கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துணை பொதுச்செயலாளர் என்று பொறுப்புக்கு வந்த லாட்டரி மார்டினின் மருமகன் வி.சி.க வின் புதிய து.பொ.செ ஆதவ் அர்ஜுனாவின் பேட்டிகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் வி.சி.க, தி.மு.க கூட்டணிக்கு வேட்டு வைக்கும் விதமாகவே உள்ளது. எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் பிற பிரமுகர்கள் சொன்னாலும், இந்த பேச்சுகள் தி.மு.க தரப்பை எரிச்சலூட்டுவதாகவே உள்ளது.

இது தி.மு.க அனுதாபிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் தெரிந்த எவருக்குமே ஏற்புடையதாகத் தோன்றாது. ஒரு கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு அதன் பிரமுகர் ஒருவரை பேசவிட்டு அழகு பார்க்கிறது என்பது பேரத்திற்காகவோ அல்லது பிரிந்து போவதற்கான சமிக்ஞையாகவோதான் கருதப்படும்.

aadhav arjuna thirumavalavanஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார், அதில் தங்களது தலைவர் திருமாவளவனை முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ அமர்த்தி அழகு பார்ப்பதுதான் தங்களது இலக்கு என்கிறார். நடிகர்கள் முதல்வராக வேண்டும் என்று கனவு காண்கின்றனர், சில படங்கள் நடித்துவிட்டு வருபவர்கள் துணைமுதல்வர் ஆகவேண்டும் என்கிறார்கள், எங்கள் தலைவருக்கு என்ன தகுதியில்லையா என்றெல்லாம் பேசுகிறார். துணைமுதல்வராக உதயநிதி அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவரும்போது அதற்கு எதிராகவே இவ்வாறு வி.சி.க ஆதவை பேச வைக்கிறது என்பதுதான் இதில் வெளிப்படையாகத் தெரிகிற உண்மை.

இதற்கு ஆ. ராசா அவர்கள் “இது அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு, கூட்டணி தர்மத்துக்கு எதிரான ஆதவின் பேச்சை திருமாவளவன் ஆதரிக்க மாட்டார்” என்கிறார். அதைத் தொடர்ந்து திருமாவும் ஆதவ் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார். மீண்டுமொரு பேட்டியில் ஆ. ராசாவின் பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு “ஆ. ராசா பொதுத் தொகுதியில் நிற்க முடியுமா…?” என்கிறார் ஆதவ். “ஏன் அவர் நீலகிரியில் தனித்தொகுதியில் நிற்கிறார் இதுதான் சமூக நீதியா?” என்கிறார்.

தன்னை சமூகநீதியில் அக்கறை கொண்டவன் என்று சொல்லும் ஆதவ், அதனால்தான் வி.சி.க கட்சியில் சேர்ந்தேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது இவர் பேசுவது சமூக நீதியா..?

இவ்வளவு காலமாக ரிசர்வேஷன் என்னும் இட ஒதுக்கீட்டை குறித்து பார்ப்பனக் கூட்டம் என்ன சொல்லி வந்திருக்கிறது. “உங்களுக்கு தகுதி இருந்தால் திறந்த போட்டியில் வர வேண்டியதுதானே..? ஏன் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறீர்கள்?” என்று இட ஒதுக்கீட்டில் பலன்பெற்றவர்களையும், அதை ஆதரிப்பவர்களையும் பார்த்துக் கேட்டனர். இதே கேள்விகளின் மறு வடிவம்தான் ஆதவ், ஆ. ராசாவிடம் கேட்பது; அல்லது தி.மு.கவைப் பார்த்து கேட்பது. இதே கேள்விகளைத்தான் சீமானும் பல நேரங்களில் சொல்லி வருகிறார். சமூகத்தின் உளவியல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படாமல் இட ஒதுக்கீட்டை ஒழிப்பதோ, அல்லது தனித்தொகுதியை ஒழிப்பதோ சாத்தியப்படுமா..? இது ஆ. ராசாவின், அல்லது தி.மு.கவின் தனிப்பட்ட பிரச்சனையா..?

வி.சி.க தலைவர் எம்பியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் தொகுதி தனித்தொகுதியா அல்லது, பொதுத்தொகுதியா..? வி.சி.க வின் ரவிக்குமார் அவர்கள் நின்று வெற்றி பெற்ற விழுப்புரம் தொகுதி தனித்தொகுதி இல்லையா..? எங்களுக்கு பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் அதில் நாங்கள் தலித் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று உறுதியாக இருக்கும் வி.சி.க வின் நிலைபாடு, வெற்றியை உறுதிபடுத்திக் கொள்வதற்காக கள எதார்த்தத்தைப் புரிந்து கொண்ட முடிவா அல்லது சமூக நீதிக்கு எதிரான முடிவா..?

வி.சி.க ஏன் தலித் வேட்பாளர்களை தனித்தொகுதியிலும், தலித் அல்லாதவர்களை பொதுத் தொகுதியிலும் நிறுத்துகிறது என்று நாம் கேட்டதும் இல்லை; கேட்கப் போவதும் இல்லை. ஏனெனில் அது ஒரு சங்கித்தனமான கேள்வி. அது தலித் மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவருகிற நோக்கம் கொண்டது அல்ல அதற்கு எதிராக அவர்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்வது. ஆர். எஸ். எஸின் செயல்திட்டத்தை தனது தோள்மேல் எடுத்து வைத்துக் கொண்டு செயல்படும் சீமான் போன்றவர்கள் இதைக் கேட்பதில் வியப்பில்லை. ஆனால், அதை வி.சி.கவைச் சேர்ந்த ஒருவர் கேட்பதுதான் ஆபத்தானது.

இந்திய சமுக அமைப்பில் தலித்துகள் தனித்து போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற சூழலில்தான் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமையைக் கோரினார் அம்பேத்கர். அது காந்தியால் முறியடிக்கப்படவே தனித்தொகுதி என்ற திட்டத்தை ஏற்றுக் கொண்டார். ஆதவின் பேச்சுக்கள் வி.சி.க தனது கொள்கை ஆசானாக ஏற்றுக் கொண்டிருக்கும் அம்பேத்கருக்கே விரோதமானது. இதை வெறுமனே ஆதவின் தனிப்பட்ட கருத்து என்று நாமோ அல்லது வி.சி.க தலைமையோ கடந்து செல்ல இயலாது.

இந்த பேச்சுக்களில் ஆதவ் அர்ஜுன் தனித்தொகுதி பற்றியும் ஆ. ராசா பற்றியும் சொல்லவருவது என்ன? அவர் பெற்றிருப்பது உண்மையான வெற்றியே இல்லை அது சலுகையில் கிடைத்தது என்கிற தொனியில்தானே பேசுகிறார். அப்படி எனில் ஏன் தமிழ்நாட்டில் 44+2 என சட்டமன்றத்திலும் 7 நாடளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அது தலித்துகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்காக அம்பேத்கர் செய்த மகத்தான திட்டமில்லையா..? ஆ. ராசாவை விமர்சிப்பதன் மூலம் தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்ற, திருமா, ரவிக்குமார் போன்ற இன்னபிற தலித்துகளின் வெற்றியையும் வெற்றியே இல்லை என்பது போல் கொச்சைக் படுத்துகிறாரா ஆதவ் அர்ஜுன்?

இதுவும் இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்தவர்களை, அவர்கள் உழைக்காமல் குறுக்கு வழியில் வந்தவர்கள் என்பது போல் பார்ப்பனக் கூட்டம் அசிங்கப்படுத்துவதும் ஒன்றல்லவா?.

தான் சமூக நீதியில் அக்கறை கொண்டவன் என்று சொல்லிக் கொண்டே அம்பேத்கருக்கும், சமூக நீதிக்கும் விரோதமான விதத்தில் பேசிவரும் ஆதவை கண்டிக்காமல் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று வி.சி.க கடந்து போகுமானால் அது வி.சி.க - திமுக கூட்டணிக்கு மட்டுமல்ல, வி.சி.க கட்சிக்கே ஆபத்தாகத்தான் வந்து முடியும்.

- சுமன் கவி