அறிவு தான் பரிணாமம். அறிவு தான் அகிலம். அறிவு தான் தர்மம். அறிவு தான் ஆசான். அறிவு தான் அழகு. ஆனால் அது அறமோடு கூடிய அறிவாக வேண்டும் என்பது தான் நம்மை போன்றோரின் ஆவல். 

இந்த உலகத்தில் யாருக்கும்....... யாருக்கும்........ பிடிக்காத மிக முக்கியமான ஒன்று அறிவுரை. ஆக நான் சொல்வது அறிவுரை இல்லை. அறிவுரை மாதிரி இருக்கலாம். கொஞ்சம் உற்று கவனித்தால் அதில் இருக்கும் அக்கறை தெரிய ஆரம்பித்து விடும். பொதுவாகவே அறிவுரை சொல்பவனைப் போல அயோக்கியன் ஒருவன் இருக்க முடியாது என்பது தான் என் கருத்தும். ஆக...... இது அறிவுரை இல்லை. ஆதங்கம்.

கொரோனா பிரச்சனை பூதாகரமாக இருக்கும் இந்த சூழலில் இந்த முதல் விஷயம் கனகச்சிதமான பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

*
spitting
எச்சில் துப்புவது..... அதாவது சாலையில்... எச்சில் துப்புவது. 

பொது இடங்களில்.... எது பற்றியும் கவலைப்படாமல் துப்பி விட்டு செல்வது. 

அதுவும் வண்டியில் போகும் போதே துப்புவது. 

இதற்கெல்லாம் என்ன செய்யலாம். அரசும் அபராதம் எல்லாம் போடுவதாக சொன்னது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சாலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவன்/ஒருத்தி துப்புவது அரசுக்கு எப்படி தெரியும். அந்தளவுக்கு மூலை மூலைக்கு கேமரா வைத்து கண்காணிக்கும் அளவுக்கா நம் நாடு முன்னேறி இருக்கிறது. சிக்னலில் இருக்கும் கேமராவுக்கே அவ்வப்போது கண் தெரிவதில்லை. ஆக....அப்படி துப்புகிறவனை யார் தடுப்பது. அவர்களை திருத்துவது என்பது முடியாது. ஆனால் தடுக்கலாம். தொடர்ந்து தடுத்தலின் வாயிலாக திருத்தம் தானாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

ஆக.....அவர்கள் அருகே சென்று வண்டியை நிறுத்தி "இப்படி துப்புவது தப்பு... அதுவும் இந்த மாதிரி பெருந்தொற்று இருக்கும் காலத்தில் இப்படி நீங்கள் நடந்து கொள்வது தவறு" என்று முகத்துக்கு நேராக சொல்லி விட வேண்டும். நான் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்த உலகை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் அதை செய்ய வேண்டும் என்பது தான் வேண்டுதல். மீறினால் என்ன செய்வார்கள். திட்டுவார்கள். முறைப்பார்கள். அதை தாண்டி எதுவும் செய்ய முடியாது. நியாயம் நம் பக்கம் இருக்கையில்.. நீங்கள் செய்தது தவறு இனி செய்யாதீர்கள் என்று சொல்லுவதில் தைரியம் கூடத்தான் செய்யும். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை கிறுக்கன் மாதிரி பார்த்து விட்டு போகிறவர்கள் நிறைய. அதற்காக கிறுக்கத்தனங்களை பார்த்து கொண்டு சும்மா இருக்க நாம் எதற்கு.

இந்த இடத்தில் ஸ்னேகன் சொன்ன கவிதை ஒன்றை பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எல்லோரையும் போல பிறந்து 

எல்லோரையும் போல வளர்ந்து

எல்லோரையும் போல சாக என்னால் முடியாது. 

ஏனெனில் அவர்கள் வேறு. நான் வேறு.

*

அடுத்து..... நாம் அடிக்கடி சாலையில் பார்க்கும் வேகம். விவேகமற்ற வேகம். அது பற்றியும் பகிர வேண்டும் என்று யோசித்தேன்.

நிஜமாகவே உனக்கு தில் இருந்தா.... உன்னால வேகமா போய் மத்தவங்கள ஜெயிக்க முடியும்னா.......நீ ஓட்ட வேண்டிய இடம்...... பொதுமக்கள் செல்லும் சாலையல்ல நண்பனே. முறையான ரேஸ்க்கு போ. கலந்துக்கோ. நரேன் கார்த்திக் மாதிரி ஜெயிச்சு கப்பு வாங்கிட்டு வா.. அது உனக்கும் பெருமை ஊருக்கும் பெருமை. அதை விட்டு.. ஒப்பணக்கார வீதிலயும்.....காந்திபுர மேம்பாலத்திலயும் அத்தனை வேகமா ஓட்டறது கொஞ்சம் கூட நாகரீகமான செயலாக இருக்காது. அது முன்னால பின்னால போறவங்களுக்கு வெறுப்ப தான் உண்டாக்கும். ரோட்டுல போற ஒவ்வொருத்தனம் சபிச்சா........சபிக்கப்பட்ட அந்த வாழ்க்கை என்னாகும்னு யோசிக்கணும் இல்லையா. எத்தனை இதய நோயாளிகள் சாலையில் போகிறார்கள். அவர்கள் அருகே சென்று சைலன்சர் இல்லாத வண்டியை முறுக்கினால்... அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எப்போதாவது யோசித்திருப்பார்களா.

உங்களிலும் யாரேனும் அதை செய்ய கூடும். இனி செய்யாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் அதை செய்து கொண்டிருக்க கூடும். செய்ய கூடாது என்று சொல்லுங்கள். கெட்ட வார்த்தையில் அவன் திட்டினால் கூட...... சொல்வதை விட்டு விட கூடாது. அதை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். 

இதையெல்லாம் நாம் எதற்கு செய்ய வேண்டும் என்று கூட கேட்கலாம். நாமும் செய்யவில்லை என்றால் பிறகு யார் தான் செய்வார்கள். 

*

அடுத்து சைக்கிளை பயன்படுத்துவோம் என்பது தான் மூன்றாவது ஆதங்கம்.

இந்தா...... இங்க இருக்கற கடைக்கு........இந்தா...... இங்க இருக்கற நண்பனை பார்க்க....... இந்தா அந்த முக்குல இருக்கற மாமா வீட்டுக்குனு எல்லாவாற்றுக்கும் பைக் ஸ்கூட்டினு தான பயன்படுத்தறோம். ஏற்கனவே பூமி சூடேறி எப்படா வெடிப்போம்னு இருக்கு. இனியும் காற்றை மாசு படுத்தினால்... காலன் கழுத்தறுப்பான் என்பதை புரிந்து கொள்வோம். இனியும் பூமியை வெப்பப்படுத்தினால் உருகி கூழாவோம் என்பதை நினைவில் கொள்வோம்.

நமக்கே தெரியும். இந்த தூரத்துக்கு சைக்கிள்ல போனா போதும்னு. அந்த தூரத்துக்கெல்லாம்.......சைக்கிள்ல போவோம். உடலும் பலம் பெரும். ஊரும் கெடாது.

மாற்றம் வேண்டும் என்பவர்கள் அதை முதலில் மாற்றம் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். மற்றவங்க மாறட்டும்....அப்புறம் நாமும் மாறலாம் என்பது சோம்பேறித்தனம். நாம மாறுவோம்...... அவனும் மாறுவான்ங்கறது தான் வெறித்தனம்.

முதலில் நம்மை சுற்றி இருக்கும் மாசுகளை கட்டுப்படுத்துவோம். பிறகு அடுத்தடுத்து அது சுத்தமாகும். நான் ஒருத்தன் சரியா இருந்துட்டா போதுமான்னு போதுவா கேட்போம். ஒருத்தனாவது சரியா இருப்போம்.... அது முன்மாதிரியா இருக்கும்னு சொல்றேன்.

சைக்கிள் ஓட்டுவது ஒன்றும் அத்தனை மோசமான.......கேவலமான செயல் இல்லை. ரெண்டு நாளைக்கு ஒரு மாதிரி இருக்கும். ஒரு வாரத்துக்கெல்லாம்... சைக்கிள் தான் பெஸ்ட்டுனு தோணிடும். பெட்ரோல் விக்கிற விலைக்கு.... காசையும் மிச்சம் பண்ணின மாதிரி ஆச்சு. மாசு கட்டுப்பாடும் கட்டுக்குள்ள வருது. உடலும் பலம் பெருது. 

ஒரே கல்லுல மூணு மாங்காய்... கசக்குமா என்ன. 

*

அடுத்து... சைக்கிளை ஒட்டியே உடற்பயிற்சி பற்றியும் பேசலாம் என்று நினைக்கிறேன்.

உடல் வளர்த்தேன்... உயிர் வளர்த்தேன்னு முப்பாட்டன் திருமூலர் சொன்னது தான் மகத்தான மந்திர சொல். ஏனெனில் சுவர் இருந்தால் தான் சித்திரம். ஆக உயிர் தங்க வேண்டுமானால் உடலே பிரதானம். எந்த கொம்பனாலும் உடலை செய்து விடவே முடியாது. அப்படி ஒரு தொழில்நுட்பம் இந்த உடல் எனும் சிற்பம். 

ரோபோ என்ற பெயரில் உடல் மாதிரி வேண்டுமானால் செய்யலாம். ஆனால் உடலை செய்ய முடியாது. மானுட பிறப்பே பிரம்மாண்டம் நிறைந்தது. ஒரே ஒரு துளி ஓராயிரம் அணுக்களாக உருமாறி....சுற்றிலும் வெகு அழகாக மூடி.......தைத்த உடையை போல இருக்கும் உடல்.......இருக்கும் சித்திரத்திலேயே வெகு நுட்பம் வாய்ந்த சித்திரம். இந்த உடலின் வழியாகத்தான் நமது உலகம் நமக்கு விரிகிறது. தெரிகிறது. ஆக... உடல் பலமே உள்ள பலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடம்பு என்பது மிக பெரிய தத்துவம். புரியாதவர்களுக்கு உயிர் நிலைப்பதில்லை. 

இப்ப கூட கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் உடல் நிலை சரி இல்லாதவர்கள். அதுவும் உடல் பருமனாக இருப்போர் இந்த மாதிரி தொற்றுக்கு சுலபமாக மாட்டிக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தீர்வு உடல் கட்டுக்குள் இருப்பது தான். அதற்கு உடற்பயிற்சி என்பது காலத்துக்கும் தேவையான அவசிய ஒழுங்கு முறை. 

உடற்பயிற்சி என்பது நடையாக இருக்கலாம். ஜாக்கிங் ஆக இருக்கலாம். சைக்ளிங்காக இருக்கலாம். ஜிம்க்கு போகலாம். எதோ ஒரு வகையில் ஒரு ஒரு மணி நேரம் உடலுக்காக செலவழித்து தான் ஆக வேண்டும். அந்த ஒரு மணி நேரம் தான் நீங்கள் உங்களுக்காக வாழும் நேரம். மற்ற நேரங்களில் வீட்டுக்காக வாழலாம். படிப்புக்காக.... லட்சியத்துக்காக... பெற்றோருக்காக..... காதலிக்காக...... காதலனுக்காக...... அண்ணன் தம்பிக்காக... அக்கம் பக்கத்துக்காக... ஊர் உறவுக்காக... சொந்த பந்தத்துக்காக....... இப்படி யாருக்காகவும்...... எதற்காகவும் இருக்கலாம். ஆனால் அந்த ஒரு மணி நேரம் நீங்கள் எனும் உங்களுக்காக வாழ்கிறீர்கள். 

நாம் குடியிருக்கும் இந்த உடலை ஒரு கோயிலைப் போல பராமரிக்க வேண்டும். உடம்பு பலமானால் உள்ளம் பலமாகும். உள்ளம் பலமானால் இலக்கு எளிது. 

ஆக.......எப்படி சுற்றினாலும்.. வாழ்வின் மீதான ஈர்ப்பு இன்னும் இன்னும் வசப்பட வேண்டுமானால் உடலை கட்டுக்கோப்பாக அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கேவலம் உடம்பு என்று யாராவது சொன்னால் அவர்களை ஒதுக்கி விடுங்கள். உடல் என்பது வாழ்வின் கலை. அது தான் வாழ்தலின் நிலை.

*

அடுத்து ஆள் பாதி ஆடை பாதி பழமொழி மட்டும் இல்ல... பழகிய மொழியும் கூட.

"உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ"

இப்டி ஒரு பாட்டு வரி கூட இருக்கு. அது பாட்டு வரி மட்டுமல்ல. பளிச் வரியும் கூட. 

எத்தனை தீர்க்கம் ஆடைகள் மேல் இருந்தால் இப்படி ஒரு வரி வந்திருக்கும். நீங்கள் உலகினை வெல்ல உங்கள் ஆடையும் ஒரு கை தருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆடை அத்தனை முக்கியம். முன்பு சொன்ன அந்த உடலின் வடிவம் நாம் அணியும் ஆடையால் தான் வெளிப்படுகிறது. அணியும் ஆடை தான் எதிர்படுவோருக்கு உங்களை அறிமுகப் படுத்துகிறது. ஆக.......மிக கவனம் கொள்ள வேண்டிய வாழ்வியல் முறை......... தேர்ந்தெடுக்கும் ஆடையில் இருக்கிறது.


அவரவர் ஆடை அவரவர் உரிமை. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால்.. உடல்வாகு என்று ஒன்று இருக்கிறது. இவருக்கு இந்த மாதிரி ஆடைகள் தான் கச்சிதமாக இருக்கும் என்றால்..... அவர் அந்த மாதிரி ஆடையை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். வெட்டி வீராப்பு...... ஆடைகளில் கவிழ்ந்தால்... காட்சியில் கண்றாவி தான். அவ போடறா... நானும் போடுவேன்னு... அந்த குறிப்பிட்ட ஆடைக்கு தொடர்பில்லாதவர் போட்டால் கேலிக்குரியதாகி விடும்.யாருக்கு எந்த ஆடை பொருந்துகிறதோ அவர் அந்த ஆடையை உடுத்துவதில்... நம்பிக்கை கூடும். 

மீண்டும் சொல்லலாம். 

ஆள் பாதி ஆடை பாதி - பழமொழி. ஆள் பாதி தான் ஆடை தான் மீதி என்பது புது மொழி. 

*

அடுத்து இன்றைய கால கட்டத்தில் பெரும் பிரச்சனையாக இருப்பது.. சமூக ஊடகங்களின் பயன்பாடு இளைஞர்களிடையே எந்தளவுக்கு இருக்கிறது என்பது. 

விடிஞ்சதுல இருந்து தூங்கற வரை கங்காரு குட்டிய தூக்கிட்டு அலைய மாதிரி செல்போனை தூக்கிட்டு அலையறத பாக்கும் போது கொஞ்சம் பயமா கூட இருக்கு. பல பேருக்கு தூங்கி எந்திரிச்சதும் முதல்ல செல்போனை பாக்கணும். பல பேருக்கு தூக்கத்துலயே கூட செல்போனை துழாவனும்.

போன் வருதோ இல்லையோ... செய்திகள் வருதோ இல்லையோ... அப்பப்போ எடுத்து அதை பார்த்துக்கணும்... இது ஒரு மாதிரி வியாதி. ஒப்புக்கத்தான் வேண்டும். 

செல்போன் நம்ம உபயோகத்துக்குதானே தவிர.... நாம அதோட கைப்பாவை இல்ல. ஏவிவிட்ட குட்டிசாத்தான் திரும்பிட்ட மாதிரி...... அது நம்மள போட்டு புரட்டி எடுத்துகிட்டிருக்கு. கவனமா இல்லைனா கஷ்டம். 

எதையுமே சொந்த ரெட்டைக் கண்களால் பார்ப்பது போய் சூனிய ஒற்றை கண்ணால் பார்ப்பது ஒரு அடிமை முறை. எப்ப பார்த்தாலும் தலை குனிந்தே இருக்கிறது. சாப்பிடும் போதும்.....குளிக்கும் போது....... டாய்லெட்ல கூட செல்போன் இருக்குன்னா... ரெம்ப அபாயகரமான கட்டத்துல இருக்கோம்னு அர்த்தம். வண்டி ஓட்டும் போது கூட ஏதோ நினைவு வந்த மாதிரி முதுகை வளைச்சு கால நீட்டி.. அந்த குட்டி சாத்தானை எடுத்து ஒரு முறை பார்த்துட்டு மறுபடியும் உள்ள அதே மாதிரி போராடி பாக்கெட்டிலும் வைக்கறவங்கள பாக்கும்போது... அப்டி என்ன ஒரு கோடி ரூபாய் பிசினெஸா போயிட்டு இருக்கு... ஏன் இத்தனை அவஸ்தைன்னு தோணும். 

வண்டி ஓட்டும் போது செல்போன் பேசுறதுனால எத்தனை எத்தனை விபத்துகள். பாதி விபத்துகள் தூங்கி விடுவதால் நிகழ்கிறது என்றால்... மீதி பேசிக்கொண்டே ஓட்டுவதால் நிகழ்கிறது. செல்போன் அவசியம் தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்... அதுவே..... அது நம்மை அடிமையாக்கற அளவுக்கு போக கூடாது. தேவைக்கு பயன்படற வரை அது அமிர்தம். அளவுக்கதிகமானால் அது விஷம். 

எவ்ளோ நேரத்தை செல்போன் சாப்பிடுகிறது என்பதை யோசிக்க வேண்டும். 

FBயோ...... ட்விட்டரோ....... இன்ஸ்டாவோ...... யு டியூபோ......... ஓய்வு நேரத்துல.... ஒரு fun காக தானே தவிர....அதுலயே... மூழ்கி....இருப்பது வியாதி. உடல் நலம் கெட்டு.....மன நலம் கெட்டு...... Re சார்ஜ்ங்கிற பேர்ல பணமும் போய்....கரண்டு பில்லு எகிறி...... அது ஒரு குளறுபடி வாழ்க்கை முறை. 

விளையாட்டா ஒரு கவிதை கூட எழுதி இருக்கிறேன்.


"உடம்பு சரி இல்லை என்று 

மருத்துவமனை சென்றவனிடம் 

முதலில் டாக்டர் கேட்டது

லைக்ஸ்.. கமெண்ட்ஸ்...... பின்னூட்டம் 

எல்லாம் சரியாக வருகிறதா"

விளையாட்டா சொன்னா கூட அந்த நிலையில் தான் இன்றைய சமூகம் இருக்கிறது என்பது ஆபத்து. அதிலிருந்து மீள வேண்டும்.. அதுவும் இளைய தலைமுறை மீண்டெழத்தான் வேண்டும். 

செய்ய ஆயிரம் வேலை இருக்கும் போது ஒரு செயலிக்குள் செயல் இழந்து கிடப்பது சரியா.... என் இளைய ரத்தமே.

*

ஆடை.. உடற்பயிற்சி... செல்போன்... சைக்கிள்... சாலையில் வேகம்... சாலையில் எச்சி துப்புதல்.... இந்த மாதிரி மாற்ற வேண்டியது எவ்ளோ இருக்கிறது. அறிவுக்கெட்டிய ஒவ்வொன்றாய் மாற்றிக் கொண்டே வருவோம். மீண்டும் சொல்லலாம். அறிவு தான் பரிணாமம். அறிவு தான் அகிலம். அறிவு தான் தர்மம். அறிவு தான் ஆசான். அறிவு தான் அழகு. ஆனால் அது அறமோடு கூடிய அறிவாக வேண்டும் என்பது தான் நம்மை போன்றோரின் ஆவல். எது தேவையோ அதுவே தர்மம் என்பதிலும் ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பது தான் கட்டுக்கோப்பான வாழ்வியல் முறை.

நல்ல தீ பற்றிக் கொண்டு எரியும். இருள் அகல சமூகத்துக்கு..... இளைஞர்கள் தான் ஒளி.

- கவிஜி

Pin It