மகளிர் தினத்தன்று ஒரு செய்திச்சேனல் உழைக்கும் பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் வேலைக்குச் செல்லும் ஒரு படித்த பெண், “பெண்கள் வாழ்வில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை; 1947 முன்பு போலவேதான் இன்றும் உள்ளது; குடும்பத்திலும் சரி, வீட்டிலிருந்து வெளியே சென்று வீடு திரும்பும்வரை அனைத்து இடங்களிலும் சரி பெண்களை தாழ்வாக பார்க்கும் பார்வை மாறவேயில்லை. அரசியல் மாறினால்தான் எல்லாம் மாறும்.” என்று விரக்தியுடன் கூறினார். துப்புறவுப் பெண் பணியாளர் ஒருவர், “சுதந்திரம் என்னங்க சுதந்திரம்? வேலை செஞ்சாதான் சாப்பாடு. வேலைக்கு வர்றது மட்டும்தாங்க சுதந்திரம்.” என்று வேதனையுடன் பதிலளித்தார். இன்று ஏறக்குறைய நாம் மேலே கண்ட நமது உழைக்கும் பெண்களின் கூக்குரலை உலகின் பெரும்பாலான பெண்களிடமும் வெவ்வேறு மொழிகளிலும் கேட்க முடியும்……

பெருந்தொற்றுக்கால பாசிசம் (Pandemic Fascism)

கொரோனா பேரிடருக்கு முன்பே உலகமெங்கும் உள்ள முதலாளிகள் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் மிகை உற்பத்தி நெருக்கடியினால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். கொரோனா காலகட்டத்தில், தொழிலாளிகளை வீட்டில் பூட்டிவிட்டு முதலாளிகள் பல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றினர். நிரந்தர வேலைகள் பறிக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர் முறை பரவலாக்கப்பட்டன. இந்தியாவில் 44 தொழிலாளர் உரிமை மற்றும் நலச்சட்டங்கள் நீக்கப்பட்டு 4 சட்டங்களாக சுருக்கப்பட்டன. சுமார் 12 கோடி தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். அனைத்து தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. ஏராளமான சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டு அவ்விடத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், ஆன்லைன் வர்த்தகமும் திணிக்கப்பட்டன.women revolution 1“1970களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரே நேரத்தில் பணவீக்க அதிகரிப்பு மற்றும் குறைந்த வளர்ச்சி-தேக்க நிலைக்கான நிலைமைகள் உருவாகியுள்ளன. 2023-ல் வேலைவாய்ப்பின் வளர்ச்சி விகிதம் 2%லிருந்து 1% மாக குறையும்.” என சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐஏல்ஓ எச்சரித்துள்ளது. இந்த வேலையிழப்பில் அதிகமாக வேலை இழந்தது பெண் தொழிலாளர்கள் ஆகும். தனியார் நிறுவனங்களின் ஆட்குறைப்பில் 5 ல் 3 பேர் பெண்கள் ஆகும். ஊரடங்கு காலத்தில் சுமார் 47% பெண்கள் வேலையிழந்தனர். பல ஆண்டுகளாக பணியாற்றிய நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. நிறுவனங்களுக்கு மாற்றாக முறைசாரா தொழில்களும், வீட்டு வேலை பணியாளர் வேலைகளுமே அவர்களுக்கு கிட்டின. இன்று முறைசார் தொழில்களில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 30%. மற்றவை அனைத்தும் மிகுந்த சுரண்டல் கொண்ட திறன்சார் பணிகளல்லாத வேலைகளே. விவசாய அழிவு பெருமளவிலான திறன்வாய்ந்த கிராமப்புற விவசாயப் பெண்களை நகரங்களில் முறைசாரா தொழில்களிலும் மற்றும் குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் தள்ளியுள்ளது. சம்பளம் பெறும் உழைக்கும் பெண்களில் 91% முறைசாரா தொழில்களில் உள்ளனர்.

2021 உலக வங்கியின் சர்வேயின்படி, உலகளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு பற்றிய கணக்கெடுப்பில், இந்தியா 23% ல் மிகத் தாழ்ந்த நிலையில்உள்ளது. இந்தியாவின் நிலை கிட்டத்தட்ட பிற்போக்கான இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் போர்களினால் பாதிக்கப்பட்ட சிரியா, ஈராக், ஈரான் போன்ற அராபிய இஸ்லாமிய நாடுகளுக்கு அருகிலும் சற்று உயர்வாகவும் உள்ளது. இவை இந்தியா அரைநிலவுடைமை பிற்போக்கு ஆணாதிக்க சமூக கட்டமைப்பை தளர்த்தாமலே முதலாளித்துவ உற்பத்தியை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும், இங்கு ஆண்பெண் ஜனநாயக சமூக அரச கட்டமைப்புகள் மிக பின்தங்கிய நிலையில் உள்ளதையும் உணர்த்துகிறது. கிட்டத்தட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 1987-லிருந்தே 46 % லிருந்து 2017-ல் 23% மாகவும் குறைந்து வந்து 2022- இறுதி காலாண்டில் 9% மாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே பெண்கள் பொருளாதார ரீதியாக மிக தாழ்ந்த நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இச்சமயத்தில் பெண்களை சமூக பண்பாட்டுரீதியாக தாழ்த்துவதற்கு வேகவேகமாக பாசிச மத, சாதி, சமூக ஆணாதிக்க கருத்தியல் பிரச்சாரங்கள் ஒன்றிய அரசால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பெண்கள் ஒடுக்குமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கும், சமூகம் ஆணாதிக்க கருத்தியல்களைக் கொண்டு ஒடுக்குவதற்கும் தயார் செய்வதற்காக இப்பிரச்சாரங்களைப் பயன்படுத்துகின்றன. பெண் வீட்டுக்குள்ளே இருப்பதற்கும், குடும்பத்தை பேணுவதற்கும் மட்டுமே தகுதியானவள் என்றும், மனைவி, தாய்மை என்ற இரண்டு பிரதான பாத்திரங்களே அவளுக்கு அவசியமானவை என்று வலியுறுத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் தொழிலாளியாகவும், பாலினரீதியாகவும் சுரண்டப்பட்டு வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். குடும்பங்களில் பழைய நிலபிரபுத்துவ பண்பாடுகளை மீட்டுருவாக்கி கல்வி, வேலையிலிருந்து பின்னுழுக்கும் பண்பாட்டு பணிகள் வேகமெடுக்கின்றன. வறுமையினால் மிகுந்துவரும் பாலியல் தொழில் மற்றும் நவீன முறையில் சீரழிந்துள்ள இணைதள பாலியல் தொழிலைக் கொண்டும் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகள் கேடுகெட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். மொத்தமாக முதலாளித்துவ சந்தைக்கு இரண்டாம்தர மலிவு கூலியுழைப்பாளியாக பெண்ணை உற்பத்தி செய்யும் வேலையை பாசிசம் சிரமேற்கொண்டு செய்கின்றன. ஆதலால் உழைக்கும் பெண்ணே! இரத்தத்தின் வேர்வைகளின் ஆற்றில் சோர்ந்து மூழ்க வேண்டுமா? அல்லது நீந்தி அக்கரை சேர வேண்டுமா?

ஒவ்வொரு வரலாற்றையும் புரட்டி போட்ட மகத்தான உன்னத கைகள்..... பாட்டாளிகளுடையது!........ ஒவ்வொரு சமூக மாற்றத்திற்கும் பிரளயத்திற்கும் இறுதிமணி அடிப்பவர்கள்..... மகத்தான உன்னத உழைக்கும் பெண்களே! உலகின் ஒவ்வொரு நெருக்கடியின் போதும் கடுமையாக சுரண்டப்பட்டவர்களான பெண் தொழிலாளர்களின் எழுச்சியே புரட்சியாக மலர்ந்தது!... “பெண்கள் சொர்க்கத்தின் ஒரு பாதி ஆவார்கள்” என்றார் மாவோ. சொர்க்கத்தின் இந்த ஒரு பாதி எழுச்சியுறவில்லையென்றால், பழைய உலகத்தை துடைதெ்தெறிய வேண்டிய புரட்சிப் புயல்கள் வெறும் தூவானமாகி விடும். இதுவரை நடந்த மாபெரும் சோசலிச புரட்சிகளில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அனைத்து மக்களுக்கும் புரட்சிகர உத்வேகம் அளிக்கும் அந்த வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் அவசியம் உள்ளது.

சோசலிச கட்டுமானங்களில் எழுந்த சர்வதேச மகளிர் தினம்

பெண் தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை, வாக்குரிமை கோரி நடத்திய போராட்டங்களே சர்வதேச மகளிர்தினமாக உருவெடுத்தது என நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவை கம்யூனிச இயக்கங்களினாலும் புரட்சிகளாலும் செதுக்கப்பட்டு எழுந்தது என பரவலாக அறியப்படவில்லை. . மார்க்சியம்தான் பெண்விடுதலை குறித்த இயங்கியல் பார்வையை கொண்டிருக்கிறது. மார்க்சியம்தான் பெண்ணடிமைத்தனத்தின் வேர் தனிச்சொத்துடைமை என்றும், சமூகரீதியாக உற்பத்தி நிறுவனத்தில் பெண்ணினத்தை முழுமையாக மறுஇணைப்பு செய்வது பெண்சுதந்திரத்தின் முதல் நிபந்தனை என ஆய்ந்து அறிவித்தது. கம்யூனிச இயக்கங்களின் தொடர் வளர்ச்சியே பெண்களை அரசியல் உரிமைகளுக்காக அமைப்பாக்கியது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபட்ட அளவுக்கு மட்டுமே பழமையானது. ஆகவே, அதனை ஒழிப்பது வர்க்கங்களை ஒழிப்பதைச் சார்ந்திருக்கிறது. அதாவது சோசலிசப் புரட்சியைச் சார்ந்திருக்கிறது என்று மார்க்சியமே அறிவித்தது. அதனை ரஷ்யா, சீனா, கியூபாவில் நடைமுறைப்படுத்தியது.

பகுதி-I    

பிரெஞ்சுப் புரட்சியில் மகளிரின் மகத்தான பங்களிப்பு

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்துதான் பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக அமைப்பாக தொடங்கினர். 1789-ல் ரொட்டிப்பிரச்சினைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பாரிசின் ஏழை விவசாய பெண்களும், அரைப்பாட்டாளிவர்க்க பெண்களும் தொடக்கத்தில் பெண் பாலினத்தின் மீதான ஒடுக்குமுறை பிரச்சினைக்காக எழவில்லை, தங்கள் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். பிரெஞ்சு மன்னனின் கடும் வரிவிதிப்புக்கு எதிராக புரட்சிகர விவசாய மக்கள் கிளர்நெ்தெழுந்து பாஸ்டில் சிறையை தகர்த்து புதிய நிர்ணய சபையைக் கூட்டினர். அதே வேளை கடும் பஞ்சத்தில் சுரண்டப்பட்ட பாரிஸ் விவசாய, தொழிலாளர் பெண்கள் குறைந்த விலையில் ரொட்டி கோரி வெர்ஸெய்ல்ஸ் அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். மன்னனையும் அரசியையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். அரண்மனை காவலர்களிடம் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றி ஆண்களிடம் தந்தனர். ஆம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்கள் தொழிலாளர்களுக்கும் பெண்களுக்கும் புதிய உலகை படைக்கும் உத்வேகம் பற்றி படர்ந்தது. ஆம் உலகின் முதல் ஜனநாயக குடியரசு மலர்ந்தது.

தொழிற்புரட்சியும் முதலாளித்துவ பெண்கள் இயக்க தோற்றமும்

தொழில் புரட்சியின்போது, தொழிற்சாலைகள், நகரங்களின் வளர்ச்சியும் பெண்கள் குழந்தைகளை வீடுகளை விட்டு தொழிற்சாலைக்குள் இழுத்து வந்தது. குடும்ப வாழ்வை அழித்து பலமணிநேரம் ஆண்களையும் பெண்களையும் சுரண்டியது. அப்போது கல்வி, வேலைத்தளங்களில் நுழைந்த மத்தியவர்க்க முதலாளித்துவ பெண்கள் மற்றும் பாட்டாளிவர்க்க பெண்களிடையே பெண் உரிமைகளுக்கான இயக்கங்கள் தோன்றின. அவை துவக்கத்தில் முதலாளித்துவ பெண்கள் இயக்கமாக தோன்றின. வசதிபடைத்த பெண்கள் முதலாளித்துவ சமூகத்திற்குள்ளேயே ஆணுக்கு சரிசமமான பெண்களின் உரிமைகளையும், உயர்வர்க்க பெண்களுக்கான வாக்குரிமையையும் கோரி தங்கள் எல்லைகளை சுருக்கிக் கொண்டது. அதேவேளை பாட்டாளிவர்க்க பெண்களுக்கான சமத்துவத்தை நிராகரித்தது. ஆனால் பாட்டாளிவர்க்க பெண்கள் சமகூலிக்காகவும், முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பு போன்ற போராட்டங்களில் பெண் தொழிலாளர்களின் போராட்டங்கள் மேலெழும்ப ஆரம்பித்தன.

முதலாம் அகிலத்தின் பங்களிப்பு

1864-ல் “உலக தொழிலாளர் சங்கம்” என்ற முதல் அகிலம் தோழர்கள் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தலைமையில் உருவானது. பெண்குலம் முழுவதன் முழுவிடுதலைக்கான போராட்டத்தில் முதலாம் அகிலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் வழிகாட்டியது. தொழிற்சாலைகளில் பெண் உழைப்பை தடைசெய்ய வைக்கப்பட்ட கோரிக்கையை எதிர்த்தது. தொழிற்சங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய பாட்டாளிவர்க்கத்தைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் ஆகிய இருசாராரின் ஒட்டுமொத்தமான வர்க்க போராட்டம் அவசியமானது என்பதை வலியுறுத்தியது. பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அகிலத்துடன் இணைக்கப்பட்டன. இவை உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்திற்கு கருத்தியல் வலுவை கூட்டி எழுச்சியை ஏற்படுத்தின. அவை பாரிஸ் கம்யூனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வாயிலை திறந்துவிட்டது.

பாரிஸ் கம்யூனில் பெண்கள்

1871-ல் பிரான்சில் ஆண், பெண் தொழிலாளர்கள் 13 மணிநேரம் வாரத்தில் ஆறுநாட்கள் வேலை செய்தனர். கணவன்மார்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. வறுமை பல உழைக்கும் பெண்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளியது. வைக்கோலும் காகிதத்தாளும் கலந்த ரொட்டியை நீண்ட வரிசையில் இருந்து பெற வேண்டியிருந்தது. பேரரசன் லூயி போனபர்டின் பிரெஞ்சுப் படைகள் பிரஸ்ஸியர்களால் தோற்கடிக்கப்பட் பிறகு, பாரிசின் தொழிலாளர்கள் கிளர்நெ்தெழுந்து உலகின் முதல் தொழிலாளர் குடியரசை அறிவித்தனர். உழைக்கும் வர்க்க பிரதிநிதிகள் நேரடி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்த பொதுவுடைமை அரசாங்கம்-கம்யூன் உருவானது. கம்யூனை பாதுகாக்க தடையரண்களில் பெண்கள் தலைமையில் போராளிகள், அவசர ஊர்தி நிலையங்கள், உணவகங்கள், மருத்துவ பணியாளர்கள் அமைக்கப்பட்டன. முதலாம் அகிலத்தின் பகுதியாக பெண் தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவை வெர்ஸெய்ல்ஸ் சண்டை நிறுத்தத்திற்கு எதிராக கம்யூனை பாதுகாக்க அனைத்து பெண்களும் ஆயுதமேந்துவோம்! என சுவரொட்டிகள் ஒட்டினர். வெர்செய்ல்ஸ் படைக்குழுக்கள் கம்யூனை இரத்தச் சேற்றில் நசுக்குவதற்குப் பாரிசுக்குள் நுழைந்ததற்கு முந்தைய நாள் ஆண், பெண் தொழிலாளர்களுக்குச் சம ஊதியம் அறிவிக்கப்பட்டது.

பகுதி-II

மேநாள் எழுச்சியில் சமூக ஜனநாயக மகளிர் இயக்கம்

அமெரிக்காவில், சிகாகோ நகரில் 1886-ல் மே 1ல் 8 மணிநேர வேலைநேரத்திற்கான மாபெரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடந்தது. பல தொழிலாளர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். பின்பு ஆகஸ்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட நான்கு தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 1889-ல் பாரிசில் இரண்டாவது அகிலம் என்ற “சோசலிஸ்ட் அகிலம்” தோழர் ஏங்கெல்சின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டது. அகிலத்தின் முதல் மாநாட்டில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் கிளாரா ஜெட்கின் மற்றும் எலியனார் மார்க்ஸ், பெபல், பிளக்கனாவ் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர். அதில் தோழர் கிளாரா பாட்டாளிவர்க்க மகளிர் இயக்கத்திற்கான திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். “பெண்கள் சோசலிசத் தொழிலாளர்களுடன் தோளோடு தோள் நின்று போராட்டப் பணிகளில் ஈடுபடுவதோடு, அனைத்து உரிமைகளையும் தாங்களே எடுத்துக் கொள்வதிலும் உறுதியாக உள்ளனர்.” என உரையாற்றினார். அதில் பெண் தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆண்பெண் சமத்துவம் குறித்த தீர்மானங்களோடு, எட்டு மணி நேர வேலைநாள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் சர்வதேச தொழிலாளர்களின் போராட்டங்களுக்கான மே தின தீர்மானமும் நிறைவேறின.

முதலாளித்துவ பெண்ணியத்தை முறியடித்தனர்

1896-ல் கோத்தா நகரில் நடைபெற்ற ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் பேராயத்தில் தோழர் கிளாரா புகழ்மிக்க உரை நிகழ்த்தினார். “ மகளிர் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லக்கூடிய மகளிர் இயக்கம் எதுவும் கிடையாது. ஏனெனில் வர்க்கங்களாக பிளவுண்டிருக்கும் சமுதாயத்தில் “முதலாளித்துவ மகளிர் இயக்கமும், உழைக்கும் வர்க்க மகளிர் இயக்கமும் மட்டுமே உள்ளன. எனவே பாட்டாளிவர்க்க மகளிர் விடுதலை இயக்கமானது- முதலாளித்துவ மகளிர் இயக்கத்தைப் போன்று அவளுடைய வர்க்கத்தைச் சார்ந்த ஆண்களுக்கெதிராகப் போராடும் இயக்கமாக இருக்க முடியாது….அவளுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் ஆண்களுக்கெதிரான சுதந்திரமான போட்டி அல்ல, மாறாக உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை படைப்பதேயாகும்.” இவ்வாறு சமூக ஜனநாயக மகளிர் இயக்கமானது பெண்நிலைவாதம், முதலாளித்துவ சீர்திருத்தவாம் போன்றவற்றிலிருந்து கோட்பாட்டுரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் தெளிவான எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு புரட்சிகரமான பாட்டாளிவர்க்க இயக்கமாக வளர தோழர் கிளாரா தலைமை தாங்கி உதவினார்.

உலக சோசலிச பெண்கள் மாநாடு

சோசலிஸ்டு அகிலத்தின் ஏழாவது மாநாட்டில் ஜெர்மனியில் “உலக சோசலிஸ்டு பெண்கள் மாநாடு” நடைபெற்றது. இதில் வயது வந்த ஆண்பெண் அனைவருக்குமான வாக்குரிமை என்ற தீர்மானம் ஆஸ்திரிய நாட்டு பெண் தோழர்களை எதிர்த்து தோழர் அலெக்சாண்டிரா கொலண்டை, ரோசா லக்சம்பர்க் போன்ற தோழர்களின் உதவியுடன் பெரும்பான்மையாக நிறைவேறியது. சோசலிஸ்ட் பெண்கள் அகிலத்தின் செயலாளராக தோழர் கிளாரா ஜெட்கின் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் 1908-ல் மே 2ல் உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமைகளை கோரி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இது ஒரு நகரத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்பட்ட முதல் மகளிர் தினம் ஆகும். 1910-ல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபென்ஹெகனில் இரண்டாவது சர்வதேச சோசலிச பெண்கள் மாநாட்டில் தோழர் கிளாரா தலைமையில் உலகளாவிய பெண்களின் போராட்ட நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாக சர்வதேசிய மகளிர் தினம் முன்மொழியப்பட்டது. “பெண்களின் வாக்குரிமை உள்ளிட்ட பாட்டாளிவர்க்க பெண்களின் உடனடிக்கோரிக்கையுடன் முதலாளித்துவ சமுதாயத்திற்கெதிரான பாட்டாளி வர்க்க ஆண்கள், பெண்களின் புரட்சிகர முன்னேற்றத்தின் ஒரு உள்ளடக்கக் கூறை இந்நாள் பெற்றிருக்க வேண்டும்” என முன்மொழியப்பட்டது.women revolution 2இக்காலத்தில் ஓட்டுரிமையைக் கொண்டு பாராளுமன்ற செயல்பாட்டில் ஜனநாயக நடைமுறையின் மூலம் உழைக்கும் மக்களின் பங்கெடுப்புக்கான போராட்டம் அவசியமாயிருந்தது. ஆலைகளில் பணியாட்களாக வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்ப முந்தித் தள்ளியது. ஆதலால் அடுத்த ஆண்டில் அதாவது 1911-ல் மார்ச்-19 தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து நாடுகளில் உலக மகளிர் தினத்தில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் பெருமளவிலான உழைக்கும் பெண்களின் பங்கேற்புடன் போர்க்குணத்துடன் நடந்தன. குடும்ப பெண்கள் குழந்தைகளை கணவனிடம் விட்டு விட்டு கூட்டங்களுக்குச் சென்றனர்.

ஜெர்மனியில் மகளிர்தின கூட்டத்தில் 30,000 பெண்கள் கலந்து கொண்டனர். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்களின் தொழிற்சங்கத்தில் 1,50,000 பெண்கள் சமூக ஜனநாயகப் பதாகையின்கீழ் அமைப்பாக்கப்பட்டுள்ளனர் என சமத்துவம் பத்திரிக்கையில் தோழர் கிளாரா குறிப்பிடுகிறார். 1913-ல் மார்ச்- 8ம் தேதிக்கு மகளிர்தினம் மாற்றப்பட்டு போராட்டதினமாக வடிவம் மாறியது. ஒவ்வொரு மகளிர்தினத்திலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக சோசலிச கட்சிகளில் இணைந்தனர் மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. உலக பெண் சோசலிஸ்டுகள் உலகெங்கும் உள்ள போராட்டங்களில் ஒன்றுபட்டு கலந்து கொண்டனர். தீரம் மிக்க மகளிர்தினம் உழைக்கும் மகளிரை அமைப்பாக்க உதவின.

1913-ல் முதன்முதலில் கொடுங்கோலன் ஜார் ஆட்சியின் கீழ் ரஷ்யாவில் கடும் தடையினூடே மகளிர் தினம் நடந்தது. பிராவ்தா, லூச் போன்ற பத்திரிக்கைகளில் உழைக்கும் மகளிர்தினத்திற்கான சிறப்புக் கட்டுரைகள் வெளிவந்தன. கூட்டங்கள் தடை செய்யப்பட்ட போதும் பெட்ரோகிராட்டில் “மகளிர் கேள்விகள்” என்ற ரகசிய பொதுமன்ற கூட்டத்திற்காக ஐந்து கோபெக்குகள் வசூலிக்கப்பட்டபோதும், அரங்கில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேச்சாளர்கள் கைது செய்யப்பட்டனர். 1914-ல் உலகப்போருக்கு முன் மார்ச் -8க்கு முன் பெண்தொழிலாளர்களிடம் அரசியல் பிரச்சாரத்திற்காக (“ரபோட்னிட்சா”) பெண் தொழிலாளி என்ற பத்திரிக்கை நதேழ்தா ஸ்க்ரூப்கயா, அலெக்சாண்டிரா கொலண்டை, இனெஸ்ஸா தோழர்களால் ரகசியமாக துவங்கப்பட்டது. பெண் தோழர்கள் வெளியிடுவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது 30 பெண் தலைமை தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தாமதமாக வந்த பெண் தோழர் அந்த பிரதியை அச்சிட்டு மார்ச்-8 ல் வெளியிட்டார். அவை அத்தினத்தன்று 12,000 பிரதிகள் விற்பனையாகின. பிராவ்தா, லூச் பத்திரிக்கை தோழர்களும் உழைக்கும் மகளிர்தினத்திற்கான பணிகளின்போது கைது செய்து கடுங்குளிர் வடக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இது “உழைக்கும் மகளிருக்கு வாக்குரிமை என்ற முழக்கத்தை “ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்!” என மாற்றியது.

பகுதி-III

கம்யூனிச மகளிர் இயக்கம் பிறந்தது

முதல் உலகப்போர் வெடித்தது. இரண்டாம் அகிலத்தின் தலைமையின்கீழ் பெரும்பாலான அமைப்பாக்கப்பட்ட சமூக ஜனநாயகப் பெண் தோழர்கள், ஏகாதிபத்திய முதலாளிகளின் தேசிய “தந்தையர் நாடுகளை” பாதுகாப்பவர்கள் என்ற நிலைக்கு தாழ்த்தப்பட்டனர். முதலாளித்துவ பெண்கள் போல் தேசியவெறி உணர்வு கொண்டு, ஏகாதிபத்திய போராட்டத்தின் நோக்கம், தன்மை பற்றி பாட்டாளிவர்க்கப் பெண்களிடம் பொய்கூறி ஏமாற்றி அவர்களை தொழிற்சாலைகளுக்கும் சமுதாய வாழ்க்கையின் அனைத்து பகுதிகளுக்கும் துரத்தியடித்தனர். அது முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைந்து வெறும் சீர்திருத்தவாத இயக்கமாக சீரிழிந்தது.

உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்!

அத்தருணத்தில் தோழர் லெனின், “ஒவ்வொரு நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரும் சொந்த நாட்டு அரசுக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் எதிராக ஆயுதங்களைத் திருப்ப வேண்டும். ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டு போராக மாற்ற வேண்டும்.தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவம் நீடு வாழ்க!” என அறைகூவல் விடுத்தார். தோழர் கிளாரா உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் 1915-ல் லெனினிய வழியில் போருக்கு எதிராக போராட அறைகூவல் விடுத்தார். 1915 மற்றும் 1916-ல் மார்ச்-8 ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் தேசியவெறி முதலாளித்து பெண்கள் இயக்கம் அதை தடுத்தது. அப்போது 1915-ல் நார்வேவில் மட்டும் உலகின் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட மகளிர் தினம் நடைபெற்றது.

பொறுமையை உடைத்தெறிந்து பொங்கியெழுந்தனர் பெண்கள்

1917-ஆம் ஆண்டு பிறந்தது. போரும் பசியும் பிணியும் விலைவாசி உயர்வும் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. போர்முனைக்கு ஆண்கள் பெருமளவிற்கு சென்றபிறகு, தொழிற்சாலைகளில் பெருமளவில் அவ்விடத்தில் குறைவான கூலியில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டனர். “போரை நிறுத்த வேண்டும், மன்னராட்சி ஒழிய வேண்டும்” என்று போல்ஷ்விக்குகளின் பிரச்சாரத்தை மேற்கொண்டு புரட்சிகர சோசலிஸ்ட் பெண்கள் போராடினர். 1917- மார்ச்-8-ல் முதன்முறையாக வேலைநாளில் பெட்ரோகிராடில் பெண் தொழிலாளர்கள் அலையென திரண்டு, வேலைநிறுத்தத்தை அறிவித்து பேரணி தொடங்கினர். வேலை செய்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளர்களை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுமாறு அறைகூவி சாலையில் அழைத்து வந்தனர். “ நமக்கு உணவு வேண்டும். போர்நிறுத்தம் வேண்டும். சுதந்திரம் வேண்டும்.” என்ற முழக்கம் வெள்ளமென பாய்ந்தது. சுமார் 1,30,000 ஆண்பெண் தொழிலாளர்களின் பேரணி ஜாராட்சியை சாய்க்க புயலென விரைந்தது. அத்தினத்தின் தீப்பொறி பெருங்காட்டுத் தீயென மாறி பிப்ரவரி புரட்சி என்ற மார்ச் புரட்சிக்கு துவக்கமாக அமைந்தது.

நவம்பர் புரட்சியும் ஆண்பெண் சமத்துவ உரிமைச் சட்டங்களும்

மார்ச் புரட்சியைத் தொடர்ந்து கெரன்சி அரசை எதிர்த்து “இந்த அரசு முதலாளித்துவ அரசு. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயப் பிரதிநிதிகளின் சோவியத் குடியரசை அமைக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!” என்ற தோழர் லெனினின் முழக்கம் நவம்பர் புரட்சிக்கு இட்டுச் சென்றது. உழைக்கும் மக்களின் முதல் சோவியத் குடியரசு உருவானது. லெனின் தலைமையிலான சோவியத்தின் முதல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அலெக்ஸாண்டிரா கொலண்டை உழைக்கும் மக்களுக்கான மற்றும் ஆண்பெண் சமத்துவம் கொண்ட அரசமைப்புச் சட்டங்கள் உருவாக்கினார். வயது வந்த ஆண்பெண் அனைவருக்கும் வாக்குரிமை, சமவேலைக்கு சமஊதியம், கர்ப்பிணி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வேலைத்தளங்களில் குழந்தைகள் பராமரிப்பு தளங்கள், விவாகரத்து சட்டவிதிகள் எளிமையாக்கல், திருமண உறவில் பிறந்த குழந்தையும், திருமண உறவிற்கு வெளியில் பிறந்த குழந்தையும் சட்டப்படியான உரிமை பெறுதல், கருக்கலைப்பிற்கான அனுமதி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சமத்துவ சட்டங்கள் உருவாக்கப்பட்டன. பொது உணவகங்கள், பொது சலவை நிலையங்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு பெண்களை வீட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பெண்ணடிமைத்தனத்தின் மூலவேர்களை அறுத்தெறிதல்

“பெண்களுக்குச் சமத்துவம் மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுவதன் மூலவேர்களை சோவியத் புரட்சி பிடுங்கியதைப் போல, உலகத்தில் வேறு எந்தக் கட்சியும் புரட்சியும், எந்தக் காலத்திலும் கனவில் கூட நினைத்தது கிடையாது. இங்கே சோவியத் ருஷ்யாவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் இல்லாத நிலைமையின் சுவடுகூட சட்டத்தில் விட்டு வைக்கப்படவில்லை…..இது பெண்விடுதலையின் முதல் நடவடிக்கை மட்டுமே. இரண்டாவதும், மிக முக்கியமானதுமான நடவடிக்கை நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் தனிச்சொத்துரிமை ஒழிப்பதாகும்- இது மட்டுமே-தனித்தனியாக வீடுகளை நிர்வகிப்பதிலிருந்து விரிந்த அளவிலான சமூகப்படுத்தப்பட்ட குடும்ப சேவைகளுக்கு மாற்றுவதன் மூலம் “வீட்டு அடிமைத்தனத்திலிருந்து” பெண்களை விடுதலை செய்து, அவர்களுடைய முழுமையான விடுதலைக்கு, உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும்.” என லெனின் உழைக்கும் பெண்கள் சர்வதேச தினத்தில் உரையாற்றினார்.

1919-ல் “கம்யூனிஸ்ட் அகிலம் என்ற மூன்றாம் அகிலம் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்டு கம்யூனிச மகளிர் இயக்கத்திற்கு தத்துவார்த்த அமைப்பியல் தலைமை வழங்கியது. 1921-ல் மாஸ்கோவில், தோழர் கிளாரா ஜெட்கின் செயலாளராக தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் இரண்டாவது மாநாடு, ரஷ்ய புரட்சிக்கு இட்டுச் சென்ற 1917 மார்ச்-8-ல் நடைபெற்ற பீட்டர்ஸ்பர்க் நகரப் பெண்களின் பிரம்மாண்ட பேரணியின் நினைவாக சர்வதேச மகளிர்தினம் மார்ச்-8 ஐ நிர்ணயித்தது. மூன்றாம் அகிலத்துடன் கூடவே, கம்யூனிச மகளிர் இயக்கம் உலகம் முழுவதும் பரவியது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள திரளான பெண்களை புரட்சிகரமானவர்களாக்கியது.

சீனத்தில் பெண்விடுதலை

சீனாவில் பிற்போக்கு நிலபிரபுத்துவ சமூக கட்டமைப்பிலும் நகரங்களில் தொழிற்சாலைகளில் முதலாளித்துவத்தாலும் கடுமையாக ஒடுக்கப்பட்ட பெண்கள் மாவோ தலைமையிலான புரட்சிகர இயக்கத்தினால் எழுச்சியடைந்தனர். நிலபிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களில் இணைந்து கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கமாக வளர்ந்தனர். 1927-ல் ஹீபே மாநிலத்தில் சர்வதேச மகளிர் தினத்தன்று நடந்த மாநாட்டில், “புரட்சி மட்டுமே பெண்கள் விடுதலைக்கான ஒரே வழி” என்ற பிரகடனப்படுத்தினர். 1934-ல் மாவோவின் நீண்ட பயணத்தில் 25,000 மேற்பட்ட பெண் புரட்சியாளர்கள் தீரத்துடன் பங்கெடுத்தனர். “முதலாளித்துவ பொருளாதார ஒடுக்குமுறையில் இரட்டைத் தளைகளால் கட்டுண்டுள்ள பெண்களின் எழுச்சியும் அவசியமுமே புரட்சியை தீர்மானிக்கிறது.” என்றார் மாவோ.

1949-ல் மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் தலைமையில் நடந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் மக்கள் குடியரசு அமைந்தது. நிலபிரபுத்துவ ஆணாதிக்க கொடுமைகளில் உழன்ற பெண்கள் முதன்முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்தனர். பெண்களை மிகக் கடுமையாக பாலியல்ரீதியில் ஒடுக்கிய கால் பாதங்களை குறுக்கும் முறையும் விபச்சாரமும் 1949-ல் ஒழிக்கப்பட்டது. 1950-ல் சுதந்திரத் திருமணம், வரதட்சணை தடை போன்றவற்றவையும், பணியிடங்களில் ஆண் பெண் சமஉரிமை சட்டங்களும் இயற்றப்பட்டன. அதன் பிறகும் வியட்நாம், கியூப புரட்சிகளும், வரலாறுகளும், ஆசிய நாடுகளின் காலனிய விடுதலை போராட்டங்களும், இந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் விவசாய, தொழிலாளர் பெண்களின் எழுச்சிகளின் சாதனைகளை பதிவு செய்தவண்ணமே உள்ளன…..இன்று புரட்சிகள் நடைபெற்ற பல்வெறு நாடுகளில் சோசலிசம் பின்னடைந்து முதலாளித்துவம் தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி இழுக்கும் மாபெரும் இயக்க ஆற்றல் உழைக்கும் மக்களுக்கும் மகளிருக்கும் உண்டென்பதை வரலாறு நிரூபித்தே வருகிறது.

இறுதியாக மக்கள்தொகையின் பாதியான இரட்டை சங்கிலிகளால் பூட்டப்பட்டிருந்த உழைக்கும் பெண்களின் எழுச்சியினாலே புரட்சிகள் சாத்தியமாயின! “வரலாற்றைப் பற்றி ஓரளவேனும் அறிந்த ஒருவர் பெண்ணிய எழுச்சி ஏற்படாமல் மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேயிருப்பர்.” என்ற மார்க்ஸ் சொற்கள் எவ்வளவு உன்னதமானவை! ஆனால் உழைக்கும் மக்களின் எழுச்சி மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கொள்கையாக கொண்ட கம்யூனிச இயக்கங்களினாலே சாத்தியப்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு!

ஆதலினால்…… உழைக்கும் பெண்களே! இன்றைய உங்கள் சங்கிலிகளைக் கண்டு கலக்கம் வேண்டாம்! மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான ஆயுதம் கொண்டு பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற புரட்சியை முன்னெடுப்போம்!

துணை நின்றவை

  1. மகளிர் விடுதலை இயக்கங்கள் - மூன்று கட்டுரைகள்- கிளாரா ஜெட்கின். கேடயம் வெளியீடு
  2. பாரிஸ் கம்யூனில் பெண்கள் நூல்
  3. மார்க்சியமும் பெண்விடுதலையும் நூல்
  4. சர்வதேச உழைக்கும் மகளிர்தினம்- அலெக்சாண்டிரா கொலண்டை
  5. மகளிர் தினம் உண்மை வரலாறு-இரா.ஜவஹர்

-  கவின்மொழி