கடல் நடுவே பயணம் செய்தவன் “காணுமிடமெங்கும் தண்ணீர், தண்ணீர், ஆனால் தாகம் தணிக்க ஒரு குவளைத் தண்ணீர் இல்லை என்று ஓலமிட்டான்” என்பது ஓர் ஆங்கிலக் கவிதை. அதுபோல் தமிழகத்தில் கட்சிகள் - இயக்கங்கள் - அமைப்புகள் பெருகிக் கிடக்கின்றன. ஆனால் தமிழர்கள் பாதுகாப்பற்ற அரசியல் அனாதைகளாக உள்ளார்கள்.

அண்டை அயலார் அனைவராலும் தமிழர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள்; உரிமைகள் பறிக்கப்பட்டார்கள்; ஒவ்வொன்றையும் மீண்டும் விவரிக்க வேண்டியதில்லை. கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிங்களர்கள் அனைவராலும் உரிமைகள் பறிக்கப்பட்டு, உயிர்கள் பறிக்கப்பட்டு அனாதைகளாய்த் தமிழர்கள் சீரழிகிறோம்!

அண்டை அயலாரால் தமிழர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டதுபோல், உரிமைகள் பறிக்கப்பட்டதுபோல், இந்தியாவில் வேறெந்த இனத்தவர்க்கும் உயிர்ப்பறிப்பும் உரிமைப் பறிப்பும் கிடையாது. காரணம் அந்தந்த இனத்திற்கும் அரசியல் பாதுகாப்பு உள்ளது.

தமிழர்களுக்கு அவ்வாறான இனப்பாதுகாப்பு கிடையாது. “தமிழர்கள்” என்ற நமது இயற்கையான இனப்பெயரை ஆரிய நூல்களில் உள்ளது போல் “திராவிடர்” என்று மாற்றியவர்கள்தாம் தமிழர்கள் தலைவர்களாக இருந்தார்கள் - இருக்கிறார்கள். அத்தலைவர்களுக்கெல்லாம் தலைவராகக் கருதப்பட்டவர் “தமிழ்மொழி எதிர்ப்பு - தமிழின மறுப்பு” இரண்டையும் தமது பகுத்தறிவு வாதத்தின் தண்டுவடமாக ஆக்கிக் கொண்டவர்.

பிறகு புதிதாகத் தோன்றிய பல கட்சிகள் சின்ன திமுகக்களாக செயல்படுகின்றன.

ஆனால் அண்டை அயல் மாநிலங்களில் தமிழகத் திராவிடக் கட்சிகள் போன்ற சொந்த இனமறுப்புக் கட்சிகள் கிடையாது. அம்மாநிலங்களில் இந்திய தேசியக் கட்சிகளே இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அவை இனப்பாதுகாப்பில் தற்காப்பு என்ற நிலையைத் தாண்டி தமிழர்களுக்கெதிரான பகையும் தாக்குதல் நோக்கும் கொண்டுள்ளன.

கடந்த 27.4.2015 திங்கட்கிழமை கர்நாடக சட்ட மேலவையில் மதச்சார்பற்ற சனதா தளக் கட்சியைச் சேர்ந்தவரும் பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்தவரும் பேசிய பேச்சுகள் அவர்களின் கன்னட வெறிக்கு இன்றையச் சான்றுகளாக உள்ளன.

பெங்களூரு மாநகராட்சியை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்திருத்தம் கர்நாடக மேலவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தொடரும் அவ்விவாதத்தில் 27.4.2015 அன்று பேசிய மதச்சார்பற்ற சனதாதள உறுப்பினர் இ.கிருஷ்ணப்பா பேசியதன் சில பகுதிகள் இதோ:

“பெங்களூரு மாநகராட்சியை எந்தக் காரணம் கொண்டும் பிரிக்கக் கூடாது. 1960களில் பெங்களூருவில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. ராமச்சந்திரபுரம், ஒகலிபுரம், ஸ்ரீராமபுரம் போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் திமுக கொடி மட்டுமே பறந்தது. இங்குள்ள தமிழர்கள் கன்னடத்தில் கூடப் பேசுவதில்லை. எங்கும் தமிழ் ஒலிதான் கேட்கும்.

“அன்றைய காலகட்டத்தில் கன்னடர்களால் பாகிஸ்தானுக்குக் கூடச் சென்று வரமுடிந்தது. ஆனால் பெங்களூரில் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் கன்னடர்களால் நுழைய முடியாத பரிதாப நிலை இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து 1960 களில் வாட்டாள் நாகராஜ் போன்றோர் கன்னட சலுவளி கட்சியைத் தொடங்கி கன்னடர்களின் உரிமையை நிலைநாட்டத் தொடங்கினர்.

“பிறகு 1991 இல் காவிரிப் பிரச்சினை உருவெடுத்த போது தமிழர்களுக்குக் கன்னடர்கள் தக்க பாடம் புகட்டினார்கள். அதன் காரணமாகத் தமிழர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு பெங்களூரில் தமிழ் ஆட்சி நடத்தி வந்த தமிழர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்தது.

“பெங்களூரில் தற்போது 32 விழுக்காடு கன்னடர்கள் உள்ளனர். இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சியைப் பிரித்தால் தமிழர்கள், தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும் ஆபத்து உள்ளது” - தினமணி- 28.4.2015

அடுத்து, அதே விவாதத்தில் பேசிய பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ். ஈசுவரப்பா பின்வருமாறு கூறினார்.

“பெங்களூரு மாநகராட்சியைப் பிரித்துவிட்டால் அது தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு, தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு உருது மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு என்றாகிவிடும். பெங்களூரில் கன்னடர்களின் ஆதிக்கம் சிதைந்து போவதை எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது. கன்னட மொழியின் தாழ்ச்சிக்கு எப்போதும் வாய்ப்பளிக்கக் கூடாது.” - தினமணி 28.4.2015

மதச்சார்பற்ற சனதா தளமும் அனைத்திந்தியக் கட்சி, தி.மு.க., த.மா.க. ஆதரவில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த தேவகவுடாவின் கட்சி அது! பாரதிய சனதாக் கட்சியோ, காசுமீரிலிருந்து குமரி முனை வரை ஒரே பாரதீயர்கள் வாழ்கிறார்கள் என்று கூறும் கட்சி!

1991 இல் கர்நாடகத் தமிழர்களைக் கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்ததையும், தமிழர்களின் பல்லாயிரக் கணக்கான வீடுகளை எரித்ததையும், தமிழர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடியதையும் மதச்சார்பற்ற சனதா தள உறுப்பினர் பாராட்டிப் பேசுகிறார். கன்னட இனவெறியன் வாட்டாள் நாகராசை உச்சி மோந்து மெச்சுகிறார்.

கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். உரிமை பறிக்கப்பட்டார்கள் என்று சுவரொட்டி ஒட்டியதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் கவித்துவன் சிறையில்! தோழர் பெ. மணியரசனைக் கைது செய்ய காவல்துறை தீவிரம்!

தமிழக சட்டப்பேரவையில் தமிழினப் பாதுகாப்பிற்காக, தமிழ் மொழிப் பாதுகாப்பிற்காக - கர்நாடகத்தைப் போல் வேண்டாம் - நாகரிகமான முறையில் தற்காப்பு அடிப்படையில் விவாதம் நடந்ததுண்டா? அண்டை அயலாரின் தமிழக ஆக்கிரமிப்பு, தமிழக உரிமைப் பறிப்பு, தமிழினத்தின் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் பற்றி, தமிழக சட்டப்பேரவையில் எப்போதாவது விவாதம் நடந்ததுண்டா? தேர்தல் கட்சிகளின் அரசியல் மேடைகளில் இவ்வாறான இனச்சிக்கல்கள் விவாதிக்கப்பட்டதுண்டா?

இப்பொழுதாவது தெரிகிறதா, தமிழர்கள் அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை?

கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் ஒருபோதும் திராவிட இனக்கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் தமிழர்களைத் தங்களின் போட்டியாளர்களாக - எதிரிகளாகக் கருதுகிறார்கள். இந்தத் தமிழ் மண்ணில் தமிழன் என்ற உண்மையான இனப்பெயரைப் புறக்கணிக்கச் சொல்லி “திராவிடர்” என்ற அயலாரின் திரிபுப் பெயரை தமிழர்களை சுமக்க வைத்தார்கள்.

அதனால் தமிழர்களின் இன உணர்ச்சி உளவியலில் ஓர் ஊனம் ஏற்பட்டுவிட்டது. இயல்பாக எழவேண்டிய தமிழ் இன உணர்ச்சி தடுக்கப்படுகிறது. வாய்க்கால் நீரோட்டத்தைத் தடுக்கும் களைச் செடியைப் போல் திராவிடம் என்ற களைச் செடி - தமிழர் இன எழுச்சியைத் தடுத்து நிற்கிறது. தமிழர்கள் தங்கள் மனத்திலிருந்து திராவிடத்தைத் தூக்கி எறிந்தால்தான் அவர்களின் உளவியல் ஊனம் நீங்கி மற்ற இனத்தவரைப் போல் இன உணர்ச்சி கொள்வார்கள்!

 அடுத்த உளவியல் ஊனம்- இந்தியன் என்ற இல்லாத புனைவு இனப்பெயர்! ஆனால் இந்தப் புனைவு இனப்பெயரை ஏற்று இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசாரும் கம்யூனிஸ்ட்டுகளும் மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறார்கள்?

காங்கிரசு முதலமைச்சர் பங்காரப்பா தலைமையில்தான் 1991 டிசம்பர் காவிரிக் கலகம் நடத்தித் தமிழர்களை இனப் படுகொலை செய்தார்கள்.தமிழர்களின் வீடுகளையும் நிறுவனங்களையும் எரித்தார்கள்.அந்தக் கன்னட இனவெறியாட்டத்தைப் பாராட்டித்தான் மதச்சார்பற்ற சனதா தள மேலவை உறுப்பினர் கிருஷ்ணப்பா பேசியுள்ளார்.

இந்தியத் தேசியம் மட்டுமல்ல, சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கேரளத் தலைவர்களும் தொண்டர்களும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி நடத்தினார்கள். அண்மையில் கேரள சி.பி.ஐ. சட்டமன்ற பெண் உறுப்பினர் குஞ்சுமோள் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று தமிழகப் பொறியாளரைத் தாக்கினார்.

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு, பாசக, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் தமிழினத் துரோகக் கட்சிகளாகவே செயல்படுகின்றன. தமிழர் உரிமை, தமிழக உரிமை பற்றிப் பேசினால் தமிழின வெறி என்று கூச்சல் போடுகின்றன.

மனித உரிமை பேசுவோரில் பலர் இன உரிமைக்கு அப்பாற்பட்டது மனித உரிமை என்பது போல் இங்கு பேசி தமிழினத் துரோகம் செய்கிறார்கள். தமிழின உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். தமிழின உரிமைகள் பற்றிப் பேசினால் அது தமிழின வெறி என்று பட்டம் சூட்டுகிறார்கள் இந்தத் தமிழினத் துரோகிகள்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சி கேரளத்தில் நடத்திய மனிதச் சங்கிலியில் தள்ளாத அகவையிலும் கைகோத்து நின்றார் மதிப்பு மிக்க மனித உரிமைப் போராளி நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்!

இன உரிமையா - மனித உரிமையா என்றால் கிருஷ்ணய்யர் இன உரிமையைத் தேர்ந்தெடுத்தார். !

மேதாபட்கரும், அருந்ததிராயும் ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை உரியவாறு கண்டு கொள்ளவில்லை. அதனை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு கோரவில்லை. இன அழிப்பில் மனித உரிமைகள் பறிபோகவில்லையா? என்னே மனித நேயம்!

விழிப்புணர்ச்சி பெற்ற தமிழர்களே!

தமிழக அரசியலை மறு ஆய்வு செய்யுங்கள். தமிழர்களைப் பீடித்துள்ள திராவிட அரசியல் இந்திய அரசியல் என்ற இரண்டு தொற்று நோய்களையும் நீக்க தமிழ்த் தேசிய இயற்கை மருத்துவம் செய்து கொள்ளுங்கள்!

அ.இ.அ.தி.மு.க, தி.மு.க. உடனோ இந்தியத் தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி சேரும் தமிழகக் கட்சிகளைத் திருத்துங்கள்! திருந்தாவிட்டால் அவற்றைப் புறக்கணியுங்கள்!

தமிழினத் தற்காப்பு அரசியல் தமிழ்நாட்டில் வேர்விட தழைக்க வழி கோலுங்கள்!.

Pin It