mk stalin copyதந்தை பெரியாரின் கொள்கை, கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆட்சி அதிகாரம் தேவை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல், சமுதாய சீர்திருத்தக் கட்சியைத் தொடங்கினார் பேரறிஞர் அண்ணா.

1967ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரான அவர் தமிழ்நாடு பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, சுயமரியாதைத் திருமணம் என்று மகத்தான சாதனைகளை நிறைவேற்றினார்.

அண்ணாவைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழ்நாட்டின் முதல்வரானார் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்று ஆற்றிய சாதனைகளால் தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் முன்னணி மாநிலங்களின் முதலில் நிற்கச் செய்தார்.

‘கை ரிக்‌ஷா’ ஒழிப்பு திட்டம், குடிசை மாற்று வாரியம், கண்ணொளி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை திட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சத்துணவில் வாரம் 5 முட்டை, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களால் தமிழ்நாட்டைத் தலை நிமிரச் செய்தார் முதல்வர் கலைஞர்.

இன்று திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் கொள்கைகளை, கோட்பாடுகளை, இலட்சியங்களை ஏற்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நிர்வாக ஆற்றலுடன் தமிழ் நாட்டின் முதல்வராக தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள் அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில அரிசிப் பஞ்சத்தை முற்றிலுமாக நீக்கி, குஜராத்தில் ஏற்பட்ட அரிசிப் பஞ்சத்திற்கு உதவ 2000 டன் அரிசியை அனுப்பிவைக்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார்.

அதுபோல இன்று தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் நேரத்தில் கொரோனா நோய்த்தொற்று தலை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் கொரோனா நோயாளிகள். மருத்துவமனைகளின் முன்பாக ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கும் நோயாளிகள்.

எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர்கள் பறிபோகும் ஆபத்தான நிலை நிலவும் நெருக்கடியான சூழல்.

முதல்வரின் விரைவான நடவடிக்கைகளால் தடுப்பூசிகள் அதிகம் வரவழைக்கப்பட்டன. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலையில் நாடு முழுவதும் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஆக்சிஜனைப் பெறவும், திரவ ஆக்சிஜன்களை ரயில் மூலம் கொண்டு வந்து ஆக்சிஜன் இல்லை என்ற குரலை இல்லாமல் செய்தார்.

அவரால் விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நோய்த்தொற்று 50 ஆயிரத்தை எட்டும் என்ற வல்லுனர்களின் கூற்றைப் பொய்யாக்கிப் படிப்படியாகக் குறைத்து இன்றைக்கு ஐயாயிரத்துக்கும் குறைவாகக் கொண்டு வந்துள்ளார்.

இதுமட்டுமன்றி செங்கல்பட்டில் செயல்படாமல் கிடக்கும் தடுப்பூசி மருந்து ஆலையைச் செயல்பட வைக்கவும், அதனைத் தமிழ்நாடு அரசின் பொறுப்பில் தரவும் தொடர்ந்து ஒன்றிய அரசை வற்புறுத்தி வருகிறார் முதல்வர்.

அதுமட்டுமல்ல, அடுத்து வருவதாகப் பயமுறுத்தும் மூன்றாம் அலை கொரோனாவையும் சந்திக்க ஆயத்தமாக உள்ளார். இதற்குப் பெயர்தான் நிர்வாகத்திறன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரிடம் பெற்ற பயிற்சியின் வெளிப்பாடு.

கடந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பதின்மூன்று உயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை தராமல் வருவாய்த்துறையில் கிராம நல அலுவலருக்குக் கீழ் தலையாரி வேலை கொடுக்கப்பட்டது.

ஆனால் தளபதி அவர்களின் ஆட்சியில் அவர்களின் படிப்பைக் கருத்தில் கொண்டு வருவாய் ஆய்வாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும் அய்யா நல்லகண்ணு, வைகோ போன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதும் புனையப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று பேருதவி செய்துள்ளார்.

அதைப் போலவே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது புனையப்பட்ட வழக்குகளையும் தளபதி அவர்களின் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மே 7 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற அதே நாளில் தேர்தல் வாக்குறுதியான கொரானா நிவாரண நிதி ரூபாய் நாலாயிரத்தில் ரூபாய் இரண்டாயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அத்துடன் மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்திற்கும் உத்தரவிட்டார். இக்கட்டணமில்லாப் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கையருக்கும் பொருந்தும் என்ற ஆணையிட்டார்.

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைத்தார். தேர்தலுக்கு முன் தன்னிடம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வுகளில் மக்கள் தந்த மனுக்களை உடனடியாகப் பரிசீலித்து முடிவு காண திருமதி ஷில்பா பிரபாகர் என்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துக் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

தளபதி அவர்களின் ஆட்சியில் டாக்டர் எழிலன் அவர்கள் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை நியமித்துக் கொரோனா குறித்த அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து செயல்பட்டு வருகிறார்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

என்ற வள்ளுவரின் வைர வரிகளுக்கு இலக்கணம் வகுக்கிறது இன்றைய தளபதி ஸ்டாலின் அவர்களின் தி.மு.கழக அரசு.

பெரும் பொருளாதார நெருக்கடியில் தமிழ்நாடு அரசு தள்ளாடுவதை உணர்ந்து அதிலிருந்து தமிழ் நாட்டை மீட்டு எடுக்க பொருளாதார மேதை ஜெயரஞ்சன் தலைமையில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவை அமைத்துள்ளார்.

அக்குழுவை கற்றறிந்த பொருளாதார வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர், திருநங்கையர் மருத்துவப் பிரதிநிதிகளைக் கொண்டு அமைத்துள்ளார்.

இன்று தமிழ் நாடு 5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. அதனை சரி செய்ய, தேவையானத் திட்டங்களை வகுக்க நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார மேதைகள் அரவிந்த் சுப்பிரமணியம், ஜான் ட்ரீஸ், எஸ். நாராயணன் உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார வல்லுநர்கள் குழுவை அமைத்து உள்ளார் என்பது முதல்வரின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

தந்தை பெரியாரின் கனவான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக 100 நாள்களில் நியமிக்கப்படவுள்ளனர். பயிற்சி பெற்ற மகளிரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். கேட்பாரற்று கொள்ளை போன பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன.

தந்தை பெரியார் சித்தாந்தம். அதனைத் தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த அண்ணா, கலைஞர் வழியில், மூன்றாம் ஆளுமையாகப் பரிணமிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It