ல திறக்கும் கதவோசையோடு படீரென அடைபடும் ஜன்னல் இசையோடு... சட்டென படபடவென பிசாசு திரைக்கதை நொடியில்.

நாம் இருப்பது எனக்கு ஆபாவாணன் ரயில். நாம் இருப்பது உனக்கு மணிரத்னம் ரயிலோ.

குளிருக்கு பாவனை போர்த்துகிறாய். திடும்மென வெப்பக்காற்றுக்கு என்று போவேன் ரயில்வஞ்சியே. இது புரட்டாசி. ச்சில் சூழ சிக்கிமுக்கி கற்கள் கண்ணில் உண்டு கவனி. சட சடவென காற்றள்ளி வீசி பயங்கர சத்தத்தோடு பக்கத்து ட்ரேக்கில் எதிர் திசை ரயில் போகிறது. அந்தகாரம் வட்டமிடும் ஆழ்மனதில் பேரழகாய் கழுகொன்று கீச் என்று உச்சஸ்தாயில் கத்தியபடியே சுழல்கிறது. கழுகிருக்கும் வானம் தான் பெரியது பேரன்பே. மற்றபடி மழை வரும் முன்... நீ ஜன்னல் ஒட்டி அமர்ந்து துளிர் விடும் முன்... இதோ நீ தூங்கும் பொழுதே இறங்கி விடுகிறேன். பிறகு புரிவாய் உன் ஊர் வரை என் ஓலம் தான் இந்த ரயில் சத்தம்.

- கவிஜி

Pin It