தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் சமூகத்தில் பெண்களிடையே மிகப் பெரிய முன்னேற்றத்துக்கு பயன்பட்டு வருகிறது என்று ‘இந்து’ ஆங்கில நாளேடு (டிசம்பர் 15) விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்று பண்பு மாற்றங்களை அக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்து வைப்பதைத் தடுத்திருக்கிறது. உயர்கல்விப் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் விட படிப்பைத் தொடருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
திட்டக்குழுத் திரட்டியுள்ள தகவல்களின் படி 2,30,520 மாணவர்கள் மாதம் தோறும் 1000 ஊக்கத்தொகை பெறுகிறார்கள். மாதம்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் இது செலுத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகம் பயன்பெறும் மாவட்டம் சேலம். (17,032 பேர் – 7.38 சதவீதம்) இரண்டாவது நாமக்கல் (13.312 – 5.77 சதவீதம்) அடுத்து தர்மபுரி (11,915 – 5.16 சதவீதம்) சென்னை (11,468 – 4.97 சதவீதம்) திருவண்ணாமலை (11,146 – 4.83 சதவீதம்) கோவை (10,777 – 4.67 சதவீதம்)
இத்திட்டம் அமலான பிறகு இடைநிற்றல் குறைந்ததுடன் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்க் கல்விப் பயணத்தைத் தொடரும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தால் கிராமப்புற மாணவிகள் மிகவும் பயனடைந்துள்ளனர். திட்டத்தை அறிவித்ததோடு நிற்கவில்லை. மாணவிகளைச் சந்தித்து அவர்களை உயர்கல்வி நோக்கி வரவழைக்கவும் களப்பணிகளைத் செய்து வருகிறது என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகிறார்.
பள்ளி மாணவிகளைக் கல்லூரிக்கு வரவழைத்து அவர்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடங்கள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் பற்றி எடுத்துக் கூறுகிறோம். அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப கல்லூரிகளைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கிறோம் என்று அன்பில் மகேஸ் கூறுகிறார்.
கிராமப்புற மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடரவும், வங்கி வரவு - செலவு குறித்த அனுபவங்களைப் பெறவும் இத்திட்டம் உதவி வருகிறது.
மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் பேட்டிகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. நல்லவேலை கிடைப்பதற்கும், நிலைத்த வருமானத்துக்கும், தங்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும், எதிர்கால சேமிப்புக்கும், இளம் வயது திருமணங்களைத் தடுப்பதற்கும் இத்திட்டம் உதவுவதாக மாணவிகள் கூறுகிறார்கள்.
பட்டியல் இனப் பிரிவில் 38.6 சதவீதப் பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 34.4 சதவீதத்தினரும் பிற்படுத்தப்பட்டோரில் 24.8 சதவீதத்தினரும் பயனடைவதாக திட்டக்குழு ஆய்வு தெரிவிக்கிறது.
முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு
இந்தியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு தமிழ்நாடே சிறந்த மாநிலமாக எங்களைக் கவர்ந்து நிற்கிறது என்று தொழில் முனைவோர்கள் கூறுகிறார்கள். இது குறித்து ‘டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு’ (டிசம்பர் 16) விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பல தொழிலதிபர்களின் பேட்டிகளை இந்த ஏடு பதிவு செய்துள்ளது.
எல்லா நகரங்களை விடவும் நம்பி, பாதுகாப்புடன் தொழில் செய்யக்கூடிய சிறந்த நகரமாக இந்தியாவிலேயே சென்னை மட்டும் தான் என்பது ஒருமித்தக் கருத்தாக இருந்தது என்கிறார் பெண் தொழிலதிபர் அடிலைன் கிரஹாம். அவர் நவீன மேசை நாற்காலிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். பல தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.
இதே கருத்தை அவர்களும் உறுதி செய்கிறார்கள். சென்னையில் உள்ள ஜெர்மன் தூதரக தலைமை பெண் அதிகாரி முல்லர் அளித்துள்ள பேட்டியில் ஜெர்மனியர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 120 ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதைச் சுட்டிக் காட்டினார். தமிழ்நாடு அரசு தரும் உதவி, கல்வியில் முதலிடம், திறமையான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் இதைச் சாத்தியமாக்குகின்றனர் என்று பெருமையுடன் கூறுகிறார்கள்.
கடந்தகால ஆட்சியாளர்களில் தொழில் முதலீடு செய்வோரிடம், பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்கப்பட்டதால் அவர்கள் வேறு மாநிலத்துக்குச் சென்ற கதைகள் உண்டு. இப்போது அந்த நிலை மாறிப் போய், முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாகியிருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்