ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறி இருக்கின்றன. இது அமெரிக்காவுக்கு வெற்றியா? தாலிபான்களுக்கு வெற்றியா? என பெரிய விவாதம் உலகமெங்கும் நடந்து வருகின்றது. முதலாளித்துவப் பத்திரிக்கைகள் தாலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகத் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்றும், பெண்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்றும் ஓயாமல் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் 100,000க்கும் அதிகமானவர்களைக் கொன்று குவித்திருக்கின்றது. அப்பொழுதெல்லாம் அதை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்த ஊடகங்களும் ஏகாதிபத்திய சக்திகளும் இன்று அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவுடன் ஜனநாயகத்தைப் பற்றியும் மனித உரிமைகளைப் பற்றியும் காட்டுக்கூச்சல் போடுகின்றன.

talibansதாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் என கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய ஜனநாயக சக்திகள் எதுவும் அமெரிக்க சிப்பாய்களால் பத்தாயிரக்கணக்கான ஆப்கான் பெண்கள் கொல்லப்பட்டது பற்றி மறந்தும் வாய்திறக்க மறுக்கின்றன.

உண்மையில் மதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சி நடக்கும் பெரும்பாலான நாடுகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதற்காக ஜனநாயகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களே நடப்பதில்லை என்று இதற்கு அர்த்தமில்லை.

உண்மை சொல்ல வேண்டும் என்றால் அதுபோன்ற நாடுகளில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கின்றன.

2020 ஆண்டு கணக்குப்படி உலகில் அதிகம் பாலியல் வழக்குகள் பதிவான முதல் 10 நாடுகளை வரிசையாக எடுத்துக் கொண்டால் 1)தென்னாப்பிரிக்கா, 2)ஸ்வீடன், 3).அமெரிக்கா, 4).இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், 5).இந்தியா, 6).நியுசிலாந்து, 7) கனடா, 8).ஆஸ்திரேலியா 9).ஜிம்பாப்வே 10) டென்மார்க் மற்றும் பின்லாந்து போன்றவை இருக்கின்றன.  இதில் ஒரு இஸ்லாமிய நாடுகூட இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் உலக உத்தமனான அமெரிக்காவில் பெண்களின் நிலை எப்படி இருக்கின்றது என்று பார்த்தால், உலகளாவிய பாலியல் வன்முறை குறித்த ஜார்ஜ் மேசன் பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கையின் படி மூன்று அமெரிக்க பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார். மொத்த அமெரிக்காவில் சுமார் 19.3 சதவீதம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். சராசரியாக ஒரு வருடத்திற்கு 65,668க்கும் மேற்பட்ட கல்லூரி வயது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவர்களில் கால்வாசி பேர் 14 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

 பிற வயது பெண்களுடன் ஒப்பிடுகையில் 18 முதல் 24 வயது வரை உள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மொத்தமாக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் 16 சதவீதம் மட்டுமே வழக்குகளாகப் பதிவாகின்றன.

 அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின்படி ஆண்டுக்கு 2,16,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள். சமீபத்திய தேசிய கணக்கெடுப்பின்படி சிறையில் உள்ளவர்களில் 3.2 சதவீத கைதிகளும், சிறார் பிரிவில் 9.5 சதவீத கைதிகளும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். 7 சதவீத பெண் கைதிகள் மற்ற கைதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

இன்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் பெண்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது. அதற்கு அமெரிக்காவே ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யலாம் என அறிவுரை வழங்குபவர்கள் மேற்கூறிய புள்ளிவிவரத்தை பார்த்தாவது புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றோம்.

 உண்மையில் ஆப்கானிஸ்தானின் பிரச்சினை என்பது முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது போல மனித உரிமைகள் தொடர்பானதே அல்ல.

ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல ஈராக், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா போன்ற நாடுகளில் அமெரிக்க செய்யாத மனித உரிமை மீறல்களா? அங்கே குண்டு வீசியும் டிரோன் ஏவுகணைகளால் தாக்கியும் எத்தனை லட்சம் மக்களை அமெரிக்கா கொன்று குவித்திருக்கின்றது?

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வைத்திருப்பது தனது வருங்கால பொருளாதார நலன்களுக்கு நன்மை பயக்கும் என்பதால்தான் அமெரிக்கா ஏறக்குறைய 2 ட்ரிலியன் டாலரை செலவு செய்து 20 ஆண்டுகளாக ஆப்கான் மீதான போரை நடத்தியது. ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் அதன் எல்லைகளாக இருக்கும் சீனா, ஈரான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் காஸ்பியன் கடல் பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடவும் இது அமெரிக்காவுக்கு உதவும். காஸ்பியன் கடல்பகுதியில் உள்ள எண்ணெய் வளமானது உலகின் நிரூபிக்கப்பட்ட இருப்புகளில் 20 சதவிகிதமாகும். மேலும் இங்கே கண்டறியப்பட்டுள்ள இயற்கை எரிவாயுவானது பூமியின் மொத்த எரிவாயு இருப்புகளில் ஏறத்தாழ எட்டில் ஒரு பங்காகும்.

 இப்படி பல வழிகளில் அரசியல் முக்கியத்துவம் மிக்க ஆப்கானிஸ்தானை எப்படி அமெரிக்கா விட்டுவைக்கும்?

சோவியத்-ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக 1980களில் ஒசாமா பின் லேடன் தலைமையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அல்கொய்தா இயக்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கியதும் அதே நடைமுறைகளின் வழி தாலிபான் அமைப்பு உருவானது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் அமெரிக்கா தன்னால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் தனக்கு எதிராகவே தான் வழங்கிய ஆயுதத்தை வைத்து தனக்கே ஆப்பு அடித்ததை உணர்ந்தது. இருந்தாலும் நீண்ட நாட்களாக ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் வெறிக்கு இந்தத் தாக்குதலே ஒரு வலுவான காரணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலைக் காரணம் காட்டி அல்-கொய்தா அமைப்புக்கும், ஒசாமா பின் லேடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக, தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்து தாலிபான்களை தோற்கடித்து கடந்த 20 ஆண்டுகளாக அங்கே போர்க்குற்றங்கள் புரிந்து வந்தது.

தற்போது அங்கிருந்து படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கு முக்கிய காரணம் தாலிபான்களை எதிர்த்து நிற்க முடியவில்லை என்பதால் அல்ல. உள்நாட்டிலேயே அமெரிக்க ஆளும் வர்க்கம் கடுமையான எதிர்ப்பை சந்திப்பதால்தான். ஏறக்குறைய 2 ட்ரிலியன் டாலர் செலவழித்தும் அதனால் எந்த ஒன்றையும் ஆப்கானிஸ்தான் மூலம் சாதிக்க முடியவில்லை என்பதோடு போர்களுக்கு இப்படி ட்ரிலியன் கணக்கில் செலவு செய்யும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் தன் சொந்த நாட்டு மக்களில் ஏறக்குறைய 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனோவால் இறந்த போது அவர்களைக் காப்பாற்ற முடியாமல் வக்கற்று நின்றதும் அமெரிக்க மக்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதை ஒட்டித்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 2021-ல், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த அமெரிக்கத் துருப்புகளும் பின்வாங்கப்படும் எனக் கூறினார்.

 ஆனால் அதற்கு முன்பே 2018ஆம் ஆண்டு தாலிபான் குழுக்கள் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 2020-ல் இரு தரப்புக்கும் இடையே தோஹாவில் ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. அதில் அமெரிக்கா தன் துருப்புகளை ஆஃப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், பதிலுக்கு தாலிபான்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் டிரம்ப் அரசு அதைச் செய்யவில்லை.

ஏறக்குறைய அமெரிக்கப் பொருளாதாரம் திவால் நிலைக்கு வந்தபின்தான் இந்த முடிவை அமெரிக்க ஆளும் வர்க்கம் தற்போது எடுத்துள்ளது.

‘பட்டினியில் இருந்து மக்களைக்' காப்பாற்றவும், ‘காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையிலிருந்து ஒரு தேசத்தை விடுவிக்கவும்' விரும்புவதாகக் கூறி ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய அமெரிக்கா, இன்று அதே நிலையிலேயே நாட்டை விட்டுவிட்டுச் செல்கின்றது. ஆப்கானிஸ்தானை சிதைத்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதைத் தவிர வேறு எந்த முன்னேற்றத்தையும் அது ஏற்படுத்தவில்லை.

மதத்தின் கட்டுமானம் எங்கெல்லாம் தளர்வாக உள்ளதோ அங்குதான் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாடாவது இருக்கும். தாலிபான்களின் கையில் மீண்டும் மாட்டியுள்ள ஆப்கானிஸ்தான் கொடிய வறுமையில் தள்ளப்படவே வாய்ப்புள்ளது.

தாலிபான்களின் அரசியல் கடுமையான பிற்போக்குத்தனமானதாக இருப்பதால் அது சமூகத்தில் பெண்களின் அரசியல் நடவடிக்கை, பொருளாதார நடவடிக்கை என அனைத்தையுமே முடக்கி அவர்களை பாலியல் பண்டங்களாக மட்டுமே நடத்த முயற்சிக்கும். அப்படியான செயல்பாடுகளுக்குப் பயந்தே பலர் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல உயிரைப் பணயம் வைக்கின்றார்கள்.

ஆனால் இது சுதந்திரமான ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தாலிபான்களின் ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பெரும்பான்மை மக்கள் பிற்போக்குவாதிகளாய் இருக்கும் பட்சத்தில் தாலிபான்களின் ஆட்சி நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு வேளை தாலிபான்களின் ஆட்சி மிக மோசமானதாக அந்த மக்களை கொடிய வறுமையில் தள்ளினால் நிச்சயம் அதற்கான எதிர்வினைகளை அவர்கள் சந்திப்பார்கள்.

- செ.கார்கி

Pin It