பள்ளியில் பெயிண்ட் அடித்துக்
கொண்டிருந்த
சித்தப்பாவை கண்டும் காணாமல்
கடந்திருக்கிறேன்

மதிய இடைவேளையில்
வண்ணம் அப்பிய முகத்தோடு
என்னைப் பார்த்தவரை
தூரத்திலிருந்தே ஜாடையில்
வகுப்புக்கு நேரமாச்சு
என்று தவிர்த்திருக்கிறேன்

மாலைவரை அந்தப் பக்கம்
செல்லாமலே கவனமாய்
பள்ளி வளாகம் கடந்திருக்கிறேன்

நண்பனுக்குத் தெரிந்திருக்குமோ
என்று சந்தேகப் பார்வை
பார்த்திருக்கிறேன்

பெயிண்ட் அடித்து சம்பாதித்த
காசில் அன்று இரவே
செல்லகுமாரா திரையரங்கிற்கு
அவரோடு இணைந்த கைகள்
படம் பார்க்கச் சென்றிருக்கிறேன்

இடைவேளையில் வெட்கமே இல்லாமல்
அவர் வாங்கிக் கொடுத்த
போண்டாவையும் சமோஸாவையும்
ருசித்து தின்றிருக்கிறேன்

வண்ணங்களால் ஆனவர் சித்தப்பா
அவர் அடித்த பெயிண்ட்களால் ஆனவை
என் வானவில்
போண்டாவும் சாமோஸாவும்
நன்றியுடையவைகள் .....!

- கவிஜி

Pin It