திட்டுவதற்கு சல்லிசாக கிடைக்கும் வார்த்தை நாய். நம்மை கோபப்படுத்தும் எந்த வினைக்கும் எதிர் வினையாக வந்து குரைக்கும் வார்த்தை நாய். நினைவு படுத்தி பாருங்கள். உங்களை மதிக்காமல் உங்களை கடந்து செல்வோர்களை நாய் என்று சொல்வதில் இருக்கும் பழக்கம் ஒரு வினோத திருப்தியை நம்முள் ஏற்படுத்துவதை எல்லாருமே ஒரு முறையாவது உணர்ந்திருப்போம். வழி விடாத வண்டிக்கு நாம் வைக்கும் பெயர் நாய். இல்லையா...!

நாய் மாதிரி போறான் பாரு..
போடா நாயே...
இந்த நாய்க்கு ஒரு நாளைக்கு இருக்கு...
இந்த மாதிரி நாயை எல்லாம் அடிச்சே கொல்லனும்...

என்று வசைக்கு இசை சேர்க்கும் நாயை நான் அப்படி பார்க்கவில்லை. என் நண்பன் கமல் ஒரு நாய் பிரியன். வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறான். தெரு நாய் கூடவும் நெருங்கி பேச கூடியவன். எனக்கும் கூட நாய்களின் அன்பு தெரியும். ரோஸி... சுருளி என்று இரு இதயங்களின் காதலனாக இருந்திக்கிறேன். இன்று வரை வேறு எந்த நாயையும் தொடவோ பழகவோ என்னால் முடிந்ததே இல்லை. அப்படி... நாயின் பேரன்பு நாய் கொண்டாருக்குத் தெரியும்.

எந்த நாய் திட்டமிட்டு கொள்ளை அடிக்கிறது. எந்த நாய் பொய் பேசுகிறது. எந்த நாய் ஏமாற்றுகிறது. எந்த நாய் வன்மம் கொள்கிறது. அதன் கிறுக்கு அதற்கு. எவனோ ஒருவன் வண்டியில் இடித்து விட்டான் என்பதற்காக வரும் வண்டியையெல்லாம் விரட்டுவதை தன் பாதுகாப்பாக நினைத்துக் கொள்கிறது. புதிதாக தோற்றம் பார்த்தால் குறைப்பது அதன் இயல்பு. அவ்வளவு தான். நாயை அந்தளவு தான் கையாள வேண்டும். பார்த்து பார்த்து குற்றம் செய்பவனை நாயோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த கூடாது. வஞ்சம் கொண்டு வெறி தீர்ப்பவனை நாய் என்று சொல்லி உயர்த்தி விட கூடாது. தவறாகவே புரிந்து கொள்ளும் மானுடம் நாய்க்கு நிகர் இல்லை. நாய் பசித்தால் அண்ணாந்து பார்க்கும். வயிறு நிறைந்தால் தூங்கி விடும். அவ்வளவு தான். காலம் தாழ்த்தி வஞ்சம் தீர்க்காது.

நாய் ஒரு உயிர். அதற்கென்று ஒரு வாழ்விருக்கிறது. அதற்கென்ற உலகத்தில் புரியாமல் நுழைந்து அதன் பெயரைக் கிறுக்க கூடாது. அதே போல திட்டுவதற்கு அடுத்து யோசிக்கும் அல்லது யோசிக்கும் முன்பே வந்து விழும் வார்த்தை.... போடா கேனப்... கேனக்... என்று யோனியை குறிக்கும் புழக்கத்தில் இல்லாத சொல்லை போட்டு உடைப்பது. அடிக்கடி அந்த வார்த்தையை சொல்கிறவன்... அவனையும் அறியாமல் அந்த சொல்லில் தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறான். பாலியல் இச்சையின் வடிகாலாக இருப்பதாக தான் புரிந்து கொள்ள முடிகிறது.

திட்டும் சொல்லென கொண்டாலும் திகட்டும் உணர்வென உள்ளே அவன் செல்கள் ஆனந்தமடைகின்றன. எந்த வழியாக வந்தோமோ அந்த வழியை வசை சொல்லாக பயன்படுத்துவது ஏன். அந்த சொல் தான் அம்மாவின்... அக்காவின்... பாட்டியின்... சகோதரியின்... தோழியின்.... மகளின்... மருமகளின்... பேத்தியின் உயிர் வழி பிரதேசமாக இருக்கிறது. யாரோ ஒருவனை போடா... என்று சொல்லும் போது அந்த சொல்லில்.... சொல்கிறவன் அம்மாவின் யோனியும் தானே இருக்கிறது. அதை ஏன் அவர்கள் யோசிப்பதில்லை.

நினைத்த நேரத்தில் கோபத்தைக் காட்ட அந்த சொல்லின் வழியே தேர்ந்தெடுப்பது இயல்பென்று ஆனதை மனநோய் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே.

யோனியை மட்டும் அல்ல... ஆண்குறியையும் வசைக்கு இழுக்கும் வழக்கம்... மிக கேவலமானதாக இருக்கிறது. ஆண்குறியும் பெண்குறியும் இல்லாமல் இந்த உலகம் எப்படி உருவாகி இருக்க முடியும். ஆக... அது தான் சிருஷ்டி. நியாயப்படி அதை கொண்டாட வேண்டும். அதை விடுத்து அதில் கொண்டு போய் கற்பை சொருகி அதற்கு அடித்துக் கொண்டு கருத்து சொல்லி வீணா போக ஒரு கூட்டம் என்றால்... திட்டுவதற்கு சட்டேன எடுத்து நீட்டும் கத்தியாக துப்பாக்கியாக குறிகளையே கொண்டிருப்பது இன்னொரு கூட்டம்.

பெண்ணுக்கும் ஆணுக்கும் அழகே அவர்கள் குறிகள் தான். அதை கொச்சைப் படுத்தி கெடுப்பதில் என்ன வகையான திருப்தி கிடைக்கும். உடலின் ஆழம் அங்கிருந்து தான் தொடங்குகிறது. கலவியின் வழியாக கிடைக்கும் ஆனந்தம்... திருப்தி தான் வாழ்வதற்கான உந்து சக்தியைத் தருகிறது.

அந்தளவில் தான் அதை அணுக வேண்டும். வரைமுறைபடுத்தப்பட்ட உறவுகளின் வழியே உன்னதம் தொட இந்த உடல்கள் நாகரிகம் அடைந்திருக்கின்றன. மொழியே ஒரு மனிதனின் மிக பெரிய சாட்சி. அதை இப்படி முட்டுக்கொடுத்து கெடுக்க வேண்டாம்.

சரி வேறு எப்படித் தான் திட்டுவது...?

முட்டாள் என்று திட்டுங்கள். முட்டாள் சின்ன சொல் அல்ல. நிஜமாகவே முட்டாள் என்றால் திருந்துவான். இல்லை என்றால் சண்டையிட்டு முட்டாள் இல்லை என்று நிரூபிப்பான். அது தான் ஆரோக்கியமான மொழி வழி கோபம் கொள்தல். மற்றபடி உடல் உறுப்புகளை கொண்டு வசைபாடுவது இயலாமை.. மற்றும் திருப்தியடையாத பாலியல் இச்சை. நன்றியுள்ள மிருகத்தை நோண்டுவது நோகாமல் நோம்பி குடும்புவது.

- கவிஜி

Pin It