தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இச்சமூகத்தின் வக்கிரம் மீண்டும் ஒருமுறை தனது கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் கல்லூரி மாணவி திலகவதி கோரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான கொலையை ஆரம்பத்தில் மர்ம நபர் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் அப்பெண்ணின் காதலன் கொலை செய்தான் என்று அந்த நபரை போலிஸ் கைது செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. விசாரணையில் அந்த நபர், தான் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளும் வீடியோவை போலிஸ் செய்தி ஊடகங்களுக்குத் தந்துள்ளது!

attack on girlஇதுவல்லாமல் இந்த சம்பவத்தை, நாடாளுமன்றத் தேர்தல் அன்று பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதலோடும், மேலும் மாநிலத்தில் பல்வேறு சம்பவங்களில் ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட வாலிபர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் கோரமாக கொலை செய்ததோடும் ஒப்பிட்டு, அப்போதெல்லாம் அவற்றைக் கண்டித்தவர்கள் இப்போது இந்த சம்பவத்தில் மவுனம் சாதிப்பதாக அப்பெண்ணின் சாதியைச் சேர்ந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு இதை சாதிய விவகாரமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள். இதனோடு இப்படுகொலையைக் கண்டித்து வ‌ன்னியர் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டியில் நாடகக் காதலுக்கு துணைபோகும் விசிகவைக் கண்டிக்கிறோம் என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற முயற்சித்துள்ளனர்.

கல்லூரி மாணவி திலகவதியைக் கொலை செய்ததாக போலிஸ் கைது செய்துள்ள இளைஞரில் இருந்து, சாதிமாறி காதலிப்பதற்காகவும் ஒரே சாதியைச் சேர்ந்தவரை காதலிப்பதற்காகவும் பெண்பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் சாதிக்காரர்கள் கொலை செய்வது, கொடுமைப்படுத்துவது, சித்திரவதை செய்வது ஆகிய எவ்வகையான தாக்குதல்களாக இருந்தாலும் இவைகள் அனைத்துமே பெண்ணுரிமைக்கு எதிரானது என்பதால் கடும் கண்டனத்துக்கும், தண்டனைக்கும் உரியவைகள்.

மேலே நாம் பார்த்த, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒன்றிரண்டு குற்றச் சம்பங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளிஉலகிற்கு வந்து விவாதத்திற்கு உள்ளாகின்றன. ஏனைய குற்றச் சம்பவங்கள் அனைத்தையும் மிகச் சாதாரணமாக மூடி மறைப்பது என்பது இச்சமூகத்தின் இயல்பான குணாம்சங்களில் ஒன்றாக உள்ளது.

வெளிவரும் ஒன்றிரண்டு குற்றச்சம்பவங்களும் சாதிய முலாம் பூசப்படுவதால் அந்த புதைசேற்றில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகள் புதைக்கப்பட்டு விடுகின்றன. மொத்தத்தில் ஆதிக்க சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களைக் காதலித்து அதற்காக அப்பெண் கொல்லப்பட்டாலும், இப்படிப்பட்ட காதலில் பெண்ணிற்கு பதில் தாழ்த்தப்பட்ட ஆண் கொல்லப்பட்டாலும் இவை இரண்டிலுமே ஆதிக்க சாதிவெறியும், பெண்ணடிமைத் தனமும் ஒரு சேர வெளிவருகிறது. ஏனென்றால் பெண்ணடிமைத்தனமும், சாதி ஆதிக்கமும் இந்து என்ற ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். இவை இரண்டும் இந்து என்று சொல்லப்படும் இம்மதத்திருந்து எடுக்கப்பட்டுவிட்டால் அது வெறுமனே காலி பெருங்காய டப்பாவாகி விடும்.

ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த திலகவதியின் கொலையோ ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரால் செய்யப்பட்டதில் இச்சமூகத்தின் இயல்பான பண்பான பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கத் திமிரும் வெளிப்பட்டுள்ளது.

ஆதிக்க சாதிகளில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமது எதிர்ப்புணர்வை ஒவ்வொரு ஒடுக்குமுறைகளின் போதும் தமது ஒன்றுபட்ட செயல்பாடுகளின் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் காலம் காலமாக எதிர்கொள்கிறார்கள். இதன் பரப்பளவு உளவியல் ரீதியாக நாடு தழுவியதாக ஒன்றுபட்டதாக இருந்தாலும் நடைமுறை ரீதியாக அவை இந்திய சமூகத்திற்கே உரிய தன்மையில் குறுகிய எல்லைகளைக் கொண்டதாகவே இன்றளவும் பெரும்பான்மையாக நீடித்து வருகின்றன. ஆனால் தவிர்க்கவியலாத நவீன சமூக வளர்ச்சியின் தாக்கத்தின் விளைவாக அவை குறிப்பிடத்தக்க அளவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைப்பாக்கப்பட்டு எதிரொலிக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக கிராமம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே இந்த எதிர்ப்புணர்வை எதிர்கொண்ட ஆதிக்க சாதிகள் அவற்றை மிக எளிதாக ஒடுக்கவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் முடிந்தது. அப்படி தம் பிடிக்குள் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்ப்பாற்றல் அமைப்பாக்கப்படுவதை ஆதிக்க சாதிகளால் வேறெந்த விவகாரங்களையும் விட சகிக்க முடியாத ஒன்றாக கருத வைக்கிறது. இந்த எதிர்ப்புணர்வை அமைப்பாக்கும் செயல்பாடுகள் பல்வேறு பலவீனங்களைக் கொண்டிருந்தாலும் அவை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான பலத்தைத் தருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்கள் உளவியல் ரீதியான பலத்தை முழுமையாக நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாயினும் இப்படிப்பட்ட அமைப்புகளிடம் இருந்து பெறுகின்றனர். இது எதார்த்தத்தில் பெரும்பாலும் கானல்நீராக இருந்தாலும் சாராம்சத்தில், அந்த சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியாக அதற்கே உரிய வகையில் பங்காற்றுகின்றன‌.

இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட அமைப்புகள் நாட்டில் உள்ள மொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் அமைப்பாக்கவில்லை என்றாலும் குறைந்த அளவிலான பலத்தைக் கொண்டிருந்தாலும், இப்படியான அமைப்பாக்கத்திலிருந்தும் இம்மக்கள் பெரும் ஊக்கத்தினால்தான் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் ஆதிக்க சாதி வெறியர்களை, குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட அமைப்பினராகவே பார்க்கத் தூண்டுகிறது. இத்தூண்டுதல் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் தலைமையில் திரண்டுவிடாமல் ஒவ்வொரு சாதியும் தனித்தனியே நால்வர்ண தர்ம அடிப்படையில் கட்டுண்டு கிடக்க வேண்டும் என்ற தீராத தாகத்திலிருந்து எழும் பிரதிபலிப்புகளாகும். இதனால் இவர்களின் இந்த எண்ணத்திற்கு குறுக்கீடு செய்யும் அனைத்து சமூக, ஜனநாயக சக்திகளையும் பரம எதிரிகளாக வகைப்படுத்த செய்கிறது.
ஆதிக்க சாதிவெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை தமது இருப்பிற்கான ஆதாரமாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள் கொண்டிருப்பதாலேயே, அவைகள் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிரான அடிப்படைகளைக் கொண்ட அமைப்புகளல்ல. தாழ்த்தப்பட்ட அமைப்புகள் மட்டுமல்ல சமூக, ஜனநாயக அமைப்புகளாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் அமைப்புகளும் கூட சகோதரி திலகவதியின் கொடூரமான கொலையை வெளிப்படையாக கண்டிக்காததன் மூலம் தாங்களும் பெண்ணடிமைத்தனத்தை, தமது இயல்பாகக் கொண்டிருக்கிற இச்சமூகத்தின் ஓர் அங்கம்தான் என்பதை இதன் மூலம் நிருபித்திருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட அமைப்புகள் யாருடைய நலன்களைப் பிரதிப்பலிப்பதாக கூறிக் கொள்கிறார்களோ அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களையே தமது பிழைப்புவாதத்திற்காக அவ்வப்போது அடகு வைக்கத் தயங்காதவர்கள் என்பதை நாடு முழுக்க பல்வேறு சம்பவங்களில் நிரூபித்து வருபவர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதிக்க சாதி அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகளையே அடகு வைக்கத் தயங்காத இவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பேசக்கூடத் திராணியற்றவர்கள் என்பதை தமது சொந்த சாதியிலேயே நடைபெறும் காதல் விவகாரங்களில் மிகவும் வெளிப்படையாக நிரூபித்து வருபவர்கள்.

எனவே இப்படிப்பட்ட ஒரு அமைப்பை மொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக உருவகப்படுத்திக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தனது ஆதிக்க சாதி வெறியை அவர்கள் மீது திணிக்க முயல்வதன் வெளிப்பாடுதான் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் இலக்கே தவிர, கொலையுண்ட சகோதரி திலகவதியின் உரிமைக்கு குரல் கொடுக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக பெண்ணுரிமைக்கு அதாவது தனது எதிர்கால வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தானே தீர்மானித்துக் கொள்ளும் ஜனநாயக உரிமைக்கு எதிரான சித்தாந்தத்தை தனது இருப்பிற்கான அடித்தளமாக கொண்டவர்கள் இவர்கள். சாராம்சத்தில் இவர்கள் இயல்பிலேயே பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள். சகோதரி திலகவதியின் கொலைக்கு எதிரான இவர்களின் போராட்டமும் அடிப்படையில் பெண்ணுரிமைக்கு எதிரானதே ஆகும்.

அதன் வெளிப்பாடுத்தான் “நாடகக் காதல்” என்கிற அவர்களின் வசனமாகும் . காதலிப்பவர்களில் தங்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளால் பிரிந்து போவதும், சில நேரங்களில் இம்முரண்பாடுகள் கொலையில் முடிவதும், தாழ்த்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காதல் விவகாரங்களில் மட்டும் நடக்கும் நிகழ்வுகளல்ல. அனைத்து சாதி, மதம், இனம் உட்பட அனைத்துத் தரப்பு காதலிலும் நடக்கும் நிகழ்வுகள்தான், ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத ஏனையவற்றையெல்லாம் ”நாடகக் காதல்” என்று வகைப்படுத்தாமல், தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்புடைய காதல் விவகாரங்களை மட்டும் இப்படி வகைப்படுத்துவது இவர்களின் அப்பட்டமான ஆதிக்க சாதி வெறியின், பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துகளின் வெளிப்பாடுகள்தான். இது சாராம்சத்தில் நால்வர்ண பார்ப்பனியத்தின் உள்ளடக்கக் குறியீடாகும்.

இருவேறு சாதிகளுக்கு இடையில், அதிலும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஏனைய ஆதிக்க சாதிகளுக்கும் இடையே இரத்த உறவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற இவர்களின் சித்தாந்தம் சாராம்சத்தில் ஹிட்லரின் இனத்தூய்மை வாதத்தின் ஒரு வடிவமாகும். பாசிசமே இவர்களின் சித்தாந்த அடித்தளமாக விளங்குகிறது. எனவே தான் இவர்களால் பார்ப்பனிய பாசிஸ்டுகளான சங்பரிவார் கும்பலோடு இயல்பாக கைகோர்த்து நடைபோட முடிகிறது.

இந்து என்பது சாதிகளின் கூட்டணியாகவும், சாதி என்பது குலங்களின் கூட்டணியாகவும் மக்கள் ஆயிரமாயிரம் துண்டுகளாக, துகள்களாக பிரிந்து கிடக்க வேண்டும் என்ற பார்ப்பனிய சங்பரிவார் பாசிச கும்பலின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தமிழக சிவசேனாவாக பாமக திகழ்ந்து வருகிறது. ஓர் ஆணும், பெண்ணும் காதலிப்பது என்பது அதிலும் பெண் கல்வி சமூகத்தில் வேறெப்போதும் இல்லாத வகையில் தற்போது தமிழகத்தில் உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிகவும் இயல்பானது. இப்படி உருவாகும் காதல் ஒவ்வொரு தனி மனிதனின் தனித்துவமான ரசனையை அடிப்படையாகக் கொண்டது. இந்த தனித்துவமான ரசனை சாதி, மதம், இனம் ஆகிய எதுவும் குறுக்கீடு ஏற்படுத்திவிடக் கூடிய வலிமை கொண்டவை அல்ல. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான இந்த ஈர்ப்பு அவர்களின் உயிராற்றலின் வெளிப்பாடாகும்.

இந்த உயிராற்றலை பெண்களை காலம், காலமாக வீட்டில் முக்காடிட்டு மூடி வைத்திருந்ததன் மூலம் ஒடுக்கி வைத்திருந்தது இச்சமூகம் . அந்த ஒடுக்குமுறைகள் எந்த அளவிற்கு தளர்வடைகிறதோ அந்த அளவிற்கு இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நிகழ்வுகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படத் துவங்குகிறது.

ஆதிக்க சாதிப் பெண்கள் எந்த அளவிற்கு காதலிக்கிறார்களோ, அது அந்த அளவிற்கு, அவர்கள் மீது சாதிய முலாம் பூசப்பட்டு திணிக்கப்படும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான அவர்களின் கலகக்குரலின் வெளிப்பாடாகும். அதே போன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீது எந்த அளவிற்கு ஆதிக்க சாதிவெறி திணிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு அவர்களின் கலக உணர்வின் வெளிப்பாடாகவும் காதல் என்ற உயிராற்றல் வினைபுரிகிறது.

மொத்தத்தில் சமூகத்தில் ஒடுக்கப்படும் அங்கங்களின் எதிர்ப்பாற்றலின் விளைவுகளை எவராலும் இனி தடுத்து நிறுத்திவிட முடியாது. அவற்றை பாசிச ஒடுக்கு முறையின் மூலம் ஒடுக்க முனைந்த பாசிஸ்டுகளான ஹிட்லர், முசோலினிகளின் வரலாற்றை இவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.

வெவ்வேறு சாதிகளுக்கு இடையில் இரத்தக் கலப்பு நடந்துவிடக் கூடாது என்பவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் பெறமாட்டோம், சாதி தெரியாதவர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற மாட்டோம் என்று அறிவிக்க முடியுமா? குறைந்தது சாதி கெட்டவனையெல்லாம் வைத்து சமைக்கப்படும் உணவை உணவகங்களில் சாப்பிட மாட்டோம் என்றுதான் கூறமுடியுமா? இது எதுவுமே முடியாது என்றால் ஓர் ஆணும், பெண்ணும் காதல் வயப்படுவதையும் எவராலும் தடுத்துவிடவும் முடியாது.

காதல் என்பது வெறுமனே காமத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக அது வாழ்க்கை . வாழ்க்கைத் துணையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதன் மூலம்தான் இப்போது காதலர்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை குறைக்க முடியுமே தவிர, மாறாக கோரமாக கொலை செய்வதன் மூலமோ, மிரட்டுவதன் மூலமோ திலகவதி போன்ற சகோதரிகளின் கொலைகளை உதாரணங்களாகக் காட்டுவதன் மூலமோ சாதி, மதம், இனம், இவைகளைக் கடந்து உருவாகும் உயிராற்றலான காதலை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இவர்களின் பயங்கரவாத ஆயுதங்களை விட வலிமையானது இந்த உயிராற்றல்.

இந்திய சமூகத்தில் சாதியும், பெண்ணடிமைத்தனமும் இவற்றை தனது உயிர்நாடியாகக் கொண்ட பார்ப்பனிய சித்தாந்தம் நீடிக்கும் வரை அவைகளுக்கு எதிரான போராட்டமும் நீடிக்கவே செய்யும்...!

- சூறாவளி

Pin It