சென்னையில் டிசம்பர் 6 அன்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜயுடன் பங்கேற்பதாய் இருந்ததை திருமா அவர்கள் புறக்கணித்து இருக்கின்றார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
இத்தனைக்கும் அந்த நூலைத் தயாரித்தது விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற வி.சி.க பிரசார ஊடகம்தான்.
இந்த நூலின் முக்கியமான பங்களிப்பாளராக விசிகவே இருக்கும் போது இந்த நிகழ்ச்சியில் திருமா கலந்து கொள்வதால் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டுவிடப் போகின்றது?.இத்தனைக்கும் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் கூட அம்பேத்கரைப் புகழ்ந்தும் உயர்த்தியும்தானே பேசியிருந்தார். அப்படி என்றால் திருமாவுக்கு என்னதான் பிரச்சினை?.
விஜய் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற உறுதிமொழி கொடுத்ததா? இல்லை “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்று நேரடியாக திமுகவை குற்றம் சாட்டியதா?
‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பதை விசிகவிற்கு விஜய் வீசிய வலை என்ற தோற்றத்தை பொதுவெளியில் திருமா ஏற்படுத்துகின்றார். விஜயின் மாநாட்டிற்கு முன் “அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல,” என அவரே பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக, அதிமுக, நாதக போன்ற கட்சிகளைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் குறிப்பாக சிபிஎம், சிபிஐ, பிஜேபி, காங்கிரஸ் என அனைத்துமே கூட்டணி அமைத்து மட்டுமே போட்டியிடுபவை. இவர்கள் யாரும் விஜய் தங்களுக்குத்தான் வலை விரிக்கின்றார் என்று நினைக்காத போது திருமா மட்டும் ஏன் நினைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஒரு வேளை திருமாவை விகடன் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு அழைத்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் காங்கிரஸ்கூட திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டிருக்கின்றது.
எனவே ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பது நீண்ட வருடங்களாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர பிற கட்சிகளிடம் இருக்கும் கோரிக்கைதான். அது ஒன்றும் விசிகவின் கோரிக்கை மட்டுமே கிடையாது.
மேலும் விஜயின் அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்” என்றே சொல்லியிருந்தார்.
எனவே திருமா புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு முக்கிய காரணம் அங்கு திமுக எதிர்ப்பு நிச்சயம் பேசப்படும் என்பதுதான்.
காரணம் அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா சில வாரங்களுக்கு முன்பே “30% வாக்கு வங்கி இருந்தால் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடலாமே. வட மாவட்டங்களில் வி.சி.க-வின் வாக்கு வங்கி இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது,” என்றும்,
“நேற்று வந்தவர், சினிமாவிலிருந்து வந்தவர், துணை முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் எங்கள் தலைவர் வரக்கூடாதா?” என்றும் பேசியிருந்தார்.
புத்தக வெளியீட்டு நிகழ்விலும் " கூட்டணி கணக்குகளை வரும் தேர்தலில் மக்கள் மைனஸாக்கி விடுவார்கள்", "2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது" எனவும் பேசி தனது முந்தைய கருத்தையே உறுதி செய்து இருக்கின்றார்.
ஆனால் இது பற்றி கருத்து தெரிவித்த திருமாவோ “அது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் ஆதவ் அர்ஜூனா குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். அவர் கூட்டணி நலன், கட்சி நலனுக்கு எதிராகப் பேசியுள்ளார். விசிகவுக்கு இது ஆரோக்கியமானது இல்லை என்பதால்தான் கூடிப் பேசவுள்ளோம்" என்றார்.
திருமாவுக்கு அவர் அங்கே என்ன பேசப் போகின்றார், அந்த நிகழ்வு எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றது என்பதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்தக் கருத்தில் தனக்கு உடன்பாடு இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால் திட்டமிட்டு தவிர்த்திருக்கின்றார்.
புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு முன்பே “விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியல் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழ் நாளேடு ஒன்று அதைப் பூதாகரமாக்கி அந்த நிகழ்வுக்கே ஒரு அரசியல் சாயத்தைப் பூசியது. அதனால்தான் நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சிக்கல் உருவானது. நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமே நடந்திருக்க வேண்டிய நிகழ்வை அரசியல் சாயம் பூசி சர்ச்சைக்கு உள்ளாக்கியது அந்த நாளேடு
விசிக திமுக கூட்டணியில் பங்கேற்று ஆறேழு ஆண்டுகளாக பயணித்து வரும் சூழலில், நானும் அந்த நிகழ்வில் பங்கேற்றால் அதற்கும் அரசியல் சாயம் பூசப்படும், தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும். குழப்பத்தை உருவாக்குவதற்கென்றே இருக்கும் சக்திகள் முயற்சி செய்வார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு விஜய் மட்டுமே அதில் பங்கேற்கட்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விஜய்யுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை.” என்று கூறியிருந்த திருமா, பின்பு எதற்காக ஆதவ் அர்ஜுனாவை கலந்து கொள்ள அனுமதித்தார் என்பதுதான் தற்போது அவரை நோக்கி வைக்கப்படும் முக்கிய கேள்வியாக உள்ளது.
இது எல்லாம் பாமக போல இரண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்கும் திருமாவின் சந்தர்ப்பவாத அரசியலே தவிர வேறு ஒன்றுமில்லை.
ஆனால் திருமா இவ்வளவு பில்டப் கொடுக்கும் அளவுக்கு விசிக ஒரு பெரிய கட்சியா என்று பார்த்தாலும் கோட்பாட்டு ரீதியாக திருமா எப்போதும் சரியாக செயல்படக் கூடியவரா என்று பார்த்தாலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
விசிக 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமாகா கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக–பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 8 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உருவாக்கியிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மக்கள் கூட்டணியில் அக்கட்சியின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமாவளவன் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 10 தொகுதிகள் போட்டியிட்ட விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியடைந்தது.
2016 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தலைவர் வைகோ உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி சந்தித்த தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு போட்டியிட்ட அனைத்திலும் தோற்றது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது
இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்த்தாலே திருமா தேர்தல் அரசியலில் ஒரு தேர்ந்த பிழைப்புவாதி என்பது தெரிந்துவிடும். இன்று பிஜேபியை எதிர்க்கும் அதே திருமா அன்று பிஜேபியோடு திமுகவுடன் இணைந்து கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர அடித்தளம் போட்டவர்.
அன்று ஈழத்தமிழர்களுக்காக காங்கிரஸை எதிர்த்த திருமா, இன்று அதே திமுகவுடன் இணைந்து காங்கிரஸை ஆதரித்து நிற்கின்றார். இதில் கொள்கை என்ன இருக்கின்றது?
விஜயகாந்திடம் அரசியல் சித்தாந்தத்தைக் கண்டுபிடித்து அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியவர்! இன்று பெரியாரையோ, அம்பேத்கரையோ ஏற்றுக்கொண்டு அரசியல் செய்வேன் என வெளிப்படையாகப் பேசும் விஜயை அவர் ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுவாரா?
திருமாவின் இத்தனை ஆண்டுகால கூட்டணி அரசியலைப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் திருமா நாடகம் போடுகின்றார் என்று.
தற்போது திருமா செய்து கொண்டிருக்கும் அரசியல் என்பது உண்மையில் திமுக மீதான பயத்தில் அல்ல, தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விகளில் இருந்து வரும் பயத்தில்.
நிச்சயம் 2026 தேர்தலில் திருமா யார் பக்கம் காற்று அடிக்கின்றது என்று பார்த்து கூட்டணி அமைப்பார். அந்த கூட்டணி விஜய்யோடு இருக்காது என நாம் உறுதியாகச் சொல்ல முடியாது.
பழம் தின்று கொட்டை போட்ட பலர் திமுகவில் இருக்கின்றார்கள். ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பதெல்லாம் திமுகவிடம் நடக்காத ஒன்று.
எனவே பொறுத்திருந்து பார்ப்போம், திருமா விடும் பட்டம் எந்த திசையில் செல்லப் போகின்றது என்று.
- செ.கார்கி