நீ சொல்வதெல்லாம்
பொய்யே அல்ல
நீ செய்வதெல்லாம்
பிழையே அல்ல
நீ மறுப்பதெல்லாம்
கெட்டவை
நீ முறைப்பதெல்லாம்
தீயவை
நீ புரிபவை எல்லாம்
சரியானவை
நீ புன்னகைத்துச் செல்வதெல்லாம்
நல்லவை

இனி என்ன உரைக்க?
எனக்குத் தெரியவில்லை

நேசத்தின் நஞ்சுண்டவன்
நானாகிறேன்

இனியொன்றும் தேவை இல்லை
ஏகமும் ஏக்கமும் நீதான் என்றான பின்னர்

சொற்களை இதயத்திலிருந்து
உதிர்க்கிறது ஆன்மப்பறவை

இதயத்தை மட்டும் தாரை வார்த்தேன்
ஆயினும் அரூபமாகி அலைகிறேன்

கரையெனும் கடிவாளம் நீ
கடலாகத் தத்தளிக்கிறேன்

உன் உள்ளங்கை வியர்வைக்குள்
ஊறிப்போன காகிதமும் நானேதான்

பிரியம் என்பது பிழைகள் காணாதது..

இனி ஏதுண்டு என்னிடம்?
என் விதியின் மேல் விரிகிறது
உன் ஆகாயம்...!!

- Dr ஜலீலா முஸம்மில், ஏறாவூர், இலங்கை

Pin It