தேர்தல் வாக்குறுதிகளை, பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், 85% வரை நிறைவேற்றிய ஆட்சி உலகிலேயே, தமிழ்நாட்டின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியாகத் தான் இருக்க முடியும். எஞ்சியிருக்கும் 15% நிறைவேற்றிவிட அமைச்சர்கள் தொடர்ந்து முடுக்கப்பட்டுள்ளனர். நிதி மற்றும் மனித வளத் துறை அமைச்சர், திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வருவாய்ப் பற்றாக்குறையையும், மாநிலத்தின் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, எவ்வளவு தள்ளிப்போட்டாலும், முதல்வர் ஈரோட்டுத் தேர்தல் பரப்புரையின் போதே அறிவித்துவிட்டதால், அதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, மார்ச் 20 அன்று வெளியிடப்பட்ட 2023-24க்கான வரும் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டுவிட்டது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2023 முதல் அது நடைமுறைக்கு வரும்.

மகளிருக்கு உரிமைத் தொகை என்பது மொத்த வருவாய் செலவினங்களில் ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டிய நிரந்தர செலவினம் ஆகிவிடும். ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள், ஒரு கோடி மகளிருக்குக் கொடுத்தாலே ரூ.12,000 கோடி, அதாவது வருவாய்ச் செலவினங்களில் 5% ஆகும். நம் மொத்த வருவாய்ச் செலவினமான ரூ.2,32,062/- கோடிகளில் 68% அதாவது ரூ.1,57,802 கோடிகள் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி ஆகிய நிரந்தர செலவுகளுக்குப் போய் விடுகிறது. எஞ்சியிருக்கும் 32% நிதியில்தான் நம்முடைய எல்லா மானியங்களும், வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.mk stalin with womenகூடுதலாக 5% எடுத்து விட்டால் 27% தான் வளர்ச்சிப் பணிகளுக்கு எடுக்க இயலும். ஒரு அரசின் கைகள், தன் நிதி ஆதாரங்களில் கால் சதவிகிதத்தை மட்டுமே, வளர்ச்சிக்கும், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டுமானத்திற்கும், சேவைகளுக்கும் பயன்படுத்தக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில்தான் சமூக நீதியை நிலை நாட்டும் சாதி ஒழிப்பு, சமத்துவபுரங்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன், மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதனால்தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், ஊதிய, ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தி வைப்பது, ஊதிய ஓய்வூதியச் சுமைகளைக் குறைக்க ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது ஆகிய நடவடிக்கைகளைக் கைக்கொள்ள வேண்டியதாகிப் போய் விடுகிறது.

சென்ற ஆட்சியில் பணம் இல்லாமல் இலட்சம் கோடிகளில் கடன் வாங்கி மின்சாரத்தை வெளி மாநிலங்களில் வாங்கி, மக்களிடம் நல்ல பெயர் வாங்கிய கனவான்கள், கூடுதலான பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் பணிக்காலத்தைக் கூட்டி விட்டனர். அதனால் ஓய்வுப் பலன்களைத் தள்ளி வைத்து அடுத்து வரும் அரசின் மீது அந்தச் சுமையை ஏற்றிவிட்டனர். அந்த நிலுவைகளை வழங்குவதாலும், அரசின் வருவாய்ச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

நம் எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர் போர்வையில் இருக்கும் அரசின் தீவிர விமர்சகர்களும், இருக்கும் 2.50 கோடி குடும்ப அட்டைகளுக்கும் உரிமைத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும் என்று பேசுகின்றனர். அப்படித்தானே தேர்தல் அறிக்கையில் கூறினீர்கள் என்று எடுத்துப் பேசுகின்றனர்.

அதனால்தான் முதல்வர் அவர்கள் எந்த ஒரு திட்டமும், அனைவருக்கும் வீடு என்றால் வீடு அற்றவர்கள் என்றுதான் பொருள்; அனைத்து முதியோர் என்றால் ஆதரவற்ற முதியோர் என்றே பொருள்; அனைவருக்கும் வீடு என்பதும், அனைவருக்கும் நிலம் என்பதும் இல்லாதவர்களையே சுட்டும் என, சீரிய விளக்கம் ஒன்றை மார்ச் 27 அன்று சட்டப்பேரவையில் அளித்துள்ளார்.

மேலும், நிரந்தர வருவாய்ச் செலவினங்களை 7.5% மேலும் கூட்டுவது என்பது நம் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகப் பெரும் தடையாக அமைந்து விடும்.

முதல்வர் அவர்கள், நடைபாதைக் கடைகள் வைத்திருக்கும் மகளிர், மீன் பிடிக்கக் காலையிலேயே கடலுக்குச் செல்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வேலை செய்பவர்கள், சிறிய கடைகள் வைத்திருப்போர், சொற்ப ஊதியத்திற்கு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் என உழைக்கும் பெண்களை மய்யப்படுத்தி அறிவிப்பை வெளியிட்டிருப்பதும் சிறப்பு.

எனினும் இதில், சொற்ப வருமான ஈட்டும் ஆண்கள், அதையும் குடித்துவிட்டு, குடும்பத்தை நிர்கதியாக்கும் கணவர்கள் என எளிய மற்றும் பொறுப்பற்ற ஆண்களைச் சமாளித்துக் கொண்டு, உழைக்கும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, குழந்தைகளையும், வீட்டுப் பெரியவர்களையும், தன்னையும் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கும், வேறு உதவி எதுவும் பெறாத, குடும்பப் பெண்கள் விடுபட்டுவிடுவரோ என்ற அச்சம் எழாமல் இல்லை.

“தகுதி வாய்ந்த” இல்லத்தரசிகளைத் தேர்ந்தெடுக்கும்போது இவை கவனம் பெறும் என நம்புகிறோம். AAY மற்றும் PHH எனப்படும் வறிய, முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களே, 1.2 கோடி பெண்கள் இருக்க, தகுதி வாய்ந்த பெண்களைத் தேர்ந்தெடுப்பது சவாலான பணியாகும். உரிமைத் தொகை, தேவையான, சரியான நபர்களுக்குப் போவதில் உள்ளாட்சி அமைப்புகள் நல்ல பங்காற்ற முடியும்.

சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கான மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தும் நம் சமூக நீதிக்கான திராவிட மாடல் அரசு இந்த மைக்கல்லையும் எளிதில் கடந்து பீடு நடை போடும்!

Pin It