2021 தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது. மகளிர் நாளும் நெருங்கிவிட்டது. மகளிர் இந்தத் தேர்தலில் ஆற்றப்போகும் அறம் சார்ந்த பங்கை சிறிது அலசுவோம்.
இந்தத் தேர்தல் மகளிருக்கு எவ்வளவு முக்கியமானது, அதை எவ்வாறு அவர்கள் அணுகப் போகிறார்கள் என்பதும் தேர்தலின் முக்கியத்துவத்தை மட்டுமல்ல சனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தப் போகிறது.
என்றுமே பெண்கள் கருணையானவர்கள் மட்டுமல்ல, உண்மை விரும்பிகளும், துணிவு விரும்பிகளும், சமத்துவத்துக்கான மாற்றத்தை உடனடியாக உள்வாங்கிக்கொள்பவர்களும் ஆவர். மொத்தத்தில் அவர்கள் அறம் சார்ந்தவர்கள்.
பெண் என்பதால் ஜெயாவின் மீது பெண்கள் காட்டிய கருணை
எம்.ஜி.ஆரின் இறப்பில் தனித்து விடப்பட்ட ஜெயலலிதாவை, என்றுமே தனி மரமாக நின்றுவிட்ட ஜெயலலிதாவை, வாரிசற்ற ஜெயலலிதாவை இறப்பு வரை கொண்டாடியவர்கள் பெண்கள். ஆம்! அப்படித்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது அவர்கள் கருணை கொண்டார்கள்.
மோடியா லேடியா? நான் இருக்கும்போது உள்ளே நுழைவியா என்ற நேர்மையை, துணிவை அவர்கள் கொண்டாடினார்கள். ஆம்! ஏழைகளுக்காக கலைஞர் கொண்டுவரும் திட்டங்களை, பெயர் மாற்றினாலும், கூடுதல் தொகையுடன் செய்வார். பெண்கள் இதையெல்லாம் அறம் சார்ந்தே ஆதரித்தனர்.
அவர்களுக்குத் தேவையானது நடக்கும் வரை, அவர்கள் ஜெயலலிதாவின் திருட்டைக் கூட தண்டித்தும் மன்னித்தும் கடந்தனர்.
இன்றைய அடிமை அரசு
ஆனால், இன்றோ நிலைமை வேறு! 2015 சென்னை வெள்ளத்தின் போதே முடியாமல் இருந்தவர், 2016ல் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பவே மீண்டும் ஆட்சிக்கு வரவைக்கப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்கள் சந்திக்கும் அவலம் சொல்லி மாளாதது!
• பெண்களுக்கு இருசக்கர வண்டி என்றார்கள். வந்த பாடில்லை!
• வேலைவாய்ப்பு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் பதியும் நிலையில் சில ஆயிரங்களில் கிடைக்கிறது!
• நீட் தேர்வுக்கு அனுமதி அளித்ததனால் அனிதா முதல் ஆதித்யா வரை 15க்கு மேற்பட்ட அறிவார்ந்த பிள்ளைகளை இழந்திருக்கிறோம்.
• நீட் கோச்சிங் என்ற பெயரால் சாதாரண நடுத்தர வர்க்க மக்களும் சில லட்சங்களை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
• அண்ணா பல்கலையில் நடக்கும் நாடகங்கள், நம் மாணவர்களின் பொறியாளர் கனவுகளையும் சிதறடிப்பதைப் பெண்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
• கடன் வாங்கி கடன் வாங்கி அரசுக் கருவூலத்துக்கு அனுப்பாமல் தங்கள் சொந்தக் கருவூலங்களை நிரப்புவதைப் பெண்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
• பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ரூ.60,000/- கடன் இருக்கிறது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்லும்போது பெண்கள் சுயபச்சாதாபம் கொள்ளவில்லை. மாறாக மாற்றத்தை விதைக்கத் தயாராகி விட்டார்கள்.
• நிதி ஒதுக்காமல் விதி 110ன் கீழ் செய்யும் அறிவிப்புகளை இனியும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.
• கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரங்களை இழந்தும், வருமானம் குன்றியும் போன சூழல் ஒருபுறம்!
• பெட்ரோல், டீசல், விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வால் கூடிய குடும்பச் செலவுகள் மறுபுறம்!
• இந்தப் பாதிப்புகளின் நேரடித் தாக்கத்தைப் பெண்களே அதிகம் உணருகிறார்கள். வயிற்றுக்குச் சோறிடும் பொறுப்பு பல பெண்களிடம் தானே இன்னமும் உள்ளது!
கூட்டம் கூட்டமாகப் பெண்கள்
திரு.ஸ்டாலின் அவர்களைப் பெண்கள் மிகவும் நேசித்தே வந்திருக்கிறார்கள். அவர் சென்னை மேயராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களால் இன்று இலகுவான வாழ்க்கை வாழும் சென்னைவாசிகள், அவர் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த போது புகார்களுக்கு இடமின்றி நிறைவேற்றிய திட்டங்கள் – ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் ஆவர்.
இன்றைய கிராம சபைக் கூட்டங்களில் கூடும் பெண்கள் திரு.ஸ்டாலின் அவர்களை ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிடக் கூடும் பெண்கள்!
ஸ்டாலின் மட்டுமல்ல! திரு. கனிமொழி அவர்கள் மேற்கொள்ளும் சூறாவளிப் பயணங்கள், ஆணவக் கொலைகளாலும், சாதீய வன்கொடுமைகளாலும், பாகுபாடுகளாலும் அல்லலுறும் மக்கள் மீதும் ஆணாதிக்கச் சமூகத்தால் பாதிக்கப்படும் பெண்கள் மீதும் அவர் காட்டும் பரிவும், அவர் கொடுக்கும் நம்பிக்கையும் எல்லாத் தரப்பினரையும், குறிப்பாக நடுநிலையாளர்களையும், பெண்களையும் கவர்ந்து வருகின்றன.
தி.மு.கவின் அறிவு முகம், அசத்தல் முகம் திரு.திருச்சி சிவா, திரு.ஆ.ராசா - அவர்கள் ஆடும் அடித்தாட்டம் பெண்களைக் கவனிக்க வைக்கிறது. திரு.உதயநிதி திரட்டும் இளைஞர் பட்டாளமும் பெண்கள் பெருந்திரளும், அவருடைய ஆடம்பரமற்ற எளிய பேச்சுகளும் கவராத பெண்களே இல்லை எனலாம். நம்ம வீட்டுப் பிள்ளையாக, வளரும் கன்றாக அவரைக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர் பெண்கள்!
கருணையும், அன்பும், உண்மையும், சமத்துவமும் விரும்பும் அறம் சார்ந்த எம் பெண்கள் வரும் தேர்தலில் பெண்களின் வலிமையை, அறத்தின் வழியில் நின்று நிரூபிப்பார்கள்! கலைஞரின் ஆட்சியைக் கொண்டுவருவார்கள்!
- சாரதாதேவி