பெரும்பாலும் நாம் அலட்சியவாதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது அலட்சியவாதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

உதாரணமாகக் கடந்த 2004ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மிகக்கொடூரமான இரண்டு தீ விபத்துகள் நடந்தன. அவ்வாண்டின் ஜனவரி 23ஆம் நாள் திருச்சி திருவரங்கத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த ஒரு தீ விபத்தில் 49 பேர் கருகி இறந்தார்கள், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். மின் கசிவு, காரணமாகக் கூறப்பட்டது. ஜூலை 16-ஆம் நாள் கும்பகோணத்தின் பள்ளியொன்றில் நடந்த கொடூரத் தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிப் போனார்கள். சமையல் நெருப்புதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அதைப்போல இன்னொரு வேதனை ஜூலை 2ஆம் நாள் சிவகாசி மீனம்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த ஒரு தீ விபத்தில் 11 பேர் எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். அதற்குச் சொல்லப்பட்ட காரணம் ராக்கெட் வெடியைச் சோதித்துப் பார்க்க ஏவியபோது அது திரும்பி வந்து பட்டாசு ஆலைக்குள்ளேயே விழுந்துவிட்டது என்பதுதான். சோதனைக்கு ஏவப்படுகிற இந்த ராக்கெட் திரும்ப வந்து நம் தலைமீதே விழக்கூடும் என்று தினந்தோறும் அதனுடன் புழங்குவோருக்குத் தெரியாதா? தெரியும். பின்பு ஏன் இப்படி நடக்கிறது? அதுதான் அலட்சியம். 

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் நூற்றுக்கணக்கில் மயங்கி விழுவதும் பிறகு அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

சத்துணவு தயாரிப்பவன் அறியாமையும், கவனக்குறைவும் அதை மேற்பார்வை செய்ய வேண்டியவன் அலட்சியமும் இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இந்தத் துயரம் ஒரு தொடர்கதை போல நடந்துகொண்டேயிருப்பதற்கும், அப்படியிருந்தும் அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் இருப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் அலட்சியமின்றி வேறென்ன காரணம்? 

இன்னொரு செய்தியையும் அடிக்கடி படிக்கிறோம். தூர் வாருவதற்காகக் கிணற்றில் இறங்கிய தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தார்கள் என்பதுதான் அது. இதில் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த வகையிலும் எச்சரிக்கையாக மாறவில்லை என்பதே உண்மை நிலை. 

இவ்வாறான இன்னும் எத்தனையோ விதங்களில் சிலரது சின்னச் சின்ன கவனக் குறைவுகளாலும் அலட்சிய மனோபாவத்தாலும் தினந்தோறும் பெய பெய துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது நம் சமூகம். நேருக்குநேர் மோதிக் கொண்டு சிதைகிற வாகன விபத்துகளில் நிச்சயமாக ஏதோ ஒருதரப்பு, அலட்சியத் தரப்பாக இருக்கும். 

அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களிடம் "அலட்சியம் வேண்டாம்' என்று சொல்வீர்களானால் "என் வரலாற்றில் அப்படியெல்லாம் எதுவும் நடந்ததில்லை' என்பார்கள். ஏதேனும் நடந்துவிட்டபிறகு கேட்டீர்களானால் இதுவரைக்கும், இல்லை இப்போதுதான் இப்படி நடந்திருக்கிறது என்று வரலாற்றைப் புரட்டுவார்கள். 

"அதெல்லாம் எதுவும் நடக்காது; அதை அப்புறம் சரிபண்ணிக்கலாம்', ""ரொம்ப நாளா இது இப்படித்தான் இருக்கு'' என்பன போன்ற வார்த்தைகளைக் கொண்டு அலட்சியவாதிகளை நாம் சுலபமாக இனம் காண முடியும். நடந்து விட்ட துயரத்திற்குப் பிறர் மீது வேகவேகமாகப் பழி போடுகிறவர்களாகவும், வாகனம் ஓட்டுதல், மின் சாதனங்களைக் கையாளுதல், தீ தொடர்பான பணிகளைச் செய்தல் உள்ளிட்ட மேலும் பல பொறுப்புள்ள பணிகளை விளையாட்டுத்தனமாகவும், பொறுப்பற்றும் செய்யக் கூடியவர்களாகவும் அலட்சியவாதிகள் நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

விபத்துகளுக்கான உண்மையான பரிகாரம், இனி அவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதுதான் என்கிற உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விபத்துகளை நாம் விசாரணைக் குழுக்களால் தீர்க்க முயல்கிறோம். நடக்கும் துயரங்களில் இருந்து நாம் பாடம் கற்பதில்லை என்பதே கசப்பான உண்மை. எதிர்பாராமல் நடந்துவிட்டது, விதி முடிந்துவிட்டது, வேண்டுமென்றா செய்தார்கள், நடக்க வேண்டும் என்று இருந்தால் நடந்தே தீரும் என்பனபோன்ற வார்த்தைகளால் சமாதானமடைந்து நாம் நம்மையுமறியாமல் நம்முடன் இருப்பவர்களின் அலட்சிய மனோபாவத்தைப் பாதுகாத்து விடுகிறோம். 

மனித குலத்திற்கு நேரும் இயற்கையின் இடர்ப்பாடுகளை எந்த அளவிற்குத் தவிர்க்க முடியும் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், மனிதர்களால் மனிதர்களுக்கு நேரும் இடர்ப்பாடுகள் அனைத்தும் தவிர்க்க முடிந்தவையே என்பதை எப்போது நாம் முழுமையாக உணரப் போகிறோம்?

- ஜெயபாஸ்கரன்

Pin It