உன்னோடு காணும்
நிலவுக்கு
வண்ணம் இருக்கிறது

ஜல்லிக் கற்களில்
பூக்கள் என்கிறேன்
பூக்கும் என்கிறாய்

சிக்கி முக்கிக் கற்கள் கற்களிலா
இல்லையில்லை
நம் கண்களில்

ராஜ கால்வாயில்
இரத்தின சுருக்கமாய்
நம் வறட்சி

மேகத்தில் என் சட்டை நிறம்
நம்புகிறேன்
சொன்ன உன் வார்த்தையில்
நட்சத்திரம்

யாருமற்ற சாலையில் நாம்
யாராவது இருக்கும் சாலையில்
நான் நீ

யாவுமற்ற வளைவில்
சிறுமுத்தம்
முத்தமிட்ட வளைவில்
சிறுயுத்தம்

வாயும் வாயும் மேயும் மேயும்
சாயும் சாயும்
மாலை வேளை மேயும் சாயும்

மரங்களின் அடியே
இளைப்பாறுகிறோம்
நுனிகளால் அமர்ந்து கிளையாகும்
நம் பறவை

பிரிகையில் துயருறுகிறோம்
இருவருக்குமே அடுத்த
ஒரு மணி நேரத்துக்கு
அவரவர் பேருந்து தான் சவப்பெட்டி

- கவிஜி