கீற்றில் தேட...

ஜாதி ஒழிப்புப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6, 1992இல் தான் அயோத்தியில் பாபர் மசூதியை மதவாத சக்திகள் இடித்தனர். 2024, டிசம்பர் 06இல் அம்பேத்கர், தி.மு.க. கூட்டணி உடைப்புக்குப் பகடைக் காயாக உருட்டப்பட்டுள்ளார். இது அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்றே வேதனையுடன் பதிவு செய்கிறோம்.

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு நிகழ்வு, சென்னையில் ‘விகடன் குழும’ சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இருவரும், அதைக் கூட்டணி அரசியல் மேடையாகச் சுருக்கி விட்டார்கள்.

மக்களைக் குழப்பும் சில சொல்லாடல்கள் வலம் வருகின்றன. ஒன்று ‘பிறப்பின் அடிப்படை’ மற்றொன்று ‘கருத்தியல்’; தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருப்பது ‘பிறப்பு அடிப்படையிலான’ மன்னர் அரசியலாகக் குற்றம்சாட்டுகிறார்கள். ‘பிறப்பு அரசியல்’ “மன்னர்” என்ற சொற்றொடரின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பார்க்காமல் திட்டமிட்டு செய்யப்படும் திரிபுவாதம் இது.

‘வர்ணாஸ்ரமம்’ பிறப்பு அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுகிறது. ‘பிராமண’ – ‘சூத்திர’ பாகுபாடுகளைப் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கிறது. அம்பேத்கர் இந்த அமைப்பை அழித்து ஒழிப்பதே தனது முதன்மை இலட்சியமாகக் கூறினார். வாழ்நாள் முழுவதும் களமாடினார்.

பிறப்பின் அடிப்படையில் சமூகத்தை ஒடுக்கும் கருத்தியலையும், பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகம் – அதை எதிர்த்துக் கிளர்ந்து எழுவதையும் ஒரே தட்டில் எடைபோடுவது அப்பட்டமான பார்ப்பனியம். வர்ணாசிரம சமூகக் கட்டமைப்பில் கடைநிலையில் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து அதிகாரத்துக்கு வருவதை ‘பிறப்பு அடிப்படையிலான’ பார்ப்பனிய மேலாதிக்கப் பார்வையில் திரித்துக்காட்ட முயற்சி செய்கிறார்கள். முதல்வரும், துணை முதல்வரும் பிறப்பின் அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட சமூகத்திலிருந்து அதிகாரத்துக்கு வந்தவர்கள். பெரியாரும் – அம்பேத்கரும் பேசிய இந்துத்துவா எதிர்ப்பு அரசியல் களத்தில் நிற்கிறார்கள். சொல்லப்போனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட ‘பிறப்பின் அடிப்படையில்’ ஒடுக்கப்பட்ட மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது தான். ஜாதி ஒழிப்பு இலட்சியத்தில் களத்தில் நிற்கிறது. பிறப்பு அடிப்படையை ஒழித்து கருத்தியல் அடிப்படையில் முதல்வரைக் கொண்டுவரப் போகிறோம் என்று பேசக்கிளம்பியிருப்பவர்கள், ஒரு கேள்விக்கு பதில் கூற வேண்டும். “பிறப்பு அடிப்படை” என்பதை இவர்கள் எந்தக் கருத்தியலோடு பார்க்கிறார்கள்? சங்கராச்சாரிகளின் கண்ணோட்டத்திலா? அல்லது அம்பேத்கர் கண்ணோட்டத்திலா?

அம்பேத்கர் கண்ணோட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும், துணை முதல்வரும் அதிகாரத்தில் இருப்பது ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல். பிறப்பின் அடிப்படையில் அடக்கத் துடிக்கும் பார்ப்பனிய அரசியல் அல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல்.

மக்களிடம் சென்று வாக்குகளை வாங்கி, மக்கள் ஆதரவோடு அதிகாரத்துக்கு வந்தவர்களை, “மன்னர்கள்” என்று வெட்கப்படாமல் பேசுகிறார்கள். மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவியது ‘அரசியல் சட்டம்’ அம்பேத்கர் அதை உறுதிப்படுத்தினார், இதில் ‘மன்னர்’ ஆட்சி வந்துவிட்டது என்று பேசுவது அம்பேத்கரையே அவமதிப்பதாகும்.

“தலித் மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு” என்று பேசுகிறார்கள். சமூக அதிகாரத்தில் பங்கா? ஆட்சிப் பதவிகளில் பங்கா? இது அடிப்படையான கேள்வி. சமூகத்தில் காலம்காலமாக ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்கள், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அதிகாரமயமாக்கப்பட வேண்டும் என்பதே அம்பேத்கர் பேசிய ஆட்சி அதிகாரம். சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் இந்தக் கருத்தியலை “தேர்தல் கூட்டணிக்குள்” சுருக்கி அதன் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள்.

ஜாதிக் கட்டமைப்புக்குள் தான் சமூகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் கட்டமைப்பைத் தகர்க்கும் போராட்டத்தில் படிப்படியாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை ஏன் நிறுத்தவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை தி.மு.க.வை மட்டும் நோக்கிக் கேட்க முடியாது. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்குமான கேள்வியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகள் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சமூகத்தில் ஜாதியைப் பலவீனப்படுத்தும் எதிர்ப்பு இயக்கங்களைத் தீவிரமாக நடத்த வேண்டும். எந்த அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராக இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பொதுத் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவது மிகச்சிறந்த முன்னெடுப்பு தான். ஆனாலும், பொதுத் தொகுதியில் தலித் அல்லாத வேட்பாளர்களைத் தானே நிறுத்த முடிகிறது? ஏன் தலித் பிரதிநிதியை நிறுத்த முடியவில்லை.? அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குற்றம்சாட்ட முடியுமா? சமூகம், ஜாதிய மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என்ற கண்ணோட்டத்தில் தான் இதை அணுக வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதியில் ஏன் தலித்துகளை நிறுத்தவில்லை என்று கேட்பதற்கும் முதன்மை அரசியல் கட்சிகள், பொதுத் தொகுதியில் ‘ஏன் தலித் வேட்பாளர்களை நிறுத்தவில்லை’ என்று கேட்பதற்கும் பதில் ஒன்று தான். சமூகம், ஜாதிப் பிடியில் இருந்து விடுபடவில்லை.

குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தையே எதிர்த்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியை “உண்மையான சாமியார்” என்று புகழ் மாலை சூட்டுகிறார் ஆதவ் அர்ஜுனா. இதுதான் அம்பேத்கர் குரலா? உண்மையில் தி.மு.க. எதிர்ப்புப் பேசியதை விட சங்கராச்சாரி ஆதரவு கருத்துப் பேச்சுக்காக அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து.

இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், வளர்ச்சியையும், முன்னேற்றப் பாதையில் கட்டமைத்து வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த பார்ப்பனியம் சதித்திட்டங்களை அடுக்கடுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. மிஞ்சப் போவது தோல்வி தான்.

இயங்கியல் பார்வையோடு அணுக வேண்டிய சமூகப் பிரச்சனைகளைக் கூட்டணி அரசியலுக்காகக் கொச்சைப்படுத்துகிறார்கள். இது புதிய அரசியல் அல்ல, ஏமாற்று அரசியல்!

விடுதலை இராசேந்திரன்