ஊரே அல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இந்த மாதிரியான கட்டுரை தேவையா என நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக தேவை தோழர்களே. இந்திய சமூகத்தில் காதலைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் எல்லாவற்றையும் விட காதலிப்பதும் மிக அவசியம். நம் அரசியல்வாதிகள் அதிகம் பங்குபெறாத விரும்பாத ஒரு துறை அது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதிகள் எல்லாவற்றைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார்கள். உங்களை புள்ளிவிவரங்களால் திணறடிப்பார்கள். ஆனால் அவர்கள் எப்போதுமே காதலைப் பற்றி மட்டும் பேச மறுப்பார்கள். ஏன் என்று யோசித்து இருக்கின்றீர்களா? நீங்கள் எப்போதுமே யோசித்து இருக்க மாட்டீர்கள். காரணம் மிக எளிது. நாம் அரசியல்வாதிகளிடம் இருந்து அதை எப்போதுமே எதிர்பார்த்தது கிடையாது. நமக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் இந்தக் காதல் எப்பொழுதுமே இருந்தது இல்லை. நம் இந்திய சமூக அமைப்பைப் பொருத்தவரை காதலை ஆதரித்துப் பேசும் அரசியல்வாதிகள் துரோகிகள். சமூக கட்டுமானத்தை சீர்குலைக்க வந்த சதிகாரர்கள்.
காதலை பற்றிய பேச்சு என்பதே பொதுவெளியிலும், குடும்பத்திற்குள்ளும் பெரும்பாலும் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. சமூக அமைப்பில் பல சாதி ஓட்டுக்களையும் வாங்க வேண்டிய நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் உள்ளதால் அவர்களிடம் இருந்து நாம் காதல் ஆதரவு நிலைப்பாட்டை எதிர்பார்ப்பது என்பது இயலாது தான். அப்படி எல்லோரையும் சாதிவிட்டுச் சாதி காதலித்துத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லும் ஓர் அரசியல் கட்சி தோன்றுவதற்கு, சாதி எப்போதுமே விட்டதில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இதற்கு சில விதிவிலக்கானவர்கள் இருந்தார்கள். திகவில் இருந்து வந்த அண்ணாதுரை அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டதை இயற்றினார். திராவிட இயக்கங்கள், மார்க்கிய இயக்கங்கள் போன்றவை தொடர்ந்து சாதிமறுப்புத் திருமணத்தைப் பற்றியும், புறமண முறையே சாதியை ஒழிப்பதற்கு ஒரே வழி என்றும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன. பரப்புரை செய்வதோடு நிற்காமல் சாதி மறுப்புத் திருமணங்களை தமது சொந்த இயக்கங்களுக்குள்ளும் கட்டாயமாக செய்து கொள்ள வலியுறுத்துகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி ஒரு சூழ்நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதுதான் உண்மை.
சாதிவெறியும், மதவெறியும் அப்பட்டமாகவே அரசியல் செய்யும் இந்தக் காலத்தில் காதலைப் பற்றியும், அதன் அவசியத் தேவையைப் பற்றியும் நாம் வீச்சாக இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கின்றது. தேர்தல் பாதையில் மூழ்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து அது போன்றதொரு முன்னெடுப்பை நாம் எந்தக் காலத்திலேயும் எதிர்பார்க்க முடியாது என்பதால் கருத்துப் புரட்சியை சமூக தளத்தில் வீச்சாக செய்து கொண்டிருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் தொடர்ந்து அதற்கான பணியை முன்னெடுக்க வேண்டும். சாதி கடந்த காதல் திருமணங்கள் மட்டுமே இந்திய சமூக அமைப்பில் சாதியை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழி. என்னைக் கேட்டால் இந்திய சமூக அமைப்பில் காதலித்துத் திருமணம் செய்வதே ஒரு புரட்சிதான்.
ஆனால் இந்திய சமூக அமைப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப்போன சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்கும் அப்படிப்பட்ட காதல் என்ற சமூகப் புரட்சி ஏனோ பெரும்பாலும் தோல்வியைத் தழுவுகின்றது. ஏன், என்ன பிரச்சினையாக இருக்கும்?. விருப்பப்பட்டுக் காதலித்தாலும் ஏன் நம்முடைய காதல் துணையை நாம் அலட்சியப்படுத்துகின்றோம், நிராகரிக்கின்றோம். காரணம், நாம் காதலை மிக இயல்பான ஒன்றாக, எந்தவித அரசியலும் அற்று ஏற்றுக் கொள்வதுதான். ஆனால் காதல் அப்படியான ஒன்று அல்ல. உயிரியல் தேவையின் அடிப்படையில் அந்த உணர்வு எழுந்திருந்தாலும், அதையும் தாண்டி பலவற்றையும் காதலிக்கும் ஓவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது. காதலிக்கும்போதே நாம் நம்மைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் மறைக்காமல் சொல்வதில் தொடங்கி, அதை வெறும் பாலியல் தேவை என்ற கட்டத்தைத் தாண்டி எடுத்துச் செல்வது வரை ஓர் ஆழமான புரிதல் தேவைப்படுகின்றது.
சாதிவிட்டு சாதி காதலிக்கும் ஒவ்வொருவரும் அதை முதலில் தங்களோடு முடிந்துபோகும் ஒன்றாக நினைப்பது தவறு. அதன் நீட்சி நாளை நம்முடைய குழந்தைகளையும், அவர்களது சந்ததிகளையும் இந்தச் சமூகத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய காதல் என்பது ஒரு ஆண் மீதோ அல்லது பெண் மீதோ உள்ள பாலியல் வேட்கை என்பதாக மட்டுமே இருந்தால் அது நிறைவேறியவுடன் மிகப் பெரிய வெற்றிடத்தை அது ஏற்படுத்திவிடும். அந்த வெற்றிடம் நாம் இத்தனை நாளாக நம் துணையின் மீது வைத்திருந்த அனைத்து அன்பையும் உள்ளிழுத்து துடைத்து அழித்துவிடும். அப்படியான குறுகிய புரிதலுடன் தான் பலபேர் காதலிக்கின்றார்கள். அதனால் திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் இருவருமே தாங்கள் காதலித்ததே தவறு, இருவருக்கும் சுத்தமாக ஒத்துவராது என முடிவெடுத்து பிரிந்து விடுகின்றார்கள். இதுதான் பிரச்சினை. கடைசியில் இருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதோடு குழந்தைகளின் எதிர்காலமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
அதனால் காதலை உடல் என்ற எல்லையைத் தாண்டி இந்தச் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒன்றாக புரிந்து கொள்ளும்போதும், அதில் தங்களை இணைத்துக் கொள்ளும்போதும் தான் அது எப்போதுமே அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறுகின்றது. ஆனால் காதலிக்கும் பல பேரிடம் உண்மையில் சாதி மறுப்பு என்ற எண்ணமெல்லாம் துளியும் இருப்பதில்லை. உண்மையில் அவர்கள் சாதிமறுப்பு என்பதை தங்களை அறியாமலேயே செய்கின்றார்கள். அதனால் தான் தொடர்ந்து அவர்களால் அதே நிலையில் நிற்க முடிவதில்லை. தாங்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு அப்படியான ஒர் சூழ்நிலை எற்படும் போது அதைக் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இதுவே சாதி எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தைத் தங்களுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டு திருமணம் செய்திருந்தால் இப்படியான ஒரு நிலை ஏற்படுவதை மனமாரத் தவிர்த்திருக்கலாம்.
சாதிமாறி காதலிப்பது பார்ப்பன சனாதன தர்மத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதை நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விடுவதும் மிக முக்கியமானதாகும். நமக்குப் பின் நம்முடைய குழந்தைகள் சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போர்வீரர்களாக விட்டுச்செல்வது நமது தலையாய பணியாகும். நம்முடைய நீட்சி நம்முடனேயே முடிந்துவிட்டால் காதலித்தற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் அரசியல் ரீதியாக நம்மை இணைத்துக்கொண்டு நம் வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொள்ளும் போது, பிரிதல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும். அரசியல் ரீதியான காதல் நமக்குள் ஏற்படும் சின்ன சின்ன ஊடல்களைக்கூட நம்முடைய நலன் தவிர்த்து அமைப்பின் அல்லது இயக்கத்தின் நன்மையின் பொருட்டு நம்மை சேர்ந்து வாழ நிர்பந்திக்கும். அது தொடர்ந்து காதலை அர்த்தப்படுத்திக்கொண்டே இருக்கும். காதலை தீராமல் அள்ளி கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் எந்தவித அரசியல் பார்வையும் அற்று வெறும் தக்கையாக தோன்றும் காதலுக்கு நிச்சயமாக முடிவு காலம் இருந்து கொண்டே தான் இருக்கும். அரசியல் தவிர்த்து வேறு எதுவுமே காதலை நீடித்து நிலைக்கச் செய்யும் சக்தியற்றது. தக்கையான காதல் எதற்காக சேர்ந்ததோ அதன் தேவை தீர்ந்த பின்னால் அது தானாகவே கரைந்துவிடும். பின்பு வாழ்க்கை சூனியமாகவே தெரியும். வாழ்க்கை எப்போதும் தொடர்ச்சியான கண்ணிகளாக இணைந்திருக்க வேண்டும். அது விட்டு விட்டு இருந்தால் விடுபட்ட ஏதாவது ஒரு கண்ணியின் வழியே நாம் தப்பித்துச் சென்று விடவே விரும்புவோம். ஆனால் அரசியல் ரீதியான காதல் வாழ்க்கையை தொடச்சியான கண்ணிகளால் பிணைத்து விடுகின்றது. உங்களை எந்தவித சோர்வுக்கும் இடம் தர வைக்காமல் உயிர்ப்புடன் தொடர்ந்து இழுத்துச் செல்கின்றது. வயது முதிர்ந்த காலத்தில் கூட இன்னும் கொஞ்சம் நாள் இவனுடனோ, இல்லை இவளுடனோ நாம் வாழவேண்டும் என நம்மை ஏங்க வைக்கின்றது. அதுதான் உண்மையான காதலின் வெற்றி.
அதனால் சாதிவிட்டு சாதி காதலிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் தாங்கள் இந்தச் சமூகம் தங்கள் மீது விதித்த சாதிய கட்டுமானத்திற்கு எதிராக இயங்குகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைத் தங்களுடன் மட்டுமே முடியும் ஒன்றாக கருதாமல் தங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் கடத்தியாக நாம் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருக்க, நம்மை நாம் சாதி ஒழிப்புக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும். அது நம்முடைய காதலையும் அர்த்தமாக்கும், நம்முடைய வாழ்க்கையையும் அர்த்தமாக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அது அது நம்முடைய காதலுக்கு ஒரு நிரந்தரமான பாதுகாப்பையும் தரும்.
எனவே அரசியல் அற்று நீங்கள் காதலித்து இருந்தாலும் பரவாயில்லை, அதனை வாழ்க்கை முழுவதும் தக்கவைக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் உடனே அருகில் உள்ள பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகளை அணுகவும். அதில் உடனே உங்களை இணைத்துக் கொள்ளவும். இந்தக் காதலர் தினத்தில் அனைத்து இளைஞர்களும், இளைஞிகளும் சாதிமாறிக் காதலிப்பது என உறுதி ஏற்று அதற்காக தீவிரமாக செயல்படவும்.
வழக்கம் போல இந்த வருடமும் காதலர் தினத்தை பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். நாய்களுக்கு திருமணம் செய்துவைத்து, காதலர் தினத்தை கொச்சைப்படுத்தும் பாஞ்சாலியின் வாரிசுகளுக்கு நாம் புத்தி புகட்ட வேண்டும். தங்களை மட்டும் காதலிக்காமல் மனித சமூகம் அனைத்தையும் சேர்த்தே காதலிக்கும் அனைத்து அன்பு தோழர்களுக்கும் நாம் காதலர் தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம்.
- செ.கார்கி