உனக்குத் தெரியுமா?
உனக்கான
என் பொழுதுகளிலெல்லாம்
யாருக்கும்
அனுமதியில்லையென்பதை?

அவ்வேளையில்
நீ
நான்
நமக்கான நினைவைத் தவிர
வேறெதுவும்
உட்புக விடுவதேயில்லை!

நீ
வராத
நம் பொழுதுகளிலெல்லாம்
நீ
கையளித்துச் செல்கிற
நிராசையும்,
பெருந்தனிமையும்,
என் பொழுதுகளையெல்லாம்
கொல்லாமல் கொல்கிறது!

நீ
எனக்களித்த
முதல் ஸ்பரிசம்
முதல் புன்னகை
முதல் சொல்
முதல் பகிர்வு
மட்டுமல்ல
முதல் கண்ணீர்
முதல் பொய்
முதல் தவிப்பு
முதல் கோபம்
முதல் நிராசையென
இப்படி
கைக்கொள்ளா நினைவுகளை
ஏந்தியலைகிறேன்
என்பதுவும் உனக்குத் தெரியுந்தானே?

நீயற்ற
நம் பொழுதுகளிலெல்லாம்
உனது வார்த்தைகள்
உனது கோபம்
உனது கொஞ்சல்
உனது வாசமென
ஒவ்வொன்றாய் எனக்குள்ளே
எடுத்தெடுத்துப் பார்த்து
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.

இவ்விரவில்
உன் சொற்களை
அசை போட்டபடி
நிசப்தித்துப் போன
நினைவுகளில் உழல்கிறேன்!

உனது புன்னகை
முகத்தை
மனத்திலிருத்தி
முகவாய்த் தூக்கி
முத்தமிட்டு
முன்னிரவைக் கடத்துகிறேன்!

பத்ரமாயிரு ❤❤

- இசைமலர்

Pin It