தமிழ்நாடு தனி மொழி வழி மாநிலமாக 1-11-1956-இல் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் 1957 சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தல்களில் ஈடுபடுவது என முடிவு செய்தது.

“காகிதப் பூ மணக்காது; காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது” என்பதை, மெத்தப் படித்த அறிஞர் சி.என்.அண்ணாதுரை முதலாவது தேர்தல் முழக்க மாக முன்வைத்தார். அவருடைய இரண்டாவது முழக்கம், “ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி இலட்சியம்! ரூபாய்க்கு ஒருபடி அரிசி நிச்சயம்” என்பது.

அன்றைய அரிசி விலை ஒரு கிலோ மூன்று ரூபாய். நடுத்தர, ஏழைகளின் குடும்பங்கள் ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாத நிலையில் “அரிசி யில் அரசியல்” என்பதைத் தொடங்கி வைத்த அரசியல் தலைவர் அவர்தான்.

1977-இல் ஆட்சிக்கு வந்த ம.கோ. இராமச்சந்திரன் 1971-72 வரை தி.மு.க. வின் பொருளாளராக இருந்தார். அவர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திராவிடக் கட்சிதான் என்பதற்கு அதுவே போதிய சான்று. அவர் 1987 திசம்பரில் மறையும் வரையில், “அரிசியில் அரசியல் உள்ளது” என்பதைக் கண்ணுங் கருத்துமாக நடைமுறைப்படுத்தினார்.

அவர் காலத்தில் ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு பங்கீட்டுக் கடைகளில் விற்கப் பட ஏற்பாடு செய்தார்.

அவர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு ஏன் விற்கச் சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அவரை அடுத்து இன்றுவரை மாறி, மாறி தி.மு.க. தலைவரும், அ.இ.அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெ. ஜெயலலிதாவும் முதல்வராக வந்தார்கள். தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களை நல்ல மதுக்குடியர்களாகவும், மலிவு விலை அரிசிக்கு ஏங்குபவர்களாகவும் இரு தலைவர்களுமே ஆக்கினார்கள்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு விற்கச் சொல்லி யார் கேட்டார்கள்? எங்கே, என்ன விலைக்கு நெல்லையும் அரிசியை யும் கலைஞர் அரசு கொள்முதல் செய்தது என்று தமிழ்நாட்டு அரசியல் - பொருளாதார அறிஞர்கள் எவரும் கேட்கவில்லை.

கலைஞர், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு விற்றார். அவரைப் போல் மலிவாக அரிசியை விற்பதைவிட, அரிசிக்கு விலையே தரவேண்டாம் - விலையில்லாமல் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி - இலவசமாகத் தருகிறோம் என்று அறிவித்தார் செயலலிதா.

எந்த அறிவாளிக் குடிமகனும் - எந்த உழைப்பாளிப் பெருமகனும் எனக்கு ஏன் இலவச அரிசி என்று கேட்கவே இல்லை. இது எப்படிப் பெரியார் வாழ்ந்த மானமுள்ள நாடு என்பது நமக்குப் புரியவில்லை.

1978 முதல் 2015க்குள், இருபத்தைந்து தடவைகள், பல வடமாநிலங்களுக்குப் போய் வந்தேன். எந்த ஒரு மாநிலத்திலும் கோதுமையையோ, அரிசியையோ “இலவச மாகக் கொடு!” என்று எந்தக் கட்சியும் அங்கெல்லாம் கேட்கவும் இல்லை; எந்த உழைப்பாளிக் குடிமகனும் அங்கெல்லாம் இதை எதிர்பார்க்கவும் இல்லை.

பல வடமாநிலங்களில் பொதுப் பங்கீட்டுக் கடைகளே இல்லை. போதிய பள்ளிக்கூடங்கள் இல்லை; போதிய மருத்துவமனைகள் இல்லை.

தமிழ்நாட்டில் போதிய பொதுப் பங்கீட்டுக் கடை கள் உள்ளன. இலவசமாக 20 கிலோ அரிசி மட்டும் கிடைக்கிறது.

ஆனால், நல்ல, தரமான கல்வியோ - இலவச மான உயர்கல்வியோ; எல்லா மக்களுக்கும் இலவச மான மருத்துவமோ தமிழ்நாட்டில் கிடைக்க வில்லை. ஏன்?

2015-2016ஆம் நிதியாண்டுக்கு, தமிழ்நாட்டு அரசின் மொத்தச் செலவுத் திட்டம் 1,47,297 கோடி ரூபா. இந்தத் தொகையில் 59,185 கோடி ரூபா உதவித் தொகைகளுக்கும் மானியங்களுக்கும் என ஒதுக்கப் பட்டுள்ளது.

இப்படி, இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் ஏன் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டது என்பதற்கு, முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் 2-4-2015 அன்று, சட்டமன்றத்தில் அளித்த விடை என்ன?

“மானியங்களுக்கும், உதவித் தொகைகளுக்கும் 59,185 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதைச் சிலர் குறை கூறுகின்றனர், இந்த அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு நான் அளிக்கின்ற பதில், இந்த அரசு வளர்ச்சிக்கும் முக்கியத்தும் தருகிறது. இந்த 59,185 கோடி ரூபா ஒதுக்கீட்டில் வறுமை ஒழிப்பு முதல் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களும் அடங்கியுள்ளதை ஆராய்ந்து அதன்பின் கருத்துச் சொல்ல வேண்டும். மேற்கத்திய பொருளாதாரத்தை அரைகுறையாகக் கற்றவர்கள் வேண்டுமானால், ஏழைகளுக்கு மானியம் தருவதைக் குறையாகக் கூறலாம். உணவு மானியத்திற்காக 5,300 கோடி ரூபா, இலவச மின்சார மானியத்திற்காக 7,136 கோடி ரூபா...” எனப் பட்டியலிட்டுள்ளார்.

“வறுமை ஒழிப்பு” என்றால், அது என்ன?

வேலை செய்யத் திறன் படைத்த எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வேலை கிடைக்க வழி செய்து, அதன் மூலம் நாள்தோறும் - மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானம் வர வழிசெய்வதுதான்.

தமிழ்நாட்டிலுள்ள 750 இலக்கம் மக்கள் 125 இலக் கம் குடும்பங்களாக இருக்கிறார்கள். இவர்களுள் 65 விழுக்காட்டு மக்கள் வேளாண்மை, வேளாண் கூலி வேலை, ஆடு மாடு வளர்த்தல் முதலான வேளாண் மை சார்ந்த தொழில்களைச் செய்கிற சிற்றூர் வாழும் மக்களாவர். இவர்களில் அதிகம் பேர் வானம் பார்த்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள்; மற்றும் அவற்றில் வேளாண் கூலி வேலை செய்கிறவர்கள். அவரவர் வாழும் ஊர்களிலும் சிறிய, பெரிய பாசன ஏரிகள் உள்ளன. இப்படி 40,000 ஏரிகள் உள்ளன.

திராவிடக் கட்சி ஆட்சிகளின் 48 ஆண்டுக்காலத் தில், எத்தனை ஆயிரம் ஏரிகளில் தூர் வாரினார்கள்? எத்தனை ஆயிரம் நீர் வரத்து, நீர் போக்கு வாய்க்கால் களை விளம்பினார்கள்? அதற்கென 48 ஆண்டுகளில் போடப்பட்ட திட்டங்களில், எத்தனைத் திட்டங்களை நிறைவேற்றினார்கள்? அவற்றை நிறைவேற்றியதாகக் கூறிக் கணக்கெழுதிவிட்டு எத்தனைத் திட்டங்களில் கொள்ளையடித்தார்கள்?

வேளாண் துறைக்கு வெறும் 6,613 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது, வேளாண்மை யை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான சிறு, குறு, நடுத்தர வேளாண் குடும்பங்களுக்கும், வேளாண் அற்றைக் கூலிகளுக்கும் வேண்டுமென்றே செய்யப் பட்ட நன்றி கொன்ற செயலாகும். 2015-16-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக ஒதுக்கிய தொகை எப்படிப் போதுமானது?

பருவ மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரைத் தேக்கி வைத்து, குறைந்தது ஒரு போகம் எல்லாப் பாசன நிலங்களிலும் பயிர் செய்தால், எத்தனைக் கோடி மக்களுக்கு வருமானம் வரும்? அப்படி வரு மானம் வர வழி செய்வதற்குப் பெயர்தான் “வறுமை ஒழிப்பு” - இலவச அரிசி, இலவச வேட்டி - இலவசச் சேலை, இலவச விசிறி, இலவச மாவரைப்பான் இவற்றால், என்றைக்காவது வறுமை ஒழியுமா? வருமானம் உருவாகுமா? இது, தொடர்ந்து செய்யப்படும் செலவாக (சுநஉரசசiபே நுஒயீநனேவைரசந) இருப்பதும் நீடிப்பதும் எவ்வளவு கடைந்தெடுத்த மூடத்தனமான செலவு!

அடுத்து, வேலை வாய்ப்பு இன்மையாலும், சத்தான உணவுக்கு ஒரு வேளைக்குக்கூட வக்கில்லாமலும் உள்ளவர்கள் பல கோடிப் பேர் உள்ள தமிழ்நாட்டில், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ழுனுயீ) 5 விழுக்காடான 50,000 கோடி ரூபாயோ அல்லது 4 விழுக்காடான 40,000 கோடி ரூபாயோ - மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக வெறும் 8,245 கோடி ரூபா மட்டுமே இன் றைய அரசால் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இது கொஞ்சமும் போதாதது என்பதை யார்தான் சொல்லுவது?

கல்வித் துறை வளர்ச்சிக்கு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.04 விழுக்காடான வெறும் 20,936 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கழிப் பறைகள் இல்லாத பள்ளிகளுக்கு நீர் வசதியுள்ள கழிப் பறைகள் கட்டுவதற்குக் கூடப் போதாது. அப்புறம் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தம் எப்படி முடியும்? அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க எப்படி வழி ஏற்படும்?

அரசியல் படுத்தப்படாத-வெறும் நல்லொழுக்கப் பரப்புரை செய்கிற தலைவர்களுக்கும், பொது மக்களுக்கும் இவற்றைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.

நம் நாட்டின் இயற்கை வளம் நீர் நிலைகளும், காடுகளும் ஆகும். இவை இன்று பாழ்படுத்தப் பட்டுவிட்டன.

நம் நாட்டின் வருங்காலச் செல்வங்கள் நம் குழந்தைகளும், இவர்களைப் பெற்றெடுக்கும் தாய் மார்களும் ஆவர்.

எனவே,

1.            பள்ளிக்குச் செல்லும் எல்லாக் குழந்தைகளுக்கும்;

2.            பள்ளி வயதுள்ள-ஆனால் பள்ளிக்குச் செல்லாத எல்லாக் குழந்தைகளுக்கும்;

3.            கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கும் ஒரு வேளை சத்தான நல்ல உணவும், தரமான மருத்துவ மும் அளிக்கப்பட மட்டுமே அரசு இலவசத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

மானமுள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பத் தலை வனையும், தலைவியையும் அவமானப்படுத்தும் தன் மையில் - இலவச அரிசி, இலவச வேட்டி, இலவசச் சேலை, இலவச விசிறி முதலான வாக்குப் பிடிக்கும் தூண்டில் போன்ற ஊதாரித்தனமான செலவுத் திட்டங் களை இன்றையத் தமிழக அரசினர் உடனே கைவிட வேண்டும் என அன்புடன் கோருகிறோம்.

திருவள்ளுவர் பிறந்த நாடு - பெரியார் வாழ்ந்த நாடு-மானம் உள்ள தமிழர்கள் வாழும் நாடு என்பதற்கு அடையாளம்-இப்படி, இன்றைய அரசினர் செயல்படத் தூண்டுவதுதான். இது தமிழர் ஒவ்வொருவரின் கடமை யாகும்.

- வே.ஆனைமுத்து

Pin It