உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மனைவி கண்முன்னே கணவரை மர்மக் கும்பல் வெட்டிய சம்பவம் திட்டமிட்ட ஜாதி வெறி படுகொலையாகும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் கவுசல்யா(19)க்கும் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று இருவரும் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்தபோது (மார்ச் 13) மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சங்கரை அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி யுள்ளனர். இந்த சம்பவத்தில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார்.

அங்கு பொதுமக்கள் கூடியதால் கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பியது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த இருவரை யும் மீட்டு உடுமலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சங்கருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார்.

பொது மக்கள் கூடும் இடத்தில் சர்வ சாதாரணமாக கொலைகார கும்பல் கொலை செய்துவிட்டு தப்புகிறது. கண்காணிப்பு கேமிராக் களில் பதிவான காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு கின்றன. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்... என்று படுகொலை பட்டியல் தொடர்கிறது. இவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள்.

தமிழ்நாட்டில் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வாக்குரிமை பற்றி பேசுகின்றன; ஆனால், ஜாதி யமைப்பை மீறினால் வாழ் வுரிமையே இங்கு இல்லை என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் சடங்குக்காகக்கூட ஜாதி எதிர்ப்பு, தீண்டாமைக் கொடுமைகள் குறித்து குறிப்பிடுவது இல்லை. போட்டி யிடும் வேட்பாளர் ‘நல்ல’ ஜாதிகாரராக அவரது ஜாதிக்குள் ‘செல்வாக்கு’ மிக்கவராக பார்த்து தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜாதி எதிர்ப்புக்கான இயக்கங்களின் தேவையை இப்போதாவது இயக்கங்கள் உணர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த ஜாதி வெறிக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து உடன் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

Pin It