கடந்த இதழில் நாம் தெரிவித்த இரண்டு கருத்துகள் மேற்கொண்டிருந்த நிலைபாடுகள் பற்றி கொஞ்சம் விளக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலை ஆதரவு அணியை ஆதரிக்க வேண்டும். அதற்கு வாக் களிக்க வேண்டும் என்று நாம் கோரி யிருந்தது உணர்வாளர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந் தாலும், சிலபேர் மத்தியில் போயும் போயும் ஜெ. வுக்கு வாக்களிக்கச் சொல்கிறீர்களா என்கிற முகச் சுளிப்பும் இருந்தது. 

ஜெ. என்றாலே உணர்வாளர்கள் பல பேருக்கு இம்முகச் சுளிப்பு, வெறுப்பு ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களை இங்கு விளக்க வேண்டி யதில்லை. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நாமும் அறிந்ததுதான். 

என்றாலும், அந்த அணிக்கு நாம் வாக்கு கேட்டதன் நோக்கம் அது ஈழ விடுதலை ஆதரவு அணியாக விளங்கி யது என்பதுதான். இந்த ஆதரவு உண்மையானதா, நம்பகத் தன்மை யுடையதா என்பதை யெல்லாம் அந்த நேரத்தில் போய் நாம் கேள்வி யெழுப்பி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது. 

ஒரு நெருக்கடியான தருணத்தில் வாழ்வா சாவா என்று போராடிக் கொண்டிருக்கிற தருணத்தில், யாரெல் லாம் நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக் கிறார்களோ, உதவ முன் வருகிறார் களோ அதையெல்லாம் பயன்படுத்தி உயிர் மீள்வதைத் தான் பார்க்க வேண்டு மேயல்லாது, அப்போது போய் ஆதர வாக வருபவர் யார்? இவர் ஏற் கெனவே எப்படி யிருந்தார், என்னென்ன சொன்னார், இப்போது வந்து இப்படி சொல்கிறாரே, கடைசி வரைக்கும் நிற் பாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பு வதோ, அல்லது இவர் 10 விழுக்காடு 15 விழுக்காடு அளவு மட்டும்தானே உதவி செய்ய முன் வருகிறார். 100 விழுக்காடு உதவவில்லையே, ஆகவே 100 விழுக் காடு உதவி செய்வதானால் செய்யுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம், இந்த 10, 15 விழுக்காடு உதவியெல்லாம் நாங்கள் ஏற்க மாட்டோம், எடுத்துக் கொண்டு போங்கள் என்பதோ எந்த வகையிலும் போர் உத்தி ஆகாது. 

இந்த மாதிரி நெருக்கடியான தருணங்களில் எல்லாம் யார் உதவி னாலும், எத்தனை விழுக்காடு உதவி னாலும், அதைப் பயன்படுத்திக் கொள் ளத்தான் பார்க்க வேண்டுமேயன்றி, அதைவிட்டு, வீராப்பு, சவடால் பேசி அதை நிராகரிக்க முடியாது. ஒரு தனி மனிதன் வேண்டுமானால் இப்படி சவடால், வீறாப்பு பேசலாம். ஆனால் ஒரு இயக்கம், பல இலட்சம் மக்களின் வாழ்வுரிமை மற்றும் உயிர் காப்பு பிரச்சினைகளில் இப்படி விளையாட முடியாது. 

எனவே இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் அந்த அணியை ஆதரிக்கச் சொன்னமேயன்றி, வேறு எந்த வகையிலும் அல்ல. ஆகவே இதை ஈழ ஆதரவு அணி என்கிற நோக் கில்தான் பார்க்க வேண்டுமே யல்லாது, ‘ஜெஆதரவு அணி என்கிற நோக்கில் பார்க்க வேண்டியதில்லை. அது தேவை யுமில்லை. 

இப்போதும்கூட முள் கம்பி வேலிக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்களை மீட்க வேண்டும் என்று குரல் எழுப்பும்போது இதற்கு யாரெல்லாம் ஆதரவாக வரு கிறார்களோ, எந்தெந்த மூலையிலிருந் தெல்லாம் இதற்கு ஆதரவு வரு கிறதோ, அவை அனைத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கிலேயே இதைப் பார்க்க வேண்டும். அதுதான் வெற்றியையும் தருமேயல்லாது, வெறும் வரட்டு வீராப்பு நோக்கில் பார்க்க முடியாது. அது வெற்றியையும் தராது. 

சரி. அடுத்து திருமாவின் நிலை பாடு பற்றி - தமிழீழ விடுதலை ஆத ரவைப் பேசி, அதற்காகப் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி, காலவரையற்ற பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு இவ்வளவும் செய்து போயும் போயும் கடைசியில் காங்கிரசுடன் - ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போய் எண்ணற்ற போராளிகளையும், அப் பாவி மக்களையும் கொன்றழித்த கொலைகார காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து குருதிக் கறை படிந்த கைச் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தது, 37 தொகுதிகளிலும் அந்த அணிக்கு இதில் தி.மு.க. நின்ற 21 தொகுதிகளைக் கூட விடுங்கள் - காங்கிரஸ் நின்ற 16 தொகுதி களிலும் ஓடி ஓடி உழைக்க வேண்டுமா, இதற்காகவா சிறுத்தைகள் அமைப்பை உருவாக்கி னோம் என்கிற கேள்வியை எழுப்பி யிருந்தோம். 

சிறுத்தைகள் அமைப்பில் உள்ள பலர் சிறுத்தைகள் அமைப்பு தொடங்கு வதற்கு முன்பிருந்தோ, அல்லது அவர் கள் சிறுத்தைகள் அமைப்பில் சேரு வதற்கு முன்பிருந்தோ நமக்கு நல்ல நண்பர்களாயிருந்தவர்கள். இப் போதும் நல்ல நண்பர்களாயிருப்ப வர்கள். அவர்கள் பலரும் அதைப் படித்து சரியாகத்தான் எழுதியிருக் கிறீர்கள், என்ன செய்வது இப்படியெல் லாம் அரசியல் செய்ய வேண்டியிருக் கிறது. இதுவெல்லாம் சேர்ந்துதான் இன்றைய அரசியலாக இருக்கிறது என்கிற தங்கள் வேதனையை வருத் தத்தைத் தெரிவித்தார்கள்.  

ஆனால் நேரடி அறிமுகமில்லாத சிலர் மட்டும் எல்லாக் கட்சியும்தான் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது, இதில் நம் கட்சியை மட்டும் விமர்சிப் பானேன்என்று கேட்டதாகச் சொன் னார்கள். அப்படிக் கேட்பவர்களுக்காக மட்டும் ஒரு சில கருத்துகள். 

நாற்காலி அரசியல் நடத்தும் எல்லாக் கட்சிகளுமே சந்தர்ப்பவாத அரசியலைத்தான் நடத்துகின்றன என்பது பொது உண்மை. இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதிலிருந்து சற்றே மாறுபட்ட கட்சியாக சிறுத்தை கள் கட்சியை மக்கள் பார்த்தார்கள். 

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சாதிக் கட்சியின் தலைவராக தொடக் கத்தில் தலையெடுத்த திருமா, பின் தமிழ் - தமிழ்த் தேசியம் பேசி தமிழ் தேசிய உணர்வாளராக தமிழ் உரிமைப் போராளியாகத் தன்னை வெளிப் படுத்திக் கொண்டவர். தமிழீழ விடு தலை ஆதரவு நிலை எடுத்து தமிழீழக் கோரிக்கைகளையும், தமிழீழ விடு தலைப் போராட்டத்தையும், புலிகள் அமைப்பையும் உறுதியோடு ஆதரித் தவர். தமிழீழ விடுதலை ஆதரவு கருத் துரிமைக்கு அச்சுறுத்தல் வந்தபோது, அதை எதிர்த்து முதலில் களமிறங்கி மாநாடு நடத்தியவர். அதற்காக தொடர்ச்சியாக எண்ணற்ற போராட் டங்கள் நடத்தியவர். குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு என்ற நூல் போட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமை யாகச் சாடியவர். தேர்தல் அரசியலுக் காக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தன் ஈழ விடுதலை ஆதரவு நிலைப்பாட் டில் உறுதியோடு நின்றவர், நிற்பார் என்று எதிர்பார்க்கப் பட்டவர். 

அப்படிப்பட்டவர் கடந்த தேர் தலில் ஈழ ஆதரவு அணி என்ற ஒன்று உருவாகியிருக்கும் போது அந்த அணி யில் செல்லாமல் அதற்கு எதிர்ப்பு அணியில் போய்ச் சேர்ந்தாரே. முத்துக் குமார் உள்ளிட்ட தீக்குளித்து உயிர் நீத்த 18 பேரின் தியாகத்துக்கு அர்த்தமில் லாமல் செய்து விட்டாரே. இது அவர் களின் தியாகத்திற்கு செய்யும் துரோக மில்லையா என்பதுதான் கேள்வி.  

தி.மு.க.வை ஆதரித்ததைக் கூட விடுங்கள். ஈழப் போராளிகளையும் அப்பாவிப் பொது மக்களையும் படு கொலை செய்யக் காரணமான காங் கிரசை எப்படி ஆதரிக்கலாம் என்பது தான் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்புக்குக் காரணம். கேட்டால் என்ன சொல்கிறார். நான் மூன்றாவது அணி அமைக்க அழைத்தேன், யாரும் வரவில்லை என்கிறார். 

சரி, வரவில்லை என்றால் என்ன செய்திருக்கவேண்டும், தோற்றாலும் பரவாயில்லை என்று தன் மானத்தோடு தனித்து நின்றிருக்க வேண்டும். ஏன் அப்படி நிற்காமல் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தார். எப்படி இதற்கு மனம் ஒப் பியது என்று கேட்டும், இது நியாய மல்ல என்று விளக்கியும்தான் கடந்த இதழில் எழுதியிருந்தோம். 

காரணம், திருமா புலிகள் ஆதர வாளர், அதில் ஒளிவு மறைவு இல்லா தவர். அதை வெளிப்படுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டாதவர். ஈழம் சென்று போராளித் தலைவர்களைச் சந்தித்து திரும்பியவர். புலிகள் அமைப்புத் தலைவர் பிரபாகரனை எப்போதும் மேதகு பிரபாகரன் என்று மிகுந்த மரியாதையோடு அழைப்பவர், அவர் மீது மிகுந்த பற்றுள்ளவர். 

இப்படி இருக்க கடந்த தேர்தல் நேரத்தில், போராளிகள் நெருக்கடியாக தவிக்கும் சூழலில், தமிழ்த் தேர்தல் கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன என்று தமிழகப் பத்திரிகைகள் சில புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றன. அதற்கு நடேசன் சொல்கிறார் தமிழக அரசியலில் யார் யாருடன் கூட்டு சேர்ந்தாலும், எமது உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண் டும் என்பதையே எமது மக்கள் எதிர் பார்க்கிறார்கள்என்கிறார். கூடவே அடுத்த கேள்வியில் அவர் சொல்கிறார், ‘அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி எமது விடுதலைப் போராட் டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும். அவர்கள் எமது விடு தலைப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அதற்காகப் பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்என்று குறிப் பிடுகிறார்.  

இதன் பொருள் என்ன? தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இந்தக் கூட்டணியை ஆதரித்து இதை வெற்றி பெறச் செய்யுங்கள் என்பது தானே. 

ஒரு நாட்டு அரசியலில் மற்றொரு நாட்டுத் தலைவர் நேரடியாகத் தலையிட்டு நேரடியான வேண்டு கோளா வைக்கமுடியும்? முடியாது. மறைமுகமாக இப்படிச் சொல்லத்தான் முடியும். அதைதான் நாசூக்காக சொல்லியிருக்கிறார் நடேசன் . நடேசன் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் இது அவரது சொந்தக் கருத்து மட்டு மல்ல, இது புலிகளின் கருத்து, அதன் தலைவர் பிரபாகரன் கருத்து, தமிழீழ மக்களின் கருத்து. 

இந்த நிலையில் திருமா என்ன செய்திருக்க வேண்டும்? உண்மை யிலேயே இவர் தமிழீழத்தையும், போராளிகளையும் ஆதரிப்பவர், தமிழீழ மக்களை நேசிப்பவர் என்றால் ஏப்ரல் மாதம் வெளிவந்த இந்த பதி லுக்குப் பிறகாவது என்ன செய்திருக்க வேண்டும்? காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து விலகி வெளியே வந்திருக்க வேண்டும். ஜெ. கூட்டணி யில் சேர விருப்பமில்லாவிட்டால், தனித்து நின்றிருக்க வேண்டும். தனித்து நிற்க வும் விருப்பமில்லாவிட்டால், சரி இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டி யிடப் போவதில்லை. ஆனால் கொலைகாரப் படுபாதக காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம். காங்கிரசை ஒரு தொகுதியிலும் வெல்ல விட மாட்டோம், யாருக்கு வாக்களித் தாலும் அளியுங்கள். கொலைகார காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து தமிழகத்தில் காங்கிரசை ஒரு தொகுதி யில் கூட ஜெயிக்க விடாமல் அதை மண்ணைக் கவ்வ வைப்போம் என்கிற வெஞ்சினம் கொண்டு களம் இறங்கி யிருக்கவேண்டும். 

அப்படி இறங்கியிருந்தால் தமிழ் உணர்வாளர்கள், தமிழீழ ஆதரவாளர் கள், தமிழக மக்கள் திருமாவைக் கொண்டாடியிருப்பார்கள். பாராட்டி யிருப்பார்கள். வாழ்த்தி தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் திருமா அப்படிச் செய்யவில்லையே. மாறாக கொலைகார கட்சியின் தலை வர் சோனியாகாந்திக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து முழக்கமிட்டாரே? இது சரியா? ஒரு உண்மையான போராளியின் கை இன எதிரிக்கு இப்படி பொன்னாடை போர்த்துமா? படுகொலைக்கு பழி தீர்க்க நேரம், நாள் அல்லவா பார்த்துக் கொண்டிருக்கும் என்பதே உணர் வாளர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 

சரி, இந்த சந்தர்ப்பவாத சறுக்கல் களுக்கு, சமரசங்களுக்கு கிடைத்த பரிசு என்ன, ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. இதைத் தவிர வேறு என்ன? சரி, இந்தப் பதவி வந்து என்ன பெரிய மாற்றம் வந்து விட்டது? இந்த பதவி இல்லாமல் போனால்தான் என்ன மாற்றம் வந்து விடாமல் போய்விடப் போகிறது? பெயருக்குப் பின்னால் எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் என்று போட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தானே. இதைத் தாண்டி வேறு என்ன....?

விவிலிய நூலில் ஒரு வாசகம் உண்டு. ஒருவன் உலகையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டாலும் அவன் தன் ஆத்துமாவை இழந்துவிட்டான் என்றால் அதனால் ஏது பலன்?’ என்று. இந்த வாசகம் திருமாவுக்கும் தெரிந் திருக்கும். 

தான் அரசியலில் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலை என்ன? இப்போதுள்ள நிலை என்ன என்பதை யோசிக்க, இது புரியும். அன்று வசதி வாய்ப்புகள், வள வாயில்கள் இல்லா விட்டாலும் நெஞ்சில் வீரம் இருந்தது. கொள்கையில் பிடிப்பு, உறுதிப்பாடு இருந்தது. செயலில் துடிப்பு இருந்தது. ஆதிக்கத்தை, அதிகாரத்தை எதிர்க்கும் துணிவு, போர்க்குணம் இருந்தது. ஆனால் இன்று? வசதி வாய்ப்புகள் பெருகி யிருக்கலாம். வள வாயில்கள் புதியதாகத் திறந்திருக்கலாம். ஆனால் அந்த துணிச்சல், உறுதிப்பாடு, வீரம் எல்லாம் எங்கோ போயிற்று. 

இப்போது அவர் தன்னை நோக்கி கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, ‘என்னுடைய உணர்வைச் சந்தேகிக் கிறீர்களாஎன்று கேட்டு தன்னிலை விளக்கம் தந்து, தன் இருப்பைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட் டிருக்கிறார். அதாவது தமிழக மக்கள் தன் இயல்பாக நம்பகத் தன்மையோடு இவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த நிலை மாறி தற்போது கேள்விக்கும், சந்தேகத்திற்கும் உரிய தலைவராக தன்னை மாற்றிக் கொண்டு அதற்கு விளக்கம் கொடுக்கும் நிலைக்கு இறங்கிப் போயிருக்கிறார். ஆளாகி யிருக்கிறார். 

காரணம் கொலைகாரனோடு கூட்டு சேர்ந்துகொண்டே கொலைச் செயலைக் கண்டிக்கிறேன் என்றால், கசாப்பு பேர்வழிகளின் தோள்மீது கை போட்டுக் கொண்டே அகிம்சையை ஆதரிக்கிறேன் என்றால், யார் நம்பு வார்கள்? இது நம்பகத் தன்மை யற்ற நிலையைத்தானே ஏற்படுத்தும். இந்த நிலை, இது போன்ற சந்தேகத்திற்குரிய நிலைதான், தற்போது உணர்வாளர்கள் மத்தியில் திருமாவுக்கு ஏற்பட் டிருக்கிறது. 

எனவே, இந்த நிலையில் திருமா வுக்கும், சிறுத்தைகள் அமைப்புக்கும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. திருமா வும் சிறுத்தைகளும் தமிழகத்தில் ஒரு புதிய, போராட்ட அரசியலை உருவாக் குவார்கள் என தமிழக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு தொடக் கத்தில் இருந்தது. 

ஆனால், அப்படியெல்லாம் ஒன் றும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. நாங்களும், பிற எல்லா நாற்காலி கட்சிகள் போலவேதான் என்று, தமிழக மக்களின் நம்பிக் கையைச் சிதைத்திருக்கிறார்கள் திருமா வும், சிறுத்தைகளும். 

இந்த வரலாற்றுப் பிழைக்கு துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. இதற்கு மாற்றும் கிடையாது. எனவே, போனதெல்லாம் போகட்டும் என்று இனி ஒன்று செய்யலாம். 

பா.ம.க. தற்போது அதிமுக கூட்டணியை விட்டு வெளி வந்துள்ளது. அதற்கான பின்னணிகள், காரணங்கள், எதுவாக இருந்தாலும், தற்போதைக்கு பாமக அந்த கூட்டணியில் இல்லை என்பது உண்மை. இந்நிலையில் தமிழீழ விடுதலை, ஆதரவு மற்றும் தமிழக உரிமைகள் பாதுகாப்பு நிலைப் பாடுடைய அணிகள் ஒன் றிணைந்து ஒரு கூட்டணி அமைக்கலாம். அது தமிழீழ ஆதரவுக்கும், தமிழக உரிமைகள் காப் பிற்கும் தொடர்ந்து போராடலாம். 

பா.மக., ம.தி.மு.க., இ.க.க. அணிகள் ஏற்கெனவே தமிழீழ ஆதரவு நிலையில் இருக்கின்றன. இ.க.க (மா) இதனோடு சேரலாம், சேராமலும் போகலாம். ஆக, இதில் சிறுத்தைகள் அமைப்பு காங்கிரஸ் கூட்டணியி லிருந்து வெளியேறி இந்த ஈழ ஆதரவு அணியோடு தன்னை இணக்கப் படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இது சாத்தியமா, சரிபட்டு வருமா என்பதோ, இதில் உள்ள சிக்கல்கள் பல என்பது எவருக்கும் புரியாததல்ல. இருந்தாலும், இது காலத்தின் தேவை என்பதைப் புரிந்து உணர்ந்து இந்த நோக்கில் செயல் படவேண்டும் என் பதே வேண்டுகோள். 

தமிழீழ ஆதரவு, தமிழக உரிமைகள் பாதுகாப்பு என்கிற நோக்கில் இக்கோரிக்கையை முன் நிறுத்தும் அதே வேளை தமிழ்ச் சமூக ஒற்றுமை, சாதியப் பாகுபாடுகள் களைவு என்கிற நோக்கிலும் பாமகவும் சிறுத்தைகளும் இணைந்து ஓரணியில் இருக்க வேண்டு வதும் முக்கியம். 

ஆதிக்க சக்திகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதும் இந்த இரண்டு அணிகளையும் ஒன்று சேர விடாமல் தடுத்து, தனிப் பிரித்து, ஒன்றுக்குள் ஒன்று மோதவிட்டு குளிர் காய முனைவார்கள். தங்கள் ஆதிக் கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல் வார்கள்தாம். என்றாலும் ஆதிக்க சக்தி களின் இந்த சூழ்ச்சியைப் புரிந்து இந்த இரு அணிகளுமே விழிப் போடிருந்து அதைப் புறக்கணித்து ஒன்று பட வேண்டும். 

- ஆக, தமிழீழ ஆதரவு, தமிழக உரிமைகள் காப்பு நோக்கிலும் சரி, தமிழ்ச் சமூக ஒற்றுமை, சாதியப் பாகு பாடுகள் களைவு நோக்கிலும் சரி, இந்த அணி தமிழகத்திற்குத் தேவை. சம் பந்தப்பட்ட தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். தமிழ்ச் சமூகத் திற்கு ஒரு விடிவுகாலம் கிட்ட துணை நிற்கவேண்டும். 

Pin It