முனைவர் சி.மகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 2023 மே மாதத்தில் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் “பண்பாட்டு ஆய்வியல் - பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை” என்னும் நூல்.

முனைவர் சி. மகேசுவரன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல், மார்க்சியவியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைசார் அணுகுமுறையோடு தனக்கே உரிய ஆய்வு முறையியலை முன்னெடுத்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். இவர் தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆய்வு நடுவ மேனாள் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இந்திய சமூக அறிவியல்கள் ஆய்வுக் குழுவின் முதுநிலை ஆய்வுத் தலைவராகக் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

c maheswaran book panpaattu aiviyalதமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு அணுகுதல் என்பது முனைவர் சி. மகேசுவரன் அவர்களின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய அருங்காட்சியகப் பணிகளோடு தான் பெற்ற பல்துறைசார் அறிவின் அடிப்படையில் பழங்குடிகள் குறித்த ஆய்வில் தொடர்ச்சியாகச் சீரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளையும் நூல்களையும் உருவாக்கும் திறன் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அருங்காட்சியக மலர், புது விசை, சமூக விஞ்சானம், உங்கள் நூலகம், புதிய ஆராய்ச்சி, குறிஞ்சிக் குரல் எனப் பல்வேறு பருவ இதழ்களில் ‘பண்பாட்டு ஆய்வியல்’ தொடர்பாக எழுதிக் கொண்டிருப்பவர். தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களையும் வெளியிட்டு, தமிழ்ச் சமூக அடையாள மீட்டுருவாக்கத்திலும், புதிய தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு முறைக்கான வழிகாட்டியாகவும் தம் ஆய்வு நூல்களைக் கொண்டுவருவதில் சிரத்தையான கள ஆய்வை மேற்கொண்டு செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்.

முனைவர் சி. மகேசுவரன் அவர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டு வடிவமாகத் தற்பொழுது வெளிவந்துள்ள “பண்பாட்டு ஆய்வியல் - பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை” என்னும் நூல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மரபையும், தமிழ்ச் சமூகப் பண்பாடு என்பது ஒற்றைப் பண்பாட்டுத் தன்மை அல்ல, பன்மைத்துவப் பண்பாடு என்பதை முன்னிறுத்தக்கூடியதாக உள்ளது. இக்கருத்து சிறந்த ஆய்வு முறையியலோடு விளக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் துறைசார் புலமையையும் ஆய்வு முறையியல்சார் புரிந்துணர் அறிவையும் உணர்த்தக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நூலின் அமைப்பு முறையியலைப் பொருத்தவரையில் முன்னுரை, நன்றியுரை என்பதோடு, 1. பண்பாட்டு ஆய்வியல்: பொதுவியல், 2. தொல்பழங்காலப் பாண்பாட்டு ஆய்வியல், 3. பழங்குடிப் பண்பாட்டு ஆய்வியல், 4. பழங்குடி இனக்குழுவரைவியல், 5. நாட்டுப்புறப்பண்பாட்டு ஆய்வியல் என்னும் ஐந்து பிரிவுகளில் நாற்பத்தியோரு கட்டுரைகளோடு 480 பக்கங்களைக் கொண்டுள்ளது. இவற்றோடு, ஆய்வாளர்கள் கற்க வேண்டிய நூல்களாக தமிழ், ஆங்கில நூல்களை ஒரு பெரும் நூல் பட்டியலாக இணைத்திருப்பது, சொல்லடைவு உருவாக்கிக் கொடுத்திருப்பது, வேண்டிய ஒளிப்படங்கள் கொடுத்திருப்பது என ஒரு ஆய்வு முறையியலோடு அமைத்திருப்பது பண்பாட்டியல், பழங்குடியியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் முதல் நிலை வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வுமுறையியலை கற்பிக்கக் கூடியதாகவும் உள்ளது.

பண்பாட்டு ஆய்வியல்: பொதுவியல்

பண்பாட்டு ஆய்வியல்: பொதுவியல் என்னும் முதல் பகுதி ஐந்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் பண்பாட்டுப் புரிதல்கள் என்பது புறநிலையிலான கூறுகளை மட்டும் வைத்துப் புரிந்துகொள்ளக் கூடியது அல்ல. அக நிலையிலான கருத்தியல்களையும் இணைத்துப் புரிந்துகொள்ளும்போதுதான் முமுமையான புரிதலாக அமையும். அவ்வகையில் முனைவர் சி.மகேசுவரன் அவர்கள் தமிழ்ச் சமூகம் சார்ந்த பண்பாட்டு ஆய்வாளர்கள் பயன்படுத்தும் சொற்களிலிருந்தே தம் ஆய்வைத் தொடங்குகிறார். நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் சிறுதெய்வம், பெரு தெய்வம், சிறுமரபு, பெருமரபு, சிறுநிலை மரபு, பெருநிலை மரபு ஆகிய சொற்கள் வெளிப்படுத்தும் அரசியலைப் புரிய வைப்பதற்காக மேற்கண்ட சொற்களுக்கு மாற்றாக தம்முடைய கட்டுரையில் இயல் மரபு, அயல் மரபு என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். சொற்களில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக கடந்துவிட முடியாது என்பதைப் புரிய வைப்பதற்காக இவர் எடுத்துக்காட்டும் வழிபாட்டு மரபுகள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களால் கவனம் பெற வேண்டிவையாகும்.

இந்நூலாசிரியர் இயல்மரபைச் சார்ந்த தெய்வங்கள் உடைபடும்போதும் ஒவ்வொரு துண்டும் எவ்வாறு வளமைக்குரியதாக உள்ளது என்பதையும், பெருதெய்வம் என்று சொல்லக்கூடிய தெய்வங்கள் ஒரு சிறு சிதைவு ஏற்பட்டாலும் அச்சிலை பயன்பாட்டிற்கு இல்லாத நிலை உருவாகும் தன்மையையும் முதல் கட்டுரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இவை, இயல்மரபான தமிழர் மரபு எத்தகைய வளமையுடையதாகவும், உழைக்கும் மக்களோடு நேரிடையான தொடர்புடையதாகவும் உள்ளது என்பதை மிக எளிமையாகவும் அதே நேரத்தில் சிறு மரபு - பெருமரபு, இயல் மரபு - அயல் மரபு சொல் செயல்பாட்டின் அரசியலை வலிமையாகவும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், கூத்தாண்டவர் வழிபாட்டின் முறைமையும் அரவாண் வழிபாட்டின் முறையையும் சுட்டிக்காட்டி இயல் மரபு - அயல்மரபை விளக்கியிருப்பது தமிழ்ச் சமூக ஆய்வாளர்கள் சொல் குறித்த அரசியலை நுட்பமாகப் புரிந்துகொண்டு ஆய்வில் செயல்படுவதற்கான தெளிவை ஏற்படுத்துகிறது.

மனித சமூகம் உணவு தேடும் சமூகமாக இருந்து உணவு உற்பத்திச் சமூகமாக மாறி பயிர்த் தொழிலில் ஈடுபட்டபோது இனப்பெருக்கம் தொடர்பான வளமைச் சடங்குகளைப் பயிர்த் தொழிலிலும் கடைபிடிக்கத் தொடங்கிய முறையியலையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றை, பெருத்த வயிறு, பெருத்த மார்பு, விளை நிலங்களில் ஆண் - பெண் இணைவு ஒரு வளமைக்குரிய நம்பிக்கையாகக் கொள்ளுதல் முதலானவற்றைக் கொண்டு விளக்கியிருப்பது மனிதச் சமூகம் தான் அறிந்ததிலிருந்து அடுத்த சூழ்நிலைக்கான அறிவை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனையின் உருவாக்க முறையியலை உணர்ந்துகொள்ளச் செய்கிறது.

மானிடவியல் பார்வையில் ‘தொப்புள் குடி உறவு’ குறித்தும், காடர், இருளர், தொதவர், புலயன், இலம்பாடி, கல்வராயன் மலையாளி உள்ளிட்ட பழங்குடிகள் தாங்கள் பயன்படுபடுத்தும் புழங்குபொருள் சார்ந்த மற்றும் புழங்குபொருள் சாரா பண்பாடுகளை அந்தந்த பழங்குடிகள் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு விளக்கியிருப்பது, ஒரு புழங்குபொருள் என்பது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பண்பாட்டு மூலங்களை வெளிப்படுத்தும் கூறுகளாக விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

ஒரு சமூகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சூழல்களாக மனிதருக்கும் மனிதருக்கும் இடையிலான தகவமைப்புகள், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான தகவமைப்புகள், மனிதருக்கும் மீயியற்கைக்கும் இடையிலான தகவமைப்புகள் என மூன்று நிலைகளில் மனிதருக்கும் மீயியற்கைக்கும் இடையிலான தகவமைப்புகளின் பரிமாணங்களை நீலகிரி உள்ளிட்ட இடங்களில் வாழும் பழங்குடியினரின் செயல்பாடுகளை வைத்து விளக்கும் முறையியல் ஒரு பழங்குடி மக்களைக் குறித்த ஆய்வியல் நுட்பத்தை விளக்குகிறது எனலாம்.

தொல்பழங்கால பண்பாட்டு ஆய்வியல்

தொல்பழங்கால பண்பாட்டுஆய்வியல் என்னும் பகுதியில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசியர் இப்பகுதியில் ஆய்வுக்குட்படுத்தும் பொருண்மைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகளாகும். பழங்குடிகளின் வாழ்விடத்தில் உள்ள பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வுப் பரிமாணங்கள் குறிப்பிடத்தக்க பண்பாட்டுப் புரிதலை உருவாக்குகிறது. பழங்குடிகளின் வாழ்விடத்தில் உள்ள பாறை ஓவியங்கள் அப்பழங்குடிகளின் வாழ்வியலோடும், வாழ்வியலோடு கட்டமைக்கப்படும் பண்பாட்டுத் தன்மையிலும் முதன்மையான இடம் வகிப்பதை நூலாசிரியரின் ஆய்வுக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், உயிர்ப்பாற்றல் கொண்ட மரத்தை வழிபட்ட நிலையை அடுத்து மரத் தூணாக மாறிய நிலையிலும் சிறப்பான ஆற்றல் உடையதே என்பதை நம்பி, தொல் மாந்தர் வழிபட்ட ‘கந்து வழிபாடு’ குறித்தும், கால்நடைச் சமூகத்தில் பெருகிய கால்நடைகளின் சாணக் குவியலை எரித்த சாம்பல் மேடுகள் உள்ள பகுதிசார்ந்த பண்பாட்டு எச்சங்கள் குறித்தும் விளக்கியிருப்பது ஒரு சமூகத்தின் ஒரு குறிப்பிட்டகால பண்பாட்டுப் புரிதலில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய கூர்மையை உணர்த்துகின்றது.

பழங்குடிப் பண்பாட்டு ஆய்வுகள்

பழங்குடிப் பண்பாட்டு ஆய்வுகள் என்னும் மூன்றாம் பகுதி பத்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் நூலாசிரியர் முன்னிருத்தும் கருத்துகள் இதுவரை பழங்குடிகள் குறித்த ஆய்வுப் பரப்பில் கவனம் பெறாத கருத்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழகப் பழங்குடிகள் வழக்காறுகள் வாயிலாக வெளிப்படும் மொழி சார்ந்த பண்பாட்டுத் தொடர்புறவுகள், தமிழகக் பழங்குடிகளின் இனக்குழுக்கள் குறித்த புறப்பெயரும் - அகப்பெயரும், பழங்குடியினரித்தில் உள்ள புனித வெளிகள் குறித்த பண்பாட்டு நிலைகள், நீலகிரி பழங்குடியினரிடத்தில் உள்ள ஆண், பெண் கமுக்கச் சடங்குகள் (இரகசியமான சடங்கு முறைகள்), பழங்குடிகள் தங்கள் உடலில் வரைந்து கொள்ளும் வரைகலைகள் குறித்த பண்பாட்டு வெளிப்பாடுகள் முதலானவை மிக முக்கியமானதாகும். இவை ஒவ்வொன்றைக் குறித்தும் பெரும் பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டு, ஆய்வுமுறையிலான கருத்துகளின் குவியல் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சமூக பண்பாட்டு வரலாற்றில் பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் திறக்கும் நுட்பங்களை அறிந்து கொள்ளச் செய்கிறது.

பழங்குடி இனக்குழு வரைவியல்

பழங்குடி இனக்குழு வரைவியல் என்னும் பகுதியில் பதிமூன்று கட்டுரைகள் உள்ளது. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு ஒப்பானதாகவும், பல முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுப் பொருண்மைகளையும் கொண்டிருக்கக்கூடியதாகவும் உள்ளது. இனவரைவியல் என்ற சொல் தமிழ்ச் சமூகத்தில் அறிமுகமாகி பரவலாக ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இனவரைவியல் என்ற சொல்லுக்கு மாற்றாக இனக்குழுவரைவியல் என்ற சொல்லை முன்வைத்து இரண்டிற்குமான வேறுபாட்டை விளக்கியிருப்பதும் இன்றியமையாத புரிதலை உருவாக்குகிறது. மேலும், தமிழகத்தின் முப்பத்தேழு பழங்குடிகள் (நரிக்குறவர் உள்பட) குறித்து அறிமுகத்தையும், அவர்கள் வாழும் பகுதிகளையும், திருவிழாக்கள் முன்வைக்கும் ஒரு இனக்குழு சார்ந்த இருத்தலியல்சார் பண்பாட்டு முறைமைகள் என பழங்குடிகள் சார்ந்த பெரும் ஆய்வுப் பரப்பை வெளிப்படுத்துவதாக இப்பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. பழங்குடிகள் குறித்த புதிய ஆய்வாளர்களுக்கு தமிழகப் பழங்குடிகள் குறித்த அறிமுகத்தையும், ஆய்வுப் பொருண்மையும், ஆய்வு முறையியலையும் இப்பகுதியின் மூலம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வியல்

இனக்குழுவரைவியல், மானிடவியல், மொழியியல், சமூகவியல் சார்ந்த ஆய்வியல் நிலைகளை உணர்த்தும் இந்நூல் நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வு முறையியலை மிக விரிவாகவும் நுட்பமாகவும் கள ஆய்வு அடிப்படையிலான தரவுகளைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய விரிவான கருத்து முன்வைப்புகள் நூலாசிரியரின் நுட்பமான நாட்டுப்புறவியல் துறைசார் அறிவுத்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது எனலாம். புலம்பெயர் வரலாற்றை மீட்டுருவாக்கலுக்கான முறையியல், விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழக அலைகுடிகள் குறித்தப் பார்வை, ‘சாமி வீடு’ சார்ந்த புழங்குபொருள் வைக்கும் இடம் சார்ந்த ஆய்வியல் முதலான ஆய்வுகளின் வெளிப்பாடுகள் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுப் பரப்பில் உள்ள இன்றியமையாமையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ‘கொங்கு நாட்டில் காணலாகும் வாதப் பிள்ளையார் வழிபாடு எனும் சக்தி வழிபாடு’ என்னும் கட்டுரை எவ்வாறு இயல் மரபான நாட்டுப்புற தெய்வங்கள் அயல் மரபு தெய்வங்களாக மாறும் முறைமைகளை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு பல்வேறு நிலையிலான புரிதல்களை இப்பகுதி கொண்டுள்ளது சிறப்பாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கான தொடர்ச்சியான ஆய்வு முன்னெடுப்பை இந்நூல் கொண்டுள்ளது. தழிழகப் பழங்குடிகளின் வாழ்வியல் சார்ந்த முக்கிய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி எழுதப்பட்டுள்ள இந்நூலின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்பு ஒற்றைத் தன்மையிலான பண்பாட்டுக் கட்டமைப்பு உடையது அல்ல. மக்களின் பன்முக வாழ்நிலை சார்ந்த பன்மியப் பண்பாட்டு அமைப்பைக் கொண்டது என்பதற்கான சான்றாக அமைகிறது. இந்நூலின் கருத்துகள் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கான கணக்கற்ற தரவுகளைத் தம்முள் கொண்டுள்ளது. நம் கல்விப்புலம் பல வரலாற்று வரைவுகளை புறக்கணித்துள்ளது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தரவுகளின் துணையுடன்தான் தமிழகத்தின் உண்மையான சமூகப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியும் என்பதை முனைவர் சி.மகேசுவரன் அவர்களின் பழங்குடிகளின் வாழ்வியல் குறித்த பண்பாட்டுக் கருத்தாக்க வெளிப்பாடுகளால் உணரலாம்.

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றைக் கண்டடைவதற்கு முனைவர் சி.மகேசுவரன் அவர்களின் இந்நூல் முதன்மைத் தரவாக அமையும். பண்பாடுசார் ஆய்வுச் சமூகத்துக்குப் புதிய கண்களைத் திறந்து விட்டுள்ளார். பல திறப்புகளை திறனுடைய ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்வதற்கான மடைகளையும் திறந்து காட்டியிருக்கிறார். இந்நூல் உருவாக்கத்திற்கான நோக்கத்தை முனைவர் சி.மகேசுவரன் அவர்கள் குறிப்பிடும்போது, பண்பாட்டியல் என்கிற இவ்வறிவுசார் ஆய்வுப் புலம் பற்றிய தனித்ததோர் ‘அடிப்படை நூலோ’ (Basic Book), ‘நோக்கிட்டு ஏடோ’ (Reference Work). இதுவரை தமிழில் இனங்கண்டறியப்படவில்லை. இந்நிலையைக் கருத்தில் கொண்டே இந்நூலை உருவாக்கியதாகக் கூறுகிறார். இத்தகைய நோக்கத்தை முழுமைப்படுத்தும் நிலையில் இந்நூல் அமைந்துள்ளது சிறப்பாகும். இந்நூல் அறிமுகத்தில் எடுத்துக் காட்டியிருப்பது நூறில் ஒரு பங்கே ஆகும். தமிழ் இனத்தின் அடையாளத் தடங்களை பல பரிமாணங்களில் எடுத்துக் காட்டியிருக்கும் இந்நூல் தமிழினம் கொண்டாடிக் களிக்க வேண்டியது கடமை. இந்நூலை வாசித்துக் களித்தும் விமர்சித்தும் பரவலாக்கம் செய்வோம்.

பண்பாட்டு ஆய்வியல் | முனைவர் சி. மகேசுவரன்

பாரதி புத்தகாலயம் வெளியீடு | விலை ரூ.480.

- முனைவர் மு.ஏழுமலை, நாட்டுப்புறவியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.

 

Pin It