கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி உடைமைகள் மீதான தாக்குதல் சம்பவத்தால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டார்கள் என கருதி திமுக தலைமை நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

நான்கு நாட்களாக இப்பிரச்சினையில் பள்ளி நிர்வாகி பாஜக-காரருக்கு சாதகமாக செயல்பட்டு 'திமுகவிற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த' மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு மீது எடுத்த அதிகபட்ச நடவடிக்கை SPயும் Collectorம் இடமாற்றம். திட்டமிட்ட கலவரம் என்று கூறிய மகேஷ் பொய்யாமொழி, திட்டமிட்டவர்கள் யார் என்று சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கைவரிசை இந்த வன்முறையில் என்னென்ன என்று ஆராய பல முற்போக்காளர்கள் கோரினார்கள். திமுக இதை செவிமடுக்கவில்லை. மாறாக, திட்டமிட்டவர்கள் மக்கள் அதிகாரம், தபெதிக என சங்கிகள் கூச்சலிட்டதற்கே திமுக செவிமடுத்தது.

kallakurichi school 526மக்கள் அதிகாரம், தபெதிக-வைச் சேர்ந்தவர்களும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட வாட்ஸ்ஆப் குழுவில் அழைப்பு விடுத்தவர்களும் தேடித்தேடி திமுக போலீசால் கைது செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் போட்டிருக்கிறார்கள். சிலரை வழக்கமான 'மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்' என கடுமையாகத் தாக்கியிருக்கிறது போலீசு.

மாணவி மரணத்திற்குக் காரணமான பாஜக பள்ளி நிர்வாகி மீது வராத கோபம், கூட்டுச் சதி செய்து உண்மையை மறைத்த, சரியாக செயல்படாத மாவட்ட நிர்வாகம்- போலீசு மீது வராத கோபம் போராடியவர்கள் மீது வருகிறது என்றால் திமுகவின் ஜனநாயக விரோத - பழி வாங்கும் குணாம்சம் பல்லிளிக்கிறது.

***

பள்ளியில் வைக்கப்படும் சிசிடிவி என்ன வெங்காயத்திற்காம்? தற்கொலைதான் நடந்தது என அனைத்து footageயும் கள்ளக்குறிச்சி - சின்ன சேலம், சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகி சாந்தி, பெற்றோர் சந்தேகம் கிளப்பியதுமே வெளியிட்டிருக்கலாம் அல்லது போலீசை வெளியிட சொல்லி கேட்டிருக்கலாம். நான்கு நாட்கள் யார் அல்லது எது தடுத்தது? இன்றுவரை அந்த footage ஏன் வெளிவரவில்லை? (Edit செய்யப்பட்ட இரண்டு footage வந்து மாணவி சோர்வாக இருப்பதாக கதை கட்டினார்களே தவிர கீழே விழுந்த அல்லது விழுந்த பிறகு கிடந்த வீடியோ வரவில்லை). Courtல் வழக்கிருக்கிறது என்றெல்லாம் கதை வேண்டாம். மாணவி எழுதிய கடிதம் மட்டும் எப்படி வெளிவந்தது?

தமிழ்நாட்டில் அநேக தனியார் பள்ளிகள் ஜெயில் போல் இயங்குகின்றன. பெற்றோர்களை கூட எளிதில் பள்ளி - விடுதி வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை. அல்லது அலுவலக அறை தாண்டி அனுமதிப்பதில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கம் இயங்குவதில்லை; மதிப்பெண் பற்றி பேச மட்டுமே அவை வரம்பிட்டு நடத்தப்படுகின்றன. இவையெல்லாம் தவறுகளை மறைக்க பல பள்ளி நிர்வாகத்திற்கு வசதியாகி விடுகின்றன. இப்பள்ளியின் விடுதியில் ஸ்ரீமதியின் அறையைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்கிறார், தாய். போலீசு அனுமதிக்கப்பட்டு வீடியோ எடுத்தார்களா? கடிதம் தவிர போலீசு கைப்பற்றிய பிற தடயங்கள் எதுவும் இல்லையா?

பள்ளி மீது தாக்குதல் நடந்த பின்னே பள்ளி நிர்வாகி சாந்தி வீடியோ வெளியிடுகிறார்; பேட்டியளிக்கிறார். போலீசும் விழித்துக் கொண்டு வன்முறைக் கூச்சலிட்டு நடவடிக்கையில் இறங்கி இரு தரப்பையும் கைது செய்கிறது. இதனால் மாணவி மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதால் சந்தேகத்தை உருவாக்கி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் பற்றி பல யூகங்கள் வதந்திகள் பரவுகின்றன. பள்ளி நிர்வாகி ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்தவர், ஆர்எஸ்எஸ் ஷாகா பள்ளியில் நடத்தப்பட்டுள்ளது போன்றவைகளால் பல சந்தேகங்கள் எழுவது தமிழகத்தில் இயல்பு.

பெற்றோர் தரப்பினர் போராடிய போது வன்முறையாக மாறிய தருணம் எது? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? இதற்கான வீடியோ யாரிடமும் (போலீசு, பத்திரிக்கையாளர்கள்) இல்லையா? இந்த டிஜிட்டல் உலகில் இதுபோன்ற பல நிகழ்வுகளில் (ஜல்லிக்கட்டு போராட்ட கடைசி நாள் தாக்குதல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீது நடந்த தாக்குதல் - துப்பாக்கிச் சூடு) தேவையான குறிப்பிட்ட சில நிமிடங்கள் வீடியோ வெளிவராமல் மாயமாகி சர்ச்சையாகி நிற்கிறது ஏன்?

மாணவியின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ள விவரங்கள் கொலை என்பதற்கான சந்தேகத்தைத் தானே உறுதி செய்கின்றன. அதற்கு பிறகும் மறு உடற்கூராய்வில் மாணவி தரப்பு மருத்துவருக்கான அனுமதிக்காக போராடுகிற நிலை உருவாக்கப்படுமானால் கோளாறு எங்கிருக்கிறது? இதுபோன்ற வழக்குகளின் உடற்கூராய்வுகளின் வீடியோக்கள் ஏன் பொதுவெளியில் வைக்கப்படுவதில்லை?

சிசிடிவி வீடியோ, பத்திரிகையாளர் - போலீசு வீடியோ, உடற்கூராய்வு வீடியோ போன்றவற்றை நீதிமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன், மக்கள் மன்றத்தில் வைத்தால் பல பிரச்சினைகள் - வன்முறைகள் தவிர்க்கப்படுமே. வெளிப்படையும் யதார்த்தமும் நேர்மையும் இல்லாத இடங்களில் அல்லது மறைக்கப்படும் இடங்களில்தானே பிரச்சினை உருவாகிறது?

இதுபோன்ற நிகழ்வுகளில் இதுபோன்ற வீடியோக்களை பொதுவெளியில் உடனுக்குடன் வைக்க திராவிட மாடல் அரசாங்கம் ஏற்பாடு செய்யலாம். ஆனால் செய்யாது.

பாதிக்கப்பட்ட மாணவி - பெற்றோர் தரப்பையும் பள்ளி நிர்வாகத்தினரையும் சமப்படுத்தி அல்லது ஏதாவது நாடகமாடி கடைசியில் ஏற்கனவே நடந்த பல பள்ளி பிரச்சினை போல் திமுக அரசாங்கம் இதையும் கிடப்பில் போடப் போகிறது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் போலீசின் நண்பர்கள் என செயல்பட்ட சங்கி கும்பல் மீது எப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லையோ, அதேபோல், இப்பள்ளி ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூடாரமாக விளங்கியதற்கு எதிரான நடவடிக்கையும் இல்லாமல் போகும்.

***

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதும், திமுகவினர் இந்துமத விரோதிகள் - நாத்திகர்கள் என்பதும் சங்கிகள் திமுகவை மிரட்டும் ஆயுதங்கள். இரண்டிற்கும் அது ஆற்றும் எதிர்வினை கேவலமாக இருக்கிறது.

"திமுக மேலிடத்திற்கு உண்மை நிலவரம் போகாமல் SPயும் Collectorம் பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து மறைத்து விட்டார்கள்; அண்ணாமலைக்குப் பயந்தோ, ஆளுநர் ஆர்.என். ரவி அல்லது அமித்ஷா தலையிட்டதாலோ இப்படிச் செய்தார்கள்" என பலவாறாக யூகங்களை திமுகவினரும் அனுதாபிகளும் முன்வைக்கிறார்கள். இதற்குரிய ஆதாரங்களை வெளியிடாமலே, ஒரு வழியாக SPயையும், Collector-யைம் திமுக அரசாங்கம் இடம் மாற்றிவிட்டது. சிறப்புக் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சரி. IAS, IPS அதிகாரிகளை எத்தனை முறை மாற்றினாலும் திமுக அரசாங்கம் தமக்கேற்ப செயல்பட - தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் சிரமப்படுகிறதே ஏன்?

காரணம், அந்த அளவிற்கு கடந்த அடிமை ஆட்சியைப் பயன்படுத்தி பல குழிகளை வெட்டி வைத்திருக்கிறது, ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல். அப்படியானால் அதற்கெதிராக திமுக எப்படி செயல்பட வேண்டும்? பாஜக கும்பலுக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயல்பட்ட ஆதாரங்களை வெளிப்படுத்தி அந்த அதிகாரிகளை துறை மாற்றுகிற நடவடிக்கை எடுக்காமல், வேலையிலிருந்து இடை நீக்கம் அல்லது முழு நீக்கம் செய்ய வேண்டும். சட்டவிரோத கிரிமினல் செயல்களுக்கு உரிய வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும். திமுக அரசாங்கம் ஏதாவது செய்திருக்கிறதா? மாறாக diplomatic அணுகுமுறையையே கடைபிடிக்கிறது.

அதேபோல், இந்துக்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்து விடுவோம் என்ற மிரட்டலை கிளப்புகிற இடத்திலெல்லாம் பாஜக மகுடிக்கு அசையும் பாம்பாகி பெட்டிக்குள் சுருண்டு விடுகிறது, திமுக.

உண்மையில்... தமிழகத்தில், பெருவாரியான இந்துக்களிடையே பாஜக- மோடி மீது எதிர்ப்புணர்வே உள்ளது. இதை அறிந்து எதிர்க் கட்சியாக இருந்த பொழுது பயன்படுத்தி அனைத்திலும் பாஜக எதிர்ப்பைக் காட்டி வெற்றி பெற்ற திமுக, தற்போது இந்துக்களிடமுள்ள அதே எதிர்ப்புணர்வை நம்பி பாஜகவை முடக்கும் நடவடிக்கையில் இறங்க மறுக்கிறது.

***

ஊர்தோறும் பாஜகவும் இந்து முன்னணியும் போடும் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களுக்கு திமுக 'கட்டுப்பாட்டில் உள்ள' போலீசு சாமரம் வீசுகிறது. மறுபுறமோ, ஊர்தோறும் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மட்டுமல்ல பேசுபவர்களை - வலைதளப் பதிவர்களைக்கூட கைது செய்து முடக்குகிறது.

சங்கிகளின் பிரச்சாரங்களைத் தடுத்தால் அல்லது அவர்களைக் கைது செய்தால் அதை வைத்தே அரசியல் செய்து வளர்ந்து விடுவார்கள்; அதேபோல், போராடும் பிற கூட்டணிக் கட்சியினர் முதல் பிற இடதுசாரி முற்போக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் அதையும் சங்கிகள் பெரிதாக்கி அரசியல் செய்வார்கள் என்பதற்காகவே திமுக இத்தகைய diplomatic அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்கிறார்கள்.

kallakurichi school 632இந்த அணுகுமுறைதான் சிக்கலே. ஏனெனில், சங்கி கும்பல், இத்தகைய diplomatic அரசியல் வரம்புக்குள்ளேயே திமுகவைத் தொடர்ந்து முடக்கி தமது காரியங்களை சாதித்துக் கொள்கிறது; சதித் திட்டங்களை நடைமுறைபடுத்திக் கொள்கிறது. எனவே திமுக diplomatic அரசியல் அணுகுமுறையிலிருந்து வெளிவந்து சங்கிகளை அவர்கள் வழியிலேயே சாம, பேத, தான, தண்ட முறைகளை கடைபிடித்து, தீவிர எதிர் நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் அதிமுகவைப் போல் (அதே வழிமுறையில் என்று பொருளல்ல) திமுகவின் இருப்பும் நாளை கேள்விக்குள்ளாகிவிடும்.

***

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் ஒருவருக்கு அரசு வேலையும் தரச் சொல்கிறார், ஸ்ரீதர் வாண்டையார். நீதிபதி, உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என்று பெற்றோர் வழக்கறிஞரிடம் கூறுகிறார். என்ன நடக்கிறது?

ஸ்ரீமதி விவகாரம் போகும் போக்கு ஸ்வாதி கொலை சம்பவங்களை நினைவூட்டுகின்றன. எந்த எல்லைக்கும் போய் காரியம் சாதித்துக் கொள்கிற மாடல். ஸ்வாதி விசயத்தில் அரசு இயந்திரம் முழுவதும் இயங்கியது. ஸ்ரீமதி விசயத்தில் அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்க இடையூறு இருப்பதால், நீதிமன்றமும் சேர்ந்து இயங்குகிறது.

ஆர்எஸ்எஸ் கும்பல் திமுக தலைமை விழித்துக் கொள்ளும்வரை மாவட்ட நிர்வாக - போலீசை வைத்து காரியம் சாதித்துக் கொண்டு தந்திரமாக இப்பிரச்சினையை நீதிமன்றக் கட்டுப்பாட்டிலும் சிக்க வைத்துவிட்டது. ஸ்டாலின் அரசாங்கத்தை நீதிமன்ற வழக்குகளைக் காட்டி மிரட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது.

மோடி ஆட்சிக்குப்பின் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது மேலும் வியப்பளிக்கின்றன. அரசு தரப்பு உடல்கூராய்வில் நம்பிக்கை இல்லாததால்தான் பெற்றோர் தரப்பு, மருத்துவர் அனுமதி கோருகின்றனர். அவர்களிடம் அரசு மீது நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லையா எனக் கேட்பது என்ன வகை? எங்களை நம்பி உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பது என்ன முறை? சட்டத்தில் இயல்பாகவே பாதிக்கப்பட்டவர் தரப்பு மருத்துவர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் தடாலடியாக இரண்டு நீதிமன்றங்களும் மறுப்பதும், அவர்கள் கேட்காத ஒன்றை அதாவது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஜிப்மர் மருத்துவர்களின் பரிசீலனையைக் கேட்பதும் நீதிபரிபாலனத்தில் சேருமா? உடலை வாங்கி இறுதிச் சடங்கு செய்ய பெற்றோர் தரப்பை நிர்பந்திப்பதும் இயல்புக்கு மீறியதாகவே உள்ளது.

தங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத மாதிரி நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்ப்பிற்காக திமுக அரசும் காத்துக் கிடப்பது அதனினும் கேவலம்.

திமுக தலைமைக்கு ஆரியத்திற்கு எதிராக திராவிடப் போர் நடத்தத் தெரியாதா, அல்லது நீதிமன்ற கிடுக்கிப் பிடிக்கு சமமாகவோ, மீறியோ களமாட வழியில்லையா என்ன? மாநில அரசாங்கம் வரம்புக்குட்பட்ட அதிகாரம் என்றாலும் முடிந்ததைக் கூட செய்யவில்லையே? பள்ளியின் விடுதிக்கு அங்கீகாரம் இல்லை என்ற ஒரு சிறு உண்மைக்கே பதைபதைத்து நடவடிக்கை ஏன்? மாணவிக்கு இறுதிச் சடங்கில் காட்டுகிற ஆர்வத்தை, மாணவி இறந்ததில் உள்ள பல சந்தேக கேள்விகளுக்குரிய விசாரணையில் நீதிமன்றம் காட்டவில்லை; சரி, திமுக அரசாங்கமும் ஏன் காட்டவில்லை?

ஸ்வாதி விசயத்தில் ஜெயலலிதாவிற்கு வந்ததுபோல் ஸ்ரீமதி விசயத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கடிகள் வருகிறது என்றே வைத்துக் கொள்வோம் திராவிடப் புலிகளான திமுக தலைமை அதையும் வெளிப்படுத்தி களமாட வேண்டியதுதானே?

இரண்டு எம்எல்ஏக்கள், கழுத்தளவு கடனுள்ள பள்ளி நிர்வாகியிடம் 30 லட்சம் பணம் வாங்கி சாதகமாக நடந்து கொள்வதாகவும், 'காதல் தோல்வி'யால் (ஒருவேளை காதலித்திருந்தாலும் அதை வைத்து பள்ளி நிர்வாகத்தினர் அவமானப்படுத்தியதாகவே கருதப்படுமே ஒழிய, தோல்வி எப்படியாகும்? மேலும் சட்டத்திற்குப் புறம்பாக மாணவரின் பெயரையும் வெளியிட்டுள்ளார்) ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாகவும் சவுக்கு சங்கர் பேசுவது எல்லாம் சமூக வலைதள பொய்ப் பிரச்சாரம் வகையறாவில் சேருமா, சேராதா என்பதை நீதிபதி விளக்க வேண்டும்.

சவுக்கு சங்கர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத ஸ்டாலின் அரசாங்கமும் எம்எல்ஏக்கள் பணம் வாங்கியது உண்மையா, பொய்யா என்றும் விளக்க வேண்டும்.

ஸ்ரீமதிக்கான நீதி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை முதன்மை ஊடகங்களும் விவாதம் என்ற பெயரில் அலசி ஆராயாமல் இருக்கின்றனவே? இவர்களும் சைலன்ட் மோடுக்கு போனதற்குக் காரணம், 'கழுத்தளவு கடன்காரரா'? அரசு(கள்) அதிகாரமா?

ஆளும் வர்க்கம், குறிப்பாக இவ்விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் ஓரணியில் என்பதையும், ஸ்ரீமதிக்கான நீதியை சிக்கலுக்குள்ளாக்கி வருவதையும் மக்கள் அவதானித்து தெளிவாகப் புரிந்து கொள்ளவே செய்வர்.

- ஞாலன்

Pin It