தினம் தினம் செய்தித் தாள்களை திறப்பதற்கே அச்சப்படும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கின்றது. தமிழ்நாட்டில் இந்த மாவட்டம் அந்த மாவட்டம் என பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு தினம் தினம் கூலிப்படை கொலைகளும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் நடக்காத நாளே இல்லை என்னும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கின்றது.

குறிப்பாக பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுக் கிடக்கின்றது. மூன்று வயது குழந்தைக்குக்கூட பள்ளியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உதவி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

இது மட்டுமட்டுமல்ல தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் 1558 படுகொலைகளும், 2022-23ஆம் ஆண்டில் 1,596 படுகொலைகளும் நடந்துள்ளன. இதில் 18 கூலிப்படை கொலைகளும் அடக்கம். இதை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுத் தரவுகளின்படி தமிழகத்தில் மாதம் சராசரியாக 80 முதல் 90 கொலைகள் நடக்கின்றன.

01.01.2020 முதல் 31.12.2024 வரை ஐந்தாண்டுகளில் மட்டும் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 211 கொலைகள் நடந்துள்ளன. திருநெல்வேலியில் மட்டும் 74 கொலைகள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான சாதியக் கொலைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆதிதிராவிடர் நலத்துறை அளித்த புள்ளிவிவரங்களின்படி 2022 ஆம் ஆண்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 64 பேர் கொலை செய்யப்பட்டனர். 2023 இல் 92 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 89 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி கட்டாரி மங்களம் என்ற ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் அரிய நாயகிபுரம் தலித் மாணவர்கள் கெட்டியாள்புரத்தின் மாணவர்களை தோற்கடித்த வெற்றி பெற்றனர். ஆனால் அதை சகித்துக் கொள்ள முடியாத தேவர் சாதி வெறியர்கள் 17 வயதேயான மாணவன் தேவேந்திரனின் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட 12 இடங்களில் வெட்டி இருக்கின்றார்கள். இதில் அவரின் வலது கைகள் சிதைந்து நான்கு கை விரல்கள் துண்டாகியிருக்கிறது. இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் வயது 17 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறமைக்கும் இன்னொரு சான்று

“எனக்கு கொலை மிரட்டல்… ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல. 20, 30-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் என்னை கொன்னுடுவாங்க….” என்று வீடியோவில் பேசி முதலமைச்சரிடம் உயிர்ப் பாதுகாப்பு கேட்ட திருநெல்வேலி டவுன் தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் கொடூரமாக தற்போது கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் அவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்றவர்.

கொலை செய்யப்படுவதற்கு முன் ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோவில், கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர்தான் என்றும், தவுபிக் கொடுத்த பொய்யான புகாரில் தம் மீதும், தமது மனைவி மீதும் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர் மீது லாரியை மோதி கொலை செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல்வாதிகளின் துணையோடும் காவல்துறையின் ஆசியோடும் நடைபெறும் மணல் கொள்ளையை தட்டிக் கேட்டதால் இந்தக் கொலை நடந்துள்ளது. இவரும், தான் கொலை செய்யப்படுவேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை ரவுடிகளின் கூடாரமாக செயல்பட்டு வருகின்றது. சாராயக்கடையில் குவாட்டருக்கு 10 முதல் 30 ரூபாய் வரை அடக்க விலையைவிட அதிகமாக வாங்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல இரவு 10 மணிக்கு மேல் மதியம் 12 மணிவரை குவாட்டருக்கு 100 ரூபாய் திமுக ரவுடிகள் நடத்தும் பார்களில் அதிகமாக வாங்கப்படுகின்றது.

இந்த பணம் எல்லாம் யாருக்குச் செல்கின்றது? தற்போது மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் நடந்த ஊழல், 1,000 கோடி ரூபாயைத் தாண்டலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இது மிக குறைவான மதிப்பீடு. கடந்த ஆண்டு மட்டும் 45000 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. அப்படிப் பார்த்தால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 120 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. 10 ரூபாய் அடக்கவிலைக்கு அதிகமாக விற்றிருந்தால் கூட 4500 கோடி ஊழல் நடந்திருக்கும். இன்னும் குறைந்து மதிப்பிட்டால் கூட 3500 கோடிகளுக்கு மேல் இருக்கும்.

இது எல்லாம் சட்டப்படி விற்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் நடந்த ஊழல். ஆனால் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மூன்றில் ஒரு பங்கு மதுவிற்பனை நடைபெறுகின்றது. அதாவது 15000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகின்றது. இவை முழுக்க முழுக்க மது ஆலைகளில் இருந்து கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் மதுவாக இருக்க வாய்ப்புள்ளது. நூற்றுக்கு 30 ரூபாய் கூடுதல் விலை என்றால் ஏறக்குறைய 4500 கோடிகள் ஊழல் நடைபெற்று இருக்கின்றது. நாம் சொல்லும் கணக்கு சட்டப்படி கொள்முதல் செய்யப்பட்ட மதுவுக்கு மட்டுமே பொருந்தும்.

இதில் சாராய ஆலை முதலாளிகள் அரசுக்கு கொடுக்கும் லஞ்சம் எல்லாம் சேர்த்தால் ஒரு இமாலய ஊழல் டாஸ்மாக்கில் மட்டுமே அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது எல்லாம் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக அரசுக்கும் தெரியாமல் நடக்கும் ஊழல் என்று மக்கள் நம்ப வேண்டும்!.

சரி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது? காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது. பொருள் திருட்டுப் போனதாக புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவரிடமும் லஞ்சம் வாங்குவது, திருடனிடமும் லஞ்சம் வாங்குவது, கடைகளில் மாமூல் வசூல் செய்வது, கஞ்சா, குட்கா வியாபாரிகளோடு சேர்ந்து கல்லா கட்டுவது, காவல்நிலையத்தில் வேட்டி காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்தால் அவனின் அண்டர்வேயரையும் உருவிக்கொண்டு அம்மணமாக ஓட விடுவது, சாராயக்கடை வாசலில் நின்று கொண்டு குடிமகன்களிடம் வழிப்பறி செய்வது என தமிழக காவல்துறை செய்யும் சமூக சேவை கொஞ்ச நஞ்சமல்ல.

சுருக்கமாக சொன்னால் டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை என ஆயிரக்கணக்கான கோடிகள் திமுக அரசும், ஸ்டாலினின் குடும்பமும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டு நாசமாய் போனாலும் திமுகவுக்கு கவலை கிடையாது. டாஸ்மாக்கில் நடக்கும் அப்பட்டமான ஊழலை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருக்க காவல்துறை நடந்தும் மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை திமுகவும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

திருடனுக்கு திருடன் நண்பன் என்ற அடிப்படையில் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது.

இதில் இருந்தெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப சில சில்லறை சலுகைகளை செய்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றார்கள்.

ஒரு சீரழிந்துபோன மக்கள் விரோத ஆட்சியை திமுக மன்னர் குடும்பமும் அவர்களின் கீழ் வாழும் குறு நில மன்னர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் கூட தங்களது மக்கள் விரோத ஆட்சியை நிறுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 2026இல் மக்கள் நிச்சயம் திமுக அரசுக்கு புத்தி புகட்டுவார்கள்.

- செ.கார்கி