Tirupur banian companiesகொரோனா பாதிப்பால் சீனாவிற்கு ஆர்டர் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை இந்தியாவிற்குக் கொடுப்பார்கள், அதன் மூலம் திருப்பூரின் 26,000/- கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை லட்சம் கோடிக்கு உயர்த்த முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானியை வைத்து (மயில்சாமி அண்ணாதுரை) கூட்டம் போட்டு பேசி பெருமைப் பட்டார்கள்.

பிரதமர் மோடியும் சீனாவிலிருந்து 1000 கம்பெனிகள் வெளியேறும், அதிலிருந்து 300 கம்பெனிகளையாவது கயிற்றைக் கட்டி தரதரன்னு இந்தியாவுக்கு இழுத்துட்டு வந்துடனும் என்று அறிக்கை கொடுத்தார்.

சங்கிகள் ஒருபடி மேல போய் சீனாக்காரன் ஒழிந்தான், இந்தியா வல்லரசு ஆகிடும் என்று காட்டுக் கத்து கத்தினார்கள்.

இன்று இந்தியா கொரோனா நோய் தொற்றில் சீனாவை முந்திக் கொண்டு செல்கிறது.

அதே நேரம் திருப்பூர் பனியன் கம்பெனிகள் சகஜ நிலைக்குத் திரும்புவதாகவும், நிறுவனங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர் என்றும் அரசும், ஊடகங்களும் கூசாமல் புளுகுகிறார்கள்.

மார்ச் 24க்கு முன்பு வெட்டி வைத்த பனியன் பண்டல்களை, அரைகுறையாக இருந்ததை முழு உருவம் செய்து வைக்கின்றன சில நிறுவனங்கள். ஒரு சிலர் அடுத்த சீசனுக்கான சாம்பிள் பனியன் ரெடி செய்கிறார்கள். அப்படி ரெடியானாலும் அனுப்ப விமான சேவையும் இல்லை.

சீனா, கொரியா, இத்தாலி, தைவான் போன்ற நாடுகளிலிருந்து பனியன் தயாரிப்பு இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள், மூலப் பொருட்கள் வராமல் திருப்பூர் ஏற்றுமதி தொழில் சாத்தியமில்லை.

இப்படியான வேளையில், 20 லட்சம் கோடியை அப்படியே வானத்திலிருந்து இந்திய மக்களுக்கு மலர் தூவுவது போல தூவி விடப் போவதாக சங்கிகள் கூவுகிறார்கள்.

இன்று வங்கி அதிகாரியுடன் பேசியதில் "நிதி மந்திரி சொன்ன விசயம் எல்லாம் Official-ஆக ஏதாவது வழிகாட்டுதல் வந்தால் தான். இதுவரை எந்தத் தகவலும் இல்லை" என்று கூறினார்.

ஆடிட்டரிடம் பேசிய போது "இதுவரை கட்ட வேண்டிய GST Pending + அபராதம் + வட்டி, அத்துடன் 2019 - 2020 வருடத்திற்கான வருமான வரி கட்டனும், TDS பிடித்து கட்ட வேண்டியவைகளை அரசுக்குக் கட்டினால் தான் வங்கி கடனுக்கான Application-ல் CA ஆடிட்டர் கையொப்பம் போடுவார்" என்று கூறினார்.

ஆக கொரோனா நோய்த் தொற்று ஊரடங்குக்கு முன்னே GST வரியால் நெருக்கடியில் சிக்கித் தவித்த திருப்பூர் பனியன் நிறுவனங்கள் இனி புயலில் சிக்கிய குடிசையைப் போல் பிய்த்தெறியப்படும்.

சொந்தக் கட்டிட உரிமையாளர்கள் அல்லது கனிசமான அளவு பண வசதியுள்ள பனியன் கம்பெனி முதலாளிகள் தான் இனி தாக்குப்பிடிக்க முடியும்.

உலகளவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடியின் காரணமாக விற்பனை தேங்கும். முன்பு நடந்த சுழற்சி முறை மேலும் சில மாதங்கள் அதிகமாகும் (முன்பு 30- 60 நாட்கள் கடனுக்கு செய்த ஆர்டர் இனி 90-120 நாட்களாக நீளும்).

வங்கிகளே கடன் கொடுத்தாலும் பழைய கடனுக்கான வட்டி, அபதார வட்டி, நடைமுறை மூலதனத்திற்குப் போதுமானதாக இருக்காது.

மேலும் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபம் என்பது போல மாநகராட்சி சொத்துவரியை 100% உயர்த்தியுள்ளது. அதனால் வீட்டு வாடகை, கம்பெனி வாடகையை அதிகப்படுத்த கட்டிட உரிமையாளர்கள் முயல்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் (டாஸ்மாக் சரக்கும்) ஏற்றப்பட்டுள்ள நிலையில் இனி பஸ், ரயில், விமான கட்டணங்களும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படியான சூழலில்..

1) சிறு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய GST அபராதத்தை ரத்து செய்வது

2) குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு GST வரியை ஒரே நிலையான 5% க்குள் நிர்ணயம் செய்வது

3) பழைய கடனுக்கான வட்டியை 6 மாதத்திற்கு ரத்து செய்வது

4) ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை 10% ஆக உயர்த்துவது

5) உள்நாட்டு சந்தையை வளப்படுத்தும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது

6) பனியன் நிறுவனங்களுக்கான மூலப் பொருட்கள், உதிரிப் பாகங்களை உள்நாட்டில் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய அரசு தொழிற்சாலைகளை உருவாக்குவது

7) வெளிநாட்டு அரசுகளிடம் வரியில்லா ஒப்பந்தங்களை (FTA) ஏற்படுத்திக் கொடுப்பது

8) நகையை அடகு வைத்து தொழில் செய்தால் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவது...

இது போன்ற குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க கட்சி சார்பற்று அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

இப்போதுள்ள TEA (திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்) வலதுசாரி ஆதரவு & TEAMA (திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம்) இடதுசாரி ஆதரவு என்ற பிரிவுகளை உடைத்தெறிந்து ஓரணியில் நிற்க முன்வர வேண்டும்.

முயற்சிப்போம்....

- தருமர், திருப்பூர்

Pin It