இன்னும் இரண்டு ஆண்டுகாலத்திலே நாம் இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆம். எப்போதும் போன்ற ஒரு தேர்தல் என்று கடந்து போகும் நண்பர்களே, தேர்தல் அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை அற்றவர்களும், இடது சாரிகளின் சித்தாந்தத்தின் மேலே நம்பிக்கை வைத்துகொண்டு இந்திய இடது சாரி கட்சிகளின் மேலே விமர்சனம் வைப்பவர்களே!!
நமக்குள்ளான சண்டை சச்சரவை, கருத்து பேதங்களை ஓரிடத்தில் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு *பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும்* என்ற ஒற்றைப்புள்ளியில் ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது.
ஆம் *நாம் கருப்பு நீலம் சிவப்பு* என்றெல்லாம் இயக்கங்களை நடத்தி வந்தாலும் கூட நமக்குள்ளான விருப்பு வெறுப்புக்கள் மிக அதிகமாக இருக்கிறது என்பதை யாருமே மறுத்துவிட முடியாது.
கடந்த எட்டு ஆண்டு காலங்களில் நாம் அனைவரும் மாநில தேர்தல்களையும் பாராளுமன்ற தேர்தல்களையும் இடைத்தேர்தல்களையும் பார்த்து இருக்கிறோம். இந்த தேர்தல்களில் பாசிச பாஜகவின் யுத்திகளையும் பார்த்து இருக்கிறோம். அவற்றை விரிவாக விமர்சித்து பேசியும் பல நூல்களில் எழுதியும் இருக்கிறோம்.
ஆனால் களத்தில் நாம் தமிழகத்தில் ஓரளவுக்கு நாம் ஒருங்கிணைத்து இருந்தாலும் கூட தேசிய அளவில் சரியான புரிதலோடும் ஒன்றிணைப்போடும் பணியாற்றி இருக்கிறோமா என்றால் இல்லை.என்பதை நாம் விரும்பாவிட்டாலும் கூட ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.
இது வரை நம்மில் பல இயக்கங்கள் மாநில எல்லைக்குள்ளே நின்றுகொண்டு தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமையும் புரிதலும் கொண்டவர்களாக இருக்கிறோம்.. ஆனால், அதை தேசிய அளவில் கொண்டு செல்ல தவறியும் இருக்கிறோம்.
பெரியாரிய அம்பேத்காரிய மார்க்சிய தோழர்களே, நாம் நமது சித்தாந்தங்களில் பெரும்பாலும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக அதே நேரம் ஒன்றை ஒன்று ஏற்பதாகவே இருக்கிறது. அதனால் தான் தமிழகத்தில் பெரியாரால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பாக *கம்யுனிஸ்ட் அறிக்கை* யை கம்யுனிஸ்ட்களும் கம்யுனிஸ்ட்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட *ஈரோட்டு பாதை* யை பெரியார் ஆதரவாளர்களும் ஏற்று ஒருவரை ஒருவர் நட்பு முரண் பாராட்டி வளர்ந்து இருக்கிறோம்.
அம்பேத்காரியவாதிகள் பல இடங்களில் கம்யுனிஸ்ட்களை எதிர்ப்பதும் சில இடங்களில் ஏற்பதும் கூட நடக்கிறது. இப்போது அந்த வழியிலே *2024 தேர்தல் பாதை* யை இப்போதிருந்தே நாம் எழுத வேண்டிய தேவை உருவாக்கி இருக்கிறது.
தோழர்களே, பெரியாரிய அம்பேத்காரிய மார்க்சிய சித்தாந்தங்களோடு கொஞ்சம் காந்திய சித்தாந்தங்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய காலகட்டமாக இந்த தேர்தலை பார்க்கவேண்டி இருக்கிறது. கருப்பு நீலம் சிவப்போடு கொஞ்சம் வெள்ளையை சேர்ந்து ஒன்றிணைந்து இயக்கமாக வரும் தேர்தலை சந்திக்க வேண்டியதால் சில கருத்துக்களை இங்கே நான் வைக்கிறேன்.
தெற்கிலிருந்து தான் இந்தியாவின் வரலாறும் பண்பாடும் கலாச்சாரமும் பண்டைய காலம் முதல் இருந்து இருக்கிறது. மீண்டும் அதை மீள் பதிவாக எழுதவேண்டிய காலச்சூழல் நம்மை கெஞ்சி கேட்கிறது. இந்த சூழலில் தான் நாம் இந்த தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்தியா வளர வேண்டும் என்ற நல்லெண்ண ஆர்வலர்களையும் கெஞ்சி கேட்பது அனைவரையும் ஒன்றிணைத்து பெரும் சக்தியாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி புறப்பட்டு தேர்தல் வியுகம் அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை தான்.. அதற்காக சில கருத்துக்களை அறைகூவலாக விடுக்கிறேன். அதிலே மாறுபட்ட அல்லது திருத்த கூடிய கருத்துக்கள் இருந்தால் அதை ஏற்று மாற்றிக்கொள்ளலாம்.
மார்க்சிய பெரியாரிய அம்பேத்காரிய காந்திய சித்தாந்தங்களின் அடிப்படை சமூக நீதியும் சம அந்தஸ்தும் தான்.. அதை எந்த நடையில் மொழியில் பேசினாலும் இறுதி கருத்தாக வந்து நிற்கபோவது அது தான்.
இந்திய பாராளுமன்றத்திற்கு மொத்தம் 543 உறுப்பினர்கள். 36 மாநில / யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யபடுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலே இருக்கும் *131 தொகுதிகள் பட்டியல் இன தொகுதிகளாக* வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. மீதம் இருக்கும் 412 தொகுதிகள் பொது தொகுதிகளாக இருக்கிறது. ரிசர்வ் தொகுதியே இல்லாமல் 9 மாநில / யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது.
27 மாநில / யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்த 131 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் லட்சத்தீவு 64,473 வாக்காளர்களையும் தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ விலே வெறும் 5,85,764 வாக்காளர்களையும் கொண்ட பாராளுமன்ற தொகுதி. 3 மாநில / ஒன்றியத்திலே பொது தொகுதி இல்லாமல் முழுக்க முழுக்க ரிசர்வு தொகுதி மட்டுமே கொண்டு இருக்கிறது. மார்க்சிய காந்திய அம்பேத்காரிய பெரியாரிய சித்தாந்தங்களின் ஒருங்கிணைப்பை நிரூபிக்க நாம் கீழ்க்கண்ட மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளில் பணியாற்ற தயாராவோம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை களைந்து ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த கூட்டியக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பை *தோழர் திருமாவளவன்* துவங்க வேண்டும். நான் தோழர் திருமாவளவனை குறிப்பிட பல காரணங்கள் இருக்கிறது. அவரை குறிப்பிட்டதால் எனது பால்ய கால சிநேகிதர் தோழர் வன்னியரசு என்மீது, *மீண்டும் எங்கள் தலைவர் தொல் திருமாவளவன் பொதுவானவர். அவரை குறிப்பிட்ட சாதீய ரீதியாக முன்மொழிகிறீர்கள்* என்று வருத்தம் தெரிவிக்கலாம்.
தோழர் திருமாவளவன் அவர்களை முன்மொழிய பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
- இதுவரை உருவான பல அம்பேத்கார் சித்தாந்தவாத அரசியல் கட்சிகள் குறிப்பாக ராஜ் நாராயண் காலம் துவங்கி அதன் தொடர்ச்சியாக வி.பி.சிங், கன்ஷிராம், போன்ற வட இந்திய தலைவர்களின் வழி வந்தவர்களான மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள், அதே சித்தாந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி, ஜான் பாண்டியன் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் இடது சாரிகளின் தத்துவார்த்தத்தை புரியாததால் அப்படியே பாசிசத்தால் கபளீகரம் செய்யப்பட்டு நிற்கிறார்கள். அந்த பாதையில் தோழர் திருமாவளவன் சரியான புரிதலோடு சமரசம் இன்றி சென்று கொண்டு இருக்கிறார்.
- சரிவர புரிதல் இல்லாத இஸ்லாமிய அமைப்புக்கள் குறிப்பாக பாப்புலர் பிரண்ட், SDPI மற்றும் ஒவைசி போன்ற அமைப்புக்கள் தான்தோன்றி தனமாக மத அரசியலை கையில் எடுத்து பாஜகவை போன்று பயணிக்கும் காலத்தில் அவர்களையும் ஒருங்கிணைத்து செல்லும் தன்மை கொண்டவராக தோழர் திருமாவளவன் இருக்கிறார்.
- சனாதனத்தை முழுவதும் புரிந்துகொண்டவராக அதே நேரம் மதரீதியாக யாரையும் தாக்குதல் செய்யாமல் சரிவர கையாளும் விதத்தில் திருமாவளவன் இருக்கிறார்.
- தமிழகத்தில் இருக்கும் புரிதல்கள் மற்ற மாநிலங்களில் இருப்பது கிடையாது என்பதால் அங்கே அம்பேத்காரை முன்னிறுத்தி தலித் அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால் திருமாவளவன் சரியாக இருக்கிறார்,
ஆகவே தோழர்களே, இந்த கூட்டியக்கத்தை கட்டமைக்கும்போது இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சியவாதிகள் எப்போதும் அவர்களுக்கு எண்ணிக்கையை விட சித்தாந்த வெற்றியை பார்ப்பவர்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே போல பெரியாரியவாதிகள் தமிழகத்தில் சில எதிர்பார்ப்புக்களும் சில நிர்பந்தங்களையும் வைத்ததாலும் கூட இந்திய அளவில் இதை ஏற்றுக்கொள்வார்கள். வழி நடப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
அதே போன்று காந்தியவாதிகள் பெரிய அண்ணன் போக்கில் சில நேரங்களில் நடக்க முயன்றாலும் கூட எடுத்து சொல்லும் பட்சத்தில் தேர்தல் உடன்பாட்டிற்கு ஒப்புக் கொள்வார்கள் என்றே சந்தேகத்தோடு நினைக்கிறேன்.
அம்பேத்காரிய வாதிகளிடம் தான் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. தோழர் திருமாவளவன் அதை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
முதல்கட்டமாக இந்த 131 தொகுதியை காத்திட இங்கே நம் இயக்கம் வெற்றி பெற வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற அறைகூவலை இங்கே விடுக்கிறேன். இந்த தொகுதிகளை திட்டமிட்டு வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்து பாசிச பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும்.
- ஆர்.எம்.பாபு