தமிழக ஆளுநர் ரவி எவ்வாறெல்லாம் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்? தமிழக அரசின் நிர்வாகத்தில் தன்னிச்சையாக ஊடுறுவி தமிழக அரசின் இறையாண்மையினை மதிக்காமல் துச்சமென மிதித்துக் கொண்டிருக்கிறார் என்று பட்டியல் போடுவது இக் கட்டுரையின் நோக்கமல்ல! வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் ஆளுநர்களுக்கும், முந்தைய ஆட்சியாளர்களின் ஆளுநர்களுக்கும் அவர்களின் அணுகுமுறைக்கும் முற்றிலும் மாறுபட்டு பாசிசக் கண்ணோட்டத்துடனும் ஒரு வேலைத் திட்டத்துடனும் ஆளுநர் ரவி எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆங்கிலேயர்கள் இரட்டை வடிவ ஆட்சி முறையினை 1920 கால கட்டத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது அந்தந்த மாகாணங்களில் ஆளுநரை நியமித்து அவ்வாட்சியினை கண்காணிக்கிற கங்காணி வேலைக்காக நியமித்தார்கள். அவர்களின் வில்லத்தனம் என்பது தனக்கு வேண்டிய நபர்களை பிரதம அமைச்சர்களாக நியமித்தார்கள். அவர்கள் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் அமைச்சரவை அமைக்க அழைப்பது என்பதை செய்தார்கள். மாற்றுக் கட்சியினரிடம் ஆளுநரே ஆதரவு கோருவார். அதிகாரம் முழுவதும் ஆளுநரிடமே இருந்தது. இத்தகைய ஆட்சிமுறை மக்களின் எதிர்ப்புக்கு ஒரு வடிகாலாக இருந்தது. இது அன்றைய காலகாட்ட ஆளுநர்களின் வில்லத்தனமான அணுகுமுறையாகும். ஆனாலும் பண்பாடு, மொழி, வழிபாடு, கல்வி, நிர்வாகம் என்று எந்த ஒரு துறையிலும் அவர்கள் மூக்கை நுழைத்ததில்லை. அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்று தான் வெள்ளையருக்கு எதிராக சதி வேலைகள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான். ஆனாலும் அதையே காங்கிரசு உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்த்தன. முழு சுதந்திரம் வேண்டும் என்று கோரின. இரட்டை வடிவ ஆட்சிமுறைக்காக நடைபெற்ற தேர்தல்களைப் புறக்கணித்தன.

rn ravi 252வெள்ளையன் கொண்டுவந்த அதே இரட்டை வடிவ ஆட்சிமுறை, அதே அரசியல் சட்டம், அதே ஆளுநர்கள் அதே கங்காணித்தனம் என்று அச்சுப் பிசகாமல் பினபற்றி வரும் இன்றைய ஆட்சிமுறையும் இரட்டை வடிவ ஆட்சி முறைதானே? ஆனாலும் இன்றைய ஆட்சி முறையை இரட்டை வடிவ ஆட்சி முறை என்று யாரும் சொல்வதில்லை. 1942-காங்கிரசு மாநாட்டில் சுயராஜ்ஜியத் தீர்மானம் இயற்றப்பட்டது போல் 'தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை. ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறுங்கள். தமிழக முதல்வரை சுதந்திரமாக ஆள விடுங்கள்' என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆனால் இன்றைய மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வெள்ளைக்காரனால் மாகாண அரசுகளுக்கு கொடுத்த சுதந்திரத்தை, மரியாதையைக்கூட மாநில அரசுகளுக்குக் கொடுப்பதில்லை. வெள்ளைக்காரனோ இரட்டை வடிவ ஆட்சி முறை என்று அவன் சொன்னவாறு நடந்து கொண்டான். ஆனால் இன்றோ வெள்ளைக்காரனைவிட மோசமாக ஒற்றை வடிவ ஆட்சிமுறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்! எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களுடைய அணுகுமுறை என்பது பாசிசக் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் பன்முகத் தன்மையை மறுத்தும், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம் என்பதை மறுத்தும், ஒரே நாடு, ஒரே மொழி என்று அணுகுவதாக உள்ளது. குறிப்பாக தமிழ ஆளுநராக இருக்கிற ரவி பொறுப்பேற்றதிலிருந்தே இவ்வணுகுமுறையினை விரைவாகவும், தொடர்ச்சியாகவும் செய்து வருகிறார்.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தலைமைச் செயலாளரையும், காவல் துறைத் தலைவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசியது என்பதிலிருந்து இவரது வில்லத்தனம் தொடங்குகிறது. தமிழக அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களை திருப்பி அனுப்புவது, கிடப்பில் போடுவது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது, அதன்மீது முடிவெடுக்காமலிருப்பது என்ற வகையில் 20-க்கும் மேற்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை குப்பைக் கூடையில் வீசியதைப் போல் வீசியிருக்கிறார். குறிப்பாக ராசிவ் படுகொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்த தீர்மானம், நீட் தேர்வு, இட ஒதுக்கீடு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு போன்றவை.

ஆளுநர் ரவியின் இவ்வணுகு முறையினை அதிகாரப் போட்டி, ஈகோ பிரச்சினை, தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் ஒத்துப் போகவில்லை, ஒத்த புரிதலில்லை என்பதாக மட்டும் சுருக்கி நாம் புரிந்து கொண்டால் அது தவறாகிவிடும். அவரது அதிகார மீறலிலும், நிர்வாகக் குறுக்கீட்டிலும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒரு வேலைத் திட்டம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல், மாநில அரசுகளின் அனைத்து வருவாயையும் கொள்ளையடிக்கிற ஒரே வரி, இந்தி, சமக்கிருத மேலாண்மை, மொழித் திணிப்பு என்ற ஒன்றிய அரசின் பாசிசத் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான அதிகாரிகளை அனைத்து துறைகளிலும் குறிப்பாக கல்வி, அறநிலையத் துறைகளில் நியமிக்கவும் தனது அதிகார வரம்பை மீறி ஆளுநர் ரவி செயல்படுகிறார். ரவியின் இந்த வில்லத்தனமான பாசிச அணுகுமுறை என்பது வெள்ளைக்கார ஆளுநர்களை விடவும், முந்தைய காங்கிரசு, ஜனதா ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை விடவும் ஏன் வாஜ்பாய் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை விடவும் மிக மோசமான பாசிச அணுகு முறையைக் கொண்டவராக உள்ளார்.

எனவே ஆளுநர் ரவி தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல் தன்னிச்சையாக அனைத்து அரசு, தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டியதும் அதில் மத்திய அரசின் கல்விக் கொள்கையினை நடைமுறைபடுத்துவது குறித்து திட்டமிட்டதும், இந்தி, சமக்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி பேசியதும், தமிழைக் கொச்சைப்படுத்தி பேசியதும், சைவ மடங்களுக்குச் சென்றதும், இந்து மத திரு விழாக்களைத் தொடங்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதும், இந்து மதக் கோவில்கள் பல செல்வதும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இந்து பாசிச வெறியர்களுக்கு ஆதரவாக வழக்காடி வெற்றி பெற்ற வழக்குரைஞரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டுவதும் போன்றவையான தமிழக ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் என்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. RSS-ஆல் அவ்வப்போவது தயாரித்துக் கொடுக்கப்படுகிற நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு என்பதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் காங்கிரசு, பொதுவடைமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை ஆளுநரை எதிர்ப்பது என்பதானது ஆளுநர் ரவி என்கிற தனி நபரை எதிர்ப்பதாக உள்ளது. ஏனெனில் ஆளுநர் ரவி என்பவர் தனி நபர் அல்ல. அவர் RSS சித்தாந்தத்தின் பிரதிநிதி. அதனைத் தமிழகத்தில் செயல்படுத்திட ஆளுநர் என்ற அதிகாரத்துடன் வந்துள்ள ஒரு நபர். எனவே அவரை இந்த வகையில் அம்பலப்படுத்தாமல் தனி நபராக, அதிகார வரம்பு மீறி செயல்படுகிறாவராக மட்டும் பார்த்து எதிர்ப்பது என்பதானது வில்லெய்தவனை விட்டுவிட்டு அம்பை மட்டும் பார்க்கின்ற பார்வையாகவும் ஒரு வகையில் மக்களை திசை திருப்புவதாகவுமே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது உச்சநீதிமன்றம் கூட ஆளுநரின் பேரறிவாளனின் விடுதலை குறித்த அணுகு முறையினை சட்டப்படியானதல்ல என்றதுடன் அதிருப்தியையும் வெளிபடுத்தியும் ஆளுநர் என்பவர் சட்டமன்றத்திற்குக் கட்டுப்பட்டவர் என்பதையும் சுட்டிக் கட்டிக்காட்டி பேரறிவாளன் விடுதலை ஒன்றுதான் சட்டப்படியான தீர்வு என்பதையும் கூறியுள்ளது. ஆனால் இது குறித்தெல்லாம் ஆளுநர் சட்டை செய்யப் போவதில்லை என்பது வேறு. இத்தகைய தமிழக ஆளுநரின் அணுகுமுறை என்பது ஒட்டு மொத்த மோடி அரசினுடைய அணுகுமுறையின் வெளிப்பாடு என்பதுதான் உண்மை. எனவே தமிழக சட்டமன்றத்தையோ அதன் தீர்மானங்களையோ ஒரு போதும் ஆளுநர் ரவி மதிக்கப் போவதில்லை. ஆறரை கோடி மக்காளால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்தை ஆளுநர் ரவி கால் தூசிக்குகூட மதிப்பதில்லை என்பதுதான் உள்ளார்ந்த உண்மை என்றிருக்க அதன் தீர்மானங்களை எவ்வாறு மதிப்பார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தினை மதிக்காதவர் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை எவ்வாறு மதிப்பார்?

ஆளுநர் தனது நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ந்து இவ்வாறுதான் செயல்பட்டுக் கொண்டிருப்பார். சட்டமன்றத் தீர்மானமோ, நீதிமன்றத் தீர்ப்புகளோ எள்ளளவும் அவரது அணுகுமுறையினையும், கண்ணோட்ட தினையும் மாற்றப் போவதில்லை. மாறவும் மாட்டார், நிலைமை இவ்வாறு இருக்க, இச்சிக்கலுக்குத் தீர்வு என்ன? தீர்வு ஒன்றே ஒன்றுதான். ஆளுநர் பதவியினை ஒழிப்பது என்பதுதான் முதல் கட்ட ஒரே தீர்வு! ஆனால் இத்தீர்வினை 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? மாநிலத்திற்கு கவர்னர் எதற்கு?' என்று வசனம் பேசிய திராவிடக் கட்சிகள் உட்பட யாரும் முன் வைக்கப் போவதில்லை. முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசியவாதிகளும் கட்சிகளும் மட்டுமே! அவர்களால் மட்டும்தான் இத்தீர்வினை உறுதியாக முன்வைக்க முடியும்!

அதற்கு முன்னால் ஆளும் திராவிட கட்சிக்கு நாம் ஒரு அழுத்தத்தை கொடுத்து ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்களை சட்டமன்றத்தில் இயற்றவும் வலியுறுத்த வேண்டும்!

1. ஆளுநரைத் ரவியைத் திரும்பப் பெறவும்.

2. வேந்தர் பதவிகளிலிருந்து ஆளுநரை நீக்கவும்

3. சுதந்திர, குடியரசு தின நிகழ்ச்சிகளில் முதல்வரே கொடியேற்றவும்

4. IAS, IPS அதிகாரிகள் அரசின் முன் அனுமதியின்றி ஆளுரை சந்திப்பது, அவர் அழைத்தாலும் மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சந்திப்பது என்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும்.

5. சட்டமன்றக் கூட்டத்தினை தொடங்கி வைப்பது, முடித்து வைப்பது என்ற ஆளுநரின் மரபினை மாற்றி சபாநாயகரே அவற்றினைச் செய்யவும் வேண்டும்!

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒற்றை வடிவ பாசிச ஆட்சிமுறைக்கு எதிரான முதல் நகர்வாக இது அமையும். அதே நேரத்தில் மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆளும் தி.மு.க அரசு தீர்மானங்களை நிறைவேற்றப் அழுத்தம் கொடுக்காமல் இது சாத்தியமில்லை. என்ன அழுத்தம் கொடுத்தாலும் மேற்கண்ட தீர்மானங்களை தி.மு.க அரசு நிறைவேற்றப் போவதுமில்லை. ஏனெனில் அண்ணா காலத்திலிருந்தே திராவிடக் கட்சிகள் தான் தீர்மானித்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதில்லை! எதனையும் உறுதியாக நின்று போரடி நிறைவேற்றியதாக அதன் வரலாறும் இல்லை. பதவிக்காக எதனையும் விட்டுக் கொடுக்கவும், எத்தகைய சமரசமும் செய்து கொள்ளும் போக்கினைக் கொண்டவர்கள் தான் திராவிடக் கட்சியினர். இது அண்ணா காலத்திலுருந்தே தொடரும் அவலமாகும். (இது குறித்து தனிக் கட்டுரையே எழுதலாம் என்பது வேறு)

எனவே நம்முன் உள்ள உடனடிக் கடமை என்பது ஆளுநர் ரவி கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் பாசிச வில்லன் என்பதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். அடுத்து ஆளும் தி.மு.க அரசை மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை தமிழ்த் தேசியவாதிகள் முன்னெடுக்க வேண்டும். அவர்கள் மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற மறுக்கும் நிலையில் நாம் அவர்களையும் ஆளுநர் ரவியுடன் சேர்த்து அம்பலப் படுத்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்! இதுவே நம்முன் உள்ள உடனடிக் கடமையாகும்!

- ந.மணிமாறன்