இப்படி கேட்பது புதிதில்லை
இருந்தாலும் எப்போதும் இதுபோல்
கேட்டதில்லை யாழுகுட்டி
ராத்திரியானா சாமியெல்லாம்
எங்க போய் தூங்கும்பா ..!?
நம்ம வீட்லதாம்மா தூங்கும்!
அந்த சின்ன மாடத்தில
எல்லா சாமிக்கும் இடம் பத்துமாப்பா ..?
பதிலிறுக்காமல் மேலும் கீழும் பார்த்து
வழக்கம்போல முழித்தேன்.
ஓ ..அதான் சாமியாச்சே
அட்ஜஸ் பண்ணிக்கும் ஆமாதானேப்பா .!?
தலையை ஆட்ட வைத்தாள் தானாகவே .
விடுவதாகயில்லை யாழினிக்குட்டி
அப்ப சாமிக்கும் சேர்த்துதான்
நம்ம வாடகை குடுக்கறமா!?
அவ்வளவுதான் கேட்டாள்..
பின்னங்கால் பிடரியிலடிக்க
தட்டுமுட்டு சாமான்களை
அப்படியே விட்டுவிட்டு
தொடர்பு எல்லைக்கு
வெளியே ஓடிக்கொண்டிருந்தார் சாமி...

- சதீஷ் குமரன்

Pin It