தமிழ்நாடு அரசின் முக்கிய அங்கமாகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (TNPSC) தேர்வு செய்கிறது. இதற்காக அவ்வாணையம் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களைப் பணிநியமனம் செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு குரூப் 1, 2, 4 உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுக்கான அட்டவணையை (Annual planner) அண்மையில் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் குரூப் 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகள் குறித்த அறிவிப்புகளே இல்லை என்பது தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் இலட்சக்கணக்கான தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.thirumavalavan demandகடந்த அதிமுக ஆட்சியின் தவறான நிதி நிர்வாகத்தால், 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெறவிருந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க அரசால் இயலவில்லை. எனவே அந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டியவர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தப்பட்டது. இது பிறகு 60 வயதாக்கப்பட்டது. அப்போதைக்குப் பிரச்சினையைத் தள்ளிப் போட்டு விட்டு தப்பித்துக் கொண்டது அதிமுக அரசு.

இந்த வயது நீட்டிப்பால், ஊழியர்கள் ஓய்வு பெறுவது தாமதமான நிலையில் காலிப்பணியிடங்கள் உருவாகாததால், தேர்வாணைய அறிவிப்பில் குரூப் 2/4 தேர்வுக்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால், இரண்டு ஆண்டுகளாகத் தேர்வு நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது ஓராண்டாகத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அடுத்த ஆண்டு குரூப் 2/4 தேர்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என்றால் அது மாணவர்களை மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாக்கும்.

இந்த ஆண்டிலிருந்தே 60 வயதைத் தொட்ட அனைவரும் ஓய்வுபெற்று வரும் நிலையில், காலிப் பணியிடங்களும் அதிகரித்துக் கொண்டுள்ளன. எனவே அடுத்த ஆண்டு தேர்வுகளை நடத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக இருக்கும். அதனால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வாணையம் முடிவெடுக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், குரூப் 4 தேர்வினை 2023 ஆம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தேர்வுகளை நடத்த ஆவன செய்வது இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கைக் கீற்றினை ஒளிரச் செய்யும்.

- வெற்றிச்செல்வன்

Pin It