paattaali writingதிருச்சி மாநகரின் அரசியல் எழுச்சி வரலாற்றில் குறிக்கத்தக்கவொன்று கருஞ் சட்டைப் பேரணி. அந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் எழுச்சி தந்த உற்சாகம், இருபால் இளைஞர்களின் பறை இசையோடு கூடிய துள்ளாட்டம், அதோடு சிறப்பு மகிழ்வாய்... அதுகாறும் மின்னஞ்சல், முகநூல், எழுத்துவழியே சந்தித்துக் கொண்டிருந்த பல தோழர்களை, பலப்பல தோழர்களை நேரில் சந்திக்க வாய்த்தது. அதில் குறிப்பிடத் தகுந்ததொரு தோழர் கீற்று நந்தன் அவர்கள். அவரையும், அவருடைய இணையரையும் அன்று ஒரு சேர சந்தித்து மகிழ்ந்தேன். பெரிய அளவில் அன்று பேசிக் கொள்ள இயலவில்லை எனினும், அதன் பிற்பாடு தோழர் கீற்று நந்தன் அவர்கள் தொலைபேசினார். “தோழர் நீங்கள் கீற்றில் நூல் விமர்சனம் தாண்டி வேறு எதனையும் எழுதவில்லையே. இனி வாரம் ஒருமுறை பத்தி எழுத்து போல கீற்றில் எழுதுங்களேன்" என்று வேண்டினார். நானும் உடன் மகிழ்வோடு சம்மதித்தேன். அதன்வழியே அகப் புறம் பேசு... என்கிற பொதுத் தலைப்பில், நாம் கடந்து செல்கிற அல்லது நம்மைக் கடந்து போகிற அரசியற் பண்பாட்டு நிகழ்வுகளின் மேலடுக்குத் தோற்றம் மட்டுமின்றி, அதன் உள்ளடுக்குத் தோற்றத்தினையும், அதன் குறுக்குவெட்டுப் பார்வையினையும், அதனூடே அமிழ்ந்து அல்லது ஒளிந்து கொண்டிருக்கும் அரசியலை வெளிக் கொணரும் விதமாக அகத்தையும் புறத்தையும் ஒரு சேரப் பேசுவதாய் கீற்று வழியாய் உங்களோடு அகப் புறம் பேசு என்கிற இந்தப் பத்தி எழுத்து.

வாய்ப்பளித்த தோழர் கீற்று நந்தனுக்கு எமது அன்பும் நன்றியும். இனி, வாரந்தோறும் பேசுவோம் தோழர்களே. 

தோழமையுள்ள......
பாட்டாளி

***

படைப்பு மனத்தின் வலியும்... ரணமும்...


புத்தக சந்தை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போடப்பட்டாலும், அதில் தலையானதொரு இடத்தினைப் பிடிப்பது சென்னைப் புத்தகக் கண்காட்சிதான். சமீபத்தில் முகநூலில் நண்பரொருவர் இப்படிப் பதிவிட்டிருந்தார். புக்ஃபேர் பரிதாபங்கள் என்று தலைப்பு. அதில்,

“பக்கத்து ஸ்டால்ல இருந்து 2000 ரூபாய்க்குச் சில்லறை கேட்டாங்க. இன்னும் அவ்ளோ போகலய்யா என்றேன். இதைக் கவனிச்ச டீ விக்கிற தம்பி, பேண்ட்டுக்குள்ள கையை விட்டு கொத்தா அள்ளி அதிலிருந்து கொஞ்சம் நோட்டு எடுத்து 2000 ரூபாய்க்குச் சில்லறை கொடுத்தான். முடிவு பண்ணியாச்சு. அடுத்த வருடம் புக்ஸ்டால் இல்ல, டீ ஸ்டால்தான்”

என்னுள் பலத்த வலியேற்படுத்திய பதிவு இது. அடுத்த வலி. ஒருவர் தலையிலடித்துக் கொண்டார்.

“காணும் பொங்கலன்று சென்னைவாசிகள் குடும்பம் குடும்பமாக, கூட்டங் கூட்டமாக எதையாவது, எங்காவது, காணச் சென்று விடுவார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சியைக் காண வேண்டும் என்று ஒருவருக்கும் தோணலையே. இங்க பாருங்க. ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறோம்” என்று தலையிடித்துக் கொண்டார்.

இந்தக் காட்சி கொடுங்கூராய்தம் கொண்டு எம்மை இரு கூறாக வெட்டிப் பிளந்தது போலிருந்தது.

அடுத்த ரணக் காட்சி. தானெழுதிய கவிதைகளையெல்லாம் தொகுத்து, கூடவே தன் கைக்காசைப் போட்டு, தெரிந்த நண்பரின் கணிணியின் முன் கனவுகளோடு காத்திருந்து, வடிவமைப்பு, அட்டை, பிழைத்திருத்தம் என்று ஒவ்வொரு பணிகளிலும் தம் கனவுகளைச் சிந்தி, அவரே எழுத்தாளராக... அவரே பதிப்பாளராக... அவரே வெளியீட்டாளராக... அவதாரம் எடுத்து, ஏதோவொரு துணிக்கடையில் கொடுத்த கட்டைப் பையில், தம் கனவு, ஆசை, எதிர்பார்ப்புக் குழந்தைகளை அடுக்கிக் கொண்டு, ஓடி ஓடிச் சென்று, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர், அறிந்தவர்களுக்கு அறிந்தவர் என ஒவ்வொருவரிடமும் பையிலிருந்து எடுத்து எடுத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டவர், “வாழ்த்துகள்” எனக் கரங் குலுக்க, வாழ்த்துகளும்... கரங்குலுக்குதல்களும் அற்றைக் கணம் அவருக்கு மகிழ்வளித்தாலும், கடைசியில் காலியான கட்டைப்பையுடன், ஒரு சில படிகளுக்கே வந்து சேர்ந்த காசைச் சுமந்தபடி, வெறுமையாய்த் தளர்ந்தபடியே, பசியோடு ரோட்டாரத்து டீக்கடை நோக்கி நகர்ந்த அந்தப் படைப்பாளனை... பதிப்பாளனை... வெளியீட்டாளனை... விநியோகிப்பாளனைக் கண்டு ஆறாத ரணம் இன்னும் என்னுள்.

கண்களைக் கூசிடச் செய்யும் பளீர் விளக்குகள். வழவழவென பளிங்குத்தரை. வசீகரிக்கும் இளம் பெண்களின் கைகூப்பிய வரவேற்பு. பொருட்களைச் சீராய், ஒழுங்காய் இனம் பிரித்து, தனித் தனியே அவ்வவற்றிற்கான இடங்களில் அடுக்கி, விலைக் குறிப்பு அடங்கிய குறியீட்டுக் கோடுகள் பொறித்த ஞெகிழிப் பொட்டலங்கள். அங்கு குவியும் மக்கள் திரள். அடுத்த புறம், வண்ணக் கூரை சாய்த்து, ஓரிரு பளிச் விளக்குகள் எரிய, அம்பாரமாய்க் குவிக்கப்பட்ட கடைகள், அதற்கு ஓரமாய் இரவல் வெளிச்சத்தில் விரிக்கப்பட்ட தரைக்கடைகள், இந்தக் கட்டமைப்பையெல்லாம் தாண்டி, ஒரு நைலான் சாக்கைத் தரையில் விரித்து, விற்றவரை லாபம் என தரைக் கடையோரக் கடை விரிப்பு என்பதாய் ஒரு நகரச் சந்தைக்கு ஈடாக தமிழ் அறிவுச் சந்தை. என்னதொரு அவலம், துன்பியல், ரணம். ரணங்களின் வலி தெறிக்க அதன் முகப்பில் கையறு நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் நான்.

chennai book fair 2019அடுத்த ஆகப் பெரும் இழிநிலை நூலின் பதிப்பு எண்ணிக்கை. எமக்கு முந்தைய காலங்களில் ஒரு தமிழ்ப் பதிப்பு என்பது 1200 படிகள் கொண்டது. (இதுவே எண்ட சேட்டனிடத்தில், சேச்சியிடத்தில், வங்கத்து தோழர்களிடத்தில் 5000 படிகள்) பிறகு அது 1000மாய் வளர்ச்சியடைந்தது. பிறகு வளர்ச்சியின் வேகம் கூடிக் கூடி, தற்போது விற்பனைச் சாத்தியம் எவ்வளவோ அது மட்டும். 500 படிகள், 300 படிகள், ஏன்? வெறும் 50 படிகள் மட்டுமே கொண்டதும் கூட ஒரு பதிப்புதான். என்னதொரு ஆகப்பெரிய அவலம்.

இதில் பதிப்பித்து வெளியிடும் பதிப்பாளர்களின் நிலையோ சொல்லி மாளாது. விதிவிலக்காக வெற்றி பெறும் ஓரிரு பதிப்பாளர்களும், பதிப்பகங்களும் உண்டுதான் என்றாலும், அவர்களின் எண்ணிக்கை என்பது ஒரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும்.

எனக்கென்னவோ உழவுத் தொழிலைப் போலவேதான் பதிப்புத் தொழிலும். முன்பு 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்பார்களோ அதுபோல, இப்போது 'பதிப்பவன் கணக்குப் பார்த்தால் பத்து கூடத் தேறாது' எனப் புதுமொழி நாம் சொல்லாம். ஆனாலும், உழுவதை நிறுத்தவில்லை எம் விவசாயிகள். அதேபோல, பதிப்பதை நிறுத்தவில்லை எமது படைப்பாளிகள்.

என்ன பிரச்சனை? எங்கு பிரச்சனை? எதில் பிரச்சனை?

இங்கு ஆளும் அரசுகளின் அரசியற் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் மட்டுமல்ல, தமிழாய்ந்த தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் தான். புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். "ஏத்தா மயிலு. அதான் பாஸாயிட்டேன்னு சொன்னியில்ல. பொறவு என்னத்தெப் படிக்கிறவ?” ஆக, வாசிப்பு என்பதும், எழுதுதல் என்பதும், ஏட்டுக் கல்வியோடு முற்றுப்பெறுகிற ஒன்று. அதைத் தாண்டி பிறகு எதுவும் கிடையாது. இதில் பாமர, படித்த, ஏன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்வரை யாரும் இங்கே விதிவிலக்கில்லை. பின் எப்படி வளரும் வாசிப்பு? பொதுவாக, தொடர்ந்து கற்கும் மிருகம் மனிதன் என்பார்கள். அது அவனின் சாவோடுதான் முற்றுப் பெறும் என்கிற அறிவு புகட்டப்படவில்லை இன்னும்.

ஆளும்... ஆண்ட... அரசுகளைப் பற்றியோ சொல்லவே தேவையில்லை. அதன் கொள்கைகளும், நிலைப்பாடுகளும், பன்னாட்டு இந்நாட்டு கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் அடி சார்ந்து நிற்பவைகள். தாழ் பணிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி அடிமைத் தொண்டூழியம் செய்பவைகள் அவைகள். ஓர் அறிவார்ந்த சமூகம் என்பது அடிப்படையிலேயே அவர்களுக்கு ஆபத்து. அவர்களுக்குத் தக வனையப்பட்ட, வார்க்கப்பட்ட, பொதுப் புத்தியோடு சமைக்கப்பட்டவர்களாய் இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது, சாலச் சிறந்தது. இங்கு கல்விச்சாலைகளை விட டாஸ்மாக்குகளின் எண்ணிக்கை அதிகம். புத்தகங்களை விட மதுப் புட்டிகளின் விற்பனைகள் அதிகம். நூலகத் துறையின் கொள்முதலைவிட வண்ணச் சாராயக் கொள்முதல் அதிகம்.

விடிவு? ஆட்சியாளர்களைத் தூக்கி எறிவது மட்டுமல்ல. மக்கட் சமூகத்தின் பொதுப்புத்தி உளவியலையும் சேர்த்துத்தான்.

- பாட்டாளி

Pin It