salem incident1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது’ என்று சட்டப் பேரவையிலேயே சொன்னார். 2018 அக்டோபர் மாதம் இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் ‘காவல்துறையின் ஈரல் கெட்டு அழுகிவிட்டது! ஒட்டு மொத்த காவல்துறை நிர்வாகக் கட்டமைப்பின் ஈரல் கெட்டு அழுகிப்போய் விட்டது மிகுந்த கவலையளிக்கிறது’ என காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞரும் இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலினும் சொன்னது போல் காவல்துறையின் ஈரல் முழுதுவதுமாக அழுகிவிட்டதை காவல் துறையின் கண்ணியமற்ற, காட்டு மிராண்டித்தனமான செயல்கள் ஒவ்வொன்றும் நம்க்கு உறுதிப் படுத்துகின்றன.

அந்த வரிசையில் இரு நாட்களுக்கு முன்னர் (22.06.2021) சேலம் முருகேசன் என்பவர் காவல்துறை தாக்கியதில் இறந்திருக்கிறார். இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்பதை வீடியோவில் பார்த்தால் அறிந்து கொள்ள இயலுகிறது.

அரசின் கவனத்திற்கு இந்த கொடுரம் வந்த உடன் முருகேசனைத் தாக்கிய சிறப்புக் காவல் உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த முருகேசனின் குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மே7 ஆம் தேதி ஆட்சிக்கு வந்த உடனே காவல்துறையின் செயல்பாடுகளில் உடனடியாக மாற்றங்கள் வேண்டுமென முதல்வர் அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப் பட்டதைத் தொடர்ந்து போலிசார் மக்களிடம் கனிவாக நடந்து கொண்டதை கண்கூடாக பார்த்தோம். கடந்த ஆட்சியில் இல்லாத கனிவும் உடனடி நடவடிக்கையும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

காவல்துறை மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திய பின்னரும் முருகேசனின் சாவு ஏன் நிகழ்ந்தது?

இந்த சம்பவம் தனித்த நிகழ்வு என சொல்ல இயலாது. காவல் துறையால் பொது மக்கள் தாக்கப் படுவது தொடர் நிகழ்வு. காவல் துறை உங்கள் நண்பன் என தொடர்ந்து சொன்னாலும் மக்கள் ஒருபோதும் காவல்துறையை நம்பத் தயாரில்லை. ஏன் இந்த அவல நிலை?

போலிசால் தாக்கப்பட்டு, முருகேசன் இறந்ததை குறிப்பிட்டு வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில் ‘காவல்துறைக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும், தகராறு ஏற்பட்டதின் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி திரு. பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் திரு. முருகேசன் என்பவர் மயக்கமடைந்து’ என காவல்துறையினர் லத்தியால் முருகேசனை தாக்கியதை மறைக்காமல் தமிழ் நாடு அரசு உண்மையை வெளியிட்டது.

ஆனால் 24.06.2021 அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முருகேசன் மரணம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ‘கொல்லப்பட்ட முருகேசன் மதுபோதையில் இருந்தார் எனவும், தகராறில் இறந்தார் எனவும் குறிப்பிட்டார், ஆனால் போலிசால் தாக்கப்பட்டு இறந்தார்’ என்று சொல்வதை தவிர்த்து விட்டார்.

காவல்துறையினர் அதிகார வரம்பை மீறி நடக்கும் ஒவ்வொரு முறையும் அரசின் இதே நடைமுறை தொடர்கிறது. போலிசாரின் குற்றங்களை மறைத்து காவல்துறையை காக்கும் அரசின் இந்த நடைமுறையே பொது மக்களை கேள்வியின்றித் தாக்கும் அதிகாரத்தை காவல் துறைக்கு தருகிறது.

கூடுதலான பணிச்சுமையும் மன அழுத்தமும் காவல்துறைக்கு உள்ளது என்பது உண்மையெனினும் காவல்துறையின் அதிகார மீறலுக்கு அவைதான் காரணம் என சொல்லி உண்மையான பிரச்சினையில் இருந்து ஓவ்வொறு முறையும் தப்பிக்க இயலாது.

யாரையும் கேள்வியின்றி அடிக்கலாம் எனும் அதிகாரமும், அரசாங்கம் எப்படியும் நம்மைக் காப்பாற்றும் எனும் வரலாற்றுத் தொடர்ச்சியுமே காவல்துறையின் அதிகார மீறலுக்கு காரணம். இந்த இரண்டையும் ஒழிக்காமல் காவல்துறையை நல்வழிப்படுத்த முடியாது.

காவல் துறையின் அதிகாரல் மீறல்கள் வெளிவரும் ஒவ்வொரு முறையும் காவல் சீர்திருத்தம் என்ற பேச்சு அடிபடும். எனினும் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீரழிந்தபோதிலும் காவல் சீர்திருத்தம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது.

காவல் சீர்திருத்தம் குறித்து 2006ல் உச்ச நீதிமன்ற தந்த வழிகாட்டுதல்களை, ஓன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதை சமிபத்திய முருகேசன் மரணம் உட்பட கணக்கிலடங்காத பல்வேறு நிகழ்வுகளும் வழக்குகளும் எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய காவல் ஆணையத்தின் பல அறிக்கைகள் மற்றும் பல நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை 2006ல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்கள் பெருமளவு பிரதிபலிக்கின்றன.

காவல்துறை சீர்திருத்தம் கேட்பாரற்று இருந்த அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த தீர்ப்பு என்று புகழப்பட்டது. இருப்பினும் இதுவரை காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் அரசுகளுக்கு தயக்கம் உள்ளது.

வர்க்கம், பால், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறை பாகுபாட்டோடு செயல்படுவதை 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘’இந்தியாவில் காவல்துறையின் நிலை’’ என்ற அறிக்கையில் காணமுடியும்.

2005 ஆம் ஆண்டு, கேரளாவில் காவலில் வைக்கப்பட்டிருந்த உதயகுமார் என்ற இளைஞர் இறந்தது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி ‘காவல்துறை என்ற நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால் அது சமூகத்தின் சட்ட ஒழுங்கை பாதிக்கும். அத்தகைய நிலை மிகவும் ஆபத்தானது’ என்று குறிப்பிட்டார்.

காவல்துறை என்ற நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் வைத்திருக்கும் அவநம்பிக்கையை மீட்டெடுக்க காவல் துறை சீர்திருத்தம் முழுமையாக செயல்படுத்தப் படவேண்டிய கட்டாயம் உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறை சித்ரவதை மரணங்கள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். காவல் துறையினரால் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லபட்ட ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக இணைய வழியில் நடந்த நினைவேந்தல் நாள் கருத்தரங்கில் பேசிய கவிஞர் கனிமொழி காவல் சித்திரவதைகள் தடுக்கப்பட வேண்டும்.

அதற்காக ஒரு பண்பாட்டு மாற்றம் தேவைப்படுகிறது என குறிப்பிட்ட மறுநாள் சேலத்தில் காவல்துறையின் தாக்குதலில் மற்றுமொருவர் மரணித்துள்ளார். இந்த வன்முறையை கண்டித்த கவிஞர் கனிமொழி ‘சாமானிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்ததோடு மட்டுமின்றி காவல்துறையினர் தமது மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட், கூடன்குளம், எட்டுவழிச்சாலை என பல அறவழிப் போரட்டங்களில் பங்கேற்ற மக்கள் மீது புனையப்பட்ட வழக்குகளை மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விலக்கிக் கொண்டதும் முக்கியமானது.

செயலொன்று, பேச்சொன்று என இரட்டை நிலைப்பாடு இல்லாமல் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழக அரசு காவல்துறையை சீர்படுத்தி, மக்களின் அவ நம்பிக்கையை போக்கிட முயற்சிகள் எடுத்திட வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரமற்ற மக்களை கண்ணியத்தோடும் பாகுபாடற்றும் நடத்துவதே உண்மையான மக்களாட்சி.

கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலை மேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து என வள்ளுவன் கடிந்தது போல் இந்த அரசு நடக்க கூடாது.

- சு.விஜயபாஸ்கர்

Pin It