மாநிலங்களின் வருவாயை ஏற்படுத்த இருந்த மாநிலங்களுக்கான உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு இப்போது மாநிலங்கள் சில குறிப்பிட்ட வரிகளை மட்டுமே இட்டு மாநிலத்திற்கான செலவுகளை செய்தாக வேண்டிய சூழலில் இந்த பட்ஜெட் தயாரிப்பு என்பது மிகவும் சிரமமான பணி என்பதை மறுக்க இயலாது.

குறிப்பாக மக்களுக்கான திட்டங்களுக்கும் உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் போன்றவற்றையும் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் இட்டுச்செல்லும் விதத்தில் திட்டங்கள் தீட்டி, ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய கடன்களை வாங்கி, பழைய கடன்களுக்கு உரிய வட்டி, மூலதனம் ஆகியவற்றை செலுத்த வேண்டிய சூழல் மாநிலங்களுக்கு உண்டு.

வருவாய்

மாநிலத்தின் வருவாய் என்பது வரி வருவாய் வரி அல்லாத வருவாய் ஒன்றிய அரசிடம் இருந்து நமது வரிகளின் பங்கு மற்றும் ஒன்றிய அரசின் மானியங்கள் தான். இந்த மானியங்கள் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 31% குறைவாக அதாவது 12,303.78 கோடிகள் குறைவாகதான் வரும் என்பதை கணக்கில் கொண்டும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மாநிலத்தின் வருவாயை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதை கணக்கில் கொண்டு மாநிலத்தின் நிதியை அதிகம் நம்பி நம் மாநிலத்தின் நிதி நிலை அறிக்கை இருக்கிறது. 

மாநில வரி வருவாயில், பத்திரப்பதிவு துறையில் மட்டும் 25,567.30 கோடிகளை குறிப்பாக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 46% கூடுதலாக திட்டமிட்டு இருக்கிறது. பழைய பத்திரப்பதிவு கட்டணங்களை மாற்றி அமைத்து இருப்பதன் மூலம் பத்திரப்பதிவிற்கு செல்வோர் 0.31% கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை. இந்த பத்திரப்பதிவில் சில மாற்று வரையறைகளை செய்தால் சிறப்பாக இருக்கும்.ptr palanivel thiyagarajan 720இப்போது இருக்கும் பத்திர பதிவு & முத்திரைத்தாள் கட்டணங்கள் பாலின முன்னுரிமை இன்றியும் மாநிலம் சார்ந்த மக்களுக்கு முன்னுரிமை இன்றி இருப்பதை மாற்றினால் எதிர்கால சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்க, விற்க என்று அதிகமாக பதிவுகள் நடக்கும் விதத்தில் ஊக்குவிக்க திட்டம் வகுக்கலாம்.. குறிப்பாக பெண்களுக்கும் சொத்து உரிமை கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள். அவர்களின் வழியிலே அந்த சொத்துக்களை பரிமாற்றம் செய்யும்போது புதிதாக சொத்துக்களை வாங்கும்போது பெண்களின் பெயரில் வாங்கி, சொத்துக்களை கொண்ட பெண்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வழி வகை செய்யும்.

  • தமிழக பெண்கள் பெயரில் பதிவு செய்தால் - 5% + 2%
  • தமிழக ஆண்கள் பெயரில் பதிவு செய்தால் - 7% + 2%
  • பிற மாநில பெண்கள் பெயரில் பதிவு செய்தால் - 9% + 2%
  • பிற மாநில ஆண்கள் பெயரில் பதிவு செய்தால் -11% + 2% 

செலவுகள் 

இப்போது தாக்கல் செய்திருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக மகளிர் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து இருப்பது மகிழ்ச்சி. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய மானிய தொகைகள் ஒவ்வொரு ஆண்டும் சுருங்கிக்கொண்டே வருவதும், அதை சமாளிக்க புதிய வரிகளை குறிப்பாக மக்களை பாதிக்காதவண்ணம் இட்டு செலவுகளை சமாளித்திருக்கிறது இந்த அரசு. சென்ற ஆண்டில் ஆண்டு செலவை சமாளிக்க பெற்ற கடன் தொகையை விட இந்த ஆண்டு கடனை சமாளிக்க பெறப்போகும் கடன் தொகையை சரி பாதியாக குறைத்து இருப்பது சிறப்பம்சம். 

பொதுவான பணிகளுக்கான செலவினங்கள்

ஆளுநர், அமைச்சரவை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த ஊழியர்கள் ஊதியம் மற்றும் அலுவலக செலவுகள் ஆகியவற்றிற்கும், நிதி மற்றும் நிர்வாகம், காவல்துறை மற்றும் வரி வசூல் செய்வதற்கான ஊழியர்களின் ஊதியம், அலுவலக செலவுகள் மற்றும் அலுவலக பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றோடு மாநில அரசின் ஊழியர்களின் ஓய்வூதியமும், மாநில அரசு பெற்ற கடனுக்கான வட்டியும் இதில் இடம் பெறுகிறது. இந்த பணிகளுக்காக சென்ற ஆண்டு (99,093 கோடிகள்) விட 20997 கோடிகள் கூடுதலாக (இந்த ஆண்டு 1,20,094 கோடிகள்) ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூடுதல் நிதியில் பெரும்பங்கு ஒய்வூதியத்திற்கும் (9011.97 கோடிகள்) வட்டிக்குமே (10,775.76 கோடிகள்) சென்று இருக்கிறது. ஒவொரு ஆண்டும் ஒய்வு பெரும் ஊழியர்களின் எண்ணிக்கையும் மாநிலம் வாங்கும் கடன் அளவும் கூடிக்கொண்டே செல்வதால் அதன் வட்டியும் அதிகரித்துக் கொண்டு நம் வரி வருவாயில் பெரும்பங்கு அதற்கு செல்கிறது.

சமூக நலம் சார்ந்த செலவுகள்

இந்த துரையின் கீழ் தான் கல்வி, சுகாதாரம், குடிநீர், தகவல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினர்களுக்கான நலத்துறை தொழிலாளர் நலத்துறை, சத்துணவு, சமூக நலத்துறை ஆகியவை வருகிறது. இந்த துறைக்கான ஊழியர்களின் ஊதியம், அலுவலக பராமரிப்பு செலவுகள், மற்றும் திட்டங்கள் அதற்கான செலவுகள் ஆகியவை அடங்கும்.

இந்த அரசு பதவி ஏற்றத்தில் இருந்து சமூக நலம் சார்ந்த செலவுகளையும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அடிப்படையில் செயலாற்றி வருகிறது என்பதை கடந்த பட்ஜெட்டில் காண முடிந்தது. இந்த ஆண்டும் கூட பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஆகியவற்றோடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000/- உரிமை தொகை வழங்க அறிவித்து இருக்கிறது.

இந்த சமூக நலம் சார்ந்த செலவுகளுக்கு சென்ற ஆண்டில் ஒதுக்கீடு செய்த ரூ 86,869.09/- கோடிகளை, விட இந்த ஆண்டு ரூ. 1,04,919.26/- கோடிகள் ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ. 18,050.17/- கோடிகள்

ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த கூடுதல் ஒதுக்கீட்டில் சரி பாதியாக 9,110/- கோடிகள் சமூக நலத்திட்டங்களுக்கும் சத்துனவிற்கும் ஒதுக்கப்பட்டு இருப்பது சிறப்பானதாக இருக்கிறது

.பொருளாதார மேம்பாட்டு செலவினங்கள்

இதில் குறிப்பாக விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, பாசனங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு, மின்சாரம், புதிய அறிவியல் திட்டங்கள், தொழிற்துறை வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டு சார்ந்த திட்டங்களில் செய்யப்படும் செலவுகள். இவை அனைத்துமே நம் மாநிலத்தின் உற்பத்தி சார்ந்த துறைகள். இந்த துறையில் செய்யும் முதலீடுகள் செலவுகள் தான் தமிழகம் மட்டுமல்ல நம் நாட்டின் GDP யை தீர்மானிக்க கூடியது. குறிப்பாக இந்த துறை சார்ந்த ஊழியர்கள் உள்ளிட்டு அவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டியவர்கள்.

எல்லா திட்டங்களுக்கும் அள்ளிக்கொடுத்த நிதி அமைச்சர் இவர்களுக்கு கிள்ளி கூட கொடுக்காமல் செலவினங்களை சென்ற ஆண்டை விட சுருக்கி இருக்கிறார். ஆகவே இது பொருளாதார வளர்ச்சிக்காக நேரம் காலம் இல்லாமல் பாடுபடும் விவசாயிகள், ஊரக வளர்ச்சி துறை, மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்து துறை தொழிலாளர்களை இப்படி வஞ்சிக்கலாமா?

காவல் துறைக்கு அள்ளிக்கொடுக்க முடிந்த இந்த பட்ஜெட் மின்சாரம் போக்குவரத்து துறையிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இந்த பொருளாதார மேம்பாட்டு சார்ந்த பணிகளுக்கு சென்ற ஆண்டு செலவழித்த தொகையை (ரூ 71016.19 கோடிகள்) விட இந்த ஆண்டு (ரூ 62,424 கோடிகள்) என்ற அடிப்படையில் வெட்டு ரூ. 8,593 கோடிகள் என்பதை எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்,

ஏற்கனவே, தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த உத்தரவாதமான பழைய பேன்ச திட்டம் பற்றி எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லாருக்குமான வளர்ச்சி தான் வளர்ச்சியாக இருக்க முடியும். உடலில் ஓரிடத்தில் மட்டும் வளர்ந்தால் அதன் பெயர் வளர்ச்சி அல்ல. ஆகவே எல்லாருக்குமான வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் தேவை பட்டால் சில திருத்தங்களோடு தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் நிதி அமைச்சரும் முன் வரவேண்டும்.

மானியங்கள் சார்ந்த செலவினங்கள்

பொதுவாக தமிழகத்தின் நிதி வருவாயின் அடிப்படையில் மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு மானியங்களை அறிவித்து இருக்கிறது. அந்த மானியங்களை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதி இது. அந்த அடிப்படையில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 1,889 கோடிகள் கூடுதலாக ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாக இந்த நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் சரிவர நிறைவேற்றப்படாதது மிகவும் வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. வரும் காலங்களில் இடைக்கால திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதேனும் வருவாய் உயர்வின் மூலமாக இதுவரை செயல் படுத்திறாத தேர்தல் வாக்குறுதிகளை இந்த ஆண்டே நிறைவேற்றினால் இப்போது பாராட்டி மகிழும் மக்கள் இன்னும் இந்த அரசின் சாதனையை வரலாற்று சாதனையாக மாற்ற முன்வருவார்கள்.

- ஆர்.எம்.பாபு

கிளை செயலாளர்

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

72வது வார்டு, ஜீவாநகர் 2வது தெரு கிளை

மதுரை மாநகர்

Pin It