ஐயா விடுதலை இராசேந்திரன் அவர்கள் பெரியார் முழக்கம் ஜூன் 06, 2024 இதழில் எழுதியிருந்த "தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?" என்ற கட்டுரையைப் படித்தேன் (கட்டுரையின் இணைப்பு - https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun24/46810-2024-06-07-02-57-24). மிகுந்த மனவருத்தத்துடன், மிகுந்த ஆதங்கத்துடன் அக்கட்டுரைக்கான கடுமையான கண்டனத்தையும் மறுப்பையும் பதிவிடக் கடமைப்பட்டுள்ளேன். தந்தை பெரியாரின் பிள்ளையாயிற்றே, உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டு விட்டது.

ஆமாம், மதவாத பாஜக கட்சிக்கு இந்திய மக்கள், அதாவது, "பொது புத்தியில்" வாழும் எளிமையான உழைக்கும் மக்கள், உண்மையில் அரசியல் கூர்மை மிக்க எளிய மக்கள், தன்னை முற்போக்காளர் என்று மார்தட்டிக் கொள்ள / அடையாளப்படுத்த அவசியமற்ற மிக மிக எளிய மக்கள் பாஜகக்கு மிக அழகாக கடிவாளம் போட்டுள்ளார்கள். இப்பெருமை முழுதும் உழைக்கும் எளிய மக்களையே சேரும் என்பதை இங்கே குறிப்பாகப் பதிவிடுகிறேன்.

ஐயா அவர்களுடைய கட்டுரையில் குறிப்பு பத்து வரை யாருக்கும் யாதொரு மாற்று கருத்தும் இருக்கப் போவதில்லை. குறிப்பு 11 -இல் இருந்து தான் பிரச்சனை தொடங்கியது. குறிப்பு 11க்குப் பின்னால் வருகின்றேன். அதற்கு முன், குறிப்பு 12 பற்றி. இது ஐயா விடுதலை இராசேந்திரன் அவர்களிடம் மட்டும் நான் கேட்க விரும்பும் கேள்வியல்ல, அனைத்து முற்போக்கு அமைப்புகள் இயக்கங்கள், அதன் தலைவர்கள், தோழர்கள், அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள், கட்சிகள் என்று அனைவரையும் பார்த்துக் கேட்கின்றேன்.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் கூட இல்லாமல், அதிமுகவையே 12 இடங்களில் பின்னுக்குத் தள்ளி, திகட்டத் திகட்ட வெறிகொண்டு போலி தமிழ்த் தேசியம் பேசிய நாம் தமிழர் கட்சியைக் கூட பின்னுக்குத் தள்ளி, பாஜக என்ற பாசிச மதவாதக் கட்சி, 11% மேலான வாக்குகளை, முற்போக்கு ‘பெரியார்’ மண்ணில் பெற்றிருப்பதைப் பற்றி ஒரு துளியும் பேசாமல், கவலைப்படாமல், மிக இயல்பாக மிக மிக வசதியாக, எவ்வித நெருடலும் இல்லாமல் கடந்து செல்வது தான் முற்போக்காளர்களின் நேர்மையா?annamalai modi muruganபூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டது என்று நினைக்குமாம், அதுபோல இருக்கிறது முற்போக்காளர்கள் தேர்தல் முடிவுகளை அலசும் விதம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முற்போக்கு சக்திகளும் ஒருமித்து செய்யும் அழிச்சாட்டியம் என்பது எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பேசுவதற்கே அவ்வளவு நெஞ்சு வலிக்கிறது. "அய்யயோ திமுகவை விமர்சனம் செய்தால், திமுகவை எதிர்த்தால், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிடும் அய்யயோ" என்று இத்தனை வருடங்கள் திமுகவுக்கு நாம் அனைவரும் அசராமல் துதி பாடிய பிறகும், எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக அபாயகரமாக வளர்ந்து நிற்கிறதே, இது எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் சொல்வது?

அதிமுகவின் துணை இல்லாமலேயே பாஜக இவ்வளவு வாக்குகள் பெற்றிருப்பதும், அதிமுகவையே இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருப்பதும் சாதாரண விடயங்கள் அல்ல. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் செயல்பாடுகள் எத்தகைய தன்மை கொண்டது, குறுகிய கால வெற்றியல்லாமல் தொலைநோக்கு கொண்ட ஆழமான அபாயகரமான தன்மை கொண்டது என்பது பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் சிறுபிள்ளையான நான் வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தின் பாஜக தேர்தல் முடிவுகள் எவ்வளவு ஆபத்தானது என்பதைக் குறிக்கும் விதமாகத்தான் மோடி, "தமிழகத்தில் நாங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெறாமல் இருக்கலாம், ஆனால், எங்களுடைய ‘எதிர்காலம்’ எங்களுக்கு பிரகாசமாகத் தெரிகின்றது" என்று கூறுகிறார். இதுதான் அப்பட்டமான உண்மை. இதை நாம் ஏற்காமல், ஆராயாமல் கடந்து சென்றால், மிக விரைவில் தமிழ்நாடு "பெரியார்" மண்ணாக இருக்காது.

இதில் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால், கடந்த சில வருடங்களாக young voters பாஜகயின் பக்கம் பயங்கரமாக polarize செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது பாஜக பெற்றிருக்கும் 11% வாக்குகளில், நிச்சயம் 60-70% வாக்குகள் இளையோரின் வாக்குகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றது (கடந்த சில வருடங்களாக சமூக தளங்களில் இது மிக வெளிப்படையாகப் பிரதிபலித்து வந்துள்ளது). அப்படி இது பெரும்பாலும் இளையோர் வாக்குகளாக இருக்கும் பட்சத்தில், வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும் இது நிச்சயம் பிரதிபலிக்கும். இது ஆபத்தான நிலைமை இல்லையா?tn election results 2024Source - தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகிதம் வெளியீடு - https://results.eci.gov.in/PcResultGenJune2024/  (நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதாலும், பாட்டாளி மக்கள் கட்சி அவர்களுடைய அங்கீகாரத்தை இழந்ததாலும், இவர்கள் இருவருடைய வாக்கு சதவீதம் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது).

மேலும், ஐயா அவர்கள் அவருடைய கட்டுரை முழுவதும் பறைசாற்றியிருப்பது போல இந்தத் தேர்தல் முடிவுகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மிக அதிக பெரும்பான்மை பெறாவிட்டாலும், 240 இடங்களில் பாஜக வெற்றி பெறத்தான் செய்திருக்கின்றது, மூன்றாம் முறையாக மோடி தான் பிரதமராக ஆட்சி அமைக்கப் போகிறார். இதில் நம்முடைய சாதனை என்று கொண்டாடிக் கொள்ளவோ, ஆனந்தப்பட்டுக் கொள்ளவோ என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை?

ஒட்டுமொத்தமாகவே இந்துத்துவ வெறியர்களாக மாறிவிட்ட வட இந்தியா, தென்னிந்தியா - அதுவும் தமிழகம் மற்றும் கேரளம் தான் ஆர்எஸ்எஸ் பாஜகக்கு சிம்ம சொப்பனம் என்று நாம் பீற்றிக் கொண்டிருந்ததை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது இத்தேர்தல் முடிவுகள். இந்தியா முழுவதும் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. வடக்கில் பாஜக பெரிதாக சரிந்துள்ளதும், தெற்கில் பெரிதாக வெற்றி பெற்றிருப்பதும், முக்கியமாக கேரளாவில் கால் பதித்திருப்பதும், தமிழகத்தில் அபரிமிதமாக வளர்ந்திருக்கும் பாஜக வாக்கு சதவிகிதமும் இவற்றை உணர்த்துகின்றன!! இதுதான் அப்பட்டமான உண்மை. திமுகவுக்குத் தொடர்ந்து துதிபாடுவது, பாஜக வளரவில்லை என்ற denial -இல் இருப்பது - இவையெல்லாம் தொடருமானால், இன்னும் சில வருடங்களில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் அவல நிலையம் வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. இது கட்டாயம் தேவையான அச்சம் தான் for course correction.

மூன்றாம் முறையும் பாஜக ஆட்சி அமையும் அளவுக்கு இந்திய முழுவதும் நடுத்தர வர்க்கத்துக்கு மேலிருப்பவர்களிடம் இந்துத்துவ வெறி மேலோங்கியுள்ளதே, முற்போக்கு சக்திகளான நாம் தமிழகத்திலும், முடிந்தால் இந்தியா முழுமைக்கும் நம் முற்போக்கு கருத்துக்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது, என்ன மாதிரியான strategy முன்னெடுப்பது, பல்வேறு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டுமா? மதவாதத்தை இந்துத்துவ வெறியை எவ்வாறு வேரறுப்பது என்ற எத்தனிப்பும், பயமும், கவலையும் தானே நம்மிடம் வெளிப்பட வேண்டும்?? மாறாக குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான் முற்போக்கு சக்திகளின் தேர்தல் முடிவுகளின் analysis ஆக இருக்கின்றது.

கலைஞர் தமிழகத்தை ஆண்ட காலங்களில் இதே முற்போக்கு கட்சிகள் சக்திகள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும், ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடி, திமுகவுக்கே பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக செயல்பட்டு, திமுக நல்லாட்சி வழங்கியே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும்படியான சிறப்புமிக்க சமூகநல சமூகநீதி போராட்டங்களை முன்னெடுக்கும். திமுக ஆளும் கட்சி, முற்போக்கு சக்திகள் எதிர்க்கட்சி. அரசியல் களம் இவ்வாறு இருந்ததால், பாஜக என்ற கட்சி இருப்பதே தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது, அதே முற்போக்கு சக்திகள் தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றன, ஆனால் பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக செயல்பட மறுத்து, பாஜக வளர்ந்துவிடும் என்ற பொய்யான பிம்பத்தைக் கட்டியமைத்து, அதே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி, ஆகச் சிறந்த துதிபாடிகளாக மாறிப் போனதன் விளைவுதான், எதிர்க்கட்சி என்ற இரண்டாம் இடத்தில் இன்று பாஜக அபாயகரமாக வளர்ந்து நிற்கின்றது. முற்போக்கு சக்திகள் செய்திருக்க வேண்டிய எதிர்க்கட்சி வேலையை பாஜக செய்ததால், இன்று திமுக vs பாஜக என்கின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது. இதற்கு யார் பொறுப்பு?

அன்றாடும் திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து கேள்வி கேட்பதால், பாஜக தான் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது, திமுகவை கேள்வி கேட்கும் சக்தி, தட்டிக் கேட்கும் திராணி, எதிர்க்கின்ற வலிமை பாஜக அண்ணாமலைக்கு மட்டும் தான் இருக்கிறது என்ற பிம்பம் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது, முக்கியமாக இளையோரிடம். மேலும், கடந்த சில வருடங்களாகவே நாம் களத்தில் தீவிரமாகப் பணியாற்றாததால், தமிழ்நாடு பாஜகயின் வாய்க்கொழுப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எல்லைமீறி போய்க் கொண்டிருக்கிறது. நம்மீது துளியும் பயம் இல்லாமல் போனதே அதற்குக் காரணம்.

இத்தேர்தலில் அதிமுக கட்சி வலுவான எதிர்க்கட்சியாக செயல்படாமல் போனதற்கு எடப்பாடியின் கொடநாடு கொலை வழக்கு குடுமி திமுகவின் கையில் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். எப்படியாகினும் திமுக அதிமுக இரண்டும் ஓட்டு அரசியல் கட்சிகள். இவர்களிருவருமே அவரவர் சுயலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படுவார்கள், கூட்டணியை மாற்றுவார்கள், அவ்வளவு ஏன்? தேவையேற்பட்டால் சந்தர்ப்ப சூழ்நிலை வந்தால் இதே திமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கத்தான் போகிறது. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒருங்கிணைந்த முற்போக்கு சக்திகளாக, சமூக நீதியைப் பிரதிபலிக்கும் எதிர்க்கட்சியாக நின்று, எளிய மக்களின் குரலாக நாம் ஓங்கி ஒலித்திருக்கிறோமா, நாம் நேர்மையாக செயல்பட்டோமா என்பதுதான் இங்கே கேள்வி. அதாவது "முற்போக்கு சக்திகளான நாங்கள் அனைவருமே திமுகவுக்கு துதிபாடுவோம். எங்களுடைய முற்போக்கு சமூக நீதிக் கொள்கைகள் அனைத்தையும் ‘ஓட்டரசியல்’ கட்சியான திமுகவின் தோள்களில் ஏற்றிவிட்டு நாங்கள் சற்று complacent ஆக இருப்போம்" என்பது மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும். ஓட்டரசியல் கட்சிக்கென்று சில limitations இருக்கின்றன, வேறு வழியில்லாமல் அவர்கள் அதற்கு கட்டுப்பட்டுத்தான் செயல்படுவார்கள். எனவே எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் சரியாக செயல்பட வேண்டிய அவசியமும் கட்டாயமும் முற்போக்கு சக்திகளான நமக்குத் தான் இருக்கிறது.

முற்போக்கு சக்திகளின் இவ்வாறான நேர்மையற்ற செயல்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான், ஐயா விடுதலை இராசேந்திரன் அவர்களின் கட்டுரையை நான் பார்க்கிறேன். அதிலும், குறிப்பு 11-இல் ஐயா அவர்கள் குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைவரும் வெறுமனே மிக எளிதாக தேர்தல் பாதையில் களமிறக்கப்பட்ட "வாரிசுகள்" மட்டுமே (planted). ஏதோ இவர்களெல்லாம் சமூகநீதி சுடர் ஏந்திய சமூகநீதி போராளிகளைப் போல பட்டியல் போட்டு சித்தரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்? ஐயா அவர்களிடமிருந்து இப்படியானதொரு perspective நான் எதிர்பார்க்கவில்லை (nepotism பற்றி முற்போக்காளர்களின் கருத்து என்ன என்பது மற்றொரு விவாதம்). நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பாஜகக்கு இந்தளவேனும் சம்மட்டியடி கொடுத்திருப்பது நாட்டின் எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களேயன்றி, ஐயா குறிப்பிட்டிருக்கும் அரசியல் planted வாரிசுகள் களத்துக்கு வந்ததால் அல்ல!!

மேலும், இதன் தொடர்ச்சியாக இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒட்டு அரசியல் கட்சிகளின் stakes அதிகம் தான், அவர்களின் பணம் மற்றும் அரசியல் பெருமை / அதிகாரத்தைக் காப்பாற்றவும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவற்றை கடத்திச் செல்லவும் தங்களின் வாரிசுகளை plant செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒட்டு அரசியல் கட்சிகளை விட சமூகநீதி அமைப்புகளின் stakes அதிகம் இல்லையா? தமிழகத்தின் முற்போக்கு அமைப்பு இயக்கங்களின் அடுத்த கட்டத் தலைவர்கள் எங்கே? ஏன் எந்தவொரு இயக்கத் தலைவர்களின் வாரிசுகளும் இயக்கப் பணிகளில் பெரும்பாலும் ஈடுபடவில்லை? nepotism மற்ற இடங்களில் வேண்டுமென்றால் தவறானதாக இருக்கலாம், ஆனால், சமூகநீதி போராட்ட அமைப்புகளில் கட்டாயமானதாக ஆக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இவ்வாறு இல்லாததால்தான், நாம் நடத்தும் மாநாடுகளுக்கு உதயநிதி ஸ்டாலினை சிறப்புரையாற்ற அழைக்க வேண்டியிருக்கிறது, அதனால் தான் அவருக்கும் துதிபாட வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு முற்போக்காளர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது போலும்!! இதையும் தாண்டி இன்பநிதிக்கும் துதிபாட வேண்டிய நிலை வரும் பொழுது நிச்சயம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்!!

திமுக என்ற ஓட்டு அரசியல் கட்சியுடன், ‘அரசியல் அதிகாரம்’ பெற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைத்துக் கொண்டு சில பல சமரசம் செய்து கொள்ளும் ஒடுக்கப்பட்ட முற்போக்குக் கட்சிகளின் நோக்கத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சில கருஞ்சட்டைக்காரர்கள், "நாங்கள் திமுகவே தான், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று வெளிப்படையாக துளியும் வெட்கமில்லாமல் மார்தட்டிக் கொண்ட சம்பவங்கள் பற்றியெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பத்து வருட அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நாம் அனைவரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது உண்மைதான். ஆனால் அதற்காக குதிரை கண்ணைக் கட்டியது போல தொடர்ந்து ஆதரவு தர வேண்டிய அவசியம் நமக்கு எங்கிருந்து வந்தது என்று தான் கேட்கிறேன்? வேண்டுமென்றால் கருப்பு சட்டை பெரியாரிஸ்டுகள் "நாங்களும் இனி ஓட்டு அரசியலில் பங்கெடுப்போம், அதனால் யாரும் எங்களை கேள்வி கேட்டு விமர்சிக்கக் கூடாது" என்று வெளிப்படையாக அறிவிப்பு செய்து விடுங்களேன்!! இதுவாவது சற்று நேர்மையாக இருக்கும்.

இவ்விடயத்தில், இந்த டிரெண்ட்-ஐ முதன்முதலாக, மிகப்பெரியதாக தொடங்கி வைத்த பெருமை "நீலச்சட்டை" அமைப்புகளைத் தான் சாரும். என்றைக்கு பிரமிடின் (pyramid) அடித்தளம் அசைவுறுகின்றதோ, அப்போது ஒட்டுமொத்த பிரமிட் அமைப்பும் ஆட்டம் காணும். அப்படிப்பட்ட அசைவை ஏற்படுத்தியதே நீலச்சட்டைகள் தான் என்று இங்கே நான் பகிரங்கமாக வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றேன். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக, சாதி ஒழிப்பு சமூக நீதி என்ற உயரிய கொள்கையுடன் துவங்கப்பட்ட நீலச்சட்டை அமைப்புகள், அன்று எப்பேர்ப்பட்ட சமரசமற்ற போராளிகளாக தமிழ்ச் சமூகத்தை உலுக்கினார்கள், எவ்வாறு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பது வரலாறு. ஆனால், அப்பேற்பட்ட அமைப்புகள் யாதொரு பெரிய பயனுமற்ற, ஒரே ஒரு ஒற்றை MLA சீட்டுக்காக திமுகவிடம் தங்களை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்து விட்டு, துதிபாடிகளாக மாறிப் போனதன் விளைவே, அதன் தொடர்ச்சியாக மற்றவரும்.

வேண்டுமென்றால் எந்த ஒரு நீலச்சட்டை அமைப்புத் தோழரிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களுடைய அமைப்பின் கொள்கை என்ன எதிர்காலத் திட்டம் என்னவென்று? "எப்படியாவது அடுத்த தேர்தலில் ஒரு MLA சீட் வாங்கிவிட வேண்டும்" என்பது மட்டும் தான் அவர்களுடைய பதிலாக இருக்கும். திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கொடூர சம்பவங்களின் போது கூட, இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, திமுகவின் மௌனத்தைக் கடந்துதான் செல்கிறார்கள்; ஒற்றை MLA சீட் முக்கியமல்லவா?

இதே இருபது வருடங்களுக்கு முன்னால், சில வருடங்களுக்கு முன்பு வரை, முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் எல்லாம் தன்னிச்சையாகவும், பெரும்பாலும் இணைந்தும் நடத்திய புரட்சிப் போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்கள், பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது. இவ்வமைப்புகள் எல்லாம் அன்றைக்கு பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும் கொண்டு சேர்ந்தன. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மதவாத சாதிய சக்திகளை அடித்து துவைத்து துவம்சம் செய்து கொண்டிருந்தன. அப்பேற்பட்ட பொற்காலம் எல்லாம் கனவாகிப் போன கடந்த காலமாக மாறி மறைந்து விட்டதன் விளைவுதான், ‘பெரியார்’ மண்ணில் பாஜகவின் இன்றைய அபாயகரமான வளர்ச்சி!

ஆனால் ஒரு விடயத்தை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த ஒட்டுமொத்த அவலங்களிலும், சிறிதளவேனும் விதிவிலக்காக, ஒரு breather ஆக ஓர் இயக்கம் செயல்பட்டது என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே. ஏனென்றால், ஒட்டுமொத்த முற்போக்கு சக்திகளில், தேர்தல் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்குவது விசிக தான். அப்படியிருந்தும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதிகப்படியான electoral political pressure இருக்கும் போதும் கூட, சிறிதளவேனும் நேர்மையுடனும் மனசாட்சியுடனும், கொண்ட கொள்கைக்கு கட்டுப்பட்டு, அவர்களுடைய social politics ஐ பெரிதாக விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்ட ஒரே முற்போக்கு சக்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான்!!!! இதை மிகுந்த பெருமையுடனும், மிகுந்த மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். விசிகவின் மதிப்புமிக்க பெருமைமிக்க தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்களை மனதார வாழ்த்திப் பாராட்டுகின்றேன்.

தமிழகத்தின் இப்பேற்பட்ட அபாயகரமான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது, முற்போக்கு சக்திகள் இதை ஓர் அபாய எச்சரிக்கை மணியாக உணர்ந்து, இனி எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை கூட்டாக ஆலோசித்து, சீரிய கொள்கைப் பயணத்தை முன்னெடுத்து, தமிழகத்தை மீண்டும் போராட்டக்களமாக மாற்றினாலொழிய, தமிழ்நாட்டில் பாஜக மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போவதை யாராலும் தடுக்க முடியாது. தந்தை பெரியார் தன் இறுதி மூச்சு வரையில் பிடிவாதக்காரராக, கொள்கை வழுவாமல் வரலாறாகினார். சமூகத்தின் சில அங்கங்கள், நேர்மையாக (discipline) இருக்க வேண்டுமென்ற விதிமுறைப்படிதான் இயங்க வேண்டும் என்றிருந்தால், அது அவ்வாறே செயல்படுவதுதான் சமூகத்திற்கு நன்மையாகும். அவை corrupt ஆனால் அல்லது மாற்றி செயல்பட்டால், மிகப் பெரிய ஆபத்தாக முடியும். தடம் மாறிச் செல்வதோ, முறை தவறி நடப்பதோ இயற்கை தான், ஆனால் அவ்வப்போது நாமே நம்மை "review "செய்து கொள்வதும், நம்முடைய நோக்கத்தை "revive" செய்து கொள்வதும் மிக மிக முக்கியமான செயல்பாடாகும். இது அனைத்து அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் பொருந்தும். முற்போக்கு சக்திகள் தமிழகத்தில் புரட்சிப் போராட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும் பரவாயில்லை, போலியான உருட்டுக்களை உருட்டாமல் இருந்தாலே போதுமானது!! குறைந்தபட்ச நேர்மையுடன், மனசாட்சியுடன், திமுக என்றில்லாமல் யாதொரு ஒட்டு அரசியல் கட்சிக்கும் முழுநேர துதிபாடிகளாக இல்லாமல் இருந்தாலே போதுமானது!!!

- தேன்மொழி

Pin It