தமிழகம் இந்தியாவிலேயே அதிகமான விவசாய மின் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாகும்
ஏறக்குறைய 20 இலட்சம் வேளாண் மின்இணைப்புகள் நடப்பிலுள்ளது. பல இலட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பில் உள்ளனர்.
காவிரி பாயும் தஞ்சை வடிநிலப் பகுதியிலேயே மின்சார பம்ப் செட்களின் மூலமே கணிசமான அளவு வேளாண் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழக பாசன அமைப்பில் மின்சாரத்தின் மூலமான இறவைப் பாசனமே முதன்மையானது.
1970 பெருமாநல்லூர் முப்பெரும் தியாகிகள் தொடங்கி 1982 வரை 60க்கும் மேற்பட்ட உழவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் ஈந்து பெற்ற உரிமை இந்த கட்டணமில்லா மின்சாரம்.
இது யாரும் மனம் இறங்கிக் கொடுத்த பிச்சை அல்ல!
1991ல் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது இலவச மின்சாரம் இரத்து செய்யப்படும் என அறிவிப்பு செய்தார். விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடினர். திமுக உட்பட பல கட்சிகளும் விவசாயிகளோடு இணைந்து சிறைச்சாலைகளை நிரப்பினோம்.
தமிழகமே கொதித்தெழுந்ததைக் கண்ட முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.
இந்திய அரசியல் அமைப்பில் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் படியே தமிழக அரசு வேளாண்துறைக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கித் தமிழகத்தின் வேளாண் உற்பத்தியை நடத்துகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து உணவுப் பொருட்களும் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது.
எனவே கட்டணமில்லா மின்சாரம் என்பது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எட்டுக் கோடி தமிழ் மக்களின் உணவுப் பாதுகாப்பு பற்றிய பொதுப் பிரச்சினையுமாகும்.
தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக விவசாயிகளின் மின்சார உரிமைக்காக டெல்லியை நோக்கிக் குரல் கொடுத்திருப்பதை தமிழக விவசாயிகள் மனமார வரவேற்கின்றோம்.
தற்போது எடுத்துள்ள நிலையில் உறுதியாக நின்று கூட்டாட்சிக் கோட்பாட்டிற்காக உறுதியுடன் போராட வேண்டுகிறோம்.
மாநிலங்களின் நலன்களை தனியார் மின் வணிக கார்பரேட்களுக்கு பலியிடும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு எதிராக தமிழகமே அணிதிரண்டு குரல் கொடுப்போம்.
தமிழக உழவர்களின் கட்டணமில்லா மின்சாரம் பெறும் உரிமையைப் பாதுகாக்க அணிதிரள்வோம்.
- தற்சார்பு விவசாயிகள் சங்கம்