ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாகக் கருதக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 415 பக்க தீர்ப்பில், ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்குக் கடிவாளம் போடும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தீர்ப்பின் நகல் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் சில முக்கிய அறிவுரைகள் இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்புப் பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்து போகிவிடும். பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். பேரறிவாளன் விடுதலை வழக்கிலும் ஆளுநர் முடிவெடுக்காமல் நீண்ட நாட்கள் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிறுத்தி வைத்து பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைத்தார்.
ஆளுநரின் இந்த செயலற்றத் தன்மையை இந்த நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்து அரசின் முடிவை உறுதி செய்துள்ளது. நீண்ட காலதாமதத்திற்கு ஆளுநர்களின் செயலற்றத் தன்மையே காரணமாக உள்ளது. அதனால்தான் அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கிறது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரால் அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டு எந்த மாற்றமும் செய்யப்படாமல் மீண்டும் அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்திவைக்க கூடாது.
மாநில அரசின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் மக்களுக்கு நன்மை தரும் மசோதாக்களை அரசுகள் நிறைவேற்றும்போது அதற்கு ஆளுநர்கள் ஒப்புதல் தருவது தேவையாகிறது. அப்படியில்லாமல் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு அந்த மசோதாக்களுக்கு உயிர் கொடுத்தால், அது தேர்தல் நேரத்தில் பேசுபொருளாகி விடும். இது அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். எனவே, மாநில அரசு அனுப்பும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர்கள் அனுப்ப வேண்டும். மசோதா குறித்து மாநில அமைச்சரவையின் அறிவுறுத்தலில் ஏதாவது முரண்பாடு இருந்தால் அந்த மசோதாவுக்கு எதற்காக ஒப்புதல் தரவில்லை என்ற தகவலுடன் 3 மாதங்களுக்குள் மாநில அரசுக்கு ஆளுநர் திரும்ப அனுப்ப வேண்டும்.
அமைச்சரவையின் அறிவுறுத்தலுக்கு முரணாக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்தால் அந்த மசோதாவை அதிக பட்சம் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கலாம். ஆளுநரால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதை குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் சம்மந்தப்பட்ட மாநிலம் நீதிமன்றத்தை அணுகலாம். ஒரு மசோதா திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.
ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளின்படியே செயல்பட வேண்டும் என்பது பொதுவான விதி. இதை உச்ச நீதிமன்றம் மத்தியப்பிரதேச சிறப்பு போலீஸ் வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, அரசியலமைப்பு பிரிவு 200-க்கு முரணாக தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்தது ரத்து செய்யப்படுகிறது. அரசியலமைப்புக்கு எதிராக அதிகாரிகள் வேண்டுமென்றே செயல்பட்டால், அது மக்களால் இந்த நாடு கட்டமைக்கப்பட்டதன் அடிப்படையையே பாழ்படுத்தி விடும். அரசியல் காரங்களுக்காக மாநில சட்டங்களுக்கு எந்த இடர்பாடுகளையும் ஏற்படுத்தாமல் ஆளுநர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ தீர்ப்பு வெளியான பிறகு, அதுகுறித்து எதுவும் பேசவில்லை. வழக்கம்போல எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அரசுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார், கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி செல்வோருக்கு தருவதால் கல்வித் தரம் உயராது என்கிறார். இந்தியாவில் தலித்கள் மீதான தாக்குதல்கள், வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களே அதிகம் உள்ளன.உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 50 விழுக்காடு எட்டியுள்ளது. இந்த இலக்கை, தேசிய அளவில் எட்டவே 2030-ஆம் ஆண்டை இலக்காக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் தமிழ்நாட்டில் கல்வித் தரம் சரியில்லை என ஆர்.என்.ரவி உளறிக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ள துணிவில்லாமல் வெளிப்படுத்தும் உளறல்களே இத்தகைய பேச்சுக்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்