2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது பா.ஜ.க வை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றி , அக்கட்சி அழிக்க துடிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது என்பதைத் தவிர வேறில்லை. ஏனெனில் பாஜக வின் ஒவ்வொரு நகர்வும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தினை சிதைத்து சனாதன பயங்கரவாத சர்வாதிகாரத்தை நிறுவ அடியெடுத்து வைக்கிறது என்பதே.

அவ்வகையில் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக அம்சங்களை பாதுகாப்பதற்காக, மக்கள் உரிமைகளுக்காக சமரசமின்றி போராடி வரும் தோழர் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் , அக்கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணியையும் ஆதரிப்பது என்று இளம் கம்யூனிஸ்ட் கழகம் முடிவு எடுத்துள்ளது. இந்த ஆதரவு என்பது இந்த தேர்தலையும் தாண்டி கம்யூனிஸ்டுகளின் நீண்டகால இலக்குடன் இணைந்தது என்று இளம் கம்யூனிஸ்ட் கழகம் வலியுறுத்துகிறது.thirumavalavan 435இந்த ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவனிடம் வழங்கினோம். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளிலும் தமிழ்நாடு முழுவதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளோம். சிதம்பரம் தொகுதியில் தோழர் திருமாவளவனின் பரப்புரை இயக்கத்தில் 24/7 பங்கேற்கும் அணி ஒன்றை உருவாக்கி வருகிறோம்.

இறுதியாக, மிக முக்கியமாக ஏப்ரல் 14 அன்று சிதம்பரம் தொகுதியில் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த தோழர்களும் ஆதரவாளர்களும் பெருந்திரளாகக் கூடி பரப்புரை செய்யவுள்ளோம்.

ஏனெனில், இந்தத் தேர்தல் நமது நாட்டின் எதிர்காலத்தின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக விளங்குகிறது.

அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டமும் அதன் நடைமுறைப்படி ஆட்சியும் முழுவதுமாக இல்லாமல் போனால் நாஜிக் கட்சியின் ஹிட்லரால் ஜெர்மனியில் அந்நாட்டு மக்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இந்துக்கள் உட்பட்ட இந்திய மக்களுக்கும் நடக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆம், ஹிட்லரின் மரபிலேயே பயணிக்கிறது இந்த சனாதான பாஜக அரசு.

கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சி விவசாயிகளை வீதியில் வைத்து துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுத் தள்ளியது, தொழிலாளர்களை அகதிகளாய் அலைய வைத்தது, ஜிஎஸ்டி வாயிலாக சிறு வணிகர்களை திக்குமுக்காடச் செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் பெயரில் சிறுபான்மை மக்கள் மத்தியில் நாடில்லா பயத்தை ஏற்படுத்தியது, நீட் தேர்வு எனும் பெயரில் மாணவர்களையும் தயங்காமல் பலி போட்டது. இன்றும் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது, குக்கி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. மணிப்பூரில் மரண ஓலங்கள் அடங்கியபாடில்லை, ஆனால் அதே நேரத்தில் மசூதியை இடித்த இடத்தில் இராமர் கோவில் சிலை நிறுவும் விழா நடத்தி குதூகலம் அடைவது எல்லாம் மனிதத் தன்மையற்ற செயல், வரலாற்றுத் துரோகம்.

மக்களைச் சுரண்டிக் கொல்லும் இந்த சனாதன பயங்கரவாதிகள்தான் வளர்ச்சி! வளர்ச்சி! என கூக்குரலிட்டு, இந்துக்களின் கட்சி என பஜனை பாடிகொண்டு பொய் மூட்டைகளோடு மறுபடியும் வாக்கு கேட்டு பல்லக்கில் வலம் வருகிறார்கள். இவர்கள் ஆட்சியில் வளர்ச்சி அடைந்தது என்னவோ பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய் விலை. அவற்றின் ஊடாக அம்பானி அதானி போன்ற முதலாளிகள் உலக பணக்காரர்களின் வரிசையில் வளர்ச்சி பெற்றனர். பல நூறு கோடி ரூபாய் செலவழித்து திருமண விழாக்கள் நடத்துகின்றனர்.

இந்த சனாதன பாஜகவின் இலக்கு இந்திய மக்களின் வறுமையை ஒழிப்பதோ வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோ, கல்வி ,மருத்துவம்,வேலை வாய்ப்பு முறையாக வழங்குவதோ இல்லை. மாறாக, கோயில்களையும் கார்ப்பரேட் கோட்டைகளையும் கட்டி அம்பானி அதானிகளின் உண்டியல்களை நிரப்பும் வேலைகளைத்தான் அக்கட்சி செய்கிறது. பெருந்திரளான மக்களை வேலையின்மை, விலைவாசி உயர்வு, வருமான வீழ்ச்சி என்று நெருக்கடிக்குள் தள்ளுகிறது.

இந்திய உழைக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், கல்வி வேலை மருத்துவம் கிடைப்பதை உத்தரவாதம் செய்யவும் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வேண்டும்; அந்த அதிகாரத்தை செயல்படுத்த அண்ணல் அம்பேத்கர் கொடுத்த அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும். ஆனால் சனாதன பயங்கரவாத பாஜக கட்சி அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை தனது சுயலாபத்திற்காக சிதைக்கத் தொடங்கி விட்டது. இந்த பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் ஊழலில் சிக்கி உழல்வதால் அவர்களை ஐ.டி ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு என பய பீதியில் உறைய வைத்துள்ளது இந்த கூட்டாட்சி விரோத பாஜக. இந்த ஊழல் கட்சிகளின் அரசியலால் இந்தியக் குடும்பங்களின் வீடுகளில் மூன்று வேளை உலை கொதிப்பதை கூட இன்னும் உத்தரவாதம் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்புச்சட்டம் சீரழிக்கப்படும், மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசும் ஒருசில தலைவர்களின் குரல்வளைகள் நெறிக்கப்படும். இந்திய மக்களாகிய நாம் இதை அனுமதிக்க கூடாது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது, பாஜக நிறுவத்துடிக்கும் சனாதன பயங்கரவாத சர்வாதிகாதிரத்தினை தடுப்பதற்கான எச்சரிக்கை மணி. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரின் கடமையும் பா.ஜ.கவை வீழ்த்தி ஜனநாயகத்தை காத்து நிற்பதே. அதில் இளம் கம்யூனிஸ்ட் கழகமும் இணைகிறது.

இளம் கம்யூனிஸ்டு கழகம் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி வரும் கம்யூனிஸ்டுகளின் 100 ஆண்டுகள் பாரம்பரியத்தில் வந்தது. இந்தியாவில் நிலவும் முக்கிய பிரச்சனைகளான சாதியக் கட்டமைப்பு, இந்துத்துவ பெரும்பான்மை வாதம், இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் ஆகியவற்றை தீர்ப்பதற்கான வலுவான அரசியல் கொள்கைகளையும் அதற்கான செயல்பாடுகளையும் கம்யூனிச இயக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இளம் கம்யூனிஸ்ட் கழகம் கருதுகிறது.

அந்த வகையில் சனாதன‌ எதிர்ப்பு போர்க் குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாதி ஒழிப்பு, தொழிலாளர் விடுதலை, தமிழ் தேசியம், பெண் விடுதலை, வல்லரசு எதிர்ப்பு ஆகிய முழக்கங்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயகத்துக்கான முழக்கங்கள் என்று இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஏற்றுக் கொள்கிறது. அந்த அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கம்யூனிச இயக்கத்தின் நெருக்கமான தோழமை அமைப்பாக ஏற்றுக் கொண்டு பயணிக்க இளம் கம்யூனிஸ்ட கழகம் முடிவு செய்துள்ளது.

அதன் முதல் படியாக, இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் இந்தியா கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆதரித்து வலுப்படுத்துமாறு தொழிலாளர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும், ஜனநாயகத்துக்காக போராடும் அறிவுத் துறையினரையும் கேட்டுக் கொள்கிறது.

- இளம் கம்யூனிஸ்ட் கழகம்

Pin It