“அன்பு நட்பு ஆசை ஆகியவற்றைத் தாண்டி காதல் என்பது புனிதமானது என்று உலகில் நிலவும் கருத்து ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்கிறது.”

பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை மற்ற சீர்திருத்தவாதிகள் கொண்டிருந்த பெண்ணுரிமை மீதான பார்வையை விட மிக ஆழமானதாகவும் நுணுக்கமானதாகவும் இருக்கிறது. அன்றைய பார்ப்பனிய ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் பார்ப்பனர்களின் வேத சட்டங்களின்படி பெண்களை இச்சமூகம் வீட்டுப் பிராணிகளாய், அதை விடவும் அடிமைத் தன்மையுடன் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறது.

இன்றும் மனுநூல் கூறும் விதிகள் வரிகள் மாறாமல் நம் சமூகத்தில் மிகச் சாதாரணமாக நடைமுறையில் இருப்பதும் பல இடங்களில் தொடர்ந்து மனுநூல் வரிகளையே மக்கள் பேசிக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

காதல் என்பதைப் பற்றியோ, அல்லது ஆண்களும் பெண்களும் தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பது பற்றியோ மனுதர்மம் சிந்திக்கக் கூட இடமளிக்கவில்லை. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து, பின் கணவன் உயிருடன் இல்லை எனில் காலம் முழுவதும் அக்குழந்தையையோ அல்லது இளம்பெண்ணையோ விதவை என்றும் உயிருடன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் அந்த ஆணுக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென எழுதி வைத்திருக்கிறது மனுதர்மம்.

காதல் பற்றிய பெரியாரின் பார்வை முற்றிலும் வேறுபட்ட எவராலும் வழங்கப்படாத சிந்தனை. காதல் என்பது ஆண்களோ பெண்களோ தனக்கான இணையை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை என்பதைத் தாண்டி காதல் என்பதில் புகுத்தப்பட்டுள்ள செயற்கையான கற்பிதங்களை எதிர்த்துப் பேசுகிறார்.

காதலுக்காக என்று இன்பமும் திருப்தியும் இல்லாமல் தொல்லைப்படுத்தபட்டு வருவதை ஒழிக்க வேண்டும். காதலின் தன்மை பற்றி கூறப்படும் கற்பிதங்களான காதலுக்கு இணையாக உலகில் வேறு எதுவும் இல்லை, காதல் ஒரு முறை மட்டுமே வரும், வேறு ஒருவரிடம் காதல் வந்தால் அது காதல் அல்ல; அது விபச்சாரம் என்று சொல்பவர்கள் உலக நிகழ்வுகளையும் மக்கள் மற்றும் இயற்கையின் இயல்பையும் உண்மையையும் அறியாதவர்கள், அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என்கிறார்.

காதல் என்பது எப்படி ஒரு பொருளின் மீது அந்தப் பொருள் பற்றி அறியும் போது அது தனக்கு வேண்டும் என ஆவல் கொள்கிறோமோ அது போலவே ஒரு மனிதர் பற்றி எந்த வகையிலாவது அறியும்போது ஏற்படுகிறது என்கிறார். தற்போதைய இளைய சமுதாயத்தில் காதலில் சிக்கல் ஏற்படும் போது இருவரும் பேசிப் பிரிந்து விடுவதும் வேறு சரியான நபரை தேர்ந்தெடுத்துக் கொள்வதும் நிகழ்கிறது.

பெரியார் காதல் என்ற தலைப்பை 1931இல் எழுதுகிறார் தற்போதைய சமூகம் எந்த மாற்றத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறதோ அதை 88 ஆண்டுகளுக்கு முன் நமது சமூகத்திற்கு அறிவுறுத்துகிறார்.

காதலைப் பற்றிய கற்பிதங்களால் ஆண்களும் பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என காட்டிக் கொள்வது போல நடந்து கொள்கிறார்கள் எனச் சொல்லும்போது அதை பற்றி அவர் கூறும் ஒவ்வொரு உதாரணமும் நமக்கு ஒரு சமூகப் புரிதலை ஏற்படுத்தி செல்கிறது. பக்திமானாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நினைப்பவர்கள் செய்யும் காரியங்களும், குழந்தைகள் தூங்குவது போல் நடிக்கும்போது கண்களை மூடியிருந்தால், தூங்கினால் கால் ஆடுமே என்று பெரியவர்கள் சொன்னால் குழந்தைகள் தூங்குவதாகக் காட்டிக் கொள்ள கால்களை ஆட்டுவது போலவும், கால் விரல்களைப் பார்த்து நடப்பவள்தான் கற்புள்ள பெண் என்று சமூகம் கூறுவதால் கால் விரல்களைப் பார்த்து நடப்பது போல பெண்கள் நடிப்பார்களே அது போலவும், உண்மையான காதலர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லி இருப்பதைப் போல நடந்து தங்கள் காதலைக் காட்டிக் கொள்கின்றனர் என்று எழுதுகிறார்.

காதல் என்பது அஃறிணை, பிற உயர்திணைப் பொருள்கள் மீது ஏற்படும் அன்பு, ஆசை, நட்பு போன்றவைதான். அதற்கு வேறு சிறப்பான தெய்வத் தன்மை ஒன்றுமில்லை மற்றும் ஆசையும், தேவையும், இலட்சியமும் மாறும்போது அன்பும், நட்பும் மாறுவது இயல்பு என்கிறார்.

இயற்கைக்கு மாறான சமூகத்தின் அனைத்துக் கற்பிதங்களையும் உடைத்துப் பேசியவர் பெரியார். அதுபோலவே காதல் என்பதன் மீது இருக்கும் இயல்பிற்கு மாறான கற்பிதங்கள் பற்றியும் அது மக்கள் வாழ்வில் ஏற்படும் மிக நுணுக்கமான அடிமைத்தனம் பற்றியும் எழுதுகிறார்.

காதல் என்பது ஒரு முறைதான் வரும் என்பதுபோன்ற கற்பனைகளால் ஒரு ஆண் ஒரே பெண்ணுடன் ஒரு பெண் ஒரே ஆணுடனும் இருக்க வேண்டி வருகிறது. எனவே கணவனோ மனைவியோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டோ அல்லது லட்சியமோ, எண்ணமோ மாறும்போது அதற்குத் தடையாக அந்த உறவு இருந்தாலும் அவ்வாறே வாழ வேண்டி இருக்கிறது.

பெரியார் இக்கட்டுரையில் காதல் பற்றிய கற்பிதங்கள் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்கிறது என்று எழுதுகிறார். திருமணம் என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல் அவர் பயன்படுத்தும் ஆண் பெண் கூட்டு வாழ்க்கை, ஆண் பெண் கூட்டுத் துறை என்ற சொல்லாடல்களில் சமத்துவத்தையும் அந்த வாழ்க்கை முறையின் தன்மையையும் உணர்த்துகிறார்

காதல் பற்றிய பெரியாரின் பார்வை எப்படி ஒரு நுணுக்கமான வகையில் சமூகத்தில் அடிமைத் தன்மையைக் களைய முனைகிறதோ அதுபோலவே மறுமணம் தவறல்ல என்னும் கட்டுரையில் தலைப்பைக் கொண்டு நம்மால் கணிக்க முடியாத கருத்துக்களை எழுதுகிறார்.

ஒரு கருத்தை எழுதுவதற்கு முன் மணம், காதல் போன்ற சொற்களின் பொருளானது அது எந்த மொழியைச் சார்ந்தது, மற்ற மொழிகளில் அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி அடிப்படை ஆய்வைச் செய்கிறார். பின் மக்கள் வாழ்க்கையில் அது என்னவாக இருக்கிறது மணமோ, காதலோ பற்றிய மனிதனின் இயல்பு என்ன என்பதையும் எழுதுகிறார். மனிதனின் இயற்கை இயல்புகளையும் தேவைகளையும் அடிப்படையாக வைத்தே கருத்துக்களைச் சிந்திக்கிறார்.

ஒரு மனைவி இருக்க ஆண் மறுமணம் செய்யலாமா என்ற நிலையிலிருந்து கட்டுரையைத் தொடங்குகிறார். ஒரு ஆண் மறுமணம் செய்துகொள்வது என்பது எந்தக் கொள்கையிலும் மதத்திலும் எந்த வகையிலும் தவறு எனச் சொல்லப்படவில்லை இந்து மதமும் மறுமணத்தை தவறு என்று சொல்ல முடியாது. இந்து மதத்தைச் சார்ந்த்த மக்கள் பல மணங்கள் செய்து கொண்ட கடவுளர்களை வணங்கி பூஜை செய்கின்றனர்.

ஒரு மனிதனுக்கு முதல் மனைவி இறந்து விட்டாலும், மனைவி மற்றொருவரிடம் ஆசை கொண்டு அது வெளிப்பட்டு விட்டாலும், தீராத நோய் உடையவராக இருந்தாலும், மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் ஆண் மறுமணம் செய்வதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் கணவன் மீது அன்பு இல்லாமல் அவனை இலட்சியம் செய்யாமல் மேலும் இவை எவ்வாறு இருந்தாலும் வாழ்க்கை திருப்திக்கும் இயற்கை என்பதற்கும் பயன்படவில்லை என ஆண் நினைத்தாலும் அப்போது அந்த ஆணின் கடமை என்ன என்ற மதக் கட்டுப்பாட்டுக்காரரும், அனுபவக் கொள்கைக்காரரும், பொதுமக்களும் கவனிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு எழுதும்போது மத கட்டுப்பாட்டுக்காரர், அனுபவக் கொள்கைக்காரர், பொதுமக்கள் என்று தனித்தனியே குறிப்பிடுவதால் அவர்களின் கவனத்தை ஈர்த்து கருத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறார்

பெரியார் இதே கட்டுரையில் மறுமணம் குறித்து மாறுபட்ட கருத்துள்ள சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு விளக்கமும் எழுதுகிறார். கல்யாண ரத்து குறித்து திட்டம் செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே சட்டத்தைப் பற்றி கவனிக்காமல் நியாயமென்று தோன்றியபடி நடந்து கொள்ள வேண்டுமென தனது தோழர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒரு இயக்கத்தின் தலைவர் தன் இயக்கத் தோழர்களுக்கு இருக்கும் முரண்பாடுகளுக்கு விளக்கத்தை பொதுவெளியில் மக்களுக்கு எழுதும் கட்டுரையில் எழுதியதுடன் சட்டம் பற்றி கவனிக்க வேண்டாம் என்றும் எழுதுகிறார். இது அவரது வலிமையையும் கம்பீரத்தையும் உணர்த்துகிறது மேலும் பெருந்திரளான மக்களைக் கொண்டது பெரியார் இயக்கம் என்பதால் ஒரு அரசைப் போல அரசு வெளியிடும் ஆணையை போல தோழர்களுக்கும் செய்திகளை பொதுவெளியில் எழுதித்தான் சேர்த்திருக்க முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஒருவன் தன் மனதுக்குப் பிடிக்காத வாழ்க்கைக்கும் இயற்கை இன்பத்திற்கும் பயன்படாத மணமகளை அடைந்து விட்டதாகக் கருதினால் அந்த திருமண வாழ்க்கையை ஏன் தொடர வேண்டும். மணம் செய்து கொண்டோம் என்பதற்காக அன்பையும், ஆசையையும், இன்பத்தையும் தியாகம் செய்ய வேண்டுமா? வெளியிலிருந்து பேசுபவர்கள் உண்மை அறியாமல், நிலை அறியாமல் சிறிதும் பொறுப்பற்ற முறையில் பாமர மக்களின் ஞானமற்ற தன்மையை தனக்கு சாதகமாகக் கொண்டு பேசிவிடுகிறார்கள் மனித சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் விரோதமான விஷயங்களை எதற்காக காப்பாற்ற வேண்டும் என்னும் விஷயங்களை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்கிறார். அவ்வாறு சிந்தித்து பார்த்தால் அவர் கூறுவதைப் போல வாழ்வின் பெரும்பாலான பகுதியை மக்கள் அனைவரும் எதற்காக இந்த வழக்கத்தை பின்பற்றுகிறோம் எனத் தெரியாமல் அதை மிகுந்த கடமை உணர்ச்சியுடன் வழுவாமல் கடைபிடித்து வருகிறார்கள் என்பதை அறியலாம்

பெரியார் இந்தக் கட்டுரையில் முழுக்க ஆணின் மறுமணம் மனைவி இருக்க ஆண் மறுமணம் செய்து கொள்வது என்பது குறித்த செய்திகளையே திரும்பத் திரும்ப பேசுகிறார். ஒரு ஆண் மறுமணம் செய்து கொள்ளும் சூழ்நிலைகளை வரிசையாகக் கூறிவிட்டு இறுதியில் அந்த சூழ்நிலைகளைத் தாண்டி ஆணுக்குப் பெண்ணை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது மறுமணம் செய்து கொள்வது தவறா என்ற கேள்வியை எழுப்புகிறார் இவ்வாறு கட்டுரை முழுக்க ஆண் மறுமணம் பற்றியே பேசி விட்டு இறுதியாகப் பெண் மறுமணம் குறித்துப் பேசுகிறார்.

ஆண் மறுமணம் செய்து கொள்வதில் உள்ள சிக்கல் மறுமணம் செய்துகொண்ட பிறகு தற்போது இருக்கும் மனைவியின் நிலை என்ன என்பதுதான். எனவே ஆணுக்கு வழங்கும் மறுமண உரிமையை பெண்ணுக்கும் வழங்கி விட்டால் அந்த கவலை இல்லாமல் போய்விடும். இவ்வாறு கட்டுரை முழுக்க ஆண் மறுமணம் குறித்து பேசும்போது வாசிப்பவர்களை ஒவ்வொரு கட்டத்திலும் கருத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உளவியல் ரீதியில் வழிநடத்துகிறார்.

.இறுதியில் பெண்களின் உரிமை குறித்து பேசும்போது இதுவரை சொன்ன ஆண் மறுமணம் குறித்த கருத்துக்களை ஏற்க முடிந்தால் பெண்ணுக்கான மறுமண உரிமை என வரும்போது ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறபடி அக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்குகிறார்.

பெண்கள் அடிப்படையில் மனிதர்கள் என்ற நிலையிலிருந்து கருத்துக்களை எழுதுகிறார். எந்தெந்த காரணங்களால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ ஒத்து வரவில்லையோ அந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காத போது இப்போது புருஷனுக்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் சுதந்திரமும் சௌகரியமும் போல பெண்களுக்கும் ஏற்படுமானால், பிறகு இந்த மாதிரியான அனுதாபமும் கவலையும் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட இடமே இருக்காது என்பதுதான்.

நம்மைப் பொருத்தவரை ஆண்களுக்கு சொன்ன விஷயங்களெல்லாம் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் அவர்களுக்கும் ஆண்களைப் போலவே ஏற்பட வேண்டும் என்றும், அம்மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், உலக வாழ்விலும் சமுதாயத்திலும் சட்டத்திலும் மதத்திலும் ஆண்களுக்கு உள்ள சௌகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் பெண்களுக்கு திருப்திகரமான இன்பத்தையும் ஆசையையும் அடைய முடியும் என்றும் கருதுகிறோம் என்கிறார்.

பெரியாருக்கு முன் சமூக விடுதலை பேசியவர்கள் பெண் விடுதலையை ஒரு வரையறைக்குள் நின்று பேசினார்கள். ஆனால் பெரியார் அதன் உச்சம் வரை சிந்தித்தார்.

பெரியாரின் பெண்ணியத்தைப் படிக்கும் போது தந்தை பெரியார் என்ற வார்த்தையின் பாரம் அதிகரிக்கிறது.

Pin It