(தேர்தலுக்கு முன் வெளிவந்த ஜூவியின் 06-05-09, 10-05-09 ஆகிய இரு இதழ் களிலும் “வேட்பாளர்கள் தம்பட்டம்” பகுதியில் வெளியாகியிருந்த வி.சி.க. தலைவர் தொல். திருமாவின் உரைச்சுருக்கம் மற்றும் ‘தமிழ் மண்’ இதழின் கட்டுரைச் சுருக்கம் ஆகியவை பற்றி - இவை தம்பட்டம் என்பதை பலரும் உணர்ந்துள்ள போதிலும், இது தொடர்பாக சிறுத்தைகள் அமைப்புக் குள்ளேயே நெருக்கமாக உள்ள நண்பர்கள் மத்தியில் நிலவும் ஒரு சில கருத்தோட்டங்களை முன்வைக்கும் நோக்கில் கடந்த இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இடப் பற்றாக்குறையால் அப்போது இது எடுத்து வைக்கப்பட்டது. என்றாலும் இதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளின் முக்கியத்துவம் கருதி, தேர்தல் முடிவுகள் வந்துவிட்ட மாறுபட்ட சூழலில் அதற்குரிய சில சிறிய திருத்தங்களோடு இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.]

காங்கிரஸ் - தி.மு.க. அணியில் கூட்டு சேர்ந்ததன் மூலம் வி.சி.க. வுக்கு வழங்கப்பட்ட இரு தொகுதிகளுக்காக, அந்த இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தரும் ஆதரவுக்காக காங்கிரஸ் நிற்கிற 16, தி.மு.க. நிற்கிற 21 தொகுதிகளிலும் சிறுத்தைகள் ஓடி ஓடி உழைக்க வேண் டுமா? சிங்கள இராணுவத்தோடு நேரடியாகக் களத்தில் நின்று ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் கறையோடு வாக்கு கேட்டு வரும் ‘கை’ க்கும் அதற்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் வேலை செய்ய வேண்டுமா? அதாவது எந்த ஆதிக்கத்தை எதிர்த்து வி.சி.க. அமைப்பு கட்டப்பட்டதோ, திரட் டப்பட்டதோ, பயிற்றுவிக்கப்பட் டதோ, அதே ஆதிக்கத்துக்கு ஆதரவாக வி.சி.க. தொண்டர்கள் சேவை செய்ய வேண்டுமா? இளைஞர்கள் பலரும் எழுச்சியோடு இந்த அணியில் திரண்ட தும், அடங்க மறு, அத்து மீறு, திழிறி யெழு, திருப்பியடி என்று முழங்கியதும், எல்லாம் இந்த ஆதிக்கவாதிகளுக்கு அடிமைச் சேவகம் புரியத்தானா என்கிற கேள்விகள் உணர்வுள்ள சிறுத்தை களிடையே எழுந்துள்ளன.

இந்த நிலையை மேற் கொண் டதற்குத் திருமா சொல்லும் காரணம். தி.மு.க. கூட்டணியும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியும் வேண்டாம் தனியே ஒரு கூட்டணி அமைக்கலாம் என்றேன். ஆனால், பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க., தலைவர்கள் யாரும் அதற்கு ஒத்து வரவில்லை. அ.தி.மு.க. அணிக்கு வா என்று அழைத் தார்கள். அது எனக்கு உடன்பாடாய் இல்லாததால் தி.மு.க. அணியிலேயே தங்கி விட்டேன் என்பதே. இது பற்றிய அவரது கூற்றுகள் பேட்டிக்கு பேட்டி வெவ்வேறு விதமாக இருப்பது வேறு செய்தி. அது இங்கு பிரச்சனையில்லை. ஆனால், உலகில் எந்தப் போராளியும் எனக்குத் துணையாகப் போராட யாரும் வரவில்லை. ஆகவே நானும் போராடவில்லை என்று சொன்னதில்லை. கண்ணெதிரில் நடககும் அநீதியைப் படுகொலைகளை கண்டு; அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி யாரும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. ஆகவே நானும் கோரவில்லை. அதனால் ஆதிக்கக் கூட்டணியில் அடைக்கலமாகி விட்டேன் என்று சொன்னதில்லை. சொல்ல மாட்டார்கள் அநீதியைக் கண்டவிடத்து ஆவேச மடைவது என்பது மனிதனின் மிக உயரிய பண்பு. இது யார் சொல்லியும் வருவதில்லை, யார் தடுத்தும் நிற்பது மில்லை. இயல்பான தன்னெழுச்சி யான ஆவேசத்தில் பிறப்பது இது. இப்படி அவரவர்க்கும் எழும் இயல் பான துடிப்பில், எழுச்சியில்தான் அவர் வர்களும் மக்களைத் திரட்டியிருக் கிறார்கள் போராடியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிறஉரிமை போராட்டங்களின் வரலாறும் இதுதான்.

இப்படி இருக்க திருமா தன் சொந்த முயற்சியில் நின்று மக்களைத் திரடடிப் போராடாமல் இவர் ஏன் மற்ற கட்சிகள், அமைப்புகளைக் குறை சொல்ல வேண்டும். இவர் என்ன இந்தக் கட்சிகள் துணைக்கு வரும், கூட்டணிக்கு வரும் என்று நம்பியா வி.சி.க. தொடங்கினார். இக்கட்சி களை எதிர்பார்த்தா போராட்டம் நடத்தினார். ஏன் இவரிடம் எழுச்சிமிகு இளம் சிறுத்தைகள் இல்லையா, போர்க்குண மிக்க தொண்டர்கள் இல்லையா... இவர்களை வைத்துத் தானே சென்னை அமைந்தகரையில் கருத்துரைப் பறிப்புக்கு எதிரான எழுச்சி மிகு மாநாட்டை சொந்த முயற்சியில் கூட்டினார். ஈழத்தமிழர்களுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த முயற்சியில் மறைமலை நகரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை நடத்தினார். அப்படியிருக்க இப்போது மட்டும் யாரும் கூட்டணிக்கு வர வில்லை. ஆகவேதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று வாதிடுவது, குறைப்பட்டுக் கொள்வதேன். தொண் டர்கள் என்ன சோர்ந்து போய் விட் டார்களா. இல்லை. திருமாவின் இந்த சந்தர்ப்பவாத நிலைதான் அவர்களை சோர்ந்து போக, தளர்வடையச் செய் திருக்கிறது.

சரி, இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் வழங்கப்பட்ட இரு இடங்கள் எனக்கு ஒரு பொருட் டல்ல. எனக்கு என் மக்களும் அவர்கள் நலனும்தான் முக்கியம். சாதாரணமான அற்ப இந்த இரு நாடாளுமன்ற பதவி கள், தேர்தல் அங்கீகாரம் என்பதெல் லாம் எனக்குத் துச்சம் என்று திருமா அதைத் துக்கிப் போட்டு விட்டு எந்த அணியும் வேண்டாம் என்று வெளியே வரட்டும் பல்லாயிரக் கணக்கான தமிழின உணர்வாளர்கள் இவர் பின்னால் அணிதிரளத் தயாராயிருக் கிறார்கள், திருமாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இவருடன் சேர்ந்து தமிழீழ மக்களுக்கும், தமிழக உரிமை களுக்கும் போராடத் தயராக இருக் கிறார்கள். ஆனால் திருமா தயாராக இருக்கிறாரா என்பதுதான் கேள்வி.

மேதகு. பிரபாகரன் பால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்தி ருப்பதாக அவரது வாழ்க்கையெல்லாம் தனக்கு ஒரு உந்துதலாக இருப்பதாகக் கூறும் திருமா, பிரபாகரன் எந்தத் தேர்தல் ஆணையத்தின் அங் கீகாரம் வேண்டி, யாரோடு கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்றார், அல்லது யாரும் தன்னோடு கூட்டு சேரவில்லை என்று எநதப் போராட்டத்தைக் கைவிட் டார், திசை மாறினார் என் பதைச் சொல்லட்டும். இவ்வளவு நெருக்கடியிலும் என் சாம்பல் கூட சிங்கள இராணுவத்துக்குக் கிடைக்க கூடாது என தீரத்தோடும், நெஞ்சுரத் தோடும் முழங்கி யிருப்பவர் அவர் அவரது உறுதிப் பாட்டை நினைத்துப் பார்த்து இவர் பதில் சொல் லட்டும். அப்படிப்பட்ட நெருக்கடியெலலாம் திருமா வுக்கு தற்போது ஒன்றும் இங்கு இல்லை. இந்த ஆதிக்கக் கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள் என்றுதான் உணர்வாளர்கள் கோருகிறார்கள்.

இப்படியெல்லாம் கேட்டால் நேரடியாக இதற் குப் பதில் அளிக்க இயலாத இவர்களில் சிலர், ஆமாம் மற்றத் தலைவர்கள் செய்யும் சந்தர்ப்ப வாத நாற்காலி அரசியல் நிலை பாடுகள் எல்லாம் உங்கள் கண்ணில் படுவதில் லையா, ஒடுக்கப்பட்ட மக்கள் நாங்கள் செய்யும் தவறுகள் மட்டும்தான் உங்கள் கண்களை உறுத்துகிறதா என்கிறார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பிற தோழமை அமைப்புத்தலைவர்கள் பலரும் அறுபதைக் கடந்தவர்கள். ஏற்கெனவே தேர்தல் அரசியலில் நன்கு ஊறி, அதில் கெட்டிப்பட்டு அதனோடு தன்னைத் தகவமைத்துக் கொண்ட வர்கள். அவர்களிடம் போய் எந்த மாற்றத்தையும் இனி எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்கள் வரம்பு அவ்வளவுதான் என்று உணர்வாளர்கள் யாரும் அது பற்றி பொருட்படுத்திக் கொள்வதில்லை.

ஆனால், திருமா அப்படியல்ல. இவர் இளந்தமிழராக எழுச்சித் தமிழராக இருக்கிறார், தமிழகத் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும் போராடுகிறார். கருத்துரிமைகளுக்காக குரல் கொடுக்கிறார் என்று மிகுந்த நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் இவரிடமிருந்து நிறைய எதிர் பார்த்தார்கள். ஆனால் மற்றத் தலைவ ர்களைப் போலவே திருமாவும் தேர்தல் அரசியலுக்கு நாற்காலி அரசியலுக்கு பலியாகி விட்டாரே என்பது தான் இவர்களுக்கு அதிர்ச்சி. இப்படி நம்பிக்கையும் எதிர் பார்ப்பும் கொண்டு திரண்ட எண்ணற்ற இளைஞர்களுக்கும் உணர்வாளர் களுக்கும் உரியவாறு வழிகாட்டி அவர் களுக்குத் தலைமை யேற்று, தமிழன உரிமைகளுக்குப் போராட முனையா மல் மற்றத் தலைவர்களைப் போலத் தான் தானும் என்று ஆதிக்க சக்தி களோடு கூட்டு சேர்ந்து இவர் அதற்கு நியாயம் கற்பிக்க முற்படும் போதுதான் அப்போ, திருமா இவ்வளவு காலமும் பேசியது, போராடியது எல்லாம் பொய்யா, போலியா, இவருக்கும் நாட்டம் நாற்காலி அரசியலில் தானா என்கிற கேள்விகள் எழும்புகின்றன.

அப்படி நாற்காலி அரசியல் தான் தனக்கு குறிக்கோள் என்றால் திருமா அதை நேரடியாக சொல்லி விடலாம். அப்படிச் சொல்லிவிட்டால் யாரும் வந்து இவரிடம் இந்தக் கேள்வி யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. பத்தோடு பதினொன்று என்று புறந்தள்ளி விட்டு போய்க் கொண்டே இருக்கப் போகி றார்கள். அதை விட்டு கொள்கை கோட்பாடு தமிழீழம் தழிழர் உரிமை என்றெல்லாம் பேசு வதால் தானே இந்தக் கேள்வி யெல்லாம் எழுகிறது.

சரி, அவரவர் வசதிக்கும் அவரவருக்குகந்த அரசியலை எப்படியோ நடத்திக் கொண்டு போகட்டும். இதில் உணர் வாளர்களுக்கு உள்ள கவலை என்னவென்றால், ஒவ்வொரு தலைவரும் இப்படி கொள்கை முழக்கம் செய்து வீர வசனம் பேசி மக்களைத் திரட்டு வார்கள். செல்வாக்கு வந்தபின் தாங்கள் திரட்டிய மக்கள் சக்தியை ஆதிக்கச் சக்திகளின் காலில் மண்டியிட அதற்கு சேவகம் செய்ய வைப்பார்கள். அதற்கு காவடி தூக்குவார்கள். காவு கொடுப்பார்கள் என்றால் மக்கள் யாரைத்தான் நம்புவது என்பது கேள்வியாக இருக் கிறது. இது மக்களை அலுப்புக் கும், சோர்வுக்கும், விரக்திக்கும் ஆளாக்குவதுடன் பிறகு உண் மையான உணர்வோடு யார் போராட முன் வந்தாலும் மக்கள் அவர் களை, ஆமாம் எல்லாம் முதலில் இப்படித்தான் ஆவேசமாக வீர வசனம் பேசுவார்கள். அப்புறம் செல்வாக்கு வந்தபின் ஆதிக்கத்துக்கு சேவகம் புரிவார்கள் என்று அவநம்பிக்கை யோடே நோக்க வைக்குமே என்பது தான் துயரப்பட வைக்கிறது. இப்ப டியே போனால் தமிழனின் தமிழகத் தின் கதிதான் என்ன என்பதே தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனை வரின் கவலையும் இதை எழச்சித் தமி ழர் திருமாவும் மற்றத் தலைவர்களும் உணர்ந்தால் சரி. 

கருணாநிதியின் சூழ்ச்சி

திருமாவை தங்களது கூட்டணியிலேயே தக்க வைத்துக் கொண்டதன் மூலம் கருணாநிதி இரண்டு காரியங்களை சாதித்துக் கொண்டதாக அரசியல் நோக்கர்களால் மதிப்பிடப்படுகிறது. ஒன்று, தனக்கு எதிராக பா.ம.க., வி.சி.க., அணி ஒன்றுபட்டு வலுவடைந்து விடக்கூடாது என அவற்றைப் பிரித்து எதிரெதிரே நிறுத்தி மோத விட்டது. மற்றொன்று ஈழச்சிக்கலில் தமிழினத் துரோகி எனத் தனக்குக் கிடைத்திருக்கும் பட்டத்தை, தன் மீது நீளும் குற்றச்சாட்டைத் தற்போது திருமாவை நோக்கித் திருப்பி விட்டு இந்தப் பட்டத்திலும் குற்றச் சாட்டிலும் அவரையும் பங்காளியாக்கி அவர் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் திருப்பி தன் மீதான சுமையைக் குறைத்துக் கொண்டது. கருணாநிதியின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகியிருக்கிறார் திருமா. மற்றவர்களுக்குப் புரியும் இந்த செய்தி திருமாவுக்கு எப்படி புரியாமல் போனது என்பதே பலருக்கும் கேள்வி. 

திருமா பரிகாரம் காணவேண்டும்

தோழர் தொல். திருமா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய தனது கன்னியுரையில், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார காங்கிரஸ், ஈழ சிங்கள அரசுக்கு தான் செய்த உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், தன் கொலைபாதகச் செயல்களுக்கு பரிகாரம் தேடவேண்டும், ஈழ மக்களுக்கு அவர்கள் சம உரிமையுடன் வாழ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார். நன்றி. பாராட்டுகள். ஈழத் தமிழர்களைக் படுகொலை செய்த கொலைகாரர்கள் வெற்றி பெற உதவி செய்து பதவியிலமர்த்திவிட்டு இப்போதாவது அதற்குப் பரிகாரம் தேடச் சொல்லுகிறாரே அந்தமட்டில் மகிழ்ச்சி. ஆனால், காங்கிரஸ் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடும்முன் தான் செய்த பாவத்துக்கும், அதாவது காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஆதரித்த பாவத்துக்கும் முதலில் இவர் பரிகாரம் தேடிக் கொண்டால் நல்லது. 

ஆகவே, காங். - திமுக கூட்டணியிலிருந்து இவர் வெளியேறி வந்துவிடவேண்டும். இதற்காக அவர் பதவியைத் துறக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த பதவி அந்த கூட்டணி போட்ட பிச்சையுமல்ல. அது, பிற 38 தொகுதிகளிலும், சிறுத்தைகள் ஓடியோடிப் பணியாற்றிய உழைப்புக்காக கொடுக்கப்பட்ட வெகுமதி. அந்த வெகுமதியை அவர் இழக்க வேண்டியதில்லை. நாடாளுமன்றம் போய் அவர் கருத்தை முழங்கட்டும். நாடாளுமன்றத்தில் அவர் குரல் ஒலிக்கட்டும். ஆனால் அதேசமயம் இங்கு தமிழின விரோத, துரோக காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, தமிழக உரிமைக்கு தமிழின மேம்பாட்டுக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழர்களது விருப்பம், எதிர்பார்ப்பு. திருமா இதை நிறைவேற்றுவாரா?

Pin It