அறிமுகம்:

புதுவிதக் கொரோனா அல்லது கொவிட்-19 தோற்றுவித்துள்ள நெருக்கடிகள் சீனம் போன்ற ஒரு சில நாடுகளில் தணிக்கப்பட்டோ கட்டுப்படுத்தப்பட்டோ இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் தீவிரமடைந்தே வருகின்றன. குறிப்பாக இத்தாலி, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நோய்த்தொற்றும் உயிரிழப்பும் மென்மேலும் கூடுதலாகி வருவதே உண்மை. அந்த நாடுகளின் அளவுக்கு இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமடையவில்லை எனத் தோன்றினாலும், உண்மையான பாதிப்பு இன்னும் முழுமையாக வெளியில் தெரியவில்லை என்றும், இப்போது சமுதாய அளவில் நடந்து கொண்டிருக்கும் நோய்க் கடத்தல் (community transmission) அடுத்த சில நாட்களில் நோய்மைகளாக வெடிக்கும் போதுதான் நெருக்கடியின் ஆழமும் வீச்சும் புலப்படும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கும் அச்சத்தை அலட்சியம் செய்வதற்கில்லை.

கொரோனோ கிருமித்தொற்று பரவாமல் தடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் பயணத் தடைகள், முழு அடைப்பு ஆகிய வழிமுறைகளைக் கைக்கொண்டுள்ளன. இவற்றைக் கொள்கையளவில் வரவேற்கிறோம். தமிழக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

corona testகொரோனா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதே போல் இந்நெருக்கடி தீரும் வரை குடியுரிமை தொடர்பான மக்கள் போராட்டங்களைப் பிற்போடுவதென போராட்ட ஆற்றல்கள் எடுத்துள்ள முடிவையும் வரவேற்கிறோம். இதே வழியில் இந்திய அரசும் தமிழக அரசும் கொரோனா எதிர்ப்புப் போரில் அனைத்து மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடும் வகையில் நல்லிணக்கம் வளரச் செய்ய வேண்டியதனைத்தும் செய்யக் கோருகிறோம்.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உடல்நலத் தாக்கம் போலவே பொருளியல், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டுள்ள சமூகத் தாக்கமும் அளப்பரியது, முன்னெப்போதும் காணாதது. உடல்நல நெருக்கடியும் சமூக நெருக்கடியும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதை மனத்திலிருத்தி கொரோனாவுக்கு எதிரான போரை இருதளங்களிலும் இணையாக நம்மால் முன்னெடுக்க முடிந்தால் உறுதியாகவும் இறுதியாகவும் வெற்றி பெற முடியும் என நம்புகிறோம். இயற்கை வளமும் மாந்த வளமும் அளப்பரியவை, இவற்றைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களால் கணித்து விட முடியாது.

உடல்நலத் தாக்கம் என்ற வகையில் நாம் ஓர் ஆபத்தான நிலையை நோக்கிச் சரிந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இத்தாலியின் பட்டறிவு நமக்கு உணர்த்தும் போதே, முயன்றால் நோய்மை வளைகோட்டைத் தட்டையாக்கவும் இறுதியாக மீண்டு வரவும் முடியும் என்பதைச் சீனத்தின் பட்டறிவு காட்டி நிற்கிறது. இந்த வகையில் உடனடியாகச் செய்ய வேண்டிய சிலவற்றை ஈண்டு கோரிக்கைகளாக முன்வைக்கிறோம்:

கோரிக்கைகள்:

அ) நலவாழ்வு சார்ந்தவை

1) பயணக் கட்டுப்பாடுகளும் சமூக விலகலும் உலகெங்கும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன என்பதால் இவற்றை உறுதியாகவும் அறிவார்ந்த முறையிலும் தொடர வேண்டும். இவை குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்குக் குண்டாந்தடிகள் அல்லாத நல்ல பல வழிகளையும் அரசு கையாள வேண்டும். இன்றியமையாத் தேவைகள் அனைத்தையும் அரசே மக்களுக்கு நிறைவு செய்வதோடு நேரில் சேர்ப்பிக்கவும் ஆவன செய்ய வேண்டும். மக்கள் பாதுகாப்பின்றி தெருவில் இறங்குவதையும் கடைகளில் கூட்டம் சேர்வதையும் இவ்விதம் அடியோடு தவிர்க்க வேண்டும். இந்தப் பணிகளை உரிய பாதுகாப்புடன் ஒரு சில தொண்டர்களைக் கொண்டு செய்து தர இயலும். அரசே இதற்கு முன்முயற்சி செய்யலாம் அல்லது தன்னார்வலர்கள் இந்தப் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

2) ”வீட்டில் இரு” என்ற அறிவுரை வீடற்றவர்களை நோக்கிச் சொல்லப்படுவது பெரிய முரணகையாக உள்ளது. வீடற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், அலைகுடிகள், பிச்சைக்காரர்கள் போன்றோர் தங்குவதற்குரிய காப்பகங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும். அங்கு அவர்களுக்கு உணவும் நீரும் பிற இன்றியமையாத் தேவைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இப்போதே காப்பகங்களா அல்லது எதிர்காலத்தில் மருத்துவமனைகளா என்ற கேள்விதான் நம் முன்னுள்ளது. அரசுடன் தனியார் அறக்கட்டளைகளும் உடனே இந்தக் காப்பகங்கள் அமைக்க வழி செய்ய வேண்டும்.

3) நோய்த் தொற்று ஆய்வு பரவலாகச் செய்யப்படாததுதான் நம் புள்ளிவிவரங்கள் நிலைமையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுவதற்குக் காரணம் என்ற குற்றாய்வில் நியாயம் இருப்பதாக்க் கருதுகிறோம். நோய் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டறியவும் நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்தவும் ஆய்வு வசதிகளை விரிவாக்க வழி காண வேண்டும். தனி அடைப்பில் வைக்கப்படுவோர் அவர்தம் இல்லத்திலேயே இருக்கச் செய்வது நோய்த் தடுப்புக்கு அவ்வளவாகப் பயன்படாது. அப்படியில்லாமல் அரசு அமைக்கும் தனி முகாம்களில் அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும். அயல்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்களுக்குச் செய்தது போல் முழுஅடைப்பு அறிவிப்புக்குப் பின் பயணம் செய்தவர்களுக்கும் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களுக்கும் இவ்வாறு ஆய்வு செய்யலாம். எப்படியும் எழுந்தமானமாகச் சில ஊர்களில் இவ்வாறு ஆய்வு செய்வது நமக்கு நம்பிக்கையோ எச்சரிக்கையோ தர உதவும். அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் எதுவானாலும் கொரோனா நோய்த்தொற்று ஆய்வுக்குக் கட்டணம் தண்டக் கூடவே கூடாது.

4) இன்றைய சூழலில் மருத்துவர்கள் உள்ளிட்ட நலவாழ்வுப் பணியாளர்களின் பாதுகாப்பும் உடல், மன நலமும் தனி அக்கறைக்குரியவை. அவர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் பிணியிலிருந்தும் பிறவகைத் துன்பத்திலிருந்தும் காப்பதற்கு அரசுகள் முன்னுரிமை தர வேண்டும். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பிறவகைப் பணியாளர்களுக்கும் முழுக்காப்புடைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாகத் துப்புரவுப் பணியாளர்களுக்கு முகக்கவசம், காலணிகள், காப்புடை உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும். இந்த நோய்நீக்கப் பணியில் ஈடுபட்டு அதனாலேயே நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவர்களோ மற்றவர்களோ மடியும் அவலம் நேரவே நேராமல் உறுதி செய்ய வேண்டும்.

5) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இப்போதுள்ள மருத்துவ மனைகள், படுக்கைகள், தீவிர சிகிச்சைக் கூடங்கள், மூச்சுக்கருவிகள், முகக் கவசங்கள், மற்ற மற்ற ஏந்துகள் எத்தனை நோயாளர்களுக்குப் போதும்? இன்னும் எத்தனை பேர் வந்தால் என்ன செய்வது? என்று திட்டமிட்டு முன்கூட்டியே வழிவகை செய்ய வேண்டும்.

6) தொடர்வண்டிப் பெட்டிகளை மருத்துவ அறைகளாகப் பயன்படுத்துவது நல்ல முன்மொழிவுதான், அதற்கும் மேலே பெரிய தொழிற்கூடங்கள், அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், தனியார் மாளிகைகள் சிறைச் சாலைகள், விளையாட்டரங்குகள் ஆகியவற்றையும் அரசு இடைக்கால அடிப்படையில் கையகப்படுத்தி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். அறைக்கலன் தொழிற்சாலைகளில் படுக்கைகள், ஆடைத் தொழிற்கூடங்களில் காப்புடைகள், முகக்கவசங்கள், ஆய்தத் தொழிற்சாலைகளில் மூச்சுக் கருவிகள் என்று உடனே மாற்று ஆக்கங்கள் செய்வது இந்த ஏந்துகளுக்கு எந்தக் கட்டத்திலும் பற்றாக்குறை வராமல் தவிர்க்க உதவும்.

7) மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள், மருத்துவமல்லாத பணியாளர்கள் ஏராளமாகத் தேவை. இதற்காக அவசர கால அடிப்படையில் ஆள்சேர்த்துக் குறுகிய காலப் பயிற்சி தர வேண்டும். முழு அடைப்பு என்று எல்லாரும் வீட்டில் அடைபட்டுச் சோம்பியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. விழிப்புணர்வும் தொண்டுள்ளமும் கொண்டவர்கள் வெளியே வந்து மக்கள்பணி செய்யலாம். மகத்தான மனித வளத்தை விரயமாய் வீட்டில் கிடக்க விட்டு விட்டு இந்தப் போரில் நம்மால் வெல்ல முடியாது. இராணுவம் உள்ளிட்ட ஆய்தப் படைகளில் இருப்பவர்களையும் வேறு துறை சார்ந்தவர்களையும் கூட இந்தக் கடமைக்கு அழைக்கலாம். இதற்கு உடனே ஆவன செய்து எந்தப் பணிக்கும் பெரிய ஆள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போது அனைவரும் உரிய பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்ற வழி செய்ய வேண்டும்.

8) கொரோனா எந்தெந்தப் பிரிவு மக்களுக்கு உறுதியாக உயிர்க் கொல்லியாகக் கூடும் என்று கணித்து அந்தந்தப் பிரிவு மக்கள்பால் தனிக்கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதியோர், ஏற்கேனவே வேறு வகையில் நோயுற்றவர்கள். கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள், மனநோயளர்கள் போன்றவர்களை இனங்கண்டு பேணுதல் வேண்டும். யார் சாகட்டும், யார் உயிர் வாழட்டும் என்று மருத்துவர்கள் தேர்வு செய்யும் இக்கட்டான நிலை இங்கு ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும்.

9) கொரோனா தொற்றுக்கான ஆய்வு ஆனாலும், சிகிச்சை ஆனாலும் மருந்து ஆனாலும் எல்லாம் முற்றிலும் இலவயமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். இது குறித்துத் தனியார் மருத்துவமனைகளோடு அரசு இப்போதே பேச்சு நடத்தி உடன்பாடு காண வேண்டும். ஒத்துவராத தனியார் மருத்துவமனைகளை இழப்பீடின்றி நாட்டுடைமை ஆக்க வேண்டும். கொரோனா நெருக்கடி தீரும் வரை எல்லா மருத்துவமனைகளையும் அரசு தன் கட்டுக்குள் கொண்டு வரவும் செய்யலாம். ஒரே ஒருவர் கூட கட்டணம் செலுத்தக் காசில்லாமல் கொரோனவுக்கு பலியானார் என்ற அவலம் நேராது உறுதி செய்ய வேண்டும்.

10) கொரோனா தடுப்புக்கும் சிகிச்சைக்கும் மருந்து கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் உலகம் செய்து வரும் முயற்சிகளை உளமார வரவேற்கிறோம். இந்த முயற்சிகள் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். அதே போது இந்தத் திசையில் அலோபதி அல்லாத நம் மரபுசார் மருத்துவ முறைகளின் பங்கையும் அறிந்தேற்று ஆதரிக்கக் கோருகிறோம்.

- தியாகு, பொதுச்செயலாளர், ததேவிஇ

Pin It