இந்தியா நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்கிறாரே தோழர் கொளத்தூர் மணி, சரிதானா?
தமிழீழம் தொடர்பாகத் தோழர்கள் கொளத்தூர் மணி, மருதையன் இருவரும் அண்மையில் நேர்காணல் அளித்துள்ளார்கள். முதலில் தோழர் கொளத்தூர் மணியின் நேர்காணலுக்குள் நுழைகிறேன்.
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விகடன் டிவி யூடியூப் சேனலுக்கு 2021 சூன் 22ஆம் நாள் அளித்த நேர்காணலைப் பார்த்தேன். அந்த நேர்காணலில் அவர், இந்தியா நினைத்திருந்தாலும் 2009 தமிழீழ இனவழிப்பை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார். அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்த போதும், இதே கருத்தைக் கூறினார்.
இந்தியா நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்பது தோழர் கொளத்தூர் மணியின் ஊகம், அவ்வளவே. அதற்கு அவர் சான்றுகள் தந்திருக்க வேண்டும். புறச் சான்றுகள் காட்டி, சரியான தரவுகளுடன் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தன் ஊகத்தை மெய்ப்பித்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட முயற்சிகள் எதிலும் அவர் இறங்கவே இல்லை. அவர் மிகச் சாதாரணமான இரண்டே இரண்டு தரவுகளை மட்டும் முன்வைக்கிறார்.
2009இல் வெற்றி முகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்த ராஜபட்சே எவர் ஒருவர் சொல்வதையும் கேட்காமல் வெறித்தனமாகப் போரை நடத்திக் கொண்டிருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றில்லை, இந்தியாவே நினைத்திருந்தால் கூட தடுக்க முடியாது என்றளவுக்கு நிலைமை இருந்தது என்ற கருத்தைக் கூறி தன் ஊகத்துக்கு ஆதரவாக முதல் தரவைத் தருகிறார் தோழர் கொளத்தூர் மணி.
சிங்களத்துடன் சேர்ந்து நின்று போரை நடத்திக் கொண்டிருந்த தெற்காசிய வல்லரசாகிய இந்தியா போரை நிறுத்தச் சொல்வதும், ஏதோ சிலர் போரை நிறுத்தச் சொல்வதும் எப்படி ஒன்றாகும்?
இலங்கைக்குள் ஐநா பிரதிநிதிகளை அனுமதிக்காத, உலக வரலாற்றில் இல்லாத அளவுக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றிய இராசபட்சே எவர் சொல்லையும் கேட்காமல் திமிருடன் நடத்திக் கொண்டிருந்த போரில் இந்தியாவால் என்ன செய்திருக்க முடியும் எனக் கேட்டு, தன் ஊகத்துக்கு ஆதரவாக இரண்டாவது தரவை முன்வைக்கிறார் தோழர் கொளத்தூர் மணி.
முழு இறைமை கொண்ட ஏகாதிபத்திய இந்தியாவுடன், எந்த அதிகாரமும் அற்ற செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒரு சாதாரண அமைப்பையும், ஒரு நாட்டுக்குள் அதன் அனுமதியில்லாமல் எந்தப் பிரதிநிதிகளையும் வலுவந்தமாக நுழைக்கும் அதிகாரமற்ற ஐநாவையும் ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமற்றது.
எனவே இப்படி பொருத்தமற்ற இரு அற்பத் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்தியா நினைத்திருந்தாலும் சிங்களத்தின் இறுதிப் போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணி வந்ததற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது.
தோழர் கொளத்தூர் மணி இந்தியா குறித்து எப்படி இத்தகையதொரு நிலைப்பாட்டுக்கு வந்தார் என்பது எனக்குப் பெரும் வியப்பாக உள்ளது. ஏனென்றால், அவர் சுமார் 40 ஆண்டாகத் தமிழீழ விடுதலைக்கு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருபவர்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் பயிற்சிக்குத் துணை நின்றவர். இந்திய அரசின் தமிழீழ இனவழிப்பை எதிர்த்துப் பல மேடைகளில் முழங்கியவர். ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களைத் தமிழர்களிடம் கொண்டு சென்றிருந்தால், தமிழர்கள் ராஜீவ் காந்தி கொலையைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் எனத் துணிச்சலுடன் பேசியவர். அதற்காகச் சிறைக்கும் சென்றவர்.
ஒரு முறை அல்ல, தமிழீழ விடுதலையை ஆதரித்துப் பேசியதற்காக மட்டுமே தமிழ்நாட்டை ஆண்ட அரசுகளால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டவர். தமிழீழ ஆதரவுக்காக அவர் செய்துள்ள போராட்டங்களையும் ஈகங்களையும் மதிக்கிறேன்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களில் பெரும் அனுபவம் கொண்ட வெகு சிலரில் ஒருவராகத் திகழும் தோழர் கொளத்தூர் மணி தமிழீழ விடுதலைக்கு எதிராக இந்தியம் செய்து வந்துள்ள கொடூரங்கள் குறித்து நன்கு தெரிந்திருந்தும், அவர் இந்தியா நினைத்திருந்தாலும் தமிழீழ இனவழிப்பைத் தடுத்திருக்க முடியாது என இப்போது கூறுவது வேதனையாக உள்ளது.
ஏனென்றால், இறுதி தமிழீழ இனவழிப்பு நடைபெற்ற காலக் கட்டத்தில், “இந்தியாவே போரை நிறுத்து” என்பது தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முதன்மை முழக்கமாக இருந்தது.
போரை நிறுத்தும் திறனற்ற இந்தியத்திடம் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது ஏன்? அல்லது அன்று அப்படி ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் வைத்தது தவறு என்று தோழர் கொளத்தூர் மணி இப்போது கருதுகிறாரா, தெரியவில்லை. அப்படி என்றால் அவர் இதனை வெளிப்படையாக அறிவிக்கலாம்.
இருக்கட்டும். தோழர் கொளத்தூர் மணி ஊகித்துக் கூறுவது போல், இந்தியா நினைத்திருந்தாலும் தமிழீழ இனவழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில், நான் அவருக்கு 20 வினாக்களை முன் வைக்கிறேன் -
1. தமிழீழத்துக்கு எதிரான, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரை, இந்தியம், சிங்களம் இரண்டும் சேர்ந்துதான் நடத்தின என்பதை ஏற்கிறீர்களா?
2. இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என ராஜபட்சே உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் பல முறை கூறியிருப்பது உண்மைதானே?
3. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் நாங்களும் இந்திய இராணுவ அதிகாரிகளும் போரை எப்படி நகர்த்திச் செல்வதென வாரம் ஒரு முறை சந்தித்து ஆலோசனை செய்வது வழக்கமாக இருந்தது என சிங்களத்தின் பல அரசியல் தலைவர்கள் கூறியதும் உண்மைதானே?
4. பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை நடத்தும் போருக்கு உதவுகிறோம் என்ற பெயரில், இலங்கைக்கு இந்தியா போர்க் கருவிகள் வழங்கியது உண்மைதானே?
5. சிங்கள-இந்தியக் கூட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், தமிழீழ இனவழிப்பில் இந்தியமும் சிங்களமும் ஒரே நேர்கோட்டில் நிற்பது புலனாகிறதா இல்லையா?
6. இந்தியா பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனப் பெருமளவில் பரப்புரையில் ஈடுபட்டதா இல்லையா?
7. 2009 மே தமிழீழ இனவழிப்பு நிறைவேறி முடிந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற ஐநா கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக எதுவும் செய்து விடக் கூடாது, பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியா கூறியது உண்மைதானே?
8. 2008 தமிழீழ இனவழிப்புக் காலம் தொடங்கி இன்று வரை, ஐநாவில் தமிழீழ இனவழிப்புக் குற்றத்திலிருந்து சிங்களத் தலைவர்களை இந்தியா காப்பாற்றி வருகிறதே, இன்றுங்கூட தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றங்களை நடத்தி தமிழீழ இனவழிப்பில் சிங்கள அரசு ஈடுபட்டு வருவதை இந்தியா வேடிக்கை பார்த்து வருகிறதே, எனவே தமிழீழ இனவழிப்பில் இந்தியாவின் சிங்கள ஆதரவு எல்லாம் பழைய கதை இல்லைதானே?
9. அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், தமிழீழ இனவழிப்பில் தொடர்ந்து இலங்கைக்குத் தோழமையாக இருந்து வரும் இந்தியா 2009 மே பேரழிவைத் தடுத்து நிறுத்தியிருக்க வாய்ப்பிருக்கும் என நினைத்துப் பார்ப்பதே கூட பெரிய நகைமுரண் இல்லையா?
10. சிங்களமே தாங்கள் நடத்தி முடித்த தமிழீழ இனவழிப்புக்குப் பங்காளியாக இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டையும் அடையாளம் காட்டாதது உண்மைதானே?
11. தமிழீழ இனவழிப்பை நடத்தி முடிப்பதற்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டையும் சிங்களமே நம்பாத போது, வேறெந்த நாடும் சிங்களத்துக்கு உதவியாகக் களம் இறங்கியிருக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்கிறீர்களா?
12. இந்தியா 1987இல் தமிழீழத்துக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பி, தமிழீழ இனவழிப்பை நடத்தத் தொடங்கி, இன்று வரை அதே கொடுஞ்செயல்களை சிங்களத்துடன் கைகோத்துச் செய்து வருகிறதே, இவ்வளவு நீண்ட காலத்துக்கு உலகின் வேறெந்த நாடும் சிங்களத்துக்குக் கிஞ்சிற்று ஆதரவும் கொடுக்காதது உண்மைதானே?
13. இந்தியா தவிர்த்த உலக நாடுகள் இலங்கைச் சிக்கலில் பெரும் அக்கறை செலுத்தாதற்குக் காரணம், சின்னஞ்சிறு இலங்கைச் சந்தையை விடவும், மாபெரும் இந்தியச் சந்தையே அவர்களின் வணிக நலன்களுக்கு முக்கியம் எனக் கருதி, அவை இந்தியக் கண் கொண்டே இலங்கைச் சிக்கலையும் பார்க்கின்றன என்பதை ஏற்கிறார்களா?
14. உலக நாடுகள் இந்தியச் சந்தையை அடிப்படையாகக் கொண்டுதான், இந்தியா தமிழீழத்தில் மட்டுமல்ல, காஷ்மீரத்திலும், மணிப்பூரிலும் நாற்பது ஆண்டுக்கும் மேலாக நடத்தி வரும் இனவழிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கின்றன என்பதை ஏற்கிறீர்களா?
15. எனவே இந்தியா சிங்களத்தைக் கை விட்டிருந்தால், உலக நாடுகளுக்குத் தமிழீழம் வாழ்வதிலும் அழிவதிலும் எந்த அக்கறையும் இருந்திருக்கப் போவதில்லை என்ற புற உண்மையை ஏற்கிறீர்களா?
16. இந்தியா உலக நாடுகளிடம் தங்களின் பெருஞ்சந்தையைக் காட்டித்தான் அவற்றை சிங்களத்துக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் திருப்பி விடுகிறது என்பதை ஏற்கிறீர்களா?
17. உலக நாடுகள் அவற்றின் புவிசார் - அரசியல் நலன்களை மனத்தில் நிறுத்தியே எந்த முடிவையும் எடுக்கும். இந்தியாவின் புவிசார் - அரசியல் நலன் தமிழீழ விடுதலையை நசுக்குவதில் அடங்கியுள்ளது.
ஏனைய உலக நாடுகளின் புவிசார்-அரசியல் நலன் இந்தியாவின் சிங்கள ஆதரவு நிலைப்பாடு எதுவாயினும், அதனை ஆதரிப்பதில் உள்ளது. ஆக, சிங்கள ஆதரவில் ஆகப் பெரும் பயனாளி இந்தியாதான் என்பதே சரியான ஏரண முடிவு என்பதை ஏற்கிறீர்களா?
18. சிங்களம் நடத்திய போரை இந்தியா நிறுத்த முயன்றிருந்தாலும், இறுதி தமிழீழ இனவழிப்பு நிறைவேறியிருக்குமென நீங்கள் ஊகிப்பதற்குக் காரணம் உலகின் வேறெந்த நாடாவது அந்த வேலையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் என்று நீங்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.
உங்களின் ஊகத்துக்கு வேறெந்தக் காரணமும் எனக்குப் படவில்லை. நான் நினைப்பது சரியெனக் கொண்டால், நாம் பார்த்தது போல் இந்தியாவுடனான வணிக நலன், புவிசார்-அரசியல் நலன் கருதி இந்தியாவின் நிலையையே ஏனைய நாடுகளும் கடைப்பிடித்திருக்கும் என்பதால், உங்களின் ஊகமும் தவறாகிவிடுந்தானே?
19. ஒருவேளை இந்தியா இறுதி தமிழீழ இனவழிப்பைத் தடுத்து நிறுத்த முயன்றிருக்கக் கூட வேண்டாம், குறைந்தது ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகக் கொள்வோம், இங்கும் இந்தியாவின் நிலைப்பாட்டையே உலக நாடுகளும் ஆதரித்திருக்கும். இந்த நிலையில், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், சிங்களத்தால் தன்னந்தனியாகத் தமிழீழ இனவழிப்பை நடத்தி முடித்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்கிறீர்களா?
20. கடைசியாக, இறுதியான, மிக முக்கியக் கேள்வி. உங்கள் நேர்காணலின் அடிப்படையில் பார்த்தால், இராசபட்சே எவர் சொல்வதையும் கேட்காமல், ஐநா பிரதிநிதிகளையும் செஞ்சிலுவைச் சங்கத்தையும் அனுமதிக்காமல் வெறித்தனமான போரை நடத்திய காரணத்தால் தான் இந்தியா நினைத்திருந்தாலும் இறுதியாக நடைபெற்ற தமிழீழ இனவழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதுதானே தோழர் உங்களின் ஊகம்.
உங்களின் ஊகத்தினூடே, இராசபட்சேவின் வெறித்தனமான போர் நடந்த காலம், இதனால் இந்தியாவால் போரைத் தடுத்து நிறுத்த முடியாமல் போன காலம் ஆகிய இரண்டுக்குமே நீங்கள் 2009 மே மாதத்தைத்தான் குறிப்பிடுகிறீர்கள். எனவே உங்களின் இந்த ஊகம் 2009 மே மாதத்தில் நடைபெற்ற இனவழிப்பு தொடர்பானது மட்டுமே என்பது தெளிவாகப் புலனாகிறது. அப்படியானால் உங்களின் ஊகம் ஏரணப் பொருத்தமாய் இருக்காது.
கடந்த அரை நூற்றாண்டாய்த் தமிழீழ இனவழிப்பில் சிங்களத்துகுத் துணைநின்று வரும் இந்தியா திடுதிப்பென 2009 மே இறுதி இனவழிப்பில் மட்டும் சிங்களத்துக்கு எதிராக, தமிழீழ மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கும் என நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது.
கடந்த அரை நூற்றாண்டாய் இந்த இறுதி நிலைமைக்கு எடுத்து வந்ததே இந்தியாதான் எனும் போது, அந்தப் பெரும் வரலாற்றை மறந்து விட்டு, அந்த இறுதி 15 நாட்களை மட்டும் நீங்கள் கணக்கில் கொள்வது சரியான வரலாற்றுப் பார்வையாக இருக்காது.
அப்படியானால், இந்தியா போரை நிறுத்துவது என்பதன் உண்மைப் பொருள் என்னவாக இருக்குமென்றால், இந்தியா 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தமிழீழ மக்களின் மேல் திணித்திருக்கக் கூடாது, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப் படையை அனுப்பி தமிழீழ மக்களை இனவழிப்பு செய்திருக்கக் கூடாது, 2000 மே 22ஆம் நாள் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றி சிங்களப் படைகளைச் சுற்றி வளைத்த நிலையில், இலங்கைக்கு இந்தியா கைகொடுத்திருக்கக் கூடாது.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட தடை விதித்திருக்கக் கூடாது, இந்தத் தடையைக் காரணம் காட்டி தமிழர்கள் அவர்களின் தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்களுக்குச் செய்யும் உதவிகளைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாது, இந்தியர்களிடம், உலக நாடுகளிடம் புலிகள் அமைப்பைத் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கமாகக் காட்டுவதற்கு மாறாக, பயங்கரவாத அமைப்பாகச் சித்திரித்திருக்கக் கூடாது.
2008 இறுதி மாதங்கள் தொடங்கி 2009 மே வரையிலான சுமார் ஓரைண்டுக் காலக் கட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, இந்தியா உலக நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பரப்புரை செய்திருக்கக் கூடாது, சிங்களத்தின் இனவழிப்புக் கொடூரத்தை உலக நாடுகளிடம் மறைத்திருக்கக் கூடாது.
சிங்களத்தின் இனவழிப்புச் சான்றுகளைக் கையில் வைத்துக் கொண்டு அவற்றை ஐநாவிடம், உலக மனித உரிமை அமைப்புகளிடம் திட்டமிட்டு மறைத்த குற்றத்தைச் செய்திருக்கக் கூடாது, 2009 மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் இனவழிப்பில் மடிந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையை உலகுக்குக் குறைத்துக் காட்டும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்திருக்கக் கூடாது.
2009 தமிழீழ இனவழிப்புக் காலத்தில் தமிழீழத்துக்கு ஆயுதங்களும் உணவுகளும் உயிர்காக்கும் மருந்துகளும் வந்து சேரும் கடல் வழிகளை இந்தியக் கப்பல் படையைக் கொண்டு அடைத்திருக்கக் கூடாது, அக்காலத்தில் சிங்களத்துக்கு ஆயுத உதவி செய்திருக்கக் கூடாது, சிங்கள இராணுவத்துக்குப் போர் ஆலோசனைகள் வழங்கியிருக்கக் கூடாது.
சிங்களப் படை முன்னேறிச் சென்ற நிலையில் தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளின் உதவியுடன் தமிழர்களின் போராட்டங்களை மடைமாற்றியிருக்கக் கூடாது, 2009 சனவரி தொடங்கி மே வரை, தமிழ்நாட்டு அரசின் உதவியுடன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்கியிருக்கக் கூடாது.
இவ்வாறு கடந்த அரை நூற்றாண்டில், ஏன், அந்த ஓராண்டு (2008-09) இறுதி இனவழிப்புக் காலத்திலேனும் தமிழீழ மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காமல், இந்தியா தமிழீழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக நின்று, முழு மனத்துடன் செயல்பட்டு வந்திருந்தால் கூட, இந்தியாவால் இறுதியாக நடைபெற்ற தமிழீழ இனவழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற முடிவுக்கு உங்களால் வர முடிகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால், தமிழீழ அழிப்பில் கடந்த அரை நூற்றாண்டாய் சிங்கள ஆதரவில் உலக நாடுகளிலேயே மிகப் பெரும் தீவிரம் காட்டியது இந்தியாதான் என்பது உறுதியாகிறது.
தமிழீழ வரலாற்றில் உலகின் எந்த நாடும் தமிழீழ இனவழிப்பில் சிங்களத்துடன் நேரடியாகக் கைகோக்கவில்லை, இந்தியாதான் தமிழீழத் தேசியத்தின் பகையான சிங்களத்துக்குக் கூட்டாளியாக வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருப்பது தெளிவாகிறது.
ஆக, இந்தியா அந்த இறுதி தமிழீழ இனவழிப்பு நடைபெற்ற அந்த ஓராண்டுக் காலத்தில், அதாவது 2008 சூன் தொடங்கி 2009 மே வரையிலான காலத்தில் சிங்களத்துக்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டிருந்தால், முள்ளிவாய்க்கால் பெருந்துயர் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதைச் சரியான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் நான் மெய்ப்பித்திருப்பதாகத் தோழமையுடன் தெரித்துக் கொள்கிறேன்.
அப்படியென்றால், இந்தியா நினைத்திருந்தாலும் சிங்களத்தின் இறுதி இனவழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்ற உங்களின் ஊகம் தவறாகிறது.
இப்போதுங்கூட என் கேள்விகளுக்கு உங்களின் பதில் “இல்லை” என்றால், உங்களின் ஊகம் தவறென மெய்ப்பிக்கும் வாய்ப்பில்லாமல் போனது குறித்து வருந்துகிறேன். அதேபோது, உங்களின் ஊகம் சரிதான் என மெய்ப்பிக்கும் வகையில் நீங்கள் தரவுகள் கொடுத்தால், அவற்றைப் பரிசீலித்து ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- நலங்கிள்ளி